2019 பெப்ரவரி மாதத்தில் ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு, இலங்கையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் சார் அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கைக்கான கொரிய தூதரகம் ஆகியவற்றுடன் இணைந்து முதன் முறையாக இலங்கை அரசாங்கத்தின் வரவு-செலவு திட்டம், கொள்கைகள் மற்றும் திட்டங்களால் மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்தான ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.
“மாற்றுத்திறன் கொண்ட பெண்களும் அவர்கள் பொருளாதார வாய்ப்புகளை அடைந்துகொள்ள கிடைக்கும் சந்தர்ப்பங்களும்” என்ற தலைப்பில் வெளியான இந்த முதலாவது ஆய்வறிக்கை இலங்கையின் 4 மாவட்டங்களில் இருந்து 400 பேரை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட்டது. இதில் மாற்றுத்திறன் கொண்டவர்கள் ஊழியப்படையில் இணைந்து கொள்வதற்கு முகங்கொடுக்க வேண்டிய இடர்பாடுகள் பற்றி ஆராயப்பட்டது.
இதுவே இலங்கையில் முதன்முதலில் பாலின சமத்துவம் சார்ந்த பாதீடு குறித்தும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் எவ்வாறு மாற்றுத்திறன் கொண்ட பெண்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகிறது என்பது குறித்தும் மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வு.
- பேரண்ட கொள்கை மதிப்பாய்வு – பாலினம் மற்றும் இயலாமை.
பாலினம் மற்றும் இயலாமை அடிப்படையில் வள ஒதுக்கீடு குறித்தான துறை சார் மதிப்பீடுகள் – 6 தேர்தெடுக்கப்பட்ட திணைக்களங்கள்.
- தேசிய செயற்திட்ட மதிப்பீடு – தொழில் மற்றும் வேலைவாய்ப்பு
தரவுகளில் காணப்படும் வெற்றிடங்களையும், குறிகாட்டிகளின் செயற்பாட்டையும் புரிந்து கொள்ள கருப்பொருள் சார்ந்த மையப்படுத்தபட்ட மதிப்பீடு.
- கருப்பொருள் நோக்கம் கொண்ட மதிப்பீடு – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வலுவூட்டல்
எவ்வாறு 25% வழிகாட்டல்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது மற்றும் பெண்கள், மாற்றுத்திறன் கொண்டவர்கள் இடையே எவ்வாறு இவை பகிறப்பட்டுள்ளன என்பதை மதிப்பிடல்.
- களக்கணக்கெடுப்பு
பெண்கள் மற்றும் மாற்றுத்திறன் கொண்டோர் தரப்பில் இருந்து அவர்களின் குறைகள், பிரச்சினைகள் மற்றும் தேவைகளை புரிந்து கொள்ளுதல். துணைநிலை தரவுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் முதன்மை தரவுகளை திரட்டுதல்.
இதன் மூலமாக பாலினம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறித்து தவறான புரிதல் கொண்டவர்களால் தொடர்ந்தும் மாற்றுத்திறன் கொண்ட பெண்கள் அதிகளவு புறக்கணிப்பையும், அடக்குமுறைகளையும் சந்திப்பது பற்றியும், அதிலும் குறிப்பாக பொருளாதார சந்தர்பங்களை அணுக முற்படும்போது அதிகளவு அழுத்தங்கள் ஏற்படுவது பற்றியும் அறியமுடிந்தது.
சந்தர்ப்ப பகுப்பாய்வு
உலகசனத்தொகையில் ஏறக்குறைய 1 பில்லியன் மக்கள் ஏதோ ஒரு வகையில் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். பொதுவாக 5 பெண்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பது இனங்காணப்பட்டுள்ளது. இந்த தொகை (19.2%) ஆண்களில் மாற்றுத்திறன் கொண்டவர்களின் சதவீதத்தை (12%) விட அதிகமாகும்.
இந்நிலை இலங்கையிலும் காணப்படுகிறது. 2012 குடிசன மதிப்பீட்டின் படி இலங்கையில் மொத்த மாற்றுத்திறனாளிகளாக ஆண்களை விட பெண்களே அதிகமாக காணப்படுகின்றனர். இருந்தும் அவர்களில் வெறும் 15% ஆனவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
மேலும் ஐ.நாவின் இவ் ஆய்வு, இச் சமத்துவம் அற்ற பங்கீட்டுக்கான காரணமாக சமுதாயத்தில் நிலவும் ஒருபக்க சார்பான தவறான புரிந்துணர்வை காரணம் காட்டுகிறது. தொழில் தருணர்கள் சாதாரண பெண்களுக்கும், மாற்றுத்திறன் கொண்ட ஆண்களுக்கும் வழங்கும் வேலைவாய்ப்புகளுடன் ஒப்பிடும்போது மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கு வழங்கும் சந்தர்ப்பங்கள் மிகக்குறைவாகவே உள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளும் மற்றும் தேசிய திட்டமும்
“கடந்த சில ஆண்டுகளாக இலங்கை அரசாங்கம் அபிவிருத்தியை மேற்கொள்ளும் நோக்குடன் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறது” என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதற்கான முதல்படியாக இலங்கை அரசு 2007 இல் இடம்பெற்ற மாற்றுத்திறன் கொண்டோருக்கான சர்வதேச மாநாட்டில் (CRPD) பங்குகொண்டது. இது 2016 பெப்ரவரி மாதத்தில் உறுதி செய்யப்பட்டது.
இதன் முதற்கட்ட அறிக்கை இலங்கையில் எவ்வாறு CRPD நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது மற்றும் அதன் சட்டரீதியான, கொள்கைரீதியான, நிறுவன ரீதியான அளவீடுகள் இலங்கையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2016 ஆம் ஆண்டு CRPD இல் உறுதிசெய்யப்பட்ட “எந்தவொரு தனிநபரும் சமமான கண்ணியதுடன் நடத்தப்பட வேண்டும்” என்பதை செயற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படுவதை தடுக்க சட்டரீதியான உத்தரவாதம் வழங்கப்பட்டது. இது மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மேலும் வலுவானதாக மாற்றியது.
2014 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உறுதி செய்யப்பட்டு கல்வி மற்றும் தொழில் துறையில் மாற்றுத்திறனாளிகள் பங்குபெறக்கூடிய வாய்ப்பும் அதிகரிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் திறமைகள், அறிவு மற்றும் ஆற்றலை தேசிய அபிவிருத்திக்கு பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்கிய இத் திட்டத்தை இலங்கை அரசு ஒரு மைல் கல்லாக பார்க்கின்றது..
இந்த திட்டம் பின்வரும் 7 நோக்கங்களில் செயற்பட்டது. வலுவூட்டல்; சுகாதாரம் மற்றும் மீள்குடியேற்றம்; கல்வி; தொழில் மற்றும் வேலைவாய்ப்பு; முக்கியத்துவம் மற்றும் ஏற்புடைய சூழல்; தரவுகள் மற்றும் ஆய்வுகள்; சமூக அமைப்பு ஒருமைப்பாடு.
இந்த திட்டதுக்காக 65 மில்லியன் இலங்கை ரூபாய்கள் நடுத்தர கால பாதீட்டின் மூலம் ஒதுக்கப்பட்டு, அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டது. இருந்த போதிலும் மாற்றுத்திறன் கொண்ட பெண்களை ஊழியப்படையில் இணைத்துக்கொள்வதில் முன்னேற்றம் இருக்கவில்லை. இச் சந்தர்பத்திலேயே பாலின சமத்துவம் மிக்க பாதீடு என்ற எண்ணக்கரு உருவானது.
பாலின வரவு-செலவுத்திட்டம் என்றால் என்ன?
2016 Stotsky இன் பிரகாரம், பாலின வரவு-செலவுத்திட்டம் என்பது “பாலின சமத்துவமின்மையை நிவர்த்தி செய்ய தேவையான நிதிக்கொள்கைகள், நிர்வாக நடைமுறைகள் ஆகியவற்றை கொண்டு கட்டமைக்கப்படும் பாதீடு”
வேலைத்தளங்களில் நிலவும் ஆண் பெண் விகிதாசார சமத்துவமின்மையை நீக்கும் பொருட்டு கொள்கை வகுப்பாளர்கள் நிலவும் பரமானங்களை மாற்றியமைக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
விழிப்புணர்வு கூட்டங்களும், விளம்பர பிரச்சாரங்களும் மாத்திரம் பெண்களை ஊழியப்படையில் சேர்த்துக்கொள்ளும் வீதத்தை அதிகரித்து விடாது. பெண்கள் வேலைக்கு செல்வது குறித்து பக்கசார்பானதும், குறுகியதுமான மனப்பான்மை நிலவுகின்ற போதிலும் கூட அடிப்படையாக இருக்கும் கொள்கைகளில் ஏற்படுத்தக்கூடிய சிறிய மாற்றங்கள் பெண்கள் வேலை செய்யும் சூழலை மேலும் வசதியானதாக்கும். பாலின பாதீடு மூலமாக இந்த இலக்கை இலகுவாக அடைய முடியும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இயல்பிலேயே இருக்கும் வேறுபட்ட தேவைகளை உணர்ந்து வளங்களை ஒதுக்கீடு செய்வதன் மூலமாக ஆதாரப்பூர்வமாக, மக்கள் நிதி பங்கீட்டில் சிறப்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதை காணலாம்.
இந்த கொள்கைகள் தனியே ஒருபக்க சார்பானவைகள் அல்ல. பாலின சமத்துவ பாதீடு தொழில் வழங்குனர்களுக்கும் பெருமளவு நன்மையை தரும். உதாரணமாக தொழிற்படையில் நிலவும் இந்த பல்வகைமை நிறுவனத்தின் உற்பத்தி வினைத்திறனை அதிகரிக்கச்செய்யும்.
பாலின பொறுப்புமிக்க வரவு-செலவுத்திட்டம்: ஒரு மேலோட்டம்.
உலகில் முதன்முறையாக பாலின சமத்துவம் கொண்ட பாதீடு கொரிய குடியரசில் 2002 இல் அமுலானது. அதனை தொடர்ந்து 2012 இல் மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய புதிய வரவு-செலவுத்திட்டம் நடைமுறையானது. “ஆசிய பசுபிக் வலயத்துக்கான பிராந்திய மாற்றுத்திறனாளிகள் ஒத்துழைப்பு இலக்குகள்” என்ற முதலாவது செயற்திட்டம், ஆசிய பசுபிக் வலயத்துக்கான ஐக்கியநாடுகள் பொருளாதார சமூக ஆணையத்தின் உதவியினால் வெற்றிகரமாக நடைபெற்றது.
இதனாலேயே “மாற்றுத்திறன் கொண்ட பெண்களும் அவர்கள் பொருளாதார வாய்ப்புகளை அடைந்துகொள்ள கிடைக்கும் சந்தர்ப்பங்களும்” என்ற ஆய்வு முக்கியமாகிறது. கொரியாவின் வழிகாட்டலுடன் பாலின பொறுப்புமிக்க பாதீடு மேற்கொள்ளப்பட்டு அரசாங்க கொள்கைகள் மற்றும் பாதீட்டு இடைவெளிகளை ஆராய முடியும். இதிலும் மிகமுக்கியமாக வேலை மற்றும் பொருளாதார வாய்ப்புகள் குறித்து ஏற்படும் செலவீனங்களை அறிந்து கொள்ளமுடியும்.
2016 ஆம் ஆண்டு இலங்கை அமைச்சரவையில் “குறைந்த பட்சம் 25% செயற்திட்டங்கள் பின்தங்கிய பகுதிகளில் வாழும் பெண்களின் பொருளாதாரத்தை வலுவூட்டும் வகையில் அமையவேண்டும்” என கூறப்பட்டது. 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட சுற்றுநிறுபத்தில் “தேசிய பாதீட்டு மதிப்பீட்டில் பிரதானமாக பாலின சமத்துவம் மற்றும் மாற்றுத்திறன்கள் கருத்தில் கொள்ளப்படும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
‘கடந்த சில ஆண்டுகளாக பாலின வரவு-செலவுத்திட்டம் நாடொன்றின் பிரதான கொள்கைகளிலும், பாதீட்டு முன்னுரிமையிலும் செல்வாக்கு செலுத்தி வருகிறது’ என இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய உலகில் சுமார் 90 நாடுகள் பாலின சமத்துவ வரவு-செலவுத்திட்டத்தை கையாள்கிறது. அதில் 65 நாடுகளுக்கு ஐ.நாவின் பெண்கள் அமைப்பு ஒத்துழைப்பு வழகிங்குகிறது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 29 நாடுகள் வரை இந்த பாதீட்டு முறையை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளன. 1980களிலேயே இந்த எண்ணப்போக்கு ஆஸ்திரேலியாவில் உருப்பெற்று இருந்தபோதிலும், கடந்த சில் ஆண்டுகளாகவே இது நடைமுறைக்கு வந்த வண்னம் உள்ளது.
தீர்வு வழங்குதல்
பெண்களுக்கென தனியான பாதீட்டை அமைப்பதை காட்டிலும், பாலின சமத்துவம் மிக்க ஒரே வரவுசெலவு திட்டத்தை அமுல்படுத்தல் மக்களின் நிதியை வினைத்திறனாக பயன்படுத்த வழிசெய்யும்.
பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் கொள்கைகளையும் சட்டங்களையும் உருவாக்கும் அதே சமயத்தில், பாலின பொறுப்பு மிக்க வரவு-செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் அனைத்துதரப்பு மக்களுக்கும் நன்மையாக அமையும். அதிலும் குறிப்பாக அதிகளவு வரைமுறைக்கு உட்படுத்தப்படும் சமூகங்கள்.
உதாரணமாக இயலாமை மற்றும் பால் வேறுபாடு குறித்தான பிழையான, குறுகிய மனப்பான்மைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மாற்றுத்திறன் கொண்டோரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்வதுடன், பெண் முயற்சியாளர்களை வலுவூட்டும். இதன் மூலமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து தரப்பினரதும் பங்களிப்பை பெற முடியும். பாலின சமத்துவம் கொண்ட வரவு-செலவுதிட்ட ஆய்வின் மூலமாக கொள்கைரீதியாகவும், சட்டரீதியாகவும் அடக்குமுறைக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்பெறும் என்பது தெரியவந்துள்ளது.
பாலினரீதியான சமத்துவம் மிகுந்த வரவு-செலவுதிட்டத்தை அறிமுகம் செய்வதன் மூலமாகவும், நடைமுறைபடுத்துவதன் மூலமாகவும் இலங்கையை வலுவான சமூக கட்டமைப்பும், உறுதியான பொருளாதார வளர்ச்சியும், சௌபாக்கியமும், வெளிப்படைதன்மையும் மிகுந்த நாடாக மாற்றமுடியும்.