Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

தமிழர் நாட்காட்டி முறையும் ஆண்டுக் கணக்குகளும்

நாளென ஒன்று போல் காட்டி உயிரீரும்

வாளது உணர்வார்ப் பெறின்

மேலே குறிப்பிட்ட குறள் மூலம்  காலம் அறிதல் என்கிற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையையும் வள்ளுவம் நம் அனைவருக்கும் உணர்த்துகிறது. நம் முன்னோர்கள் காலத்தை நொடி,  நாழிகை,  நாள்,  கிழமை,  திங்கள்,  ஆண்டு,  ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60 நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று 6 சிறு பொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று 6 பெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளனர். காலத்தைக் கணக்கிடுவதில் இத்தனைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளைப் பொதுவான ஆண்டுக்கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

படம்: tamilarivi

தமிழில் ஆண்டுகளைக் குறிக்க பல ஆண்டுத்தொடர்கள் பயன்பட்டுள்ளன. சக ஆண்டு, விக்கிரம ஆண்டு, கலி ஆண்டு என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவை. கேரளத்தில் பண்டுதொட்டே கொல்லம் நாட்காட்டி பயன்பட்டு வந்தது. ஆனால், இவை எதுவுமே தமிழர்க்குத் தனித்துவமானவை அல்ல. இந்நிலையிலேயே தமிழருக்கென சிறப்பான நாட்காட்டி ஒன்றை முன்மொழிய வேண்டிய தேவை ஏற்பட்டது.

சித்திரை முதல் நாளில் தொடங்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும். ஒரு சுற்று 60 ஆண்டுகள் முடிய பழையபடி பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகள் தொடங்குகின்றன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவ‘ ஆண்டிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்பது நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒவ்வாததாகும். வரலாற்றைப் பதியும் போது 60 க்கு மேலே ஒரு தொடராக ஆண்டைக் கணக்கிட முடியாது. ஒருவர் 60 அகவைக்கு மேல் உயிர் வாழ்ந்தால் அவர் அதற்கு மேல் தனது பிறந்த நாளை கொண்டாட முடியாது. மேலும் ஒருவர் மன்மத ஆண்டில் பிறந்தவர் என்று வைத்துக் கொண்டால் அவர் எந்த மன்மத ஆண்டில் பிறந்தவர் எனச் சொல்ல முடியாது. ஆகவே பற்சக்கர வடிவத்தில் வடமொழியில் பெயர்களைக் கொண்ட 60 ஆண்டுகளைப் பின்பற்றினால் வரலாற்றைப் பதிவு செய்வதில் குழப்பம் ஏற்படும். அறுபதுக்கு மேல் எண்ண முடியாது. திருவள்ளுவர் பெயரில் உள்ள தொடர் ஆண்டு இந்தக் குழப்பத்தை அடியோடு நீக்க உதவுகிறது.

திருவள்ளுவர் ஆண்டு முறையில், 60 ஆண்டு சுழற்சி வராது. தொடர்ச்சியாக ஆண்டுகளைக் கணக்கிடலாம். தமிழர்கள் வரலாற்றில் முதல் முறையாக தங்களுக்கென ஒரு தொடராண்டு உருவாக்கப்பட்டுள்ளதென பெருமிதத்துடன் கூறும் நிலை ஏற்படும். தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்க்கும் பொய்யில் புலவர் திருவள்ளுவருக்குத் தலைசிறந்த நினைவாக அமையும். தமிழரின் திருநாளான பொங்கல் விழா தனிச் சிறப்படையும்.

படம்: thaathaa

இதை அறிந்து உணர்ந்த  தமிழ் அறிஞர்கள்,  புலவர்கள்,  சான்றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா.நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார். திருவள்ளுவர் பெயரில் தொடர்  ஆண்டு  பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது;  திருவள்ளுவர் காலம் கி.மு.31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்தார்கள். இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்று முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களை வினவினர். மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு,  ஆராய்ச்சி,  அனுபவம் ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும் என்று விளக்கம் தந்தார். இந்த முடிவு செய்தவர்கள் தலைமையிலான தமிழ் அறிஞர்கள் தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் கா. நமச்சிவாயர், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

“நித்திரையில் இருக்கும் தமிழா

சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு

அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே

அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழருக்கு

தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை அல்ல தை முதல் நாளே!”

-பாவேந்தர். பாரதிதாசன்

1921ஆம் ஆண்டில் நடந்த மாநாட்டில் எடுத்த முடிவை 18.1.1935ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்துவ ஆண்டுடன் 31 என்ற எண்ணைக்  கூட்ட வேண்டும் என்று கூறி,  திருவள்ளுவர்  ஆண்டைத் தொடங்கி வைத்தார்.  1935+31 = 1966.  அதை அறிஞர் அவை ஏற்றுக்கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது திருவள்ளுவர் ஆண்டு,  தமிழரின் ஆண்டுக்கணக்காக  தமிழகத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்காட்டி முறைமை. இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள கிரிகோரியன் ஆண்டு முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இருக்கும். உதாரணமாக, பொ.பி 2018ஆம் ஆண்டு, கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவது  தி.பி 2049ஆம் ஆண்டு ஆகும்.

படம்: tamilenkalmoossu

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம்  மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஏழு கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ். புதன் – அறிவன்;  சனி – காரி. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு  அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

நம் திருவள்ளுவர் காலாண்டோடு ஒத்து போகும் இன்னொரு காலாண்டு தான் மாயன் காலாண்டு. மாயன்கள் என அழைக்கப்படும் சாம்ராஜ்யம் எகிப்திய நாகரீகம் நிலவிய காலப்பகுதியில்,  தென்னமெரிக்க பகுதியில் வாழ்ந்த உயர்ந்த நாகரீகத்தையுடைய மக்கள் கூட்டம் என்கின்றனர். அவர்களால் உருவாக்கப்பட்ட கால அட்டவணை உலகின் பல முக்கிய சம்பவங்களை எடுத்துக்கூறத்தக்கதாக இருந்ததுடன்  நவீன கால அட்டவணையோடு மிகவும் ஒத்துப்போகக்கூடிய ஒன்றாகவுமுள்ளது. கிமு 2000 ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவில் மாயா என்ற ஓர் இனம் இருந்தது. 3500 ஆண்டுகள் வாழ்ந்த இந்த இனமானது கடந்த 15-ம் நூற்றாண்டில் அழிந்தது. இந்த இனத்தினர் விஞ்ஞானிகளைவிடவும் புத்திசாலியாக வாழ்ந்ததாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன.

படம்: annoyzview

மாயன் இனத்தவர் கட்டிடக் கலை, வான சாஸ்திரம், ஜோதிடம், அமானுஷ்யம், கணித சூத்திரம் போன்ற அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற வித்தகர்களாக இருந்தனர். இன்றைக்கு இருப்பது போன்ற ஒரு நாட்காட்டியினை அவர்களும் வைத்திருந்தனர். இந்தக் காலண்டர் கிமு 313ல் தொடங்கியது. சூரிய மண்டலத்திற்கு 7நாள் என்பது பூமியைப் பொறுத்தவரை 25,625 வருடங்களாம். இதனை மாயன் காலண்டர் 5 கால கட்டங்களாகப் பிரிக்கிறது. ஒவ்வொரு கால கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டிருக்கிறது. இதன்படி 4 கால கட்டங்கள் முடிவடைந்து இப்போது 5வது காலகட்டம் நடந்துகொண்டிருக்கிறது. பூமியில் எதிர்பாராமல் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்  புயல்,  திடீர் வறட்சி,  அதீத வெப்பம்,  அதீத குளிர், புவி நடுக்கம்,  எரிமலை வெடிப்பு,  அண்டார்டிக்கா உருகல் போன்றவை பற்றியும் அவர்கள் மாயன் கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ளனர். இது அனைத்துமே நம் திருவள்ளுவர் காலாண்டோடு ஒத்து போகும் வண்ணம் உள்ளது.

இன்று நாம் அனைவரும் சமய வேறுபாடின்றி ஒரு இந்துத் தமிழனும், ஒரு கிறித்தவ தமிழனும் ஒரு இஸ்லாமிய தமிழனும் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்றும் பொங்கல் நாள் என்றும் திருவள்ளுவர் பிறந்த நாள் என்றும் கொண்டாடுவதே ‘தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு! அமிழ்தம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்’ என்பதை மெய்ப்பிக்க உதவும். நாம் அனைவரும் நம் முன்னோரான திருவள்ளுவரின் வழி வந்தவர் என்று சொல்வதே எத்தனை பெருமைக்குரியது.

Web Title:  Ancient practice of Thiruvalluvar calender by tamils

Featured Image Credit: hiveminer

Related Articles