2014, 2015 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், 2016 ஆம் ஆண்டில் இது வரையிலும், விமான விபத்துக்கள் அதிகமாகவே நிகழ்ந்துள்ளன. இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதம்வரை, சர்வதேச விமான விபத்துக்கள் 17 நிகழ்ந்துள்ளன. பெப்ரவரி 25 ஆம் திகதி, தாரா எயார்லைன் நிறுவனத்துக்கு (Tara Air Flight 193) சொந்தமான விமானமொன்று, 23 நபர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தி, நேபாளத்தில் வீழ்ந்தது, மார்ச் 19 ஆம் திகதி ஃப்லை டுபாய் நிறுவனத்துக்கு (Fly Dubai Flight 981) சொந்தமான Boeing 737-800 என்ற விமானம், 62 நபர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தி, ரஷ்யாவிலும் மற்றும் மே மாதம் 19 ஆம் திகதி எகிப்து எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு (Egypt Air Flight 804) சொந்தமான, Airbus A320 என்ற விமானம், 66 நபர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தி, கிழக்கு மத்திய தரைக்கடலிலும் வீழ்ந்தது. இவ்விமான விபத்துக்கள், பெருமளவு உயிர் சேதங்களை ஏற்படுத்திய விபத்துக்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
எனவே, இன்றைய கட்டுரையில் நாம், சர்வதேச சிவில் விமானங்கள் விபத்துக்குள்ளானால், அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தே ஆராய உள்ளோம். விமான விபத்து குறித்த விசாரணைகளை மேற்கொள்வது, விமான நிலையம் எந்த நாட்டுக்குரியதோ அந்த நாடா? அல்லது, விபத்து நிகழ்ந்த நாடா? அல்லது வேறொரு தரப்பா? விசாரணைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன? விபத்து குறித்த விசாரணை அறிக்கை எவ்வாறு தயார்படுத்தப்படுகின்றது? இவ்வாறான கேள்விகளுக்கான விடைகள், இக்கட்டுரையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. விமானத்துறை குறித்த ஆர்வம் உங்களுக்கு இருப்பின், இந்தக் கட்டுரை மிகவும் சுவையானதாக அமையும். இங்கு குறிப்பிடப்பட்ட விடயங்கள் தாண்டி வேறு ஏதாவது சுவாரஸ்யமான தகவல்கள் இருப்பின், பின்னூட்டமிட்டு அவை குறித்து தெரிவிப்பதற்கு மறவாதீர்கள்.
சர்வதேச சிவில் விமான பயணங்களை கட்டுப்படுத்துவது யார்?
விபத்துக்கள் குறித்து பேசுவதற்கு முன்னர், உலகத்தையே தொடர்புபடுத்துகின்ற சர்வதேச சிவில் விமான சேவையை முகாமைத்துவம் செய்தல், தேவையான சந்தர்ப்பங்களில் சட்டங்களை இயற்றுதல் மற்றும் விமான விவகாரங்களில் பாதுகாப்பு குறித்து தேடியறிதல் என்பவற்றுக்காக உள்ள இரண்டு சர்வதேச நிறுவனங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
-
சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பு (International Civil Aviation Organization)
கனடாவில் அமையப் பெற்றுள்ள, ICAO என்ற சுருக்கப் பெயரால் வழங்கப்படுகின்ற இந்த அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையுடன் நேரடியான தொடர்புகளைப் பேணுகின்றது. உலகம் முழுதுவம் வியாபித்துள்ள விமான நிலையங்களது நடவடிக்கைகளுக்கான சட்டதிட்டங்கள், விமானங்கள் மற்றும் விமானம் பயணிக்கும் வழிகளுக்கான சட்டதிட்டங்கள் என்பன, விமான பயண விதிமுறைகளுக்காக நிறைவேற்றப்பட்ட சிகாகோ சமவாயத்துக்கேற்ப மேற்கொள்ளப்படுகின்றனவா என்று அவதானிப்பது இந்த நிறுவனமாகும். தற்போது 191 நாடுகள் இந்த அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ளன.
- சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (International Air Transport Association)
கனடாவில் அமையப்பெற்றுள்ள, IATA என்ற சுருக்கப் பெயரால் வழங்கப்படுகின்ற இந்த நிறுவனம், அனைத்து விமான கம்பனிகளுடனும் நேரடியான தொடர்புகளைப் பேணி, விமானத்தின், பிரயாணிகளின், விமான பணியாளர்களின் மற்றும் கொண்டு செல்லப்படும் பொருட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது.
விமானம் விபத்துக்குள்ளாகுவதற்கான காரணங்கள்
விமானி உள்ளிட்ட விமான பணியாளர்கள் விடும் தவறுகளை, அடிப்படையான காரணங்களாக அடையாளப்படுத்த முடியும். (flight crew error) 2010 ஜூலை 28 ஆம் திகதி பாகிஸ்தானின் Margall மலையில் மோதிய எயார் ப்லூ நிறுவனத்தின் விமானமொன்று, விமானியின் பொடுபோக்கினாலேயே, 152 பயணிகளுடன் அழிந்துபோனது.
மோசமான காலநிலையை இன்னுமொரு காரணமாகச் சொல்லலாம். 583 நபர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தி, 1977 மார்ச் மாதம் ஸ்பெய்னில் நிகழ்ந்த விபத்து, மோசமான காலநிலை காரணமாக, இதுவரை உலகில் பெருமளவு பிரயாணிகளுக்கு மரணத்தை கொண்டுவந்த விபத்தாக அடையாளப்படுத்தப்படுகின்றது. அதேபோல், விமானத்தின் தொழினுட்ப கோளாறு, விமான நிலையத்துடனான தொடர்பில் ஏற்படும் பலவீனம், சைபர் தாக்குதல்கள் மூலம் தொடர்பாடலில் ஏற்படும் இடையூறு, தீவிரவாதிகளின் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் விமானியின் அறையை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் லேசர் கதிர் தாக்குதல் என்பன விபத்தை ஏற்படுத்தும் காரணிகளாகும்.
விமானம் விபத்துக்குள்ளானதும்…
விபத்துக்குள்ளாகிய விமானத்தின் நிறை, 2250 கிலோ கிராமை விடவும் அதிகம் என்றால், அது குறித்து ICAO நிறுவனத்துக்கு அறிவிக்க வேண்டும். அப்போது, அந்த நிறுவனம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, விமானம் விபத்துக்குள்ளான நாட்டிடம் விமானத்தை ஒப்படைக்கும். ஆனால், அந்த நாடு ICAO வில் பதிவு செய்யப்படாத நாடு என்றால், விமானம் பதிவு செய்யப்பட்டுள்ள நாட்டுக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு வழங்கப்படும். விமானம் கடலில் வீழ்ந்திருந்தால், அந்தப் பகுதியை அண்மித்துள்ள நாட்டுக்கு விசாரணைப் பொறுப்புக்கள் வழங்கப்படும்.
விசாரணை பொறுப்பு வழங்கப்படும் நாடு முதலில் என்ன செய்ய வேண்டும்?
சிகாகோ சமவாயத்தின் 13 ஆம் பின்னிணைப்பில், சர்வதேச விமான விபத்துக்கள் விசாரணை செய்யப்பட வேண்டிய கொள்கை விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, விபத்துக்குள்ளான விமானத்தினுள் சிக்கியுள்ள பிரயாணிகளை முடியுமானளவு அவசரமாக வெளியே எடுத்து, காயமடைந்தோருக்கு சிகிச்சை வழங்குவதே முதலில் செய்யப்பட வேண்டிய பணியாகும். இந்த விபத்தினால், ஏனைய விமான போக்குவரத்துக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாதவாறு, விசாரணைகளை மேற்கொள்ளும் நாடு பார்த்துக் கொள்ளல் வேண்டும். அத்தோடு, விமானம் வீழ்ந்ததை காரணமாக வைத்து, பொது மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் செயற்படவும் கூடாது. விபத்தின் அனைத்து சாட்சிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, விமானம் வீழ்ந்த இடத்துக்கு பாதுகாப்பு வழங்கி, அனுமதியின்றி எவரும் அந்தப் பகுதியில் உள்நுழைவதை தடுப்பது, குறித்த நாட்டின் பொறுப்பாகும்.
சாட்சிகளை பாதுகாத்தல்
விபத்துக்கான காரணத்தை அறிந்துகொள்வதற்கு உதவுகின்ற கறுப்புப் பெட்டி (flight data recorder) மூலம், விமானம் விபத்துக்குள்ளாகும்போது, விமானத்தின் நிலைப்பாடு எவ்வாறிருந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அத்தோடு, விமானியின் அறையிலுள்ள பதிவியில், விபத்து நடைபெறும்போது விமானிகள் பேசிக் கொண்டவை பதிவு செய்யப்படும். எனவே, இந்த இரு உபகரணங்களும், அவை குறித்து நன்கு அறிந்துள்ள, அவைபற்றிய அறிவுள்ள நபர்களுக்கோ நிறுவனங்களுக்கோ வழங்கப்பட வேண்டும். சாட்சிகளை சேர்த்ததன் பின்னர், குறித்த பொருட்கள் உரிமையாளர்களிடம் வழங்கப்படும்.
அறிவிக்க வேண்டிய நபர்கள்
விபத்து நடைபெற்றால், அந்த விமானத்தை தயாரித்த நிறுவனம், விமானம் பதிவு செய்யப்பட்டுள்ள நாடு, விமானத்தை பயன்படுத்தும் நாடு, விமானத்தை திட்டமிட்ட நாடு என்ற தரப்புக்களுக்கு முடியுமானளவு அவசரமாக அறிவிக்க வேண்டும். விசாரணை செயல்முறை முறையாக நடைபெறுகின்றதா என்பதை அவதானிப்பதற்கு, ICAO நிறுவனம் அமைக்கும் குழுவொன்று, குறித்த நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு, விசாரணைகள் குறித்து தேடியறியும். மேற்கொள்ளப்பட்டிருக்கும் விசாரணைகள் குறித்த அறிக்கையும், இந்த நிறுவனத்துக்கு வழங்கப்படும்.
விசாரணை அறிக்கையில் உள்ளடங்க வேண்டியவை
மரணமடைந்த மற்றும் காயமடைந்த பிரயாணிகளின் எண்ணிக்கை, விமானத்தின் உற்பத்தியாளர், விமானத்தின் வகை, விமானம் பதிவு செய்யப்பட்டுள்ள நாடு, பதிவு அடையாம் மற்றும் பதிவு எண், விமானிகள் உள்ளிட்ட பணியாளர்களின் பெயர்களும் அவர்களது நாடுகளும், இறுதியாக பயணத்தை ஆரம்பித்த விமான நிலையம், சென்றடைய திட்டமிட்டிருந்த விமான நிலையம் மற்றும் ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் அண்ணளவான பெறுமதி ஆகியவற்றை முடியுமானளவு அவசரமாக கண்டறிய வேண்டும். அத்தோடு, விமான விபத்து நிகழ்ந்த பிரதேசம் பற்றிய விபரம், வெடிக்கும் பொருட்கள் (dangerous goods) விமானத்தினுள் இருந்தால், அவை பற்றிய விபரம் என்பன குறித்த தெளிவான விபரங்கள் இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படும்.
இறுதியான விசாரணை அறிக்கை
விபத்து தொடர்பான அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தரப்புக்களுக்கும் அனுப்பப்படும். மரணித்தோரின் நாடுகளுக்கும் இந்த அறிக்கை அனுப்பப்பட வேண்டும். அந்த தரப்புக்கள் 60 நாட்களுக்குள் தமது முன்மொழிவு அறிக்கைகளை வழங்க வேண்டும். விபத்து நிகழ்ந்து 12 மாதங்களுக்குள், இறுதியான விசாரணை அறிக்கையை, குறித்த நாடு ICAO வுக்கு வழங்கும். இறுதி அறிக்கையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு மேலதிகமாக, விபத்துக்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். இவ்வாறான விபத்துக்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் கட்டாயமாக குறிப்பிடப்படும்.
இறுதியான விசாரணை அறிக்கை விபத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்களுக்கும் அனுப்பப்படும். ஒரு வருடத்தினுள் அறிக்கையை சமர்ப்பிக்க முடியாதுபோனால், விசாரணையின் நிலையை குறிப்பிட்டு, ஒவ்வொரு வருடமும் தற்காலிக அறிக்கைகளை வெளியிடுவதற்கு, குறித்த நாடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவில் விமானமொன்று விபத்துக்குள்ளானால், சர்வதேச சட்டங்களின்படி விசாரணைகள் மேற்கொள்ளப்படும் செயல்முறை மற்றும் அதன் முடிவு என்பன பற்றியே இக்கட்டுரையில் நாம் உங்களுக்கு விளக்கினோம். அத்தோடு, ஒரு விமானத்தினுள் ஒரு பிரயாணிக்கு உள்ள உரிமைகள் குறித்து இன்னுமொரு கட்டுரையில் உங்களுக்கு விளக்கமளிக்க நாம் திட்டமிட்டுள்ளோம்.
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்