Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

மோடியின் திட்டம்! கறுப்புப்புப்பண ஒழிப்பா? வேறேதும் அரசியலா?

இந்திய வரலாற்றில் மிகமுக்கியமான முடிவொன்றுடன் பிரதமர் நரேந்திர மோடி ஊடகங்கள் முன்னிலையில் நேற்று தோன்றுவார் என யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். பல வருடங்களாக இதற்கான செயற்பாட்டை ரகசியமாக செயல்படுத்திய மோடி அவர்கள், நேற்றைய தினத்தில் அதனை நடைமுறைபடுத்த ஆயத்தமாகியிருக்கிறார். இந்தியாவின் பிரதமர் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்போதே, கறுப்புப்பணத்தினை ஒழிப்பேன் என்கிற உறுதிப்பாட்டுடன் ஆட்சிபீடமேறி அதனை நடைமுறைபடுத்திவிட்டார் என, அவருடைய ஆதரவாளர்களும், விமர்சகர்களும் புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் 500,1000 ரூபாய் நோட்டுக்களை செயலிழக்க செய்வதன் மூலம், மோடி எதனை சாதித்திருக்கிறார்? சராசரி மக்களின் கைகளில் உள்ள ரூபாய்க்கு என்ன நடக்கப்போகிறது? உண்மையில் “கறுப்புப்பணத்தினை ஒழிப்போம்” திட்டம் முழு வெற்றி பெறுமா? என பல்வேறு குழப்பங்களுடன்தான் இந்திய மக்களுக்கும், அவர்களை கவனித்து கொண்டிருக்கும் உலக மக்களுக்கும் இன்றைய நாள் விடிந்திருக்கும்.

படம் - static2.businessinsider.com

படம் – static2.businessinsider.com

மோடியின் அறிவிப்பு

நவம்பர் 8ம் திகதி இந்திய பிரதமர் ஊடகங்களில் தோன்றி நவம்பர் 9ம்திகதி நள்ளிரவு முதல் 500,1000 ரூபாய் நாணயத் தாள்கள் செல்லுபடியாகாது என்றும், பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நாணயத்தாள்கள் அறிமுகம் செய்யப்படும் என்பதனையும் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் கையிருப்பில் உள்ள 500,1000 ரூபாய்களை எவ்வாறு செல்லுபடியாகக்கூடிய பணமாக மாற்றிக்கொள்வது என்பது தொடர்பில் அனைத்து ஊடகங்களுக்கும் உத்தியோகபூர்வ வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

ஐந்நூறு ரூபாய் இந்திய நாணயத் தாள். படம் - 1.bp.blogspot.com

ஐந்நூறு ரூபாய் இந்திய நாணயத் தாள். படம் – 1.bp.blogspot.com

மேலும் மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கும்பொருட்டு நவம்பர் 9ம் திகதி மாத்திரம் வங்கிகள் அனைத்தினதும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன. வங்கிகள் இயங்காது என்கிற அறிவிப்பு, இந்தியா முழுவதும் உள்ள சாமானிய மக்களை நடு இரவில் ATM இயந்திரங்களை நோக்கி படையெடுக்க வைத்திருந்தது. காரணம், போதியவகையில் செய்தியை பெற்றுக்கொள்ளாத வணிகர்களும், மக்களும் நேற்றைய இரவிலிருந்தே 500, 1000 ரூபாயினை புறக்கணிக்க ஆரம்பித்திருந்தார்கள். எனவே, கையிருப்பில் உள்ள 500, 1000 ரூபாயை மிகக்குறைந்த நாணய பெறுமதியாக மாற்றிக்கொள்ளவோ அல்லது வங்கிகளில் வைப்பு செய்வதன்மூலம், தனது பணத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையும்தான் இதற்க்கு காரணமாக அமைந்தது.

ஆயிரம் ரூபாய் இந்திய நாணயத் தாள். படம் - 1.bp.blogspot.com

ஆயிரம் ரூபாய் இந்திய நாணயத் தாள். படம் – 1.bp.blogspot.com

உண்மையில், மோடியின் அறிவிப்பின் பிரகாரம் இந்தியவாழ் அனைவருக்கும் 50 நாட்கள் அவகாசம் வழங்கபட்டிருக்கிறது. தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நாணயத் தாள்களை வங்கிகளில் உள்ள அவரவர் கணக்குகளில் வைப்புச்செய்தோ, அல்லது பொருத்தமான அடையாள ஆவணங்களை வழங்கியோ பரிவர்த்தனைக்கு உகந்த பணமாக மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும், சில வருடங்களுக்கு முன்பு, “இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வங்கிக்கணக்கு” என்கிற திட்டத்தினை மோடி அறிமுகம் செய்துவைத்தார். அப்போது அதனை ஏளனமாகப்பார்த்தவர்களுக்கு, அதனுடைய தார்ப்பரியம் தற்போது புரிந்திருக்கும்.

மோடியின் அறிவிப்பு எப்படி கறுப்பு பணத்தினையும், போலிப்பணத்தினையும் மீட்டெடுக்கும் ?

  • இந்த அறிவிப்பின் பிரகாரம், கைவசம் உள்ள செல்லுபடியற்ற பணத்தினை இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெற்ற வங்கிகள் மற்றும் அலுவலகங்களில் மாத்திரமே மாற்றிக்கொள்ள முடியும். எனவே, இலகுவாக போலி பணத்தினை அடையாளம் காணமுடியும்.ஏற்கனவே உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட நாணயத்தாள்களின் தொடர் இலக்கம் வங்கிகள் கைவசம் உள்ளதால், அவற்றை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். அத்துடன், இதன்மூலம் இந்தியாவின் மொத்த பணப்புழக்கத்தில் உள்ள 10% போலி பணத்துக்கு முடிவு கட்டப்படும்.
இந்திய ரிசேர்வ் வங்கி. படம் - supremelaws.com

இந்திய ரிசேர்வ் வங்கி. படம் – supremelaws.com

  • தற்சமயம் எவரேனும் கணக்குகளில் காட்டாது, 500, 1000 ரூபாய் நாணயத்தாள்களை கறுப்புப்பணமாகப் பதுக்கி வைத்திருப்பார்கள் எனின், அவர்கள் அனைவரும் அவற்றை செல்லுபடியாகக்கூடிய பணமாக மாற்ற கணக்குகளில் காட்டியே ஆகவேண்டிய இடர்நிலை உருவாக்கபட்டுள்ளது. இது, பெருமளவிலான கறுப்புப் பணத்தினை வெளிக்கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அது மட்டுமல்லாது, கறுப்புப் பணத்தைப் பதுக்கிவைத்தவர்களையும் இத்திட்டம் காட்டிக்கொடுத்துவிடும். காரணம், செல்லுபடியாகாத நாணயத்தாள்களை பரிமாற்றம் செய்யும்போது பொருத்தமான அடையாள ஆவணங்கள் மற்றும் வங்கிக்கணக்கினை வழங்குதல் அவசியமாகிறது.
  • புதிதாக புழக்கத்திற்கு வரவுள்ள நாணயத் தாள்கள் மிகப்பாதுகாப்பானதும், போலி நாணயதாள்களை இலகுவில் அடையாளம் காட்டும் நனோ தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளதால், அவை போலிப் பணப்புழக்கத்தை ஒழிக்க பெரிதும் உதவியாக அமையும்.
புதிதாகப் புழக்கத்திற்கு வரவுள்ள நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டாயிரம் ரூபாய் நாணயத் தாள் மாதிரி. படம் - thereportertimes.com

புதிதாகப் புழக்கத்திற்கு வரவுள்ள நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டாயிரம் ரூபாய் நாணயத் தாள் மாதிரி. படம் – thereportertimes.com

  • இந்தியாவின் இடைநிலைத் தரகர்கள் என அழைக்கப்படும் அரசியல்வாதிகள், இலஞ்சம் பெறும் ஊழியர்கள் ஆகியோருக்கு இத்திட்டம் பெரும் திண்டாட்டமாக அமையும். காரணம், மோடி தனது அறிவிப்பின்போது, இவ்விடைநிலைத் தரகர்கள்தான் அதிகளவில் பணமாக கறுப்புபணத்தினை பதுக்கி வைத்திருப்பார்கள் எனவும், இனி இவை நடைமுறைப் புழக்கத்திற்கு வரவேண்டும், அல்லது முழுமையாக பயன்படாது போகவேண்டும் எனவும் தெரிவித்தார்.

மோடியின் அறிவிப்பு ஏன் முழு வெற்றியாக அமையாது ?

  • புழக்கத்தில் உள்ள பணத்தினை செயலிழக்கச் செய்வதன் மூலமாக, வெளிநாடுகளில் கறுப்புப் பணமாக உள்ள சுமார் 50 திரிலியன் டொலர்களுக்கு (Trillion $) எவ்வித பாதிப்பும் வரப்போவதில்லை. அவை, தொடர்ந்தும் கறுப்புப்பணமாகவே இருப்பதுடன், அவற்றைப் பயன்படுத்த விரும்பும்போது வெளிநாட்டு வங்கிகள் புழக்கத்திற்கு வரவுள்ள புதிய பணத்தினை வழங்கும் வசதி வழங்கபட்டுள்ளது. எனவே, மிகப்பெரும் இந்தியப் பணமுதலைகளை இது பாதிக்காது.
  • ஊழல் புரையோடிய இந்திய அமைப்பில், இத்தகைய அறிவிப்பு எவ்வளவு தூரம் இரகசியம் காக்கப்பட்டது என்பதே கேள்விக்குறிதான். குறிப்பாக, சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்த அறிவிப்பு மிகப்பெரிய பணமுதலைகளுக்கும் அதே அளவான அதிர்ச்சி வைத்தியமாக அமைந்ததா என்பது கேள்விக்குறிதான்.
  • கறுப்புப் பணத்தினை இந்திய மக்கள் இன்னமும் நாணயதாள்களாக வைத்திருக்கிறார்கள் என நீங்கள் நம்பினால், அதைவிட கேலிக்குரிய விடயம் ஒன்றுமில்லை. மிகப்பாரிய அளவிலான கறுப்பு பணம் முதலீடுகளாக, அசையா சொத்துக்களாக, பினாமிகளின் சேமிப்புக்களாக உள்ளன. எனவே, அவற்றுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படபோவதில்லை.
  • இந்தியாவில் உள்ள பெருநிறுவனங்களும் இவ்வறிவிப்பினால் பாதிப்படையப் போவதில்லை. காரணம், அவை மிகப்பெருந்தொகை கறுப்புப் பணத்தினை கையிருப்பில் வைத்திருக்க வாய்ப்பில்லை. மாறாக பல்வேறு வழிகளில் அவற்றை முதலீடுகளாக வைத்திருக்கும்.
படம் - i.ytimg.com

படம் – i.ytimg.com

இவற்றறை எல்லாம் தவிர்த்து, அரசியல் ரீதியாக சற்று ஆய்வு செய்தால், மோடி ஆட்சிக்கு வந்ததன் பின்னான மிகப்பெரும் புரட்சிகரமான அறிவிப்பாக இது பார்க்கபடுகிறது. இது, மோடி மீதான இதுவரை இருந்துவந்த குற்றசாட்டுக்களை மறையச் செய்துள்ளதுடன், எதிர்காலத்தில் வரவுள்ள தேர்தல்களுக்கு ஆளும்கட்சிக்கான ஒரு புதிய உற்சாகத்தை தரும் காரணியாகவும் பார்க்கபடுகிறது.

ஆகமொத்தத்தில், இந்தியாவின் போலி நாணயத்தாள் புழக்கத்தை புதிய பணத்தினை அறிமுகம் செய்வதன் மூலமும், புழக்கத்தில் உள்ள பணத்தினை செயலிழக்க செய்வதன் மூலமும் ஒழித்துவிடலாமே தவிர, கறுப்புப் பணத்தினை மீண்டும் புழக்கத்திற்கு கொண்டுவரும் திட்டம் எதிர்பார்த்த வெற்றியினைத் தரப்போவதில்லை.

குறிப்பாக, வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவுக்குள் கொண்டுவரும் ஆர்வம் கொண்டவரும், இந்தியாவின் பெருநிறுவனங்களுடன் கைகோர்த்துக்கொண்டு செயற்படுபவரும், இந்திய பெருநிறுவனங்களை எதிர்த்துகொண்டால் என்ன நிலை ஏற்படும் என்பதை அறிந்தவருமான இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திட்டத்தினைச் சரியாகப் பயன்படுத்தவேண்டியவர்களைத் தவிர்த்து மிகச்சிறிய அளவிலானவர்களுக்கு மாத்திரமே அமுல்படுத்தி இருக்கிறார் என்றால், அதற்குப் பின்னால் சொல்லப்படாத மிகப்பெரும் அரசியல் நிச்சயம் ஒளிந்தே இருக்கும்.

கறுப்புப் பணத்தினால் இந்திய அன்னையின் கரங்களில் படிந்த கறையின் சிறியபகுதியை அகற்றும் முயற்சியாக இது அமைந்தாலும், அது முழுமையடையாமை வருத்தத்திற்குரியதே!

Related Articles