இன்று இயந்திரங்களாக உழைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரினதும் இலட்சியமும் எதிர்காலத்தில் அல்லது முதுமையில் இதுபோன்ற இயந்திரதன்மையில்லாத வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்பதுடன், தனது எதிர்கால சந்ததியும் இதுபோல இயந்திர சசூழலுக்குள் சிக்கிவிடக் கூடாது என்பதுவாகத்தான் இருக்கும்.
அப்படியாயின், சிறப்பான எதிர்காலத்துக்காக தற்போதிலிருந்தே எத்தகைய விடயங்களை நாம் பின்பற்ற வேண்டும்? எத்தகைய விடயங்களை நாம் கைவிட வேண்டும்? என்பதனை அறிந்திருப்பது அவசியமல்லவா?
ஒவ்வொரு வயதெல்லையிலும் உங்கள் எதிர்கால வாழ்க்கை திறம்பட எத்தகைய விடயங்களை செய்யவேண்டும் என அறிந்திருப்பதும், அதனை செயற்படுத்துவதுமே எதிர்காலம் மிகச்சிறப்பாக அமைய வழிகோலும்.
20 மற்றும் 30 வயதில்….
தற்போது 20 மற்றும் 30 வயதெல்லையில் இருப்பவராக இருந்தால், நிச்சயம் கீழ்வரும் விடயங்களை உங்கள் எதிர்காலத்துக்காக அறிந்திருப்பதோ, கடைப்பிடிப்பதோ அல்லது சில விடயங்களை கைவிடுவது அவசியமாகிறது.
பணம் என்பது என்ன என்பதனை அறிந்து கொள்ளுங்கள்
20க்கும் 30க்கும் இடைப்பட்ட காலப்பகுதியானது, மேற்படிப்புக்களை முடித்துவிட்டு அல்லது மேற்படிப்புக்களுடன் தொழில் அனுபவத்தை கற்றுக்கொள்ளுகின்ற காலம் ஆகும். கூடவே, வாழ்க்கையில் ஒப்பீட்டளவில் பொறுப்புக்கள் குறைவாக உள்ள காலப்பகுதியகாவும் இருக்கும். ஆனால், குறித்த வயதெல்லைக்குள் நாம் பெறுகின்ற அனுபவப்பாடமே, எதிர்காலத்துக்கு உதவியாக அமையும். எனவே, இந்தக்காலப்பகுதிக்குள் பணம் என்பதன் தன்மையை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் எந்த தொழிற்துறையைச் சார்ந்தவராகவிருந்தாலும், நிதி முகாமைத்துவத்தின் அடிப்படையை விளங்கிக்கொள்ள நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். அப்போதுதான், பணத்தின் அடிப்படையைப் புரிந்துகொண்டு எதிர்காலத்துக்கு ஏற்றால்போல செயற்பட முடியும். இதற்கு பணம், சேமிப்பு, முதலீடு போன்ற விடயங்களை இலகுவாக புரிந்துகொள்ளக்கூடிய புத்தகங்களை படிக்க நேரத்தினை ஒதுக்குங்கள் அல்லது எளிமையான ஆலோசனைகளை இது தொடர்பில் தேர்ச்சி பெற்றவர்களிடம் பெற்றுக்கொள்ளுங்கள்.
மாத வரவு-செலவுகளை கணக்கில் கொண்டுவர ஆரம்பியுங்கள்
மிக எளிமையான முறையில், உங்களுக்கான மாதாந்த வருமானம் என்ன? மாதம்தோறும் உள்ள செலவுகள் என்ன ? என்பதனைக் குறித்துவைத்துக்கொள்ளத் தொடங்குங்கள். இது எதிர்காலத்தில், மிகப்பெரிய செலவினங்களை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், இக்கட்டான சூழ்நிலையில் எப்படி சேமிப்புக்களை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கும் அடிப்படையாக அமையும்.
இந்த வரவு-செலவு கணக்குகளை குறித்துக்கொள்ளும்போது, வருமானத்தில் செலுத்தவேண்டிய வரி முதற்கொண்டு ஏனைய இதர நிதிச்செலவுகளையும் கழித்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், வருட இறுதியில் வரிச்செலுத்துகை தொடர்பில் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும்.
இளமையிலேயே கடனை தவிர்க்க ஆரம்பியுங்கள்
இளம்பருவத்திலேயே கடன் என்பது, எதிர்காலத்துக்கான சுமை என்பதனை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். எனவே, கடனை எத்தகைய வழியில் தவிர்த்துவிடு, விரலுக்கேற்ற வீக்கத்தோடு வாழவேண்டும் என இந்த காலப்பகுதிக்குள்ளேயே பழகிக்கொள்ளுங்கள்.
குறிப்பாக, இந்த பருவத்தில் வீணான ஆடம்பரச்செலவுகளுக்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கும். விலைக்கழிவுகள், சலுகைகள் என்கிறபெயரில் கடனட்டைகள் மூலம் செய்யப்படுகின்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மனதை கலைப்பதாக அமையும். ஆனால், அவை உங்கள் உழைப்பை மெல்ல மெல்ல விழுங்கும் பூதம் என்பதனை அறிந்துகொள்ளுங்கள்.
அபாயநேர்வை (Risk) எதிர்கொள்ள ஆரம்பியுங்கள்
குறித்தப்பருவத்தில் குறைவான பொறுப்புக்கள் உள்ள நிலையிலேயே அபாயநேர்வுகளை துணிந்து எதிர்கொள்ளுங்கள். அது முதலீடு தொடர்பிலான அனுபவ பாடத்தை கற்றுத்தருவதுடன், வருமானத்தை உழைக்க எடுக்கும் முயற்சிகளில் உள்ள சிரமங்களையும், பயத்தையும் போக்குவதாக அமையும். இந்த காலப்பகுதிக்குள் நீங்கள் எடுக்கும் அபாயநேர்வு முடிவுகளால் உங்கள் பணத்தை இழந்தாலும் வருத்தப்படாதீர்கள். காரணம், இழந்ததை மீட்டிக்கொள்ளவும், உங்களை மேலும் வளப்படுத்திக்கொள்ளவும் உங்களுக்கு போதுமான காலம் இருக்கும். எனவே, இந்தக் காலப்பகுதியிலேயே சேமிப்பு, முதலீடு என சிறு சிறு அளவில் ஆரம்பித்துக்கொள்வது அவசியமாகிறது.
முதலீட்டை பரவலாக்கிக் கொள்ளுங்கள் (Diversify Investments)
துணிகரமாக முதலீடுகளை செய்ய மட்டும் பழகிக்கொள்ளாமல், கொஞ்சம் புத்திசாதுர்யமாகவும் முதலீடுகளை எப்படி செய்வது என்பது தொடர்பில் அறிந்துக்கொள்ள வேண்டும்.
அடிப்படையில், உங்கள் பணத்தினை அல்லது சொத்தினை தனித்து ஒருவிதமான வழியிலேயே முதலிடுவதிலும் பார்க்க, வெவ்வேறுபட்ட வழிகளில் முதலீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு அடிப்படையான காரணமே, ஒரு வழிசார்ந்த முதலீடுகளுக்கு ஏதேனும் நேர்ந்தாலும், ஏனைய முதலீட்டு வருமானங்கள் துணையாக இருக்கும் என்பதே ஆகும்.
உதாரணமாக, உங்களிடம் கொஞ்சப் பணம் சேமிப்பிலிருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். பங்குச்சந்தையில் சேமிப்பு வட்டியை விட, அதிக இலாபம் இருக்கிறது என அறிந்துகொள்ளும் நீங்கள், முழுப்பணத்தையும் பங்குசந்தையிலே முதலீடு செய்துகொள்ளுகிறீர்கள். இதன்போது, நீங்கள் இரேண்டுவகையான நிலையை எதிர்கொள்ளக்கூடும். எதிர்காலத்தில் நீங்கள் முதலீடு செய்த பங்கின் விலை அதிகரித்து முதலீட்டு லாபம் கிடைக்கலாம் அல்லது பங்கின் விலைகள் குறைவடைந்து உங்கள் முதலுக்கே மோசம் ஏற்படலாம். இது ஒருவகையில் அபாயம் கூடிய அதிக வருமானம் உழைக்கும் முறையாகும். ஆனால், நீங்கள் பங்குச்சந்தையில் சேமிப்பில் உள்ள ஒருபகுதியை மாத்திரம் முதலீடு செய்திருப்பின், பங்குசந்தை வீழ்ச்சியடைந்தாலும் உங்கள் சேமிப்பில் ஒரு பகுதி மூலதனம் இருந்துகொண்டே இருந்திருக்கும். எனவே, முதலீட்டை எப்படி பரவலாக்கி கொள்ளுவதன் மூலம் எதிர்காலத்துக்கு ஏற்றவகையில் கட்டியமைத்துக்கொள்ளலாம் என அறிந்திருக்க முடியும்.
காப்புறுதிகளை அலட்சியம் செய்யாதீர்கள்
தனிநபர் ஆயுட்காப்புறுதி தொடர்பில் அறிந்திருப்பதும், அதனை கொண்டிருப்பதும் அவசியமாகிறது. நம்மை சார்ந்து பலரது எதிர்காலம் இருப்பதாக நினைப்பின், நிச்சயமாக ஆயுட் காப்புறுதி ஒன்றினை கொண்டிருத்தல் அவசியமாகிறது. எதிர்காலத்தை நோக்கி செயற்படுகின்றபோது, நிச்சயமற்ற தன்மைகள் தொடர்பிலும் அவதானமாகவிருப்பது அவசியமாகிறது.
சில சமயங்களில் ஆயுட் காப்புறுதிகள் தனித்துக் காப்புறுதியாக இல்லாமல், ஓய்வுக்கால திட்டங்களையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கும். இத்தகைய மேலதிக நலன்களையும் கவனத்தில் கொண்டு இந்த வயதெல்லையிலிருந்தே காப்புறுதிகளை தெரிவு செய்துகொள்ளுங்கள். இதன்போது, காப்புறுதிக்கான மாதக்கட்டண அளவு குறைவாகவே அமையும். காரணம், இளவயதில் தனிநபருக்கான அபாயநேர்வு குறைவாக இருப்பதால் காப்புறுதி கட்டணமும் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும்.
கையிருப்பில் பணத்தை வைத்திருக்கவும் பழகிக்கொள்ளுங்கள்
20-30 வயதில் உள்ளவர்கள் பெரும்பாலும் சொல்லக்கேட்கும் விடயங்களில் பொதுவான ஒன்று “காசா கையில வச்சிருந்தா செலவளிச்சிடுறம்” என்பதாகும். குறிப்பாக, கையிலிருக்கும் எல்லா பணமும் செலவாகிவிடும் என்பதனால் அதனை சேமிப்பிலோ அல்லது முதலீட்டிலோ போட்டுவிட்டு அவசர செலவுகள் வரும்போது என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்போம். எனவே, அவசர தேவைக்கு பயன்படுத்தக்கூடிய வகையிலும், அநாவசியமாக செலவழிக்காத வகையிலும், கையிலிருப்பில் பணத்தினை வைத்திருக்க பழகிக்கொள்ளுவது அவசியமாகிறது.
40 வயதில்….
தற்போது 40 வயதெல்லையில் வாழ்ந்துக்கொண்டு இருப்பவர்களாக இருப்பின், நீங்கள் நிச்சயமாக கீழ்வரும் விடயங்களை பின்பற்றத் தொடங்குவது உங்கள் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கைதன்மையை வழங்குவதாக அமையும்.
உங்களுக்கான நிதி ஆலோசகர்களை வைத்துக்கொள்ளுங்கள்
40 வயதெல்லையில் ஆரம்பிக்கும்போது, நீங்கள் தேர்ந்தெடுத்த தொழிற்துறையில் அனுபவம் வாய்ந்தவராக, அலுவலக மற்றும் குடும்ப பொறுப்புக்களை கொண்டவராகவே இருப்பீர்கள். இந்த தருணத்தில், நீங்கள் நிதிரீதியான தொழிற்துறையை சாராத ஒருவராக இல்லாதிருப்பின், நிச்சயம் உங்கள் வருமானத்தை பொருத்தமான முதலீடுகள் மூலம் பெருக்கிக்கொள்ளத்தக்க நிதி ஆலோசகர்களை வைத்திருப்பதோ அல்லது அவர்களது வழிகாட்டுதலை பெற்றுக்கொள்ளுவதோ அவசியமாகிறது.
உங்களுடைய ஓய்வுகாலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதனால், நிதிரீதியில் உங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ள இத்தகைய செயல்பாடுகளை முன்னெடுப்பதும் அவசியமாகிறது.
காப்புறுதி அவசியம்
காப்புறுதியினை ஆரம்பிப்பதற்கான பொருத்தமான வயதெல்லையை கடந்திருந்தாலும், காப்புறுதி ஒன்றினை பெற்றுக்கொள்ளுவதில் தவறில்லை. இதன்போது மாதாந்தக் காப்புறுதி கட்டணம் ஓப்பீட்டளவில் அதிகமாக இருந்தாலும், இது நம்மில் தங்கி வாழக்கூடிய ஏனையவர்களுக்கு நாம் இல்லாதபோதிலும், ஓர் நிதிரீதியான பலமாக அமையக்கூடும். இது காப்புறுதியாளருக்கு எவ்விதமான பணரீதியான நன்மையையும் எதிர்காலத்தில் வழங்காத போதிலும், அவரது எதிர்கால சந்ததியினருக்கு அல்லது தங்கி வாழ்வோருக்கு வரப்பிரசாதமாகவே அமையும்.
சுயதொழில் முயற்சியாளர்கள் ஓய்வூதிய திட்டத்தை ஆரம்பித்தல்
ஒரு சுயதொழில் முயற்சியாளராக இருப்பின், உங்களுக்கான சுயதொழில் ஓய்வூதிய திட்டத்தை இதற்குமேல் தாமதிக்காமல் உங்கள் வணிக இலாபத்தை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பித்து விடுங்கள். இளம்வயது முதல் சுயதொழில் முயற்சியில் ஈடுபடுவர்கள், தமது இலாபத்தினை மீண்டும் மீண்டும் வணிகத்தில் பயன்படுத்துபவர்களாகவே இருப்பார்கள். ஆனாலும், ஒரு வயதுக்கு மேல் அவர்களால் முன்பு போல வணிகத்தினை கொண்டு நடாத்துவது என்பது சாத்தியமற்றதாக இருக்கும். எனவே, அவர்களும் தமது எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அதுதொடர்பிலான ஏற்பாடுகளைச் செய்துக்கொள்ளுவது அவசியமாகிறது.
50 வயதும் அதற்கு மேற்பட்டவர்களும்…..
50 வயது என்பது இலங்கையின் சராசரியான ஓய்வுகாலத்தை ஒருவர் நெருங்கிக்கொண்டிருக்கும் வயதெல்லையாகும். இந்த வயதெல்லையில் புதிதாக ஓய்வுகாலத்துக்கென திட்டமிடல்களை செய்வதனை விட்டுவிட்டு உள்ளநிலையில், எவ்வாறு எதிர்காலத்தை பாதுகாத்து கொள்ளலாம் என்பதனை சிந்திப்பதே அவசியமாகும்.
கடனில்லா வாழ்க்கையை நோக்கி நகருங்கள்
இந்த வயதில் புதிதாக சேமிக்க முடியாதபட்சத்திலும், உள்ள சேமிப்பை காப்பாற்றிக்கொண்டு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இதற்கு, ஏதேனும் கடன்கள் உங்கள் வாழ்வில் இருந்தால், அவற்றினை எவ்வாறு விரைவாக செலுத்தி முடிக்கலாம் என்பது தொடர்பில் சிந்தியுங்கள். இல்லையேல், முதுமை காலத்திலும் கடனுடனேயே வாழும் நிலை வரலாம் அல்லது உங்களை சார்ந்தவர்கள் அந்த கடனை மீளச்செலுத்துவதற்காக தம்மை கஷ்டங்களுக்குள் உள்ளாக்கிக்கொள்ள நேரிடலாம்.
ஒருமுறை உங்கள் நிலையை சரிபார்த்து கொள்ளுங்கள்
மீண்டும் ஒருமுறை உங்களை சரிபார்த்துக்கொள்ள இதுவே சரியான தருணமாகும். ஓய்வுகாலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இதுவரை எதிர்காலத்தை அடிப்படையாகக்கொண்டு எதனை எல்லாம் செய்திருக்கிறீர்கள்,? உங்கள் எதிர்காலம் உத்தரவாதம் உள்ளதாக அமைந்துள்ளதா? இல்லையாயின் உள்ள சிறிய காலத்தில் எப்படி அதனை சீர்படுத்திக்கொள்ள முடியும் ? உங்களை தங்கி வாழ்வோர் நிலை என்ன? போன்ற கேள்விகளுக்கு உங்களுக்குள்ளேயே விடைகளைத் தேடிக்கொள்ளுங்கள்.
வயது ஒரு தடையில்லை என்பதனை கருத்தில் கொள்ளுங்கள்
50 வயது என்பது வாழ்வில் மூன்றில் ஒருபங்கைக் கடந்துள்ள நிலை என்கின்ற போதிலும், இதுவே உங்கள் இறுதி அத்தியாயமாக இருக்கப் போவதில்லை என்பதனை மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்வில் போதுமான சேமிப்பும், எதிர்காலத்துக்கான உத்தரவாதமும் இருக்குமெனில், அவற்றுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் புதிய முதலீடுகளையோ, வணிகங்களையோ தேடிச் செல்லுங்கள். அவை, உங்களுக்கு புதிய அனுபவத்தையும், மேலதிக வணிக செழுமையையும் பெற்றுத்தரக்கூடும். எனவே, வயது உங்கள் செயல்பாட்டுக்கும், நிதி மேலாண்மைக்கும் ஒரு தடையாக அமையவே கூடாது.
இவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்துவதன் மூலமாக அல்லது பின்பற்றுவதன் மூலமாக, உங்களுடைய வாழ்க்கையை எதிர்காலம் நோக்கி பயமற்ற ஒரு வாழ்க்கையாக மாற்றிக்கொள்ள முடியும். 20 மற்றும் 30 வயதுகளில் எப்படி முதலீடுகள் மூலமாக உங்கள் செல்வ வளத்தை எதிர்காலத்துக்காகக் பெருக்கிக்கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களோ, அதுபோல 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுகளில் உங்களுடைய செல்வ வளத்தையும், உங்களில் தங்கி வாழ்வோர் வாழ்க்கையையும் அழித்துவிடாது வாழ்வது அவசியமாக இருக்கிறது. அதுவே, உங்களது உண்மையான வெற்றியும் கூட!