Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

மறைகுறியீட்டு நாணயம் (Cryptocurrency): முதலீடா? சூதாட்டமா? பாகம் 2

மறைகுறியீட்டு நாணயத்தை எவ்வாறு மாற்றுவது?

பொதுவாக பரிவர்த்தனைகளை சரிபார்க்கும்போது அதற்கு மாற்றீடாக எவ்வாறு மறைகுறியீட்டு நாணயங்களின் புதிய அலகுகள் வெளியுலகிற்கு வெளிவிடப்படுகின்றன. மறைகுறியீட்டுநாணய உலகில் இதனை ‘Mining’ என அழைப்பர். சுரங்கத்திலிருந்து தங்கத்தை தோண்டி எடுப்பது போலவே தான் இதுவும் மெய்நிகர் சுரங்கத்தில் மெய்நிகர் தங்கம் என நம்பப்படும் ஒன்றை தோண்டுகிறோம். கோட்பாட்டளவில் மறைகுறியீட்டு நாணயத்தை தோண்டி எடுப்பது ஒரு சராசரி மனிதனுக்கு சாத்தியமாக இருப்பினும், Bitcoin போன்றவற்றின் வேலை சான்று அமைப்புகள் அதனை மேலும் கடினமாக்கிய வண்ணம் உள்ளன.

“Bitcoinன் வலையமைப்பு வளர்ச்சி அடையும்போது இது மிகவும் சிக்கலானதாக மாறுகிறது. அத்துடன் மேலதிக செயலாக்க சக்தி தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரு சாதாரண பயனரால் இதனை செய்ய முடியும். ஆனால் இப்போது பலர் தமது உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி ஏனையோரை வலுவிழக்க வைக்கின்றனர்” என Uinta Crypto Consultingன் நிறுவுனர் Spencer Montgomery கூறுகிறார்.

மேலும் நினைவில் கொள்ளுங்கள் வேலை சான்று மறைகுறியீட்டு நாணயங்களை தோண்டி எடுக்க மிகப்பாரிய அளவு நேரமும் சக்தியும் தேவைப்படும். பாரிய கணினி பண்ணைகள் (server farms) இதில் ஈடுபடுகின்றன. உங்களுக்கு இன்னும் புரியும் வகையில் சொன்னால் உலகின் மின்சாரத்தில் 0.21% ஆனது Bitcoin பண்ணைகளை மாத்திரம் வலுவூட்டுவதற்கு செலவாகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ இதே அளவு மின்சாரமே சுவிட்சர்லாந்து நாட்டுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான மின்சாரத்தின் அளவாகும். பெரும்பாலான Bitcoin தோண்டுனர்களுக்கு தாம் பெறும் பணத்தில் 60% – 80% மின்சார செலவை ஈடுகட்டவே சரியாக உள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளது.

மறைகுறியீட்டுநாணயத்தை தோண்டும் பண்ணை (Crypto mining farm)
புகைப்பட உதவி : Investopedia.com

வேலை சான்று அமைப்பின்படி மறைகுறியை தோண்டுவது ஒரு சாதாரண வருமானமுள்ள சராசரி நபருக்கு நடைமுறையில் சாத்தியமில்லை. அதேவேளை பங்குச்சான்று மாதிரியில் அதீத வலு கணினி குறைந்தளவே தேவைப்படுகிறது அத்துடன் மதிப்பீட்டாளர்கள் அவர்கள் பங்கு வைக்கும் அளவை பொருத்து எழுமாறாக தெரிவுசெய்யப்படுகின்றனர். எது எவ்வாறிருப்பினும் இதில் பங்கெடுக்க நீங்கள் ஏற்கனவே மறைகுறியை வைத்திருக்க வேண்டும்(உங்களிடம் மறைகுறியீட்டு நாணயம் இல்லையென்றால் நீங்கள் பங்கு வைக்க அங்கு எதுவும் இல்லை). 

திரைமறைவில்…..

இந்த மறைகுறியீட்டு நாணயத்தை ஏன் அனைவரும் எதிர்கால பணமாக கருதுகிறார்கள் என்ற கேள்வி எமக்குள் எழுவது நியாயமே. ஏற்கனவே நாங்கள் வங்கிகள் மூலமும் சில செயலிகள் மூலமும் நிகழ்நிலையில் பணக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும்போது அங்கு மத்தியில் ஒரு நிர்வாகம் இருக்கும். அது பணப்பரிவர்த்தனையை கண்காணிக்கும். நான் ஒரு நண்பருக்கு பணம் அனுப்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம். எனது வங்கிக்கணக்கு உள்ள செயலியில் நான் கட்டளை பிறப்பிக்கிறேன்; வங்கி என்னை கடவுச்சொல் மற்றும் பிற வழிகள் மூலம் பரிசீலனை செய்கிறது; நான் தான் என உறுதியாகும் பட்சத்தில் அங்கு பணம் அனுப்பப்படுகிறது; அதாவது பரிவர்த்தனை இடம்பெறுகிறது. இதில் சிக்கல் யாதெனில் ஒருவேளை யாரேனும் வங்கியின் பிரதான கணினியை முடக்கினாலோ அல்லது எனது தொலைபேசியிலுள்ள செயலியை முடக்கினாலோ இங்கு பணப்பரிமாற்றம் இடம்பெறாது அல்லது வேறு ஒருவர் இதனால் பலன்பெறுவார். சரி! இப்போது மறைகுறியீட்டுநாணய பரிவர்த்தனைக்கு வருவோம். நீங்கள் ஒருவருக்கு உங்கள் திறன்பேசி செயலி மூலம் மறைகுறியீட்டு நாணயத்தை அனுப்பவுள்ளீர்கள்; உதாரணத்துக்கு 5 BTC என்று வைத்துக்கொள்வோம்; கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் அது நீங்கள் தானா என சரிபார்க்கப்படும்; பின்னர் உங்களின் இருப்பு பரிசோதிக்கப்படும்; இவை சரி என உத்தரவு கிடைத்ததும் பணப்பரிமாற்றம் இடம்பெறும். இந்த பொறிமுறை அரங்கேற சில நொடிகள் அல்லது நிமிடங்களே செல்லும். சாதாரண முறைக்கும் இதற்கும் வித்தியாசம் என்னவென்றால் அங்கு ஒரு வங்கி ஒரு மத்திய நிர்வாகம் அது பிழைத்தால் சர்வமும் சமாதி. இங்கு மில்லியன் கணக்கான கணினிகள் பயனர்கள் ஆகையால் ஊடுருவுவதும் கொள்ளையடிப்பதும் எட்டாக்கனியே.

இந்த மறைகுறியீட்டுநாணயங்களுக்கு வகைக்கு வகை ஒரு எல்லை உண்டு. பூமிக்கடியில் இருக்கும் தங்கம் போலவே தான். குறிப்பிட்டளவே இருப்பதால் அவற்றின் விலை விண்ணையும் தொடும்.  அந்த எல்லை முடிந்ததும் அந்தப்பெயரில் புதிய மறைகுறியீட்டுநாணயம் உற்பத்தியாகாது. அதாவது தங்கமும் பூமிக்கடியில் இருக்காது.

மறைகுறியீட்டுஎன்பது யாதென ஏற்கனவே கூறியிருந்தேன். இந்த மறைகுறியானது SHA256 (Bitcoin பயனர்களுக்கான சுட்டுமுகவரியாக்க வழிமுறை) போன்ற  வழிமுறை, ஒரு பொதுக்கடவுக்குறி (பயனர் அனைவருடனும் பகிர்வது அத்துடன் இது அவருடைய டிஜிட்டல் அடையாளக்குறி ஆகும்), ஒரு தனிப்பட்ட கடவுக்குறி (குறித்த பயனர் தனக்கு மாத்திரம் தெரிந்த வகையில் வைத்திருப்பது) பிரயோகித்து பரிவர்த்தனையை மேற்கொள்ளும்.

மறைகுறியீட்டு நாணயத்தை தோண்டுதல் – கற்பனை சித்தரிப்பு படம்
புகைப்பட உதவி : internetofbusiness.com

உதரணத்துக்கு ஒரு சாதாரண Bitcoin பணப்பரிமாற்றத்தை நோக்குவோம். முதல் தேவை பரிவார்த்தனைக்கான தகவல்கள் யாரால்? யாருக்கு? எவ்வளவு? பின்னர் இது சுட்டுமுகவரியாக்க வழிமுறைக்கு உட்படுத்தப்படும். Bitcoinற்கு SHA256 வழிமுறை பயன்படுத்தப்படுகிறது. இதன் வெளியீடாக நீங்கள் செலுத்தும் பணம் ஒரு தனித்துவமான வழிமுறையில் தனிப்பட்ட கடவுக்குறியுடன் வெளிவரும். இது பயனரை பிரத்யேகமாக கண்டறிவதற்காக இடம்பெறும் ஒரு செயற்பாடு. பின்னர் இந்த வெளியீடு உலகம் முழுவதும் வலையமைப்பில் பரந்துள்ள பயனர்களுக்கு சரிபார்ப்பதற்காக அனுப்பப்படும். இதன்போது உங்கள் பொதுக்கடவுக்குறியுடன் அனுப்பி வைக்கப்படும். இதனை சரிபார்ப்பவர்களே தோண்டுபவர்கள் (Miners) என அறியப்படுவர். இவர்கள் சரிபார்த்ததும் பரிவர்த்தனை தொகுதிச்சங்கிலியில் பதிவேற்றப்பட்டு விடும். அதன்பின்னர் அதனை மாற்றியமைக்க முடியாது. இவர்கள் எவ்வாறு பரிவர்த்தனையை சரிபார்க்கிறார்கள் என்பதை மேலே ஏற்கனவே கூறியுள்ளேன். 

சுட்டு முகவரியாக்கம் (Hashing)

ஒரு சுட்டுமுகவரியாக்க வழிமுறை என்பது ஒரு கணித வழிமுறையாகும், இது ஒரு குறிப்பிட்ட வகை மற்றும் தன்னிச்சையான நீளத்திலுள்ள உள்ளீட்டு தரவு வரிசையை (Data array) ஒரு நிலையான நீளத்தில் வெளியீட்டு Bit சரமாக மாற்றுகிறது. சுட்டுமுகவரியாக்க வழிமுறைகள் எந்த உள்ளீட்டையும் எடுத்து ஒரு சுட்டுமுகவரியாக்க அட்டவணையைப் பயன்படுத்தி ஒரு சீரான செய்தியாக மாற்றும்.

இது மறைகுறியாக்கத்திற்காக பரந்தளவில் பயன்படும் ஒரு வழிமுறை மறைகுறியீட்டுநாணயத்திற்கு மாத்திரம் பிரத்யேகமானது என தவறாக எண்ணவேண்டாம். டிஜிட்டல் வெளியில் தரவுகளையும் கோப்புகளையும் மூன்றாம் நபரொருவர் ஊடுருவா வண்ணம் எடுத்து செல்ல உதவும் ஒரு வழியே இது.

மறைகுறியீட்டுநாணயங்களின் வகைகள்

பிட்கொயின் – Bitcoin

Bitcoin இலச்சினை
புகைப்பட உதவி: cnbc.com

Bitcoin என்பதே முதல் மறைகுறியீட்டுநாணயம் ஆகும். இது 2008ம் ஆண்டில் “Bitcoin: ஒரு சமானனுக்கும் இன்னொரு சமானனுக்கும் இடையிலான இலத்திரனியல் பண முறைமை” என்ற தலைப்பில் சடோஷி நகமோட்டோவினால் கொள்கை அடிப்படையில் சுட்டிக்காட்டப்பட்டது. நகமோட்டோ இந்த முறைமையை “நம்பிக்கைக்கு பதிலாக குறியாக்கவியல் ஆதாரத்தை அடிப்படையாக கொண்ட ஒரு மின்னணு கட்டண முறை” என விவரிக்கிறார். சடோஷி நகமோட்டோ என்பவர்/கள் இந்த Bitcoinஐ கண்டுபிடித்தவர்/களாக நம்பப்படுகிறது. இன்றளவும் இந்த பெயருக்கு பலர் உரிமை கோரியுள்ளனர். ஆகையால் உண்மையான நபர் யாரென்பது இன்றளவும் அறியப்படாத மர்மமே. இந்தக்கட்டுரை எழுதும்போது (24.06.2021,இலங்கை நேரம் 23:01) ஒரு Bitcoinன் பெறுமதியானது 6,970,085.27 இலங்கை ரூபாவாகும். 

இதீரியம்-Ethereum

Ethereum நாணயத்தின் இலச்சினையுடன் அதன் இணை நிறுவுனரான  Vitalik Buterin
புகைப்பட உதவி: altcoinbuzz.io

Bitcoinற்கு அடுத்து மறைகுறியீட்டுநாணய உலகில் பிரபல்யமானது இதுவே. 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 30ந்தேதி இது முதன்முறையாக வெளியிடப்பட்டது. இதனை உருவாக்கியோர் Vitalik Buterin மற்றும் Gavin Wood ஆவர். EVM 1 Bytecode எனும் மென்பொருள் கொண்டு இந்த நாணயம் தோற்றுவிக்கப்படுகிறது. ஒரு ethereumன் பெறுமதி 513,874.12 இலங்கை ரூபாவாகும். 

டொஜ்கொயின்Dogecoin 

Dogecoin இலச்சினை புகைப்பட உதவி: CNET.com

தற்போதளவில் உலகம் முழுவதும் ஏறத்தாழ 5,392 வகையான மறைகுறியீட்டுநாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும் இந்த Dogecoin பற்றி கூறவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் ஒட்டுமொத்த பணப்பரிவர்த்தனை முறைமையையும் எள்ளிநகையாடும் வகையில் விளையாட்டாக 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந்தேதி Billy Markus, Jackson Palmer ஆகிய இருவரால் இணையத்தில் பிரபலமான ஒரு memeஐ வைத்து இது உருவாக்கப்பட்டது. இதன் பாரிய பங்குகளை தன்வசம் வைத்திருப்பவர் தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான Elon Musk ஆவார். பலர் இது இவரால் உருவாக்கப்பட்டது எனவும் நம்புகின்றனர். ஒரு Dogecoinன் பெறுமதி 0.32 அமெரிக்க டொலர் மாத்திரமே. ஆனால் இதன் மொத்த சந்தை மூலதனம் 80 பில்லியன் அமெரிக்க டொலராகும். இது 165,000 ஊழியர்களை கொண்ட உலகப்புகழ் பெற்ற கணினி நிறுவனம் Dellன் சந்தை மூலதனத்தை விட அதிகமாகும்.

மறைகுறியீட்டுநாணயத்தில் முதலிடலாமா? 

இதற்கு சரியான பதில் தரக்கூடியவர்கள் இலங்கை மத்திய வங்கியே. ஆகையால் அண்மையில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலிருந்து சில முக்கிய விடயங்களை உங்களுக்கு இங்கு அளிக்கிறேன். இங்கு அவர்கள் மறைகுறியீட்டுநாணயங்களை பொதுப்படையாக மெய்நிகர் நாணயங்கள் என குறிப்பிடுகின்றனர் என்பதை நினைவில் கொள்க.

 “மறைகுறியீட்டு   நாணயங்கள் உள்ளடங்கலாக, மெய்நிகர் நாணயங்களை ஈடுபடுத்துகின்ற திட்டங்களை தொழிற்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி ஏதேனும் குழுமத்திற்கோ அல்லது கம்பனிக்கோ உரிமத்தையோ அல்லது அதிகாரத்தினையோ அளிக்கவில்லையென்பதனையும் அத்துடன், ஏதேனும் ஆரம்ப நாணய வழங்கலுக்கு அதிகாரமளிக்கவில்லையென்பதனையும் பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கின்றது.”

-மத்திய வங்கி அறிக்கை, 16 ஏப்ரல் 2018

மெய்நிகர் நாணயங்கள் மத்திய வங்கிகளினால் வெளியிடப்படுவதில்லை என்பதனையும் அவை பொதுவாக எந்தவொரு அடிப்படைச் சொத்தினாலும் உத்தரவாதப்படுத்தப்படுவதில்லை என்பதனையும் கவனிப்பது முக்கியமானதாகும். ஆகவே, அவற்றின் பெறுமதி, மெய்நிகர் நாணயப் பரிவர்த்தனை தொடர்பான பொதுமக்களின் ஊகம் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.

இலங்கையில் மெய்நிகர் நாணயங்களின் பயன்பாடு, முதலீடு அல்லது வணிகம் தொடர்பாக ஒழுங்குமுறைப்படுத்தல் பாதுகாப்புக்கள் எதுவுமில்லை. ஆகவே, மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்வதோ அல்லது பயன்படுத்துவதோ பின்வருவன போன்ற இடர்நேர்வுகளை ஏற்படுத்தும்.

  • எவரேனும் பயன்படுத்துநர் அல்லது கொடுக்கல்வாங்கல் தொடர்பில் பிரச்சனைகள் அல்லது பிணக்குகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் பயன்படுத்துநர்/ முதலீட்டாளர்கள் ஒழுங்குமுறைப்படுத்தல் அல்லது குறித்துரைக்கப்பட்ட சட்ட ரீதியாக நாடும் இடங்களைக் கொண்டிருக்கமாட்டார்கள்.
  • மெய்நிகர் நாணயங்கள் ஊகத்தின் மீது தங்கியிருப்பதனால் அவற்றினது பெறுமதியின் உயர் தளம்பல்களை மெய்நிகர் நாணயங்களின் முதலீட்டினை இழப்பீடுகளுக்குள்ளாக்கி பாரிய இழப்புக்களை ஏற்படுத்துகின்றன.
  • மெய்நிகர் நாணயங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியிடுவதுடன் இணைந்து காணப்படுவதற்கான உயர்ந்தளவு சாத்தியத்தன்மை காணப்படுவதுடன் இது குற்றவாளிகளினால் குற்றப்பணத்தினை தூய பணமாக மாற்றிக் கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதிகளை மீறுதல். மெய்நிகர் நாணயங்கள் பரிவர்த்தனையின் போது சொத்துக்களாக வர்த்தகப்படுத்தப்படுவதனால் வெளிநாடுகளிலிருந்து மெய்நிகர் நாணயங்களைக் கொள்வனவு செய்வது வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதிகளை மீறுவதற்கு வழிவகுக்கும். ஏனெனில் மெய்நிகர் நாணயம் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் நியதிகளில் அனுமதிக்கப்பட்ட முதலீட்டு வகையொன்றாக அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை. இலங்கையிலுள்ள வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதிகளின் நியதிகளில் மெய்நிகர் நாணயக் கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் வெளிநாட்டு நாணயத்தில் கொடுப்பனவுகளைச் செய்வதற்கு பற்று அட்டைகள், கொடுகடன் அட்டைகளைப் போன்ற இலத்திரனியல் நிதிய மாற்றல் அட்டைகள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படமாட்டா.

ஆகவே, மெய்நிகர் நாணயங்களில் முதலீடுகளைச் செய்வது பயன்படுத்துநர்களுக்கும் அதேபோன்று பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்களவு நிதியியல், தொழிற்பாட்டு, சட்ட, வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான இடர்நேர்வுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி பொதுமக்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.

-மத்திய வங்கி அறிக்கை, 9 ஏப்ரல் 2021

மறைகுறியீட்டு நாணயத்தின் செயற்பாடு பற்றி தங்களுக்கு இன்னமும் விளங்கவில்லை என்றால் கவலை கொள்ள வேண்டாம். உலகில் பத்தில் ஒருவருக்கே இந்தக்கோட்பாடு தெளிவாக புரியும் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

நிதியியல் உலகில் இது ஒரு பெரும்புரட்சியாக பார்க்கப்பட்டாலும் விளையாட்டாக ஆரம்பித்த ஒன்று கூட பில்லியன் டொலர் பெறுமதியை தொடச்செய்யுமளவு மக்கள் பணம் மீதான பற்றுதலோடு உள்ளனர். இந்த மறைகுறியீட்டுநாணயங்கள் பல வழிகளில் நல்ல பலன்களை தந்தாலும் மத்திய வங்கியின் அறிக்கைப்படி தீவிரவாத செயற்பாடுகளுக்கும் (முன்பைவிட) துணைபோகிறது என்பது நிதர்சனம். இக்கட்டுரை மூலம் இதன் ஆழத்தை இயன்றளவு தெரிய வைத்தேன் என நம்புகிறேன். காலை விடுவதும் விடாததும் தங்கள் சித்தம்.

Cover: by Abilaash Vijeyakumaran

Related Articles