கிறிஸ்டியன் ஹட்டர் (Christian Hutter)சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு புகைப்பட மற்றும் காணொளிக் கலைஞர். இவர் இலங்கைக்கு விஜயம் செய்யும்போதெல்லாம் தான் கண்டுணர்ந்த அனுபவங்களை ஆவணப்படுத்தி வருபவர்
கடந்த வருடம் நான் மேற்கொண்ட ஆறு மாத இலங்கைப் பயணத்தில் யாழ்ப்பணத்தில் உள்ள பார்வை மற்றும் செவிப்புலனற்ற பிள்ளைகளுக்கான நஹ்பில்ட் (Nuffield) பாடசாலையைத் தரிசிக்கக் கிடைத்தது. அங்கு சென்ற சிலபொழுதுகளிலேயே அவர்களது அன்றாட செயற்பாடுகளில் நானும் ஒன்றிவிட்டேன். இருபது வருடங்களாக நடந்தேறிய கொடூர யுத்தத்தின் விளைவால் குண்டுதுளைத்த சுவர்களுக்கும், செல்லரித்த சுவடுகளுக்கும் நடுவே அவர்களது வாழ்வு எவ்வாறு நகர்கிறதென்பதை அறியும் ஆர்வத்திலேயே முதலில் அவர்களைப் பின்தொடர்ந்தேன்.
வடக்கின் ஊனமுற்ற பிள்ளைகளின் கல்வி எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை திறம்படச் சித்தரிப்பதே எனது நோக்கு. இலங்கை முன்னோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஏதோவொரு விருத்தி நடந்தேறிக்கொண்டே இருக்கின்றது. அவ்வாறான பதிவுகளைப் பகிர்ந்துகொள்வது சிறப்பெனக் கருதுகிறேன்.
ஆறு வயதுமுதல் இருபத்தாறு வயதுவரை உள்ள பல்வேறுபட்ட இன மத மொழி வேறுபாடுடைய மாணவர்கள் இங்கு ஒன்றாகக் கல்வி கற்கின்றனர்.
நூறுக்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட இப்பாடசாலையில் ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கேயே தங்கிக் கல்வி கற்கின்றனர். வார இறுதி நாட்களில் அல்லது விஷேட விடுமுறை தினங்களிலேயே இவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்கின்றனர். வருமானம் குறைந்த பெற்றோர்களால் இவ்வாறான குழந்தைகளுக்கு ஏற்ற கல்வியை வழங்குவது சாத்தியம் குறைந்ததாகவே காணப்படும் நிலையில் அக்குழந்தைகளை இவ்வாறான பாடசாலைகளில் விடுகின்றனர். பொதுவாக இப்படியான குழந்தைகள் பிறக்கின்ற பொழுது அதனைப் பல பெற்றோர்கள் அவமானமாகவே கருதுகின்றனர். தங்கள் பிள்ளைகளை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தாமலேயே வைத்திருக்கின்றனர். இதன் காரணமாக பல குழந்தைகள் உரிய வயதில் தமக்குக் கிடைக்கவேண்டிய கல்வியை இழந்து நிற்பதோடு சில மாணவர்கள் பதினைந்து வயதைக் கடந்த நிலையிலேயே இப்பாடசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
கல்வி மட்டுமல்லாது கலை மற்றும் மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும்கூட இம்மாணவர்களைப் பயிற்றுவிப்பதில் இப்பாடசாலை பெரும்பங்கை வகிக்கின்றது. அவ்வாறு கற்றல் செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடும் நேரத்தையே அவர்கள்பற்றிய ஆவணப்படுத்தலில் பயன்படுத்துகிறேன்.
அவர்கள் என்னோடு தொடர்பாடிய விதமே என்னை வியப்பில் ஆழ்த்தியது. மொழிவேறுபாடு மட்டுமன்றி அங்குள்ள மாணவர்களில் சிலர் கேள்விப்புலனற்றவர்கள், கட்புலனற்றவர்கள் மற்றும் வாய்பேச முடியாதவர்கள். இத்தடைகளனைத்தையும் தாண்டி அவர்கள் என்னோடு தொடர்பாடினர். பெரும்பாலும் கேள்விகளைக் கரும்பலகையில் எழுதியே கருத்துப் பரிமாறிக்கொண்டோம். என்னைப்பற்றியும் எனது பின்னணி பற்றியும் அறிந்துகொள்வதில் அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
இத்தொடரில் சித்தரிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் இங்கு கல்வி பயிலும் பிள்ளைகளையும் அவர்கள் வாழும் இச்சிறப்பான சூழலையும் தாங்கி நிற்கின்றன.
யுத்தத்தில் அழிவடைந்த சுவரொன்றுக்கு முன் அமர்ந்திருக்கும் ஒரு சிறுவனையே இவ்வண்ணப் படம் சித்தரிக்கிறது. யுத்தம் ஆடிய கோரத் தாண்டவத்தில் வெடிகுண்டுகளாலும் செல்களாலும் நிலைகுலைந்துபோன வண்ணச் சுவரொன்றே இது. அச்சுவரின் கொடூரமான கதை, எதிர்காலம்பற்றிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கி நிற்கும் ஒரு இளம் மாணவனின் பின்னால் எழுந்து நிற்கின்றது.
ஏனைய அனைத்துப் புகைப்படங்களும் இம்மாணவர்கள் கல்விகற்கும், ஒருவருடன் ஒருவர் தொடர்பாடும், நண்பர்களுடன் நகைச்சுவைகளில் ஈடுபடும் மற்றும் பாடசாலை வளாகத்தில் உலவும் சந்தர்ப்பங்களைச் சுட்டி நிற்கின்றது.
மொழிபெயர்ப்பு – Rakshana Sharifudeen