மார்ச் 7, 2021 அன்று வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பான உரையாடல்களை தோற்றுவித்துள்ள முன்னாள் பிரித்தானிய அரச குடும்ப ஜோடியான ஹாரி-மேகன் நேர்காணல, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிரித்தானிய அரச குடும்பத்தின் மீது உலகளாவிய அளவில் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளது. பழைய உலகின் வேர்களாக, பழமைவாதத்தின் பிடிமானங்களாக உலகெங்கும் பரவியிருக்கும் ஒரு சாராருக்கும். புதிய சித்தாந்தங்களை தாங்கிக்கொண்டிருக்கும், மாற்றத்தை விரும்பும் இளம் தலைமுறையினருக்கு இடையே நடந்து கொண்டிருக்கும் கலாசார முரண்பாடுகளின் ஒரு வெளிப்பாடாக அமைந்த இந்த நேர்காணல் குறித்த ஒரு பகுப்பாய்வாக இந்த கட்டுரை உருவாகிறது.
ஹாரி-மேகன் அத்தியாயம் 2016ல் ஆரம்பமானது. ஏற்கனவே ஒரு விவாகரத்தையும், காதல் பிரிவையும் முகங்கண்டிருந்த மேகனின் வாழ்க்கையில் ஹாரியுடனான உறவு மிகவும் ஆரோக்கியமானதாகவே அமைந்திருந்தது. 2017 நவம்பர் இறுதியில் இளவரசர் ஹாரி, மேகன் மார்கல் ஜோடியின் திருமண அறிவிப்பு வெளியான போது ஒரு கலப்பினத்தவரை (மேகனின் தந்தை வெள்ளை அமெரிக்கரான தோமஸ் மார்கல், தாய் ஆப்பிரிக்க அமெரிக்கரான டோரியா ரெக்லாண்ட்) அரச குடும்ப அங்கத்தவராக ஏற்றமைக்கு உலகெங்கும் இருந்து, குறிப்பாக பொதுநலவாய நாடுகளிடம் இருந்து நேர்மறையான கருத்துக்களும், நல்ல வரவேற்பும் கிடைக்கப் பெற்றது. 2018 மார்ச் மாதம் இங்கிலாந்து திருச்சபையில் மார்கலுக்கு ஞானஸ்நானம் நடாத்தப்பட்டது. அதே வருடம் மே 19 ம் திகதி இங்கிலாந்தின் வின்ட்சர் கோட்டையில் அமைந்துள்ள பரிசுத்த ஜோர்ஜ் தேவாலயத்தில் இவ்வரச தம்பதிகளின் திருமணம் பொதுமக்கள் பார்வையில் உத்தியோகபூர்வமாக நடந்தேறியது. ஹாரியும் மேகனும் சஸ்ஸெக்ஸ் பிராந்தியத்தின் சீமானகவும், சீமாட்டியாகவும் பட்டம் பெற்றனர். அடுத்த ஒரு வருடத்திற்குள் (மே மாதம் 6ம் திகதி,2019) இத்தம்பதி அரச குடும்பத்திற்கு புதியதொரு உறுப்பினரை தருவித்தனர்; ஆர்ச்சி மவுண்ட்பேட்டன்-வின்ட்ஸர். சாதாரண பின்புலத்தில் இருந்து தன்னுடைய உழைப்பாலும் திறமையாலும் தனக்கான அங்கீகாரத்தை தேடிக்கொண்டு, உலகின் பெரும் அரசை ஆண்ட பரம்பரையின் இளவரசனை காதலித்து திருமணம் செய்துகொண்ட மேகனின் வாழ்க்கை ஒரு நவீன ஃபேரி டேல் ஆகவே மக்களால் பார்க்கப்பட்டது.
பொதுமக்கள் மத்தியில் மிகவும் அபிமானம் பெற்றிருந்த மேகனுக்கு ஊடகங்களிடம் ஏனோ பெரிதாய் வரவேற்பு இருக்கவில்லை. மாறாக எதிர்ப்பும், கடும்போக்குமே காட்டப்பட்டது. மேகன் அரச குடும்பத்தில் சேர்ந்த சில காலங்களுக்கு உள்ளாகவே அவர் மீதான அவதூறுகளும், சர்ச்சைகளும் பிரித்தானிய ஊடகங்கள் எங்கும் தீ போல பரவின. மேகனின் அன்றாட செயற்பாடுகள் கூட கேலிக்கும், விமர்சனத்துக்கும் ஆளானது. இவற்றுள் மிக சர்ச்சைக்குரியதாக பார்க்கப்பட்டது ஹாரி-மேகன் திருமண ஒத்திகையின் போது மேகன், இளவரசர் வில்லியமின் மகளின் ஆடைத் தெரிவு குறித்து கடுமையாக விமர்சனம் செய்தமையால் கேம்பிரிட்ஜ் சீமாட்டியான கேட் மிடில்டன் (வில்லியமின் மனைவி) பலர் முன்னிலையில் அழுததாக வெளிவந்த செய்தி. இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள், தேசிய ஊடகங்கள் அனைத்தும் மேகனை கடுமையாக விமர்சித்தன. சிலர் ஒரு படி மேலே சென்று மேகனின் உருவத்தை குறித்தும், அவரது கடந்த கால வாழ்க்கை குறித்தும், அவரின் கலப்பின பூர்வீகம் குறித்தும் கூட முகம் சுளிக்க வைக்கும் கருத்துக்களையும், கிண்டல் பேச்சுக்களையும் வெளியிட்டனர். இவ்வாறான நெருக்கடியான நிலையில் ஹாரி-மேகன் தம்பதி 2020, மார்ச் இறுதியில் தாங்கள் பிரித்தானிய அரச குடும்பத்தின் பொறுப்புகள் மற்றும் பட்டங்களில் இருந்து விலகுவதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து பக்கிங்ஹாம் மாளிகையில் இருந்து இதனை உறுதிப்படுத்தும்/அனுமதியளிக்கும் அறிக்கை வெளியானது. கோவிட் தொற்று காரணாமக சில காலம் கனடாவிலும், அமெரிக்காவிலும் தங்கிய பின்னர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு பண்ணை வீட்டை வாங்கி குடியேறினார்கள் இத்தம்பதிகள். மேகன் குறித்து பரப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் பின்புலம் என்ன என்று தெளிவான பதில் இல்லாத நேரத்தில் The Oprah Winfrey Show எனும் பிரபல அமெரிக்க கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஹாரி-மேகன் ஜோடி கலந்து கொண்டனர். இது முன்பிருந்த பல கேள்விகளுக்கு விடை தந்ததுடன், பல புதிய கேள்விகளையும் சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளது.
இந்த நேர்முக உரையாடலின் போது மேகன் முன்வைத்த பிரதான கருத்து பிரித்தானிய ஊடகங்கள் தன்னை ஒரு எதிர்மறை பாத்திரமாக (Villain/Antagonist) காட்சிப்படுத்த முயன்றது ஆகும். வீழ்த்தப்பட்டவர்களையே இவ்வுலகம் நாயகர்களாக ஏற்றுக்கொள்ளும். கேட்-மேகன் பனிப்போர் குறித்து வெளியான சர்ச்சைக்குரிய செய்திகள் அனைத்துமே கேட்-ஐ வஞ்சிக்கப்பட்ட நாயகியாகவும், மேகனை இரக்கமற்ற, பொறாமையும் சுயநலமும் கொண்ட வில்லியாகவும் தொடர்ந்து வரைவிலக்கணம் செய்த வண்ணம் இருந்தன. மக்கள் மனதில் அவ்வாறான ஒரு விம்பத்தை உருவாக்குவதில் இடையறாது பாடுபட்டன என்றே சொல்லலாம்.
எந்தெந்த சிறிய விடயங்களுக்காக கேட் கொண்டாடவும், நேசிக்கவும் பட்டாரோ அதே விடயங்களுக்காக மேகன் விமர்சனத்துக்கு ஆளானார். கேட்-மேகன் இடையே நல்லுறவு வருவதற்கு வாய்ப்பில்லை என்ற செய்தி உறுதியாக ஊடகங்களில் பரவலானது. இது குறித்து ஓப்ரா (நிகழ்ச்சி தொகுப்பாளினி) மேகனிடம் வினவிய போது கிடைத்த பதில் முற்றிலும் எதிர்பாராத ஒன்றாய் இருந்தது. மேகனின் கூற்றுப்படி கேட் ஒரு முறை மேகனின் ஆடை குறித்து செய்த விமர்சனம் மேகனை அழ வைத்தது. தன்னால் மேகன் அழுத விடயம் தெரிந்தவுடன் கேட் மேகனுக்கு மலர்க்கொத்தொன்றும், தன்னுடைய வருத்தத்தையும் மன்னிப்பையும் கூறி கடிதமொன்றும் மேகனுக்கு அனுப்பியதாக மேகனே கூறினார். அதாவது ஊடகங்களில் பரவிய செய்திக்கு முற்றிலும் தலைகீழான சம்பவமே நடந்துள்ளது. செய்திகளில் பரவியது போன்று கேட்-மேகன் இடையே எந்த கசப்பான தருணங்களும் இருந்ததில்லை.
மேகன்-ஹாரி தம்பதிகளின் இந்த பகிரங்க நேர்காணல் முடிவு வரலாற்றின் சில பக்கங்களை மீண்டும் ஞாபகமூட்டும் வகையில் அமைந்திருந்தது. குறிப்பாக ஹாரியின் தாயார் மறைந்த வேல்ஸ் இளவரசி டயானாவின் பிரதிபலிப்பை மேகனில் காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறு பகிரங்கமாக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு தன் பக்க கதையை கூறும் பாணியே டயானாவின் விம்பத்தை மேகனுக்கு வழங்குகிறது. 1995ம் ஆண்டு டயானா வழங்கிய நேர்காணல் அவருக்கும் இளவரசர் சார்ல்ஸுக்கும் இடையிலான திருமண உறவில் இருந்த சிக்கல்களை முழு உலகுக்கும் பகிரங்கமாக எடுத்துக்கூறி முழு உலகின் அவதானத்தையும் தன் பக்கம் இழுத்தது. டயானா தான் அனுபவித்ததாக கூறிய பெரும்பாலான பிரச்சினைகளுக்கும், அழுத்தங்களுக்கும் மேகனும் முகம் கொடுத்திருப்பது இரு நேர்காணல்களையும் பார்க்கும் போது தெளிவாகிறது. இருவரும் தங்கள் சூழலில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், ஒதுக்கப்பட்டதாகவும், பெரும் மனவழுத்ததுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் உணர்ந்துள்ளனர். இருவருக்கும் தற்கொலை குறித்த எண்ணம் வந்து போயுள்ளது. அதே வகையில் இவ்விரு அரச குடும்பத்து மருமகள்களுமே தங்களுடைய சொந்த பிரபல்யம் மற்றும் செல்வாக்கு காரணமாக ஊடகங்களிடம் இருந்து மிகவும் மோசமான அனுபவங்களை பெற்றுள்ளனர். எவ்வாறு டயானாவின் மீது மக்கள் கொண்டிருந்த அளவு கடந்த அன்பும், மரியாதையும் சார்ல்ஸ் முதலிய சில அரச குடும்பத்து உறுப்பினர்களுக்கு அவர் மீது சிறு ஒவ்வாமையை விளைவித்திருக்க கூடுமோ, அதே போன்ற நிலையை ஹாரி-மேகன் தம்பதிகளுக்கு பொதுநலவாய நாடுகளில் இருந்த அளவுகடந்த பிரபல்யமும் செல்வாக்கும் அவர்களுக்கு தற்போதைய அரச குடும்ப உறுப்பினர்கள் சிலரிடம் அசூயையை உண்டாக்கியிருக்க வேண்டும் என்பதை நிறுவும் வகையிலேயே ஹாரி-மேகன் தம்பதி அக்கலந்துரையாடலை கொண்டு சென்றனர். குறிப்பாக அவர்கள் தங்களுடைய ஆஸ்ட்ரேலிய பயணம் குறித்து பேசியது சார்ல்ஸ்-டயானா தம்பதிகளின் ஆஸ்ட்ரேலிய பயணம் பற்றிய நினைவுகளை மீட்டுப்பார்க்க வைத்துள்ளது. மேலும் மேகன் இந்த நேர்காணலுக்கு இளவரசி டயானாவின் வைர கையணியை அணிந்து வந்ததும் கூட ஒரு கூடுதல் சுவாரசியமாக அமைந்துள்ளது. இவையனைத்துமே டயானா-மேகன் என்ற ஒரு ஒப்பீடை நம் மனதில் உருவாக்கும் வகையிலேயே அமைந்திருந்தது.
மேகனின் ஆடைத்தெரிவு, சிகை அலங்காரம் கூட அரச குடும்பத்தின் குறிப்பிடத்தக்க பிறிதொரு மருமகளான வேலிஸ் சிம்சன் (Wallis Simpson)-ஐ நினைவூட்டும் வகையில் அமைந்திருந்தது. 1936 பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரசராக இருந்த 8ம் எட்வர்ட், அமெரிக்காவை சேர்ந்த விவாகரத்தான பெண்மணி வேலிஸ் சிம்சன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். எனினும் இந்த திருமணம் பிரித்தானிய அரசியல் அமைப்பால் ஏற்கப்படாமையால் எட்வர்ட் தன்னுடைய அரச பட்டத்தை துறந்து சாதாரண அரச குடும்பத்தவராக தன்னுடைய கடமைகளை மேற்கொண்டார். மேகன்-ஹாரி தம்பதிகள் வாழ்க்கை சற்று ஏறக்குறைய எட்வர்ட்-வேலிஸ் தம்பதிகளின் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக அமைந்திருக்கும் தற்செயல் கூட மிக சுவாரஸ்யமாக பார்க்கப்படுகிறது. அனைத்திலும் மேலாக இளவரசர் ஹாரி பேசுகையில் “என்னுடைய அம்மாவிற்கு நடந்த அதே முடிவு என் மனைவிக்கும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை, வரலாறு மீள நிகழ்வதை நான் விரும்பவில்லை” என்று குறிப்பிட்டது பிரித்தானிய அரச குடும்பத்தின் இருண்ட காலங்கள் குறித்து மீள நினைவூட்டியது. வரலாற்றுடன் நிகழ் காலத்தை மீள ஒப்பீடு செய்வதன் மூலம், வரலாறு மீள நிகழ்வதை இந்த தம்பதிகள் இயன்றளவு தவிர்க்க முயல்வதை காணக்கூடியதாக உள்ளது.
பக்கிங்ஹாம் அரச குடும்பத்தில் பிறந்த அனைவருக்கும் பிரித்தானிய மக்களிடமும், ஊடகங்களிடமும் எப்போதும் வரவேற்பும், அன்பும் மிகையாக இருக்கும், குறைந்த பட்சம் அவர்களின் வாலிபப்பருவம் வரையிலேனும். அந்த வகையிலேயே சார்ல்ஸ்-டயானா தம்பதிகளின் இளைய மகன் ஹாரி அரச குடும்ப வழக்கங்களையும் வரம்புகளையும் மீறி எழுந்தமானமாக நடந்துகொண்ட பொழுதுகளில் கூட அவரை பிரித்தானியாவின் குறும்புத்தனம் மிக்க செல்லப்பிள்ளையாகவே ஆங்கிலேயர்கள் கொண்டாடி வந்தனர். ஆனால் எப்போது மேகன் மார்கள் ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஊடகங்களுக்கு இலக்கானாரோ, அப்போதே ஹாரி மீதும் விமர்சனங்கள் சிறுகச் சிறுக வளர்ந்து வந்தது. வெறுமனே ஊடகங்களில் மட்டுமே வெளிப்பட்ட இந்த வெறுப்பும் அதிருப்தியும் குடும்பம் வரையில் ஊடுருவி இருந்தது என்பதே உண்மை. இதில் குறிப்பிட வேண்டிய சம்பவம் யாதெனில் ஒரு கலப்பு இனத்தவரான மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தையின் தோல் நிறம் எந்தளவு அரச குடும்பத்துக்கு ஒத்து வரும் என்பது பற்றிக்கூட அரச குடும்பத்தின் முன்னணி குடும்ப உறுப்பினர் ஒருவர் தங்களிடம் நேரடியாகவே பேசியதாக ஹாரி தம்பதி கூறியது மிக வருத்தத்துக்குரியது. ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து இன வேறுபாட்டை ஒழிக்க வேண்டும் என பல கோணங்களில் அரச குடும்பத்தின் ஒரு சாரார் பணியாற்றிய வண்ணம் இருக்கும் போது, மற்றொரு புறம் இவ்வாறான இனத்துவேசம் மிக்க பேச்சுகள் எழுவது புதிரானதாக உள்ளது. எனினும் ஹாரி மேகன் இருவருமே இவ்வுரையாடலை மேற்கொண்ட நபரை இனங்காட்ட விரும்பவில்லை என்பது மதிக்கத்தக்கது. ஓப்ரா நிகழ்ச்சியில் பங்கேற்ற இளவரசர் ஹாரி பகிர்ந்துகொண்ட பல விடயங்கள் பிரித்தானிய அரச குடும்பத்தின் மீதான உலகளாவிய பார்வையில் ஒரு மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. பிறப்பிலிருந்தே ஒரு இளவரசராக வளர்ந்த ஹாரி அரச குடும்பத்தை குறித்து கூறிய முக்கிய விடயம், தற்போதைய அரச குடும்பம் பொதுப்பார்வைக்கு தெரிவதை விட மிகவும் பலவீனமான நிலையிலேயே இயங்கி வருகிறது என்பதாகும். பிரித்தானிய அரச பரம்பரை தனியே அரச குடும்பத்தை மட்டும் கொண்டதல்ல, அவர்க(ளை)ளின் பின்புலத்தில் இய(க்)ங்கும் நிறுவனம் என மற்றொரு பிரிவையும் கொண்டுள்ளது. இந்நிறுவனத்துடன் இயைந்தே அரச குடும்பம் செயலாற்றி வருகிறது. சாமானியர்கள் நம்மிடம் இல்லாத பல வசதிவாய்ப்புகளும், அந்தஸ்தும், பரந்த அவதானமும் கொண்டிருக்கும் போதும், நம்முடைய அன்றாடங்களின் சுதந்திரமும், மகிழ்ச்சியும் அரச குடும்பத்தினருக்கு இருப்பதில்லை. எனினும் இளவரசி டயானா, மேகன் என சிலர் மட்டுமே இவ்வுண்மையை பொதுவெளிக்கு கூறியுள்ளனர். அரச குடும்பத்து வாழ்க்கை என்பது தங்கக் கூண்டில் அடைபட்ட கிளியின் கதை தான்.
மேகன்-ஹாரி நேர்காணலில் அதிகம் பேசப்பட்ட ஒரு விடயம் நிறுவனம்: அரச குடும்பத்தின் அனைத்து செயல்பாடுகளையும் நெறிப்படுத்தி, முகாமை செய்யும் சில தனி நபர்களின் தொகுதி. பெரும்பாலனவர்கள் அரச குடும்பம் பற்றி தெரிந்திருக்கும் போதிலும் நிழலுலகில் வேலை செய்யும் நிறுவனம் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஹாரி மற்றும் மேகன் உரையாடலில் இருந்து அரச குடும்ப உறுப்பினர்களான அரசி எலிசபெத், இளவரசர் பிலிப்ஸ், இளவரசர் வில்லியம், சீமாட்டி கேட் ஆகியோர் தனிப்பட்ட ரீதியில் இத்தம்பதிகளுக்கு மிக ஆதரவாக இருந்துள்ளனர், இருந்து வருகின்றனர் என்பது தெரிகிறது. எனினும் ஹாரியின் தந்தை சார்ள்ஸ் உள்ளிட்ட சிலருக்கு ஹாரி-மேகன் தம்பதிகளின் முடிவுகளுடன் பல முரண்பாடுகள் இருந்துள்ளன.
மேலும் இவர்கள் கூறுகையில் எல்லா அரச குடும்பத்து உறுப்பினர்களும் ஒரு அழுத்தத்தினாலும், பயத்தினாலும், அதிகாரத்தினாலும் மட்டுமே ஒன்றிணைக்கப்பட்டு செயலாற்றுகின்றனர் என தெரிய வருகிறது. தன்னுடைய மோசமான மனவழுத்த காலங்களில் கூட தன்னை மருத்துவரிடம் செல்லவோ, குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவோ கூட இந்நிறுவனம் அனுமதிக்கவில்லை என மேகன் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இது போக, ஹாரி-மேகன் தம்பதிகள் குழந்தை ஆர்ச்சி பிறக்க சில காலங்களுக்கு முன்னர் பிரித்தானிய அரச குடும்ப முறைமைகள் மாற்றப்பட்டு, அவர்களின் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு இளவரசு பட்டம், அல்லது அதோடு இணைந்து வரக்கூடிய அரசாங்க பாதுகாப்பு என்பன வழங்கபடாது என நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. இது குறித்து மேகன் நிறுவனத்திடம் வினவியபோது, தொடர்ந்து பெருகி வரும் இளவரசர், இளவரசிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் வகையிலேயே இம்முடிவு எட்டப்பட்டதாகவும், இளவரசர் சார்ள்ஸ் பட்டமேறியவுடன் ஆர்ச்சிக்கு உரிய பட்டமும், பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டதாம். இது தவிர, மேகன்-கேட் விவகாரம் குறித்து தவறான பல செய்திகள் ஊடகங்களில் வெளியான நாட்களில், அவை குறித்து சரியான விளக்கத்தை ஊடகங்களுக்கு வழங்குமாறு பக்கிங்ஹாம்ம் மாளிகைக்கு மேகன் அனுப்பிய மின்னஞ்சலுக்கு, மாளிகையில் இருந்து வந்த பதில் யாதெனில் “கேட்-இன் பெயர் இவ்வாறான தேவையற்ற கிசுகிசுப்புகளில் இடம் பெறுவது விரும்பத்தக்கது அல்ல” என்பதாகும். இதுவும் நிறுவனத்தின் முடிவு என்றே மேகன் கூறுகிறார். நிறுவனம் இவ்வாறான ஒருதலைபட்ச ஆதரவை வெளிக்காட்டுவது இதுவல்ல முதன் முறை. இளவரசி டயானாவின் மரணத்தை தொடர்ந்து பல பிரித்தானிய ஊடகங்கள் அரச குடும்பத்தை கேள்வி கேட்கும் விதமாய் செய்திகளை வெளியிட்டன.
இதனால் உலக அரங்கில் அரச குடும்பத்தின் பெயர் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதனைத்தொடர்ந்து நிறுவனம், தேசிய ஊடகங்களை தன்னுடன் ஒரு நிலையான புரிந்துணர்வுக்கு கொண்டு வந்தது. அதன் பின்பு அரச குடும்பம் குறித்து விமர்சிக்கத்தக்க எந்த கருத்துக்களும் செய்திகளில் வெளியாகவில்லை, அரச குடும்பம் என்றாலே மிகுந்த மரியாதை, சிறிது கேலி, நிறைய அன்பு என எல்லாமே மாற்றியமைக்கப்பட்டது. அப்போதிருந்தே நிறுவனம் அரச குடும்பத்தின் ஒரு சாராருக்கு, அதிலும் குறிப்பாக அரியணை ஏறும் உரிமை உடையவர்களுக்கு எதிரான எந்தவொரு கருத்தும் வெளியாகாத வண்ணம் செய்திகளை வடிவமைத்துக் கொடுத்தது. அதனாலேயே, என்றோவொரு நாள் அரியணை ஏறப்போகும் வில்லியம்-கேட் தம்பதிகள் குறித்து எந்தவொரு விமர்சனத்தையோ, கிசுகிசுப்பையோ ஊடகங்கள் வெளியிடுவதற்கு நிறுவனம் அனுமதிக்கவில்லை. அவர்கள் இருவரும் பொதுமக்கள் கண்களுக்கு ரோல் மாடல்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது நிறுவனத்தின் எண்ணம். ஆனால் வெறுமனே நல்லவராய் மட்டுமே இருப்பதால் எவரும் ஆதர்ஷணங்கள் ஆகிவிடுவதில்லை. அவர்களுக்கு எதிராக ஒரு வில்லன் இருந்தாக வேண்டும், வில்லன்களை வெல்லும் போதே ஒரு நல்லவன், ஹீரோ என்ற நிலையை அடைகிறான். அதற்காக நிறுவனம் கையில் எடுத்துக்கொண்ட களம் தான் ஹாரி-மேகன் ஜோடி. ஹாரி-மேகனை வில்லனாக ஆக்குவதன் மூலம் வில்லியம்-கேட் ஜவபியை உத்தமார்களாக நிறுவுவது அவர்கள் எண்ணம்.
முடிவாக இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை சிலவுண்டு. அனைத்து விடயங்களுக்கும் மறுபக்கம் என ஒன்றுள்ளது. அதனை அறிந்து கொள்ள முயலாமல் எடுக்கும் எந்த முடிவும் நியாயமாய் அமையாது. அதே போல நாம் அன்றாடம் கடந்து போகும் எத்தனையோ சிறு விடயங்களுக்கு உள்ளும் ஒரு பெரும் பொறிமுறை ஒன்று செயல்பட்ட வண்ணமே உள்ளது. செய்தித்தாள்களில் நாம் படிக்கும் செய்திகளில் இருந்து, தொலைக்காட்சிகளில் நாம் பார்க்கும் விளம்பரங்கள் வரை அத்தனைக்கு பின்னாலும் ஏதோ/எவரோ பிறிதொரு நோக்கத்துடன் செயற்பட்ட வண்ணமே உள்ளனர். நாமே அறியாமல் நமக்கான முடிவுகள் வேறு சிலரால் எடுக்கப்படுகிறது. தங்களின் நோக்கத்துக்காக எதையும் பலியிட சித்தமாய் இருக்கும் மோசமான மனநிலை கொண்டவர்களின் உலகில் வாழ்கிறோம். விவேகமுள்ள நபர்களாய் நாம் ஒவ்வொருவரினதும் கடமை யாதெனில்; எப்போதேனும் ஒரு வாதத்தை கேட்க நேர்கையில், ஒரு கணம் நிதானித்து மற்றைய தரப்பின் நியாயங்களுக்கும் செவி சாய்த்த பின்னர் முடிவெடுக்க வேண்டும் என்பதாகும்.