தமிழர் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் நமது பாரம்பரிய சடங்குகள் முறைதான் காரணமாகும். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நாம் அனைவரும் நமது வாழ்வில் எவ்வளோவோ விழாக்களையும் சடங்குகளையும் சந்திக்கின்றோம். ஆனால் பெரும்பாலும் அந்த நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகள் எதற்கு நடத்தப்படுகிறது என்கிறது இன்றைய சமுதயாதுக்கு நிச்சயம் தெரியாது. வாட நாடுகளில் ஒவ்வொரு திருமணத்திலும் ஐயர் சொல்லும் மந்திரத்திற்கு அர்த்தங்களும் சொல்லுவார். ஆனால் அந்த பாரம்பரியம் நமது மண்ணில் இல்லை. இன்று நாம் தமிழர்களின் நிகழ்ச்சிகள் அதில் இருக்கும் சடங்குகள் பற்றி பார்க்க இருக்கிறோம்.
பிறப்புச் சடங்குகள்
பிறப்புச் சடங்கில் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவேண்டும் என்கிற காரணத்தினால் பல்வேறு சடங்குகள் செய்யப்படுகின்றன. அதில் முக்கியமானவை சேனை தொடுதல், தொட்டில் கட்டுதல், காது குத்துதல் மற்றும் மொட்டை அடிப்பது போன்ற சடங்குகள் ஆகும்.
சேனை தொடுதல்
இந்த சடங்கின் அர்த்தம் குழந்தைக்கு சர்க்கரையுடன் நெய் கலந்த சேனை தொட்டு குழந்தைக்கு ஊட்டுவதுசேனை தொடுதல் ஆகும். சேனை வைக்கும் பெரியவர்களின் குணம் குழந்தைக்கும் வரவேண்டும் என்பது இந்த சடங்கின் மகிமையாகும்.
தொட்டில் கட்டுவது
குழந்தையை தொட்டிலில் தூங்கவைப்பது தமிழர்கள் மட்டுமே இதற்கான காரணம் குழந்தைக்கு எந்தவொரு சங்கடமின்றி தாயின் தாலாட்டை கேட்டுக்கொண்டே தாயின் வாசம் தூங்கும்போதும் வீசவேண்டும் என்பது இதன் பண்பாகும்.
காது குத்துதல்
குழந்தை சடங்குகளில் மிகவும் முக்கியமான சடங்கு காது குத்துதல் ஆகும். குலதெய்வ சன்னதியில் மூளை வளர்ச்சியும் ஞாபக சக்தியும் பெருகும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை ஆகும்.
மொட்டை அடித்தல்
பிறந்த குழந்தைக்கு மொட்டை அடிப்பதின் நோக்கம் மனித உடம்பில் அதிக அழுக்கு படியும் இடம் தலைமுடி என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். கருவில் குழந்தையின் தலையில் அதிகளவில் அழுக்கு சேர்ந்திருக்கும் அதனை அகற்றுவதற்காக மொட்டை அடிக்கும் சடங்கு நடத்தப்படுகிறது.
பூப்புனித நீராட்டு விழா
சிறுமியாக இருப்பவள் குமரியாக மாறும் பருவ வயதை அடையும் பெண்ணை தூய்மை படுத்துவது பூப்புனித விழாவின் விளக்கம் ஆகும். ஒரு பெண்ணின் முதல் மாதவிடாய் நாளில் தான் அவள் பருவ நிலைக்கு மாறுகிறாள் என்பது நமது முன்னோர்கள் நமக்கு கற்பித்த பண்பாடு ஆகும். சுமங்கலிப் பெண்கள் ஒன்றிணைந்து பூப்புனித பெண்ணை மஞ்சள் நீரில் நீராட்டுவது இதன் முக்கிய அம்சம் ஆகும். மேலும் தாய்மாமன் பச்சை ஓலைகளால் கட்டும் குச்சுக்குள் அந்த பெண் 16 நாட்கள் இருக்க வேண்டும் அப்படி இருப்பதினால் எதிர்காலத்தில் அவள் ஓர் குழந்தையை தாங்கும் அளவிற்கு அவளுக்கு சத்தான ஆகாரங்களை கொடுத்து அவளை வலிமை படுத்துவது இதன் நோக்கமாகும். மேலும் இவ்விழா நடத்துவதின் முக்கிய நோக்கம் எங்கள் வீட்டில் இல்லற வாழ்க்கைக்கு தகுதியடைந்த பெண் இருக்கிறாள் என ஊர் மக்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்துவது இந்த விழாவின் மேலும் ஒரு சிறப்பாகும்.
திருமணச் சடங்குகள்
பெரும்பாலான இன்றைய சமுதாயம் காதல் திருமணத்தைக் கூட நிச்சயித்த திருமணமாக நடத்த ஆசைப்படுகின்றன. இதற்கான காரணம் நம் சமுதாயத்தில் இருக்கும் எண்ணற்ற திருமண சடங்குகள் ஆகும். பெண்ணிற்கு பூவைப்பது தென் தமிழகத்தில் மிகவும் பிரபலம் ஆகும். ஒரு பெண்ணை பார்த்து ஜாதக கட்டங்கள் பொருந்தும் பட்சத்தில் மணமகன் வீட்டார் மணமகளுக்கு பூவைப்பார்கள் இதற்கு மற்றொரு பெயர் பரிசம் போடுதல் ஆகும். இப்படி செய்வதினால் அந்த பெண்ணை வேறு எவரும் பெண் பார்க்க வரமாட்டார்கள் என்பது இதன் ஐதிகம் ஆகும்.
நிச்சயதார்த்தம்
பெண்ணுக்கு ஆணையும், ஆணுக்கு பெண்ணையும் பிடிக்கும் பட்சத்தில் இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதித்து திருமணத்திற்கு நாள் குறிப்பது நிச்சயதார்த்தம் ஆகும். வீட்டு வாசலில் முகூர்த்த கால் நட்டு வீட்டின் பூஜை அறையில் முகூர்த்த அரிசி அள்ளிப்போட்டு மண்டபத்திற்கு குடும்பத்துடன் புறப்படுவார்கள். இவ்வாறு செய்வதினால் திருமணத்தில் எந்தவொரு தடங்களும் வராது என்பது நம்பிக்கை ஆகும். திருமணத்திற்கு முந்தைய நாள் மாப்பிள்ளை அழைப்பு முதல் சாந்தி முகூர்த்தம் வரை பல சடங்குகள் அடங்கும்.
மாப்பிள்ளை அழைப்பு
மாப்பிள்ளை மண்டபத்திற்கு வந்த பின் அவர பெண்வீட்டார்கள் மேளதாளத்துடன் வாணவேடிக்கையுடன் சுமங்கலி பெண்கள் ஆரத்தி எடுத்து மணமகனை மண்டபத்திற்குள் அழைத்து செல்வார்கள்.
காப்புக்கட்டுதல்
தொடங்கிய காரியம் நிறைவேறும் வரை எந்தவொரு தீங்கும் மணமக்களை நெருங்க விடாமல் தடுக்கவே காப்புக்கட்டப் படுகிறது. நவதானிய பூஜை சுமங்கலி பெண்களால் சிறிய மண் சட்டிகளில் நவதானியங்களை செலுத்தி வழிபாடு செய்வது. இவ்வாறு செய்வதினால் நவதானியங்கள் போல மணமக்களின் திருமண வாழ்க்கையும் வளர வேண்டும் என்பது இந்த சடங்கின் பொருள் ஆகும்.
கன்னிகாதானம்
அனைத்து வளங்களும் பெற்று இவர்கள் வாழ வேண்டும் என்று இரு வீட்டாரும் ஒருவருக்கொருவர் திலகமிட்டு மரியாதை செய்துக் கொள்வர்கள்.
அம்மி மிதித்தல்
பெண்ணின் வலது காலில், மணமகன் கையால் அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி அணிவிக்க வேண்டும். இந்தக் கல்லைப் போல் வாழ்வில் எப்போதும் நிலையாக நின்று எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண்ணிற்கு கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் கற்பிக்கிறது. கல் எப்படி எதனையும் தாங்குமோ அதுபோல வாழ்கையிலும் இன்ப துன்பங்கள் இரண்டையும் கண்டு பயமில்லாமல், உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று உணர்த்துவது இதன் பொருளாகும்.
அருந்ததிப் பார்த்தல்
அருந்ததி நட்ச்சத்திரதை மணமக்கள் பார்ப்பதினால் அவர்களது இல்லற வாழ்க்கை அருந்ததி நட்சத்திரத்தைப் போன்று உன்னதமாக இருக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை ஆகும்.
வளைகாப்புச் சடங்கு
திருமணமாகிய பெண்ணின் கர்ப்பகாலத்தில் எழாவது மாதத்தில் வளைகாப்புச் சடங்கு நடத்தப்படுவது தமிழர்கள் வழக்கம் ஆகும். பெண் வீட்டார்கள் தங்களது உறவினர்களுடன் பலவிதமான உணவுகளை சமைத்து மாப்பிள்ளை வீட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம். பெண்ணிற்கு கண்ணாடி வளையல்கள் அனுவித்து அவரை தங்களது வீட்டிற்க்கு அழைத்து செல்வார்கள். குழந்தை பெற்றெடுப்பது என்பது ஒருவகையில் மறு பிறவியாகும். கருவுற்ற பெண்ணிற்கும் பிறக்கபோகும் குழந்தைக்கும் எந்தவொரு கெடுதலும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக வளைகாப்புச் சடங்கு நடத்தப்படுகிறது.
இறப்புச் சடங்கு
மனிதன் பிறக்கும் முன் தொடங்கும் சடங்கு மனிதன் இறந்தப்பின்பும் தொடர்கின்றது. பெரும்பாலும் கிராமப்புறங்களில் ஒருமனிதன் இறந்தபின்பு தரையில் நெல்களை நிரப்பி அதன் ஒரு விளக்கேற்றி வழிபடுவார்கள். இவ்வாறு செய்வதினால் இறந்தவரின் உயிர் ஒளியாக வீட்டில் இருக்கும் என்பது கிராமப்புற மக்களின் நம்பிக்கை ஆகும். இதனால்தான் இன்றும் நமது வீடுகளில் இறந்தவர் புகைப்படங்களுக்கு மாலை அனுபவித்து விளக்கேற்றி வழிபாடு செய்கின்றோம். புகைப்படம் இல்லாத காலத்தில் வீட்டின் பூஜை அறையில் ஒரு ஆணியை அடித்து அதற்கு பூஜை செய்யும் வழக்கம் இன்றும் பலரது வீட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று தமிழர்களின் வாழ்வின் இன்ப துன்பங்களில் பல்வேறு சடங்குகள் உள்ளது. காலம் மாறிவருகிறது கலாச்சாரம் அழிந்து வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும். நமது சடங்கு மற்றும் சம்பர்தாயங்களை பின்பற்றுவோம் தமிழன் கலாச்சரத்தை நிலை நாட்டுவோம்.
மீண்டும் ஒரு சுவாரசியமான தகவலுடன் சந்திப்போம். இந்த ஆக்கம் உங்களுக்கு பிடித்திருந்தாலோ அல்லது சொல்லப்பட்ட தகவலில் தவறு இருந்தாலோ உங்களது கருத்தை நிச்சயம் கிழே பதிவு செய்யவும்.