
தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்
‘ஜப்பான்காரன் கெட்டிக்காரன்’ என்ற வசனத்தை நாம் அடிக்கடி செவிமடுக்கின்றோம். உலக மக்களில் மிகவும் சிறிய உடலமைப்பைக் கொண்டிருந்தபோதும், அனைத்து துறைகளிலும் அவர்கள் மிகவும் திறமைவாய்ந்தவர்கள். அவர்கள் நல்ல உடற் சுகாதாரமுடையவர்கள். அவர்கள் சிறந்த பண்பாட்டை உடையவர்கள். எனவே, ஜப்பானியர்கள் உலகம் முழுவதும் பிரபலம் பெற்றிருக்கிறார்கள். அதேநேரம், உலகில் அதிகளவு எழுத்தறிவு வீதம் கொண்ட ஒரு நாடாகவும் ஜப்பான் கருதப்படுகின்றது. ஜப்பானியர்களின் எழுத்தறிவு வீதம் 99.9 சதவீதமாகும். இவ்வாறு ஜப்பானியர்கள் கெட்டிக்காரர்களாக இருப்பதற்கான காரணம் அவர்களது கல்வித் திட்டமாகும்.
ஜப்பானில் ஆரம்பக் கல்வி (Elementary Education) அதாவது முதலாம் ஆண்டிலிருந்து 06 ஆம் ஆண்டு வரையிலுமான கல்வியும், கீழ் இரண்டாம் நிலைக் கல்வி (Lower Secondary Education) அதாவது, 07 ஆம் ஆண்டிலிருந்து 09 ஆம் ஆண்டு வரையிலான கல்வியும் கட்டாயமானதாகும். அத்தோடு, பெரும்பாலான மாணவர்கள் இந்தக் காலப்பகுதிக்குரிய கல்வியை பொதுப் பாடசாலைகளிலேயே பெறுகின்றனர்.
கட்டாயமில்லாதபோதும், ஜப்பான் மாணவர்களில் 94.3 சதவீதமானோர், அவர்களது உயர் இரண்டாம் நிலைக் கல்வியை, அதாவது, 10 ஆம் ஆண்டிலிருந்து 12 ஆம் ஆண்டு வரையிலான கல்வியையும் பூரணப்படுத்துகின்றனர்.
கல்விக்கு முன் நல்லொழுக்கம்
இற்றைக்கு 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்னர், இலங்கைச் சிறார்கள் முதலாம் ஆண்டில் இணைந்ததன் பின்னரே எழுத்துக்களை எழுதப் பழகினர். ஆனால், இன்று பல பாலர் பாடசாலைகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில அரிச்சுவடிகள் கற்பிக்கப்படுகின்றன. சிங்கள, தமிழ் எழுத்துக்கள் மிகவும் நுணுக்கமானவை என்பதால், பல சிறுவர்களுக்கு, சிறு வயதிலேயே முறையாக எழுத்துக்களை கிரகித்துக் கொள்வது கடினமானதாகும். எனவே, பாடசாலைக்குச் செல்ல ஆரம்பிக்கும் முன்னரே எழுத்து, வாசிப்பு, கணிதம் மற்றும் இன்னோரன்ன பாடவிதானச் செயற்பாடுகளில் எமது பிள்ளைகள் வலிந்து ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு மிகச் சிறிய வயதிலேயே எழுத்துக்களை எழுதப் பழக்குவது சிறு பிள்ளைகளது மனங்களுக்குப் பொருத்தமானதா?
ஆனால், எங்களை விட எழுத்தறிவு வீதத்தில் முன்னிலையிலுள்ள ஜப்பானில் இதனையும் விட முற்றிலும் மாற்றமான நிலையே நிலவுகிறது. ஜப்பானிய கல்வித் திட்டத்தின்படி, பாடசாலை வாழ்வின் முதல் மூன்று வருடங்களிலும் மாணவர்கள் எந்தவொரு பரீட்சைக்கும் முகம் கொடுக்க வேண்டியதில்லை. இந்த வருடங்களில் மாணவர்களில் நற்பழக்கங்கள் விதைக்கப்படுவதோடு, ஆளுமை விருத்தியும் மேற்கொள்ளப்படுகின்றது. அத்தோடு, ஏனையோரை மதிக்கவும், சூழலையும் விலங்குகளையும் நேசிக்கவும் அவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றது. இந்தக் காலப்பகுதியில் சிறுவர்களின் மனங்களில் சுய கட்டுப்பாடு, நீதி மற்றும் உறுதி போன்ற பண்புகள் விதைக்கப்படுகின்றன. அத்தோடு, தியாகம், தயாளப் பண்பு மற்றும் அனுதாபப்படுதல் போன்ற பண்புகளும் இந்தக் காலப் பகுதியில் கற்பிக்கப்படுகின்றன.
சுத்தம் மற்றும் ஒழுங்கு
இலங்கைப் பாடசாலைகளில் இருப்பது போன்று, ஜப்பானில் பாடசாலைகளை சுத்திகரிப்பதற்கு வேறு பணியாட்கள் காணப்படுவதில்லை. அங்கு வகுப்பறை, உணவகம் மட்டுமன்றி குளியலறை, மலசலகூடங்களையும் மாணவ மாணவிகளே சுத்தப்படுத்துகின்றனர். பாடசாலையை சுத்தப்படுத்தும் பணிகளுக்காக, மாணவர்கள் சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒரு வருடத்துக்கான கால அட்டவணையும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இதன் மூலம் சுத்தமாக இருப்பதற்கும், குழுவாக இயங்குவதற்கும், ஏனையோருக்கு உதவி செய்வதற்கும் அவர்கள் கற்றுக்கொள்வதாக ஜப்பானிய கல்வித் திட்டம் நம்புகின்றது.
அத்தோடு, குப்பைகளை பெருக்குதல். நிலத்தை சுத்தம் செய்தல், யன்னல்களை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளுக்கு நேரத்தையும், உழைப்பையும் வழங்குவதன் மூலம், ஏனையோரின் வேலைகளுக்கு மதிப்பளிப்பதற்கும், பொது இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கும் அவர்கள் பழக்கப்படுகின்றனர்.
கணிதம் இலகுவானது
ஒன்றை கற்பிப்பதன் மூலம் அதனை இலகுவாகக் கற்கலாம் என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர். எனவே, கணிதத்தை கற்பிக்கும்போது. கலந்துரையாடியவாறு கற்கின்ற ஒரு பிரயோக முறையையே அவர்கள் பின்பற்றுகின்றனர். கணித ஆசிரியர் வகுப்பறைக்கு வந்ததன் பின்னர், அன்றைய பாட வேளையில் கற்க வேண்டிய பாடம் குறித்து சிறு விளக்கம் அளிப்பார். பின்னர், ஒரு சிறிய உதாரணம் முன்வைக்கப்பட்டு, அது தொடர்பான ஒரு கேள்வி கரும்பலகையில் எழுதப்படும்.
இந்தக் கேள்விக்கான விடையை முதலில் கண்டறிபவர், தனது விடையை ஆசிரியருக்கு வழங்குவார். அவரது விடை சரியாயின், அத்தோடு ஆசிரியரின் பணி முடிவடைந்து விடுகின்றது. பின்னர், சரியான விடையை வழங்கிய மாணவனே ஆசிரியராக மாறுகிறார். இரண்டாவதாக விடையைக் கண்டறிபவரின் விடை சரியா என்பதை அந்த மாணவர் பார்ப்பார். இந்த வழிமுறையை பின்பற்றி, வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியராகும் வாய்ப்பு கிடைக்கின்றது. இந்த முழுமையான காலப் பகுதியினுள் மாணவர்களை கண்காணிக்கும் நிஜ ஆசிரியர், தேவைப்படும்போது மட்டும் தனது வழிகாட்டலை வழங்குவார்.
கணித சிக்கல்களை இவ்வாறு கலந்துரையாடுவதன் மூலமும், இன்னுமொருவருக்கு கற்பிப்பதன் மூலமும் அவற்றை துரிதமாக கிரகித்துக் கொள்ள முடியும் என்பதே கல்வியியலாளர்களின் கருத்தாகும். ஜப்பானிய கல்வித் திட்டத்தினுள் செயற்படுகின்ற இந்த வழிமுறை மிகவும் வெற்றிகரமானதாகவும், மாணவர்களிடம் கணிதத்தின் பால் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலானதாகவும் கருதப்படுகின்றது. இவ்வாறான ஒரு வழிமுறையை இலங்கை கல்வித் திட்டத்துக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், சாதாரண தரப் பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாதோரின் தொகையை பெருமளவு குறைக்க முடியும்.
சீரான உணவுப் பழக்கம்
பெரும்பாலான இலங்கை மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும்போது, பகலுணவை வீட்டிலிருந்து எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறில்லாதபோது, பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் பெற்றுக் கொள்கின்றனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்களது உணவு துரித உணவுகளாகவே அமைகின்றன. சிலபோது, நாளாந்த போசனைத் தேவைகளை பூரணப்படுத்துவதற்கு அவை போதுமானதாக அமைவதில்லை. இந்த நிலையை கருத்திற்கொண்ட கல்வி அமைச்சு, சீரான உணவு வேளையொன்றை வழங்குவதற்கு பல்வேறு வழிமுறைகளை பின்பற்றியபோதும், அதில் எதுவும் இன்று வரை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
ஜப்பானிய கல்வித் திட்டத்தில், சீரான உணவு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆரம்பப் பிரிவு மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியைப் பெறுகின்ற காலப் பகுதியில், அனைத்து மாணவர்களுக்கும் ஜப்பான் அரசு பகலுணவை வழங்குகின்றது. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உணவு வகைகள் மற்றும் அவற்றின் அளவு ஆகியவற்றை போசணைத்துறை நிபுணர்கள் தீர்மானிக்கின்றனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த உணவில் சோறு, மரக்கறி, இறைச்சி அல்லது மீன், புதிய பால் ஆகியன உள்ளடங்குகின்றன. உணவுக்குப் பின்னர் பழங்கள் மற்றும் யோகட் என்பன மட்டுமே வழங்கப்படுகின்றன.
ஜப்பான் மாணவர்கள் வகுப்பறையினுள்ளேயே உணவு உட்கொள்கின்றனர். உணவு உட்கொள்ளும்போது அந்த உணவில் உள்ளடங்கியிருக்கின்ற போசனைப் பதார்த்தங்கள் மற்றும் அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து ஆசிரியருடன் உரையாடப்படும். இங்கு, ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையில் சிறந்த தொடர்பு ஏற்பட வேண்டும் என்பதுவே முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
கல்வெட்டு மற்றும் கவிதை
பாரம்பரிய ஜப்பானிய கல்வெட்டுக் கலை ஷோதோ என்று வழங்கப்படுகின்றது. இந்தக் கலையில், மூங்கில் மரத்தினால் தயாரிக்கப்பட்ட தூரிகை மூலம் எழுத்துக்கள் எழுதப்படுகின்றன. இந்தக் கலையை, ஜப்பானிய சிற்பக் கலை போன்று ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கலையாகவே ஜப்பானியர்கள் கருதுகின்றனர்.
ஹைக்கூ என்பது ஜப்பானியர்களுக்கே உரித்தான ஒரு கவிதை வடிவமாகும். இந்த முறைமையை பயன்படுத்தி, இலகுவான மொழி நடை மூலம், ஆழமான கருத்துக்களை வழங்குகின்ற சிறிய கவிதைகள் எழுதப்படுகின்றன.
ஜப்பானிய பாடசாலைகளில் பொதுவான பாடங்களுக்கு மேலதிகமாக கல்வெட்டு கலையும் கவிதைக் கலையும் கற்பிக்கப்படுகின்றன. அதன் மூலம், ஜப்பானிய கலசாரத்துக்கு மதிப்பளித்தல் மற்றும் நூற்றாண்டு காலங்கள் பழைமைவாய்ந்த பாரம்பரியங்களை பாதுகாத்தல் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன.
இவ்வாறான விசேட விடயங்கள் காரணமாக, ஜப்பான் கல்வித் திட்டம் உலகின் ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணத்தை வழங்குகின்றது. பொதுவாக பல நாடுகளிலும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாது அங்குமிங்கும் சுற்றித் திரியப் பழகியிருக்கின்றபோதும், ஜப்பானிய மாணவர்களின் வருகை 98 சதவீதத்தையும் தாண்டுகின்றது. அத்தோடு, 91 சதவீதமான ஜப்பானிய மாணவர்கள், வகுப்பறையில் ஆசிரியர் கூறும் விடயங்களின்பால் நன்கு கவனம் செலுத்துவதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜப்பான் கல்வித் திட்டம் பற்றிப் பேசும்போது, ‘மதெஹிவா நொ டொட்டோ சங்’ என்ற பெயரில் டெட்சுகோ குரொயானகீ எழுதி, ‘ஹரி புதும இஸ்கோலே’ என்ற பெயரில் லீலானந்த கமாச்சி சிங்களத்துக்கு மொழிபெயர்த்த புத்தகத்துக்கு ஒரு முக்கிய இடம் வழங்கப்படுகின்றது. அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படுகின்ற சொசொகு கொபயாசி என்பவர் அறிமுகப்படுத்திய கற்கும் முறைகள் பலவற்றை, ஜப்பானிய கல்வியியலாளாகள் பாடசாலை பாடசத்திட்டத்தை தயாரிக்கும்போது கருத்திற் கொள்கின்றனர்.

டெட்சுகோ குரொயானகீ இன் தேல்சுகோ குரோயனகி நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு. (seirachannosekai.blogspot.com)
மூலாதாரங்கள்: brightside.me, thejapanguy.com, en.wikipedia.org, ovakdjokovicfoundation.org, moe.gov.lk