
“Crude oil” எனப்படும் கச்சா எண்ணெயினை சுத்திகரிப்பதன்மூலம் நமக்கு கிடைப்பதே பெட்ரோல். (இயற்கை வாயு, பெட்ரோல், பென்சீன், நாப்தா, மண்ணெண்ணெய், டீசல், தார் முதலான பல உட்பொருட்கள் கலந்திருக்கும் கலப்பட எண்ணையே கச்சா எண்ணெய். கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை பேரிடர் காரணமாக மண்ணில் புதையுண்டு இறந்த மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் உடல்கள் அழுகி (Decompose) பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு, பின்பு மண்ணில் உள்ள உப்புக்களுடன் சேர்ந்து வேதிவினைபுரிந்து, நிலத்திற்கு அடியில் நிலவும் உயர் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக அருகிலுள்ள பாறை வெடிப்புகளுக்குள் பாய்ந்து அடர் கருப்பு நிறத்தை கொண்ட எண்ணெய் வளங்களாக உருமாறுகின்றது.
லத்தீன் சொல்லான ‘பெட்ரா’ என்பதற்கு கல் என்றும், ‘ஓலியம்’ என்பதற்கு எண்ணெய் என்றும் பொருள். அதன்படி, ‘பெட்ரோலியம்’ (Petroleum பெட்ரா+ஓலியம்) என்றால், கல்லில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் என்பது பொருள்.
சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைய பாபிலோனியர்கள் (இன்றைய ஈராக்) மிகப்பெரிய கட்டிடங்களை கட்டுவதற்காக ஆழமான அத்திவாரங்களை தோண்டும்போதே முதன்முதலில் இந்த Crude oil கண்டுபிடிக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. எரிபொருளாக பயன்படும் என்பதனை அறிந்திராத பாபிலோனியர்கள் அந்த கருப்பு நிற திரவத்தினை தமது கட்டிடங்களை கட்டுவதற்கான பசைபோலவே பயன்படுத்தினர். கச்சா எண்ணெய் சேர்த்து கட்டப்பட்ட சுவர்கள் கரையான்கள், எறும்புகள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதனை அவதானித்த பாபிலோனியர்கள் அதன் பின்னர் கச்சா எண்ணெயை வெகுநேரம் கொதிக்க வைத்து வற்றச் செய்து கிடைத்த “Asphalt” எனும் பொருளை நிலத்திற்குள் மறையும் கட்டிடத்தின் அஸ்திவாரச் சுவர்களின் மீது சாயமாக பூசியத்துடன், கப்பல்கலைக் கட்டவும் பயன்படுத்தினர்.
பாபிலோனியரைத் தொடர்ந்து, பெட்ரோலைக் கண்டறிந்து பயன்படுத்தியவர்கள் சீனர்கள். உலகின் முதல் நவீன எண்ணெய்க் கிணறு கி.பி.347–ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. மூங்கில் கம்புகளின் உதவியுடன் துளையிடப்பட்ட அந்தக் கிணறு, 800 அடி ஆழம் கொண்டதாக இருந்தது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொசப்பத்தோமியினர் கச்சா வண்டல்களைப் பயன்படுத்தி நகைகள் செய்ததாகவும், கிமு1550 – 1070 காலகட்டங்களில் எகிப்தில் மம்மிகளை பதப்படுத்துவதற்காக இந்த புற்றுமண்ணை பயன்படுத்தியுள்ளனராம்.

எனினும் சமகால பெட்ரோலின் வரலாறு என்பது 18ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளிலேயே ஆரம்பமாகியதெனலாம். தொழிநுட்ப புரட்சியின் விளைவாக உலகம் முழுவதும் எரிசக்தியின் தேவை அதிகரிக்கவே நிலக்கரி பயன்பாட்டினைவிட வேறு எரிபொருட்களுக்கான தேடல்கள் ஆரம்பித்தன.
1847ம் ஆண்டு, ஸ்காட்டிஷ் வேதியலாளர் ஜேம்ஸ் யங் (Scottish chemist James Young) என்பவர் பிரிட்டிஷ் நாட்டின் ஆல்ஃபிரெடன் (Alfreton) பகுதியிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் கச்சா எண்ணெய் இருப்பதைக் கண்டுபிடித்து ஆய்வு செய்து அந்த எண்ணெயிலிருந்து விளக்கு எரிக்கும் திரவம், இயந்திரங்களுக்குப் பயன்படுத்தும் கிரீஸ் போன்றவற்றை உருவாக்கினார். பின்னர் அந்த எண்ணெய்களுக்கு பாராஃபின் எண்ணெய் (Paraffin Oil) எனப் பெயர்வைத்து காப்புரிமையும் (Patent Right) பெற்றார். பின், எட்வர்டு வில்லியம் பின்னி (Edward William Binney) எனும் புவியியலாளருடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, தனது எண்ணெய்க் கண்டுபிடிப்புகளை விற்பனை செய்யத் தொடங்கினார்.
1853ம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த புவியியலாளர் ஆபிரஹாம் பினியோ ஜெஸ்னர் (Abraham Pineo Gesner) என்பவர் நிலக்கரியிலிருந்தும், நிலக்கீலிலிருந்தும் (Asphalt or Bitumen) ஒரு புதிய வகையான எரிபொருளைக் கண்டுபிடித்தார். அந்தப் புதிய கண்டுபிடிப்புதான் நாம் மண்ணெண்ணெய் என்று அழைக்கும் கெரோசின் (Kerosene). ஆபிரகாம் கெஸ்னர், தான் கண்டுபிடித்த எரிபொருளுக்கு “கெரோசின்” எனப் பெயரிட்டார். பின், கெரோசின் கேஸ்லைட் (Kerosene gaslight company) எனும் புதிய நிறுவனத்தைத் தொடங்கி விற்பனை செய்யத் தொடங்கினார். முந்தைய கண்டுபிடிப்புகளைக் காட்டிலும், கெஸ்னர் கண்டுபிடித்த கெரோசின், குறைந்த செலவில் மிக அதிக அளவிலான வெளிச்சத்தைக் கொடுத்ததால், மக்கள் கெரோசின் பயன்பாட்டை நோக்கி நகர்ந்தனர்.

இதனிடையே, கச்சா எண்ணெயிலிருந்து மண்ணெண்ணெயைப் பிரித்தெடுக்கும் முறையை ஜப்பான் நாட்டை சேர்ந்த சில வேதியலாளர்களும் கண்டுபிடித்தனர். அந்தத் தொழில்நுட்பத்தை முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி (Muhammad Ibn Zakariya Al-Razi, கி.பி.865- – 925) என்ற ஈரான் வேதியியலாளர், மேம்படுத்தி பெட்ரோலை பிரித்தெடுத்தார். இதற்காக, அலம்பிக் (Alembic) என்ற ஒரு வகை வடிகலனை அவர் உருவாக்கினார். பெட்ரோலை அப்போது ‘வெடித்து எரியும் நீர்’ என்று பெயரிட்டு அழைத்தனர். அந்த காலத்தில் ராணுவத்தில் ஆயுதமாகவே இது பயன்படுத்தப்பட்டு வந்தது.
1859 இல் எட்வின் டிரேக் என்பவர் அமெரிக்காவில் உலகத்தின் முதல் நவீன எண்ணைக் கிணற்றினை தோண்டியதனைத் தொடர்ந்து அமேரிக்கா முழுவதும் எண்ணைக்கிணறுகளைத்தேடிய பயணம் ஆரம்பமானது. அப்போதைய காலகட்டத்தில் உலகத்தின் அதிகமான பெட்ரோல் தேவையினை அமெரிக்காவே பூர்த்தி செய்தது. அப்போது தொடங்கிய அமெரிக்காவின் பெட்ரோல் ஆதிக்கம் இன்றுவரையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. அப்போதைய அமெரிக்கா மரத்திலாலான பேரல்களிலேயே கெரோசினை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்தனர். அதனாலேயே இன்றுவரையில் எண்ணெய் பேரல்களிலேயே கணக்கிடப்படுகின்றது .
என்னதான் பன்னெடுங்காலமாக கச்சா எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், 20ம் நூற்றாண்டில்தான் பெட்ரோல் மிக முக்கியப் பொருளாக மாறியது. காரணம், உலகில் நிகழ்ந்த இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகள். அவை, ஜெர்மன் பொறியாளர் நிக்கோலஸ் அகஸ்ட்ஸ் ஆட்டோ, 1876 ம் ஆண்டில் கண்டுபிடித்த, உள்ளெரி இன்ஜின் மற்றும் 1893ம் ஆண்டு, ருடால்ப் டீசல் (Rudolf Diesel) கண்டுபிடித்த டீசல் இன்ஜின்.
இதைத் தொடர்ந்து, ஏற்பட்ட வாகனப்பெருக்கம் மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்காக, கச்சா எண்ணெயின் தேவை அசுர வேகத்தில் அதிகரித்தது. பல நாடுகளிலும், 1930க்கு பிறகு பெட்ரோலியத்தின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. இன்றைய நிலையில், பெட்ரோலிய உற்பத்தியில், சவூதி அரேபியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. ஈரான், ஈராக், குவைத் , சவூதி அரேபியா, வெனிசுலா போன்ற ஐந்து நாடுகள் இணைந்து ஒபெக் (OPEC) என்கிற அமைப்பினை உருவாக்கி பெட்ரோலிய விலையினை தமது கட்டுப்பாட்டினுள் வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியாக கச்சா எண்ணெயிலிருந்து தோற்றம் பெற்ற பெட்ரோலியப்பொருட்கள், 20-ம் நூற்றாண்டிலிருந்து தற்போது வரை உலக வணிகம் மற்றும் உலக அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது. பன்னாட்டு பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள், பெட்ரோலிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள், பெட்ரோல் இறக்குமதியை நம்பி இருக்கும் நாடுகள் அதன் வரிகள், என தற்கால பெட்ரோலின் வரலாறு எழுதப்பட்டு வருகிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி முதல் அழிவு தரும் போர்கள் வரை பெட்ரோலின் எல்லையும் வரலாறும் இன்றளவும் நீண்டுகொண்டே தான் செல்கிறது.