Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

நிதியமைச்சரின் ஊழல் மோசடி – முழு விபரம்

கடந்த வாரங்களிலிருந்து இலங்கையின் பேசும்போருளாக மாறியிருப்பது ரவி கருணாநாயக்க அவர்களின் பதவி விலகலும், அது சார்ந்த முறி தொடர்பான ஊழல் வழக்குமே ஆகும். அர்ஜுன மகேந்திரன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தவேளையில், மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட முறிகளின் பரிவர்த்தனையில் மோசடி அல்லது ஊழல் இடம்பெற்று இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் தொடர்ச்சியாக இடம்பெற்ற நிகழ்வுகளின் உச்சக்கட்டமாக முன்னாள் நிதியமைச்சர் விசாரணைக்காக அழைக்கப்பட்டதும், அவரது பதவி விலகலும் பார்க்கப்படுகிறது.

இதன்போது, அலோசியஸ் நிறுவன தலைவராக உள்ள Walt and Row நிறுவனத்தின் ஊடாக, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களது வசிப்பிடத்திற்கு வாடகை வழங்கப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டது. படம் – newsradio.lk

உண்மையில் ரவி கருணாநாயக்கா அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படும் வரையில், குறித்த மோசடியை விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயல்பாடுகளும், அதன் அறிக்கைகளும் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வந்தவொன்றாகவே இருந்தது. அதற்குபின், நிகழ்ந்தவை எல்லாம் ஒரு சிறிய அரசியல் படம் போன்று வெகுவிரைவாகவே காட்சிகள் நகர்த்த்தப்பட்டு, விசாரணையின் வீரியத்தையும், அதன் தாக்கத்தையும் வேறு திசைநோக்கி திருப்புவதாக அமைந்திருந்ததோ என்று சாமானியர்களைக்கூட சந்தேகம் கொள்ளத்தக்கவகையில் அமைந்திருந்தது என்பதனை மறைப்பதற்கில்லை.

சர்ச்சைக்குரிய ஊழல் என்ன?

அர்ஜுன மகேந்திரன் இலங்கையின் மத்திய வங்கி ஆளுநராகவிருந்த 2015ம் ஆண்டு காலப்பகுதியில் நிதியினை திரட்டிக்கொள்ளும் முகமாக 30 வருட முதிர்வு காலத்தைக் கொண்ட அரச முறியினை இலங்கை வங்கி விற்பனைக்கு அனுமதித்திருந்தது. இதன்போது, அதற்கான வட்டிவிகிதம் 12.5% என நிர்ணயிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், பல்வேறு இடங்களிலும் 9.5% என காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதன்போது, முதலீட்டாளர்கள் பலரும் அரச முறிகளை வாங்க ஆர்வம் காட்டியிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அரச முறிகளை 9.5% – 10.5% சதவீத வட்டியில் பெற விரும்பியிருந்தாலும், அர்ஜுன மகேந்திரன் அவர்களது தொடர்பை கொண்ட (அர்ஜுன மகேந்திரனின் மருமகன் அலோசியஸ் அவர்களால் வழிநடாத்தப்படும் நிறுவனம்) Perpetual Treasuries Limited உட்பட சில முதலீட்டாளர் மாத்திரம் 11%-12% சதவீத அளவில் மட்டும் பெற விருப்பத்தை தெரிவித்திருந்தார்கள்.

குறைவான வட்டி விகிதத்தில் பெற விருப்பம் தெரிவித்த முதலீட்டாளர்களை தவிர்த்து விநியோகிக்கபட்டதாக உள்ளது. இதன் விளைவாக, ஒட்டுமொத்தமாக அரசுக்கு சுமார் 1.6 பில்லியன் மேலதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. படம் – lankainformation.lk

இறுதியில், மத்திய வங்கியானது 10 பில்லியன் பெறுமதியான முறியை (அறிவித்ததிலும் பார்க்க பத்து மடங்கு அதிகமாக) 9.5% – 12.5% விகித அடிப்படையில் விநியோகிப்பதாக அறிவித்திருந்தது. இதன்போது, மகேந்திரனின் தொடர்புடைய Perpetual Treasuries Limited நிறுவனத்துக்கு 5 பில்லியன் பெறுமதியான 12.5% அதிக வட்டி பெறுமதியில் முறிகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இது, குறைவான வட்டி விகிதத்தில் பெற விருப்பம் தெரிவித்த முதலீட்டாளர்களை தவிர்த்து விநியோகிக்கபட்டதாக உள்ளது. இதன் விளைவாக, ஒட்டுமொத்தமாக அரசுக்கு சுமார் 1.6 பில்லியன் மேலதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவேதான், குறித்த கொடுக்கல் வாங்கல் மகேந்திரனின் அழுத்தத்தின் பேரில் இடம்பெற்ற ஊழலாக கணக்கில் கொள்ளப்பட்டு ஜனாதிபதியின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டு இந்த ஊழலை விசாரணை செய்யும் பொறுப்பு விசேட ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டது.

நிதியமைச்சர் சிக்கிக்கொண்டது எப்படி?

அர்ஜுன மகேந்திரன் மற்றும் அவரது மருமகனான அலோசியஸ் ஆகியோர் தமது முதலீடுகளின் அடிப்படையில் பல்வேறு வணிக நிறுவனங்களை இலங்கையில் கூட்டமைத்து வணிகத்தினை நடாத்தி வரும் தொழில் பிரமுகர்களாக இருக்கிறார்கள். ஜனாதிபதியின் விசேட ஆணைக்குழு விசாரணைகளை கையிலெடுத்துக்கொண்ட பின்பு, அர்ஜுன மகேந்திரன் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் தொடர்புபட்ட Perpetual Treasuries Limited உட்பட அனைத்து வணிகங்களினதும் கொடுக்கல்,வாங்கல்கள் மற்றும் பரிவர்த்தனை அடிப்படையில் தமது விசாரணைகளை ஆரம்பித்திருந்தார்கள்.

கடந்தகால அனுபவங்களின் பிரகாரம் அனிக்கா நேரடியாக எந்த அரசியல் பிரமுகருக்கும் தனது வீட்டை வாடகைக்கு வழங்க விரும்பாமை காரணமாக, அலோசியஸ் அவர்கள் அனிக்காவுடன் பேரம் பேசி, குறித்த வீட்டை ஆறுமாத காலங்களுக்கு 11.6 மில்லியன் அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளார். படம் – colombotelegraph.com

இதன்போது, அலோசியஸ் நிறுவன தலைவராக உள்ள Walt and Row நிறுவனத்தின் ஊடாக, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களது வசிப்பிடத்திற்கு வாடகை வழங்கப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டது. இதனை உறுதி செய்துக்கொள்ள குறித்த வீட்டின் முன்னாள் உரிமையாளரான (குறித்த வீடு ரவி கருணாநாயக்க குடும்பத்தால் தற்போது கொள்வனவு செய்யப்பட்டு விட்டது) அனிக்கா விஜயசூரிய அவர்களிடம் விசாரணை ஆரம்பிக்கபட்ட பின்னரே, நிதியமைச்சர் இந்த வழக்கில் உள்வாங்கப்பட்டார். காரணம், அனிக்கா அவர்களை விசாரணைக்கு அழைத்த வேளையில், அலோசியஸ் அனிக்காவை தொடர்புகொண்டு குறித்த வீட்டுக்கான மேற்கொள்ளப்பட்ட வாடகை ஒப்பந்தத்தை அழித்துவிடுமாறு கோரிக்கை விடுத்ததையும் ஆணைக்குழு முன்பாக அவரே தெரிவித்திருந்தார். இதன் விளைவாகவே, நிதியமைச்சர் குறித்த வழக்கில் உள்வாங்கப்பட்டார்.

வாடகை வீடு முதல் சொந்த வீடாகியது வரை

அனிக்கா விஜயசூரியவின் கூற்றுப்படி, அவரது ஆடம்பர வீடானது அலோசியஸ் அவர்களினால் ரவி கருணாநாயக்க அவர்களது குடும்பத்துக்கு 6 மாதகாலத்துக்கு வாடகைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தகால அனுபவங்களின் பிரகாரம் அனிக்கா நேரடியாக எந்த அரசியல் பிரமுகருக்கும் தனது வீட்டை வாடகைக்கு வழங்க விரும்பாமை காரணமாக, அலோசியஸ் அவர்கள் அனிக்காவுடன் பேரம் பேசி, குறித்த வீட்டை ஆறுமாத காலங்களுக்கு 11.6 மில்லியன் அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்போதே, வீட்டை தனது நிறுவனத்தின் பெயரில் வாடகைக்கு எடுக்கின்றபோதும், குறித்த வீட்டில் அமைச்சரும் அவரது குடும்பமுமே வசிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணையில் வீட்டை வாடைக்கு எடுத்தது தொடர்பிலும், வீட்டை கொள்வனவு செய்வதற்காக ரவி கருணாநாயக்க அவர்களது பாரியாரினால் Global Transport and Logistics நிறுவனத்தினால் பணம் வழங்கப்பட்டது தொடர்பிலும்கூட தனக்கு தெரியாது என குறிப்பிட்டிருந்தார். படம் – Pradeep

இதன்பின், அனிக்காவுடன் நேரடியாக தொடர்புகொண்ட ரவி கருணாநாயக்க அவர்களின் பாரியார் குறித்த வீட்டை பார்வையிட்டு ஒப்பந்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். எனினும், குறித்த ஒப்பந்தத்துக்கு அலோசியஸ் சார்பாக பரிந்துரைக்கப்பட்ட நிறுவனத்தில் அவர் இயக்குனராக இன்மையால், அமைச்சரின் பாரியார் ஆரம்பத்தில் தனது எதிர்ப்பை வெளியிட்டு இருந்தார். பின்பு, அலோசியஸ் தான் உரிமையாளராகவுள்ள Walter & Rowe நிறுவனம் மூலமாக ஒப்பந்தம் போடப்பட்டு, அமைச்சரின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது. இதன்போது, அனிக்காவுக்கு 1.45 மில்லியன் பணமாகவும், 10.2 மில்லியன் காசோலையாகவும் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கான பணம் Walter & Rowe நிறுவனத்துக்கு Perpetual Treasuries நிறுவனத்திலிருந்தே பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது கொடுக்கல் வாங்கல்களின் அடிப்படையில் கண்டறியப்பட்டது. இதுவே, தற்போதைய பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. காரணம், குறித்த பணம் முறி மோசடி மூலம் ஈட்டப்பட்ட இலாபமாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

குறித்த வீட்டில் ஒப்பந்த அடிப்படையில் 6 மாதகாலம் அமைச்சரும், அவரது குடும்பமும் வசித்தபின்னர், மேலும் இரண்டு மாதகால நீடிப்புடன் குறித்த வீட்டை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்ததாக அனிக்கா ஆணைக்குழுவிடம் தெரிவித்து உள்ளார். மேலும், குறித்த வீட்டுக்காக தான்கோரிய 165 மில்லியன் ரூபாவை ரவி கருணாநாயக்க அவர்களது பாரியார் வழங்க சம்மதித்ததன் அடிப்படையில், குறித்த வீடு விற்பனை செயப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறித்த விற்பனையும் கருணாநாயக்கவின் குடும்ப உறுப்பினர்களின் உரித்தாகவுள்ள Global Transport and Logistics நிறுவனத்தின் பெயரில்தான் இடம்பெற்று இருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

நம் முன்னால் தொக்கி நிற்கும் கேள்விகள்

  • ரவி கருணாநாயக்க அவர்கள், ஆணைக்குழுவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, எந்தவொரு கேள்விக்குமே சரியான பதிலை அளிக்கவில்லை. பெரும்பாலான கேள்விகளுக்கு, தனது குடும்பமே கொடுக்கல், வாங்கல் செயல்பாடுகளில் ஈடுபட்டதால் தனக்கு அது தொடர்பில் தெரிந்திருக்கவில்லை என தெரிவித்தும் இருந்தார்.
  • ஒரு நாட்டின் மிகமுக்கியமான நிதியமைச்சர் பொறுப்பிலிருந்தவொருவர் சுமார் 6 மாதகாலம் வாடகை எதுவுமே செலுத்தாமல் இலவசமாக ஒரு வீட்டில் குடியிருந்தமை தொடர்பில் தனது பாரியார் மற்றும் குடும்பத்தினரிடம் எந்தவொரு கேள்வியும் கேட்காமல் அல்லது அறிந்துகொள்ளாமல் இருந்தமை ஆச்சரியத்துக்குரியது. அப்படியாயின், அவரினால் நடாத்தப்பட்ட நிதி நிர்வாக செயல்பாடுகளும் எப்படி திறம்பட நடந்திருக்க முடியும் என சந்தேகம் சாதாரணமாகவே வரச் செய்யும் அல்லவா?
  • குறிப்பாக, வழக்கு விசாரணையில் வீட்டை வாடைக்கு எடுத்தது தொடர்பிலும், வீட்டை கொள்வனவு செய்வதற்காக ரவி கருணாநாயக்க அவர்களது பாரியாரினால் Global Transport and Logistics நிறுவனத்தினால் பணம் வழங்கப்பட்டது தொடர்பிலும்கூட தனக்கு தெரியாது என குறிப்பிட்டிருந்தார். பரிமாற்றப்பட்ட பணங்கள் மில்லியனில் உள்ளபோது, வீட்டில் உள்ள ஒருவருக்கு தெரியாமலே இவையெல்லாம் நடந்திருப்பது விசித்திரமானதாக இல்லையா?
  • அதுபோல, Perpetual Treasuries Limited, Perpetual Capital Holdings and Walt and Row ஆகியன ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக உள்ளதுடன், Perpetual Treasuries Limited 2015ன் ஆரம்பத்திலேயே ஊழல் மோசடி விடயங்களில் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ள நிலையிலும், குறித்த நிறுவனத்துடன் தனது குடும்பம் கொண்டிருந்த உறவுகள் தொடர்பில், குறித்தகாலத்தில் நிதியமைச்சராக இருந்த ஒருவர் அறிந்திருக்கவில்லை என்பது வேடிக்கையானதாக இல்லையா?
  • அதுமட்டுமல்லாது, இந்த வழக்கு விசாரணையில் மிக பிரதானமாக Perpetual Treasuries Limited மோசடிகளும் அது சார்ந்த விடயங்களுமே கவனத்தில் கொள்ளப்படுகிறது. ஆனால், இதனை தவிர்த்து ரவி கருணாநாயக்க இயக்குனராகவிருந்து, நிதியமைச்சர் ஆனதன்பின்பு, பதவிவிலகி தமது மனைவி மற்றும் மகளிடம் ஒப்படைத்த Global Transport and Logistics நிறுவனம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
  • Global Transport and Logistics நிறுவனமானது 70% ரவி கருணாநாயக்க அவர்களது குடும்ப முதலீட்டையும், 30% Hampton Group நிறுவனத்தினது முதலீட்டாலும் உருவாக்கம் பெற்றுள்ளது. (ஆதாரம்) இதில் Hampton Group நிறுவனத்தின் உரிமையாளராக லக்ஸ்மி காந்தன் உள்ளார். இவர், கடந்தகாலங்களில் மோசடி மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் தேடப்பட்ட எமில் காந்தனின் குடும்ப உறுப்பினர் ஆவார். அப்படியாயின், அவருக்கும் நிதியமைச்சரின் குடும்ப நிறுவனத்துமான தொடர்பு என்ன என்பதையும் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டியது அவசியமல்லவா ?
  • அதுபோல, Global Transport and Logistics சர்ச்சைக்குரிய வீட்டை கொள்வனவு செய்ய பணம் வழங்கியிருந்தது. இந்தப் பணம் செலான் வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடனிலிருந்து வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், Global Transport and Logistics நிறுவனத்தின் மற்றுமொரு இயக்குனரான லக்ஸ்மிகாந்தன் அவர்களின் பணத்திலிருந்துதான் குறித்த கடனுக்கான பணம் வங்கிக்கு வழங்கப்பட்டதாக Global Transport and Logistics கணக்காளர் கூறியுள்ளார். அவரது கூற்றுப்படி, பிரித்தானியாவிலிருந்து லக்ஸ்மிகாந்தன் 2016 மற்றும் 2017 மாசி மாதம் இரண்டு தடவை இலங்கைக்கு வருகை தந்தபோது, சுமார் 70 மில்லியன் மற்றும் 75 மில்லியன் பணத்தை கையிலே கொண்டுவந்து நிறுவனத்தின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்ததாகவும், நிறுவனம் வீட்டுக்கடனுக்கான மாதாந்த தவணைக் கட்டணத்தை கட்ட போதிய பணமின்மை காரணமாக, குறித்த பணத்தை உபயோகிக்க தனக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  • அப்படியாயின், சுமார் 145 மில்லியன் ரூபாய் லக்ஸ்மிகாந்தனால் கொண்டுவரப்பட்ட பணத்திலிருந்துதான் வீட்டுக்கான கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குறித்த பணத்தை பெற்றுக்கொண்டதுக்கு எவ்வகை பதிவுகளையும் Global Transport and Logistics தனது கணக்குகளில் கொண்டிருக்கவில்லை. அப்படியாயின், இவ்வளவு பெரிய தொகை இலங்கையின் பணமோசடி சட்டங்களையும் தாண்டி எவ்வாறு நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்கிற கேள்வி நமக்கே எழுகிறது அல்லவா?
  • அத்துடன், ஒரு நிதியமைச்சரின் நிறுவனத்தில் குறித்த பணத்துக்கு எவ்வித கணக்குகளும் காட்டப்படாமை அதைவிட ஆச்சரியத்துகுரியதாக இருக்கிறது. அப்படியாயின், இந்த பணத்தின் மூலம் அல்லது இது எதன் மூலம் பெறப்பட்ட பணம் என ஆராயப்படவேண்டியது அவசியமானது அல்லவா? குறித்த பணம் முறைகேடான வகையில் உருவாக்கம் பெற்றதாயின் அதனை தனது சொந்த இலாபத்திற்காக பயன்படுத்திய ரவி கருணாநாயக்க மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றவாளிகள் அல்லவா?

நம் கண்முன்னே இடம்பெறும் வழக்கு விசாரணைக்கு வெளியேயும் நிறையவே கேள்விகள் விடையில்லாமல் தொக்கி நிற்கிறன. இந்தநிலையில் அவசரஅவசரமாக அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டமை, தன்மீது பதிந்துகொண்ட தவறான எண்ணத்தை போக்கி, பின்வழியால் தவறுகளை மூடி மறைப்பதற்கான செயல்பாடாக இருக்குமா? அல்லது மேலும் தன்பக்கமாக வழக்குகளோ, கேள்விக்கணைகளோ திரும்பிவிடக்கூடாது என்பதற்கான பாதுகாப்பு முயற்சி இதுவா? என சாமானியர்களுக்கு தோன்றுவதில் தவறில்லைதானே!

Related Articles