
தேன் போன்று தித்திக்கும் சுவை போல் சொல் கொண்டு பேசும் கொங்கு மொழிக்கு மயங்கி போகாதாவர் தமிழ்நாட்டில் யாருமே இருக்க முடியாது. கொஞ்சி பேசும் மழலை மொழி கூட நமக்கு மிக மரியாதையாக தோன்றும் அளவிற்கு தனி சிறப்பு கொண்டது கொங்கு மொழி. மொழி மட்டுமல்ல பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் என்றுமே சிறந்ததொரு சான்று கொங்கு நாடு. கொங்கு நாட்டின் விருந்தும் விருந்தோம்பலும் வள்ளுவனின் குறளுக்கேற்ப அமைந்த கலை என்றே சொல்லலாம். எங்களுக்கு நெஞ்சில் வீரம் உண்டு கண்ணீல் கருணையும் உண்டு எங்கள் சொல்லில் அன்பு உண்டு எங்கள் செயலிலே சிறப்பு உண்டு பிறர் மனதை குளிர வைக்கும் அளவில் நன்முறையில் வாழ எங்கள் முன்னோர் சொல்லி காட்டிய நன்பாதை உண்டு. இத்தகைய நன்னெறியையும் வீரத்தையும் எங்களுக்கு ஊட்டி சென்ற எங்கள் மண்ணை ஆண்டு வந்த வீரமிகு மன்னர்களை பற்றிய பகிர்வே இது.
கொங்கு நாட்டு மன்னர்கள்
‘கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்து’ – புறநானூறு
‘ஒளிறுவாள் கொங்கர்’ – குறுந்தொகை
‘ஆகெழு கொங்கர் நாடு – பதிற்றுப்பத்து
‘கொங்கர் படுமணி ஆயம் – அகநானூறு போன்ற சங்க இலக்கியங்கள் அனைத்தும் கொங்கு நாட்டின் சிறப்பையும் குறு நில மன்னர்களின் வீரத்தையும் நன்னெறியையும் எடுத்துரைக்கிறது. கொங்கு நாடு தனக்கென்று தனி எல்லையையும் வரலாறு கலை பண்பாடு நாகரீகம் பழக்க வழக்கம் போன்றவற்றை கொண்டிருந்தது. இதற்கு சிறந்த உதாரணம் கொங்கு நாட்டு கல்வெட்டு செப்பேடு, இலக்கியம் ஆகியவையே. சேர அரசர்கள் கொங்கு நாட்டை கைப்பற்றுவதற்கு முன் சிற்றரசர்கள் பலர் கொங்கு நாட்டை ஆண்டு வந்தனர். கொங்கு நாட்டு குறு நிலப்பகுதியை ஆண்டு வந்த மன்னர்கள் அத்தி, அதியமான், ஆய், ஈரந்தூர்கிழான் தோயன் மாறன், ஏற்றை, ஓரி, கங்கன், கட்டி, கடிய நெடு வேட்டுவன், குமணன், கொடுமுடி, கொண்கானங் கிழான், தாமான் தோன்றிக்கோன், நன்னன், பழையன், புன்றுறை, பேகன், விச்சிக்கோ போன்றவர் புலவர்களால் புகழ்ந்து பாடப்பெற்ற மன்னர்கள் ஆவர்.
அதில் ஒரு சிற்றரசர் கொடுப்பதில் சிறந்த கொடை வள்ளல். கடையெழு வள்ளல் காலத்திற்கு பிற்பட்ட சிற்றரசன். முதிர மலையை சார்ந்த நாட்டை ஆண்டு வந்த குறுநில மன்னன் குமணன். முதிர மலை பழனி மலைத்தொடரில் உள்ளது. மலையின் அடியில் குமண மங்கலம் எனும் ஒரு சிற்றூர் உண்டு. இந்த நாடு உடுமலைப்பேட்டையை தன்னுள் கொண்டது. வள்ளல் பேகன் காலத்தில் ஆவியர் குடிக்கு உரியதாயிருந்தது. பின் குமணனுக்கு உரியதானது. முதிர மலையையும் அதனை சுற்றியுள்ள நாட்டையும் ஆண்ட குமண மன்னன் கல்வியில் சிறந்தவர்களை ஆதரித்தான். தமிழ் புலவர்களை தெய்வமாக எண்ணி மதித்து போற்றினான். தன்னை சந்திக்க வரும் புலவர்களுக்கு அவர்கள் வேண்டும் பொருள்களை கொடுத்து அவர்களின் வறுமை நிலையைப் போக்கும் பண்பு படைத்தவர்.

முதிர நாட்டு வேந்தன்
முதிர நாட்டு வேந்தனாகிய குமணன் ஆட்சி காலத்தில் ஊர் நல்ல செல்வ செழிப்புடன் வளமாக இருந்தது. ஈதல் ஒன்றே செல்வத்தின் பயன் என்று நன்றாக அறிந்திருந்த மன்னன் இரவலர்க்கு ஈதலும் அதனால் இசையுண்டாக வாழ்தலுமே தன் வாழ்வில் தாம் பெறக் கூடிய மதிப்பான ஊதியமாக கருதி வாழ்ந்தார். தன்னிடம் இரவல் கேட்டு வரும் புலவர்க்கும் பாணருக்கும் கூத்தருக்கும் பெருங்கொடை அளித்து புகழ்பட ஆட்சி செய்து வந்தார். குமணன் தான தருமம் செய்வதில் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல் சிறந்த வள்ளல் என்பதற்கு சான்று பெருஞ்சித்திரனார் என்ற புலவர் தன் வறுமை நிலை கூறிக் குமணனிடம் தான் யானை மீது செல்லும் வகையில் பரிசில் தருமாறு வேண்டிய உடனே அது போல் செய்த அரசன்.

துன்பம் வந்தது
வாழ்வில் என்றும் இன்பம் மட்டுமே வருவதில்லை துன்பமும் வருவது தானே மானிட வாழ்வு. அது போல் குமணனுக்கு அவனது சகோதரன் மூலம் துன்பம் வந்து சேர்ந்தது. குமணனின் புகழும் அவனது செங்கோல் தவறாத ஆட்சியையும் கண்டு அவன் தம்பி மனதில் அழுக்காறு உண்டாயிற்று. அவன் மனதில் கொழுந்துவிட்டு எறிந்த பொறாமை எனும் தீ குமணனை எப்படி நாட்டை விட்டு துரத்தி நாட்டை கைப்பற்றுவது என்ற எண்ணம் உண்டாக காரணமானது. பின் இளங்குமணன் நாட்டைக் கைப்பற்றி அவனது அண்ணனை நாடு கடத்தி விட்டான். தனக்கு வாரிசு இல்லை என்று குமணன் தாமாகவே முன் வந்து தம்பியிடம் நாட்டை ஆள கொடுத்து விட்டான். பெருந்தலைச் சாத்தனார் குமணன் காட்டுக்கு சென்ற விவரம் அறியாமல் அரண்மனைக்கு சென்றர்ர். என்றும் அடையாத அரண்மனைக் கதவு அடைக்கப்பட்டு இருந்தது. குமணன் காட்டுக்கு அனுப்பப்பட்டதை மக்கள் கூறக் கேட்டு புலவர் அறிந்துக் கொண்டார். பின் குமணனை காண காட்டிற்கு சென்றார். பின் குமணன் முன் ஒரு பாடலை பாடி குமணனை மகிழ்வித்தார். ஆனால் குமணனிடம் கொடுப்பதற்கு அவனது வாளை தவிர வேறெந்த பொருளும் இல்லாததால் புலவருக்கு வாளை பரிசாக தந்தான். இளங்குமணன் நாட்டில் அச்சமயம் ஒரு அறிக்கை விடுத்து இருந்தான் குமணனின் தலையை வெட்டி எடுத்து வருபவருக்கு தக்க பரிசு வழங்கப்படும் என்பதே. அந்த சமயம் புலவருக்கு குமணன் அளித்த வாள் பரிசு தன் தலையை வெட்டி எடுத்து செல்வதற்கே என்று உணர்ந்த புலவர் வாளை மட்டும் இளங்குமணனிடம் எடுத்துக் கொண்டு வந்து காட்டி நிகழ்ந்ததை கூறினார். இளங்குமணன் அப்போது புலவர்க்கு பரிசில் வழங்கி இருக்கலாம்.அதைக் கொண்டு புலவர் தன் வறுமையை போக்கிக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு உதாரணம்
“நாட்டினைத் தம்பி கொளக் காடு சென்று நலிவுறுநாள்
பாட்டிசைத்தோர் புலவன் வேண்ட என்தலை பற்றியறுத்து
ஈட்டி என் தம்பியிடத்து ஈயில் கோடி பொன் எய்துமென்று
வாட்டங் கைத் தருமக் குமணன் கொங்கு மண்டலமே.”
இரவல் கேட்பவருக்கு தன் உயிரை கூட துச்சமாக நினைத்து அருளிய இவரை வள்ளல் என்று சொல்வது மிகையாகாது. இவர் ஆன்மிகத்திலும் சிறந்த விளங்கி உள்ளார். சோழர்களை போல் கோயில் அமைப்பதில் இவரும் சிறந்து விளங்கி உள்ளார். கொமரமங்கலம் காசி விசுவநாதர் கோயிலை உருவாக்கிய சிறப்பு குமண மன்னனையே சாரும். குமண மன்னன் காசிக்கு சென்று ஒரு முறை காசி விசுவநாதரை தரிசித்து வந்தார். அப்போது அவர் மனதில் தோன்றிய எண்ணம் உண்மையில் மக்களுக்காக மக்களை பற்றி அவர்களின் நல்வாழ்வு பற்றி மட்டும் எண்ணம் கொண்டு ஆட்சி புரிந்த மன்னன் என்று நமக்கு மிக தெளிவாக உணர்த்தும் வகையில் உள்ளது. காசிக்கு சென்று நம் மக்கள் அனைவராலும் காசி விசுவநாதரை தரிசிக்க முடியாது எனவே காசியில் சிவலிங்கத்தை பெற்று தன் ஊரில் காசி விசுவநாதர் கோயிலை அமைத்தார். தற்போது அந்த குமண மன்னருடைய பெற அந்த ஊருக்கு குமண மங்கலம் என்று வந்தது.

புலவருக்கு அளித்த பரிசு
புறநானூறு வாயிலாக புலவர் பெருஞ்சித்திரனார் பாட்டு பாடும் புலவர் சுற்றம் கெடுதி இல்லாமல் வாழ வேண்டும் என்று அரிய வகை பொன் அணிகளை எனக்கு எளிமையாக கொடுத்து நண்பர் ஆக்கிய குமண மன்னன் முதிர மலையில் உள்ளன். அவனிடம் உதவி என்று சொன்னால் பெரிய பெரிய கொடைகளை நல்குவான் என புகழ்ந்து சொன்னவர்களின் பேச்சைக் கேட்டு ஆசையோடு வந்து உள்ளேன். கோடையில் வாடி காய்ந்து கிடக்கும் புல் நன்கு தழையும் படி பெய்யும் இடி முழக்கத்துடன் கூடிய மழை போல் மன்னன் எனக்கு கொடுத்தருள வேண்டும். பசியால் வாடி கிடக்கும் என் குடும்பத்தின் குடல் குளிரும் படி தாளித்த துவையலுடன் உண்ணும் சூழ்நிலை உருவாக வேண்டும். விண்மீன் போல் என் சுற்றத்தார் கூடி உண்ணும் படி மன்னன் எனக்கு பரிசு அளிக்க வேண்டும் என்கிறார் புலவர்.

உண்மையில் குமண மன்னன் புலவருக்கு அப்படிப்பட்ட சிறந்த பரிசையே தன்னிடம் இரவல் என்று வரும் புலவர் பெருமக்களுக்கு வழங்கியுள்ளார். அவர் அப்படி வழங்கியதாலேயே இன்றளவும் குமண மன்னன் சங்க இலக்கியங்களிலும் வரலாற்று சிறப்புகளிலும் குறு நில மன்னர்களில் சிறந்தவர்களில் ஒருவரையும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். மக்களின் மனதில் நன்மதிப்பு பெற்று வாழ்ந்த மன்னன் இன்று புறநானூறிலும் அதே நன்மதிப்புடன் நமக்கும் காட்சியளிக்கிறான். வீரத்திற்கும் விவேகத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் என்றுமே சிறந்த உதாரணமாக உள்ள இவரை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள் கொங்கு நாட்டின் விலை மதிப்பில்லா ஒளிரும் ஒளிச்சுடரை.
Web Title: The King Kumanan
Featured Image Credit: meenakshisundaramwriter