ஜல்லிக்கட்டிற்கு பின்னால், நாம் எதற்கெல்லாம் போராட்டம் நடத்துகின்றோம் என்று பட்டியலிட்டால், நம் அன்றாட தேவைகள் தொடங்கி, அனைத்திற்காகவும் போராட்டம் நடத்துகின்றோம். அப்படியாய் மிக சமீபத்தில் நாம் நடத்திக் கொண்டிருக்கும், அல்லது எதிர்த்துக் கொண்டிருக்கும் ஒரு திட்டம் என்னவென்றால் சென்னையில் இருந்து சேலம் வரை அமைய இருக்கும் பசுமை வழிச் சாலை அல்லது எட்டு வழிச் சாலை. இதில் வெகு இயல்பாக நாம் யாருக்கும் ஆதரவினையோ எதிர்ப்பினையோ தந்துவிட இயலாது. காரணம், இத்திட்டத்தினால் அடைகின்ற நன்மையையும் தீமையையும் பொறுத்தே ஒரு முடிவிற்கு வர இயலும்.
மக்களுக்காக செயல்படுத்தப்படும் இத்திட்ட்த்தில், மக்கள் சில இடங்களில் விரும்பியும் பல இடங்களில் விருப்பமற்றும் தங்க்களுடைய இடங்களைக் கொடுத்திருக்கின்றார்கள். பொதுவாக சேலத்தில் இருந்து சென்னையை அடைய இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று சேலம் – கிருஷ்ணகிரி- வேலூர் மார்க்கமாக சென்னையை அடைவது. மற்றொன்று சேலம் – உளுந்தூர் பேட்டை – விழுப்புரம் மார்க்கமாக சென்னயை அடைவதாகும். இதில் சிக்கல் என்னவென்றால் பயணத்திற்கான நேரமும் பாதுகாப்பும் தான். உளுந்தூர் பேட்டை மார்க்கம் அதிக விபத்துகளை ஏற்படுத்தும் பகுதியாக இருக்கின்றது. மற்றொன்று சென்னையை அடைய எடுத்துக் கொள்ளக் கூடிய நேரம். சேலத்தில் தொடங்கும் இரண்டு மார்க்கங்களுமே அதிக அளவு மக்கள் நெருக்கத்தினை கொண்டுள்ளது. நகரை நெருங்க நெருங்க இந்த நெரிசலின் மத்தியில் சென்னையை அடைவது மிகவும் போராட்டத்திற்கு உரியதாக மாறியுள்ளது. தமிழக முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதையும் கடந்து கருத்தில் கொள்ள வேண்டியது இவ்விரு நகரங்களுக்கும் இடைப்பட்ட தொலைவு தான். உளுந்தூர் பேட்டை வழியாக சென்னையை அடைவதற்கு 5 மணி நேரமும், கிருஷ்ணகிரி வழியாக பயணிக்கும் போது ஆறரை மணி நேரம் ஆகின்றது.
இத்திட்டத்தின் படி
277 கிலோ மீட்டர் நீளமுள்ள இச்சாலையினை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளிக்க, பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. ஐந்து மாவட்டங்களில் போடப்பட இருக்கும் இந்த 900 மீட்டர் அகல நெடுஞ்சாலையின் பாதையில் 23 பெரிய பாலங்களும், 156 சிறிய பாலங்களும், 8 டோல் பூத்துகளும், 3 குகை வழிப் பாதையும் இத்திட்டத்தில் இருக்கின்றது.skjkj
இத்திட்டம் சரி தான் என அரசு முன்வைக்கும் காரணங்கள்
தொழில் மற்றும் சொந்த காரணங்களுக்காக சென்னை வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. பயண நேரம் மட்டும் சேலத்தில் இருந்து சென்னை என்பது 6 மணி நேரத்திற்கும் குறையாமல் இருக்கும். இரு நகரங்களையும் நெருங்கும் போதும், பயண நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. புதிய திட்டத்தின் கீழ் மூன்று மணி நேரத்தில் சென்னையை அடைந்துவிடலாம்.
கிட்டத்தட்ட 60 லிருந்து 90 கிலோ மீட்டர் வரையிலான தூரம் இத்திட்டத்தால் குறைந்துவிடும் எனவே ஒரே நாளில் சென்னை சென்று திரும்பிவிடுவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும் இச்சாலை உருவாக்கித்தரும்.
இத்திட்டத்தின் படி வெறும் 1900 ஹெக்டெர் நிலப்பரப்பு மட்டுமே கையகப்படுத்தப்பட உள்ளது. ஆனால் இருக்கின்ற சாலையை விரிவுபடுத்தும் நிலை ஏற்பட்டால் அதற்காக 2400 ஹெக்டெர் நிலப்பரப்பினை கையகப்படுத்தும் நிலை ஏற்படும் என்று அரசு சில சிக்கலான, ஆனால் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கின்றது.
இச்சாலை அமையும் தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி போன்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாவட்டங்கள் வளர்ச்சிக்கு இத்திட்டம் உதவியாக இருக்கும்.
இது திட்டத்தினை மக்கள் எதிர்க்க காரணங்கள்
மக்கள் திட்டத்தினை எதிர்க்க மிக எளிமையான ஆனால் வலிமையான காரணங்களை மட்டுமே முன்வைக்கின்றார்கள்.
முதலில், நகர்புற பகுதிகளில் இருக்கும் குடியிருப்பினை அழித்து பாதையினை அகலப்படுத்த ஏன் இந்த அரசு முன்வரவில்லை. நகரத்திற்கு அளிக்கப்படும் முன்னுரிமையை ஏன் கிராம மக்களுக்கும், இந்நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கும் தரமறுக்கின்றார்கள்.
சேலம் மாவட்ட ஆட்சியர். திருமதி. ரோஹினி “அனைத்து விவசாயிகளும் தங்கள் விருப்பத்தின் பெயரிலேயே தான் நிலங்களைத் தருகின்றார்கள். மேலும் வெட்டப்படும் மரம் ஒவ்வொன்றிற்கும் நஷ்ட ஈடு வழங்கப்படும் “ என்று கூறியிருக்கின்றார். ஆயிரக்கணக்கான மரங்களுக்கு நஷ்ட ஈடு தருவதற்கு பதிலாக, மாற்றுச் சிந்தனையுடன், வெட்டப்படும் மரங்களை எங்கே நட்டுவைப்பார்கள் என்று யாரும் தெளிவுபடுத்தவில்லை.
1900 ஹெக்டெர் நிலப்பரப்பு என்பது அரசாங்கத்திற்கு சாதாரணமான விசயமாக இருக்கலாம். ஆனால் இந்நிலத்திற்கு உட்பட்ட பகுதியில் விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை ஏன் மாநில அரசோ மத்திய அரசோ உணர்ந்து கொள்ளவில்லை. 1900 ஹெக்டெர் நிலப்பரப்பில் 16% நிலம், விவசாய நிலம். அது அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் ஒன்று. வீடுகளுக்கு மாற்று வீடுகள், நகர கட்டமைப்புடன் புதிதாக உருவாக்கிக் கொடுத்துவிடலாம். ஆனால் வயல்வெளிகளுக்கும், விலை நிலைத்திற்குமான மாற்று ஆதரம் என்பது சாத்தியமா? என்பதினை யோசிக்க வேண்டும்.
6000 மரங்களும் 120 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டு ஒரு சாலை உருவாக்கப்பட வேண்டுமா?
விவசாய நிலங்களை மக்களின் அனுமதியின்றி அபகரிக்கும் முயற்சியால் இது மக்களுக்கு எதிரான அரசாகவே இருக்கின்றதே தவிர மக்கள் நலப்பணிகளை நடைமுறைப்படுத்தும் அரசாக இல்லை.
ஏற்கனவே போதிய நிதியின்மையால் சேலத்தில் முள்வாடி, ஆனை மேடு, லாரி மார்க்கெட் ஃபிளை ஓவர் ஆகியவை இன்னும் கட்டிமுடிக்கப்படாமல் இருக்கின்ற நிலையில் புதிய திட்டங்களால் ஏற்படப் போகும் நன்மை என்ன?
தமிழகத்தில் கட்டி முடிக்கப்படாத சாலைகள், பொது மக்களின் பயணத்திற்கு திறக்கப்படாத சாலைகள், பாலங்கள் (கோவை – காந்திபுரம் பாலம்) என நிறைய திட்டங்களில் சில, நிலுவையில் இருக்கின்றன, சில திட்டங்கள் நீண்ட காலங்களாக ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் புதிதாக கொண்டுவரப்படும் இந்த திட்டத்தை எப்போது முடிப்பார்கள்.
இச்சாலை ஒன்பது பாதுகாக்கப்பட்ட வனங்களின் வழியாக செல்கின்றது. சிறுவாஞ்சூர், நம்பேடு, அலியலாமங்கலம், ஆனந்தவாடி, ராவணந்தவாடி, மஞ்சவாடி, பள்ளிப்பட்டி, ஜருகுமலை, சொரகுளத்தூர் பகுதியில் இருக்கும் வனப்பகுதிகள் அழிக்கப்படும் நிலையில், வன உயிரினங்களுக்கும் கூட ஆபத்தினை அளிக்கும் திட்டமாக பார்க்கப்படுகின்றது.
மக்களின் பேச்சுக்களை கேட்கையில் மனம் வெதும்புகிறது.
கைது நடவடிக்கை
ஜல்லிக்கட்டு, கதிராமங்கலம், நெடுவாசல், நீட், ஸ்டெர்லைட் என தொடர்ந்து நாம் போராட்டங்களை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் போராட்டக்காரர்கள் அனைவரையும் மாவோயிஸ்ட்கள், தீவிரவாதிகள், தேசத் துரோகிகள் என சித்தகரித்து கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து நடந்தபடிதான் இருக்கின்றது. இத்திட்டத்தினை எதிர்த்து பேசிய இயற்கை நல ஆர்வலர் பியூஷ் மனுஸ், திரைப்பட நடிகர் மன்சூர் அலி கான், மற்றும் வளர்மதி ஆகியோரை கைது செய்திருக்கின்றது இவ்வரசு. இத்திட்டத்திற்கு எதிராக திருவண்ணாமலையில் கூட்டத்திற்கு சென்ற தமிழக விவசாயிகள் சங்க உறுப்பினர்களையும், விவசாயிகள் 24 பேரையும் கைது செய்து பின்னர் விடுவித்திருக்கின்றார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பின்பு தமிழகத்தில் நக்சலைட்டுகளும், மாவோயிஸ்ட்டுகளும் அதிகரித்துவிட்டதாக ஒவ்வொரு முறையும் மாநில அரசும் மத்திய அரசும் மக்களை கைகாட்டுவதை வழக்கமாக வைத்திருக்கின்றார்கள். அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலாமல், மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்காமல் தொடர்ந்து மக்கள் மனதினை காயப்படுத்தி, போராட்டம் நடத்தும் பொதுமக்களை துப்பாக்கிச் சூட்டினால் கொல்லும் அதிகாரம் கொண்ட அரசின் கையில் சிக்கிக் கொண்டு நம் மண்ணும், மக்களும் தவித்து வருகின்றார்கள் என்பதைத் தான் இப்போராட்டங்கள் வெளிப்படையாக உணர்த்துகின்றன.
கருப்புக் கொடி, கருப்பு பலூன், போமோனே மோடி, கோபேக் மோடி, பேன் பீட்டா, என் உணவு என் விருப்பம், நீட்டினை ரத்து செய், திராவிட நாடு, சேவ் கதிராமங்கலம், சேவ் நெடுவாசல் என்ற ஒவ்வொரு ஹேஷ்டேக்கிற்குப் பின்னாலும் எதிர்ப்பும் நம்பிக்கை இன்மையும் ஏமாற்றமும் மட்டுமே மக்கள் மனதில் இருக்கின்றது. வாக்களித்து தேர்வு செய்த மக்களை தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள் மற்றும் நக்சல்பாரிகள் என்று குற்றம் சுமத்திவிட்டு தன்னுடைய பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வது அரசாங்கத்திற்கு மிக எளிதான காரியமாகிவிட்டது.
தமிழகத்தின் நலத்தினை கருத்தில் கொண்டு செயல்படும் பியூஷ் மனூஸ், கார்த்திகேய சிவசேனாதிபதி, எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், இரா.முருகவேள், மற்றும் இதர அமைப்புகள் இந்த எட்டுவழிச் சாலைக்கு வெளிப்படையான எதிர்ப்பினை பதிவு செய்திருக்கின்றார்கள்.
Web Title: 8 Way Road Good Or Bad
Featured Image Credit: wikipedia