
உணவு, உறையுள் தந்து நம்மை வாழவைக்கும் மகத்துவம் பெற்ற மண்ணை மலடாக்கிக் கொண்டிருக்கின்றது இந்த பிளாஸ்திக் கழிவுகள். மண்ணை மலடாக்குவதோடு நின்றுவிடாது மெல்ல மெல்ல மனிதனையும் மலடாக்கிக் கொண்டேயிருக்கின்றது. சாதாரணமாக பிளாஸ்திக் கழிவுகளானது உக்காத கழிவு என்று நாம் அடையாளப்படுத்தி அவற்றை சேகரிக்க தனியான குப்பைத் தொட்டிகள், Reduce, Reuse, Recycle என 3R எண்ணக்கருக்கள் என பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றோம். இவ்வாறான பல உத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் இவை எத்தகைய விதத்தில் நெகிழியினால் ஏற்படும் பாதிப்புக்களை இழிவளவாக்கியிருக்கின்றன என்ற வினாவுக்கு விடை மௌனமே.

நெகிழிகள் உண்மையில் உக்காத கழிவுகளா? எனக் கேட்டால், இல்லை அவையும் உக்கக்கூடியனவே ஆனால் அதற்கு எடுக்கும் ஆண்டுகளை அளவிடுமளவுக்கு நமக்கு ஆயுட்காலம் போதாது. ஆம், இந் நெகிழி பிரிந்தழிவதற்கு ஏறத்தாழ 450 தொடக்கம் 1000 ஆண்டுகள் வரை எடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சராசரியாக 33 ஆண்டுகளை நாம் ஒரு தலைமுறை என வரையறைப்படுத்துகிறோம் அல்லவா? ஆகவே சற்றே சிந்தியுங்கள்! நாங்கள் பயன்படுத்தி விட்டு பாராமுகமாக வீசுகின்ற ஒவ்வொரு நெகிழியும் எத்தனை தலைமுறைகளை கொன்று தின்று கொண்டிருக்கிறது. நெகிழிகள் ஏற்படுத்துகின்ற தீங்குகளை பட்டியலிட்டால் நீண்டு கொண்டே செல்லும்.
மனிதனின் மந்தப்போக்கினால் வீசப்படுகின்ற நெகிழிகள் கடலோடு கலப்பதன் காரணமாக ஆண்டொன்றுக்கு பல லட்சம் மீனினங்களும், நெகிழிகள் கலந்த உணவுகளை உட்கொள்வதன் காரணமாக ஏறத்தாழ பத்துலட்சம் பறவைகளும் இறப்பினை சந்திக்க நேரிடுவதாக கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. பிளாஸ்திக் கழிவுகள் வடிகாலமைப்புத் தொகுதிகளில் தேங்கி மாசாக்குவதால் தொற்றுநோய்களுக்கான சாத்தியம் பாரியளவில் காணப்படுகின்ற அதேவேளை டெங்கு, மலேரியா போன்ற நோய்நொடிகளுக்கும் வழிவகுக்கின்றன.
புகைப்பட உதவி – https://safety4sea.com/how-plastic-pollution-harms-marine-life/
இவைமட்டுமன்றி எறியப்படுகின்ற நெகிழிகள் தவறுதலாக விலங்குகளின் உணவோடு உட்சென்று உணவுக்கால்வாய்த் தொகுதிகளில் சேர்வதால் ஏராளமான இறப்புக்களும் சம்பவிக்கின்றன. மனிதனது மற்றுமொரு மடத்தனமான செயற்பாடாக, நெகிழிகளை எரிப்பதால் பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய டயாக்சின்(Dioxin) வெளியேறுகின்றது. இந்த டயாக்சின் புற்றுநோய், இனப்பெருக்க சிக்கல்கள், நோய் எதிர்ப்புத் தொகுதியில் சேதம் மற்றும் ஓமோன்களில் மாற்றம் போன்ற நாம் துளிகூட எண்ணியிராத ஏராளமான அதிபயங்கர பாதக விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. மனிதனை கொல்கின்ற அதேபோல வேளாண் நிலங்களில் தேங்கி மண்ணின் வளத்தை குன்றச்செய்வதோடு பயிர்விளைச்சலையும் வெகுவாக பாதிக்கின்றது.
இன்னுமொரு விடயம் பற்றிய அறிமுகத்தையும் வழங்கலாம் என எண்ணுகிறேன். இங்கு பேசுபொருளாகிய இந் நெகிழிகளின் ஒரு வகை நுண்நெகிழி (Micro Plastic) ஆகும். நீள அளவிலே ஐந்து மில்லிமீற்றருக்கு (less than 5mm) குறைவான நெகிழி வகைகள் நுண் நெகிழிகள் என அடையாளப்படுத்தப்படுகின்றன. சாதாரண நெகிழிகளை காட்டிலும் கொடூர விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந் நுண் நெகிழிகள் எமக்கு சருமம் சார்ந்த அழற்சிகளை ஏற்படுத்துவதோடு, மனிதக் கலங்களை அழிக்கவல்லனவாகவும் விளங்குகின்றன. இந் நுண்நெகிழி பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றமைக்கான பிரதான காரணம் இவை எமது உட்சுவாசத்தினூடாக உடலினுள் செல்லக்கூடிய அபாயங்கள் வெகுவாக காணப்படுகின்றமையாகும்.
புகைப்பட உதவி – Balkan Green energy news
வெறுமனே 10% நெகிழி உற்பத்திகளே மீள பயன்படுத்தப்படுகின்ற அதேவேளை மிகுதி 90% வீதமானவை சூழலில் அங்குமிங்கும் பரந்து பாரியளவிலான பாதகமான தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவற்றின் தீவிரத்தன்மையை உணர்ந்து நெகிழிகளின் பாவனையை மட்டுப்படுத்தி, அதற்கான பதிலீட்டு பொருட்களை முன்மொழிந்து, அன்றாட வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் நெகிழிகளின் பாவனையை இழிவளவாக்கி, இல்லாதொழித்து நாம் நேசிக்கும் எமது அழகிய உலகிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்த நெகிழிகளற்ற பசுமையான ஓர் உலகத்தை தரிசிக்க தயாராவோம்.
பி.கு: கட்டுரையில் சில இடங்களில் நெகிழி ஏனும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கும், என்ற சொல் இன்றைய உலகின் பலதரப்பட்ட சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளுக்கான ஏக காரணியாக திகழ்கின்ற பிளாஸ்திக் என்பதன் தமிழ் வடிவமே நெகிழி ஆகும்