ஒலியைவிட வேகமான பிரயாணிகள் விமானம் – கொன்கோட்

ரைட் சகோதரர்களின் தலைமையில் விமானம் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்ததன் பின்னர், கடந்த 100 வருட காலப் பகுதியினுள், மனிதர்களின் நினைவில் நின்ற விமானங்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. அன்று முதல் இன்று வரை சிவில் விமான போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட விமானங்களில் மிகவும் விசேடமான, அழகான விமானம் எது என்று கேட்டால், அது கொன்கோட் விமானம் என்றே விமானங்கள் குறித்த ஆர்வலர்கள் கூறுவர்.

2003இல் கொன்கோட் நிரந்தரமாக சேவையிலிருந்து ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர், கொன்கோட்டின் வேகத்துக்கு இணையான வேகம் கொண்ட எந்தவொரு விமானமும் தயாரிக்கப்பட்டதில்லை. (flyawaysimulation.com)

இந்த விமானமானது தொழில்நுட்ப ரீதியில் மிகவும் உயர்தரமானதாக இருந்தது. அத்தோடு, ஒலியின் வேகத்தை விட வேகமாகப் பயணிக்கும் வாய்ப்பை பொது மக்கள் பெறுவதற்கு ஏதுவாக அமைந்த ஒரே விமானமும் இதுதான். துரதிஷ்டவசமாக ஒரு விபத்து மற்றும் இன்னும் சில சிக்கல்கள் காரணமாக, 2003இல் கொன்கோட் நிரந்தரமாக சேவையிலிருந்து ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர், கொன்கோட்டின் வேகத்துக்கு இணையான வேகம் கொண்ட எந்தவொரு விமானமும் தயாரிக்கப்பட்டதில்லை.

ஒலியின் வேகமும் அதனை முதன் முறையாகத் தாண்டலும்

ஒலியின் வேகம் அல்லது ‘மக்’1 வேகம் (Mach 1)என்று வழங்கப்படுவது, சாதாரண காற்றில் ஒலி அலைகள் பயணிக்கும் வேகமாகும். கடல் மட்டத்திலிருந்து உயரம், வெப்பம், நீர் ஆவியாகும் அமைப்பு போன்ற விடயங்களின் அடிப்படையில் வளிமண்டல அழுத்தம் மாற்றமடைகின்றபோது, இதுவும் சற்று மாற்றமடையும். கடல் மட்டத்திலும், அறை வெப்பநிலையிலும் ஒலியின் வேகம் ஒரு செக்கனுக்கு 340.3 மீட்டர்களாகும். அதாவது, ஒரு மணித்தியாலத்திற்கு 1225 கிலோ மீட்டர்களாகும்.

டெல்டா சிறகானது கொன்கோட் விமானத்துக்காக விருத்தி செய்யப்பட்டு, இரட்டை முக்கோண டெல்டாவாக (ogival delta) பயன்படுத்தப்பட்டது. (chuckyeager.com)

1947 இல் அமெரிக்க விமானப் படையின் விமானியான “செக் யேகர்” (Chuck Yeager) ஒலியின் வேகத்தைத் தாண்டிப் பயணித்ததன் பின்னர், விமானங்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான பெருமளவு ஆர்வம் ஏற்பட்டது. ஆரம்ப காலத்தில் யுத்த விமானங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், பின்னர் பயண நேரத்தை சுருக்குவதற்காக, பயணிகள் விமானங்களுக்கும் இந்த வசதியை ஏற்படுத்துவதற்கு பலரும் முயற்சித்தனர்.

ஒலியின் வேகத்தைத் தாண்டும் பயணிகள் விமானம்?

பலம்வாய்ந்த என்ஜின்களைப் பயன்படுத்தி, ஒலியின் வேகத்தை விட வேகமாகப் பயணிக்கலாம் என்று சிலர் எண்ணலாம். ஆனாலும், உண்மை அதுவல்ல. ஒலியின் வேகம் என்பது வாயு மண்டலத்தில் அழுத்த அலைகளுக்கு பயணிக்க முடியுமான உச்சகட்ட வேகமாகும். எனவே, சாதாரண அமைப்பிலான விமானங்கள் அந்த வேகத்தை நெருங்கும்போது, விமானங்கள் பெரும் அதிர்வுக்குள்ளாகின்றன. இது சொகுசான பயணிகள் விமானங்களுக்கு ஒருபோதும் பொருத்தமானதல்ல.

இந்த நிலை ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டுமாயின், விமானத்தின் சிறகுகளின் வடிவத்தை முழுமையாக மாற்ற வேண்டும். இதனால் தான், குறைந்தது முக்கோண வடிவிலான டெல்டா சிறகொன்றேனும் (Delta Wing) அமைக்கப்படுகின்றது. இந்த டெல்டா சிறகானது கொன்கோட் விமானத்துக்காக விருத்தி செய்யப்பட்டு, இரட்டை முக்கோண டெல்டாவாக (ogival delta) பயன்படுத்தப்பட்டது.

இது குறித்து அமெரிக்கா மேற்கொண்ட ஆய்வுகள் வெற்றிகரமாக அமையவில்லை. அதேநேரம் சோவியத் ஒன்றியம் தயாரித்த Tu-144 விமானமும் நீண்ட காலம் செல்ல முன்னரே, பயன்பாட்டிலிருந்து ஒதுக்கப்பட்டது. 1976 முதல் 2003 வரையிலுமான 3 தசாப்த காலப் பகுதியினுள், ஒலியின் வேகத்தை விட வேகமாகச் செல்லும் திறனைப் பெற்றிருந்தது, பிரித்தானியாவும் பிரான்சும் இணைந்து தயாரித்திருந்த கொன்கோட் விமானமாகும்.

இந்த விமானத்தை பிரான்சின் Aérospactiale நிறுவனமும் பிரித்தானியாவின் BAC (British Aerospace Corporation) நிறுவனமும் இணைந்து தயாரித்தன. பின்னர் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து, இன்று நாம் அனைவரும் அறிந்திருக்கின்ற Airbus என்ற நிறுவனம் உருவானது. (wikipedia.org)

இந்த விமானத்தின் என்ஜின்களுக்கு காற்றைப் பெறும் பகுதிகள் (Air intake) பறக்கும் வேகத்துக்கேற்ப திறந்து, மூடும் வகையிலும், உள்ளெடுக்கப்படும் காற்றின் வேகத்தை ஒலியின் வேகத்தை விட குறைக்கும் வகையிலும் செயற்படுத்துவதற்காக, ஒரு டிஜிடல் கணிணித் தொகுதி பயன்படுத்தப்பட்டது. கொன்கோட் விமானம் இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான பிரதான காரணமாக இது அமைந்திருந்தது.

இந்த விமானத்தை பிரான்சின் Aérospactiale நிறுவனமும் பிரித்தானியாவின் BAC (British Aerospace Corporation) நிறுவனமும் இணைந்து தயாரித்தன. பின்னர் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து, இன்று நாம் அனைவரும் அறிந்திருக்கின்ற Airbus என்ற நிறுவனம் உருவானது. இன்றும் தொழில்நுட்பத்தை உச்ச அளவில் பயன்படுத்தும் விமான நிறுவனமாக இது உள்ளது.

“பின்னெரிதல்” கொண்ட ஒரே ஒரு பிரயாணிகள் விமானம்

இந்த விசேட வேகம் கொன்கோட் விமானத்துக்கு வழங்கிய தொழில்நுட்பத்தை “பின்னெரிதல்” என்று வழங்குவர். விமானத்தின் ஜெட் என்ஜின்களிலிருந்து வெளியேறும் அதிகளவு சூட்டுக்கு மீண்டும் எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இதன் மூலம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு முதல் எரிபொருள் தகனத்தின் பின்னர் மீண்டும் எரிபொருள் தகனத்தின் மூலம் கிடைக்கும் மேலதிக வெப்பம் காரணமாக வெளியேறும் வாயுவின் வேகத்தை பன் மடங்காக அதிகரிக்க முடியும். ரோல்ஸ் ரொயிஸ் நிறுவனம் தயாரித்த ஒலிம்பஸ் Mk 610 வகை 04 டர்போஜெட் என்ஞின்களுக்கு இந்த பின்னெரிதல் பொருத்தப்பட்டு, கொன்கோட் விமானத்துக்கு பயன்படுத்தப்பட்டது.

இந்த விமானம் வானில் ஏறுவதற்கு மட்டுமே, 2 தொன் எரிபொருள் தேவைப்படுகின்றது. (concordesst.com)

பொதுவாக 560 கிலோ நியூட்டன் விசையை உருவாக்குகின்ற இந்த 04 என்ஜின்களும் பின்னெரிதலின் பின்னர், 676 கிலோ நியூட்டன் விசையைத் தருகின்றன. 40 செக்கன்களில் 185 டொன்களை விட அதிகமான பாரம் கொண்ட கொன்கோட் விமானம் வானில் ஏறுவதற்குத் தேவையான, மணிக்கு 400 கிலோ மீற்றர் வேகத்தை வழங்கும் திறன் இந்த 4 என்ஜின்களுக்கும் உள்ளன. இந்த விமானம் வானில் ஏறுவதற்கு மட்டுமே, 2 தொன் எரிபொருள் தேவைப்படுகின்றது.

உதிக்கும் சூரியனை தோற்கடிக்கும் சூப்பர் வேகம்?

உதிக்கும் சூரியனை தோற்கடிப்பதா? இது என்ன கதை? 24 மணித்தியாலத்திற்குள் புவிஇனை சுற்றி 40,000 கிலோ மீற்றர் பயணத்தை முடிப்பதற்கு, சூரியனானது புவியுடன் ஒப்பிடுகையில் மணிக்கு 1670 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கின்றது. இந்த வேகத்துக்கு ஈடுகொடுத்து பயணிக்கும் சிவில் விமானங்கள் இல்லாமையினால், நாம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்றாலும், சூரியனை தோற்கடிக்க முடியாது. ஆனாலும், கொன்கோட் விமானம் மணிக்கு 2100 கிலோ மீற்றரை விட அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறனைக் கொண்டிருப்பதால், அதனால் அதனைச் செய்ய முடியுமாயிருந்தது.

வானில் 57,000 அடி உயரத்தில் பயணிக்கும் திறன் கொண்ட கொன்கோட் விமானம், பொது மக்கள் புவியிலிருந்து அதிகளவு உயரத்துக்குச் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. (pishkinn.wordpress,com)

காலையில் சூரியன் உதித்ததன் பின்னர், நீங்கள் அமெரிக்காவின் நியூயோர்க்கிலிருந்து லண்டன் நோக்கிச் செல்வதாக கற்பனை செய்யுங்கள். கொன்கோட் விமானத்தின் அசாதாரண வேகம் காரணமாக, சூரியன் கிழக்கில் மறைந்து போவது போன்றே உங்களுக்குத் தென்படும். அது மட்டுமல்ல, இவ்வாறு நீங்கள் அவதானிப்பது போன்றே நேரமும் கூட பின்னோக்கிப் பயணிக்கின்றது. ஏனெனில், ஒரு மணித்தியாலமாக பிரிக்கப்பட்டுள்ள சர்வதேச நேரக் கோட்டைக் கடப்பத்கு செலவாகின்ற நேரம், ஒரு மணித்தியாலத்தையும் விட குறைவானதாகும். நீங்கள் காலை 8 மணிக்கு நியூயோர்க்கிலிருந்து புறப்பட்டால், அதே தினம் காலை 8 மணிக்கு முன்னர் லண்டனுக்குச் செல்லலாம். (இன்றைய காலத்தில் இதனையும் விட சற்றேனும் ஒத்துப்பேகாகும் வேலையைச் செய்ய, சர்வதேச நாட் கோட்டை கடந்தால் மட்டுமே முடியும்.)

புவி உருண்டை என்பதை உண்மையாகவே காண்பதற்கு…

வானில் 57,000 அடி உயரத்தில் பயணிக்கும் திறன் கொண்ட கொன்கோட் விமானம், பொது மக்கள் புவியிலிருந்து அதிகளவு உயரத்துக்குச் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த விமானத்தின் யன்னல்களின் ஊடாக புவியைப் பார்த்தால், பூமி உருண்டை என்பதைக் கண்களினாலேயே காணலாம்.

போர் விமானங்கள் இதனையும் விட வேகமாகவும், உயரமாகவும் பயணிக்கும் திறனைக் கொண்டிருந்தபோதும், அவற்றால் சிறியளவு தூரமே அவ்வாறு செல்ல முடியும். அத்தோடு, இந்த விமானங்களில் பயணிப்போர் முகத்தை மறைத்து, மிகவும் கடினமான பயணத்தையே மேற்கொள்ள வேண்டியுள்ளனர். ஆனால், கொன்கோட் விமானத்தில் 100 க்கும் அதிகமான பயணிகளுக்கு சொகுசாக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. விமானத்தினுள்ளே நடந்து திரிந்து, உணவு உட்கொண்டு சந்தோசமாகச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.

(fginer.net)

இந்த விசேட விமானம் மக் 2.02 அல்லது ஒலியின் வேகத்தை விட இரு மடங்கு வேகத்தில், தொடர்ந்தும் 3 மணித்தியாலங்கள் பறக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. வானத்தின் உயரே குறைந்த வாயு அமுக்கத்தின்படி, இந்த வேகம் மணிக்கு 2160 கிலோ மீற்றர்களாகும். எனவே, இன்று 8 மணித்தியாலங்கள் எடுக்கும் பயணத்தை, 3 மணித்தியாலங்களில் முடிக்கும் வாய்ப்பு அன்று இருந்தது.

கொன்கோட் விமானமோட்டிகள், இந்தத் தொழிலானது குதூகலமாக இருப்பதற்கு சம்பளம் வழங்கிய தொழில் என்றே இன்றும் குறிப்பிடுகின்றனர்.

ஒரு யுகத்தின் முடிவு

தயாரிக்கப்பட்ட 20 கொன்கோட் விமானங்களிலும், பிரயாணிகளின் பயணத்துக்காக 12 விமானங்களை, பிரித்தானிய விமான சேவை நிறுவனமும், பிரான்ஸ் விமான சேவை நிறுவனமும் பயன்படுத்தின. பணத்தை விட நேரத்தை முக்கியமாகக் கருதிய உயர் வர்க்க பிரயாணிகளால் மட்டும் செலுத்த முடியுமான, உயர்ந்த கட்டணம் கொன்கோட் விமானங்களில் அறவிடப்பட்டன. எனவே, லண்டன் – நியூயோர்க் மற்றும் பாரிஸ் – நியூயோர்க் நகரங்களுக்கு இடையிலான பயணங்களில் மட்டுமே அதிக இலாபம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருந்தது.

இந்த விமானத்தின் யன்னல்களின் ஊடாக புவியைப் பார்த்தால், பூமி உருண்டை என்பதைக் கண்களினாலேயே காணலாம் (airliners.net)

2000 ஆம் ஆண்டு, பிரான்ஸ் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான 4590 என்ற இலக்க கொன்கோட் விமானம் விபத்துக்குள்ளானமை, கொன்கோட் விமான சேவையின் அஸ்தமனத்தை துரிதப்படுத்தியதில் பெரும் தாக்கம் செலுத்தியது. வேறொரு விமானத்திலிருந்து கழன்று வீழ்ந்திருந்த ஒரு பகுதியுடன் மோதியதால் பாதிப்புற்ற இந்த விமானம், ஒரு ஹோட்டல் மீது வீழ்ந்து, விமானத்திலிருந்த 100 பிரயாணிகளும், 9 பணியாளர்களும், விமானத்துக்கு வெளியே இருந்த 4 பேரும் மரணமடைந்தனர்.

அதிகளவு எரிபொருள் செலவாகுவதாலும், 2001 இல் உலக வர்த்தக மையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்டிருந்த விமான சேவையின் வீழ்ச்சியாலும், கொன்கோட் விமான சேவையை நடாத்திச் செல்வது சற்று கடினமானதாக மாறியிருந்தது. அத்தோடு, கொன்கோட் விமானங்கள் அதிகளவு சத்தத்தை எழுப்புவதனால், மக்கள் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகளின் மேல் பயணிக்கும்போது, மக்களுக்கு அது பெரும் தொந்தரவாகவும் இருந்தது.

இந்த விமானத்தில் காணப்பட்ட அனலொக் செயற்பாட்டு அறை 21 ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமற்றதாக இருந்தமையும், டிஜிடல் முறைமைக்கு மாற்றுவது (போயிங் 747 போன்று) இலாபகரமானதாக அமையாதமையும் இன்னுமொரு காரணமாகும். கடைசியாக, 2003 இல் எயார் பஸ் நிறுவனம், இவற்றைக் கொண்டு செல்வதை நிறுத்தியதும், கொன்கோட் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது.

பணத்தை விட நேரத்தை முக்கியமாகக் கருதிய உயர் வர்க்க பிரயாணிகளால் மட்டும் செலுத்த முடியுமான, உயர்ந்த கட்டணம் கொன்கோட் விமானங்களில் அறவிடப்பட்டன. (gettyimages.com)

சிறந்த ஒரு தயாயரிப்பு

உண்மையில், நாம் இன்று 1970 களை விடவும் பின்னடைந்திருக்கின்றோம் என்பதுவே, கொன்கோட் அபிமானிகளின் கருத்தாகும். 1970 களில் லண்டனிலிருந்து நியூயோர்க்கிற்கு 3 மணித்தியாலங்களில் செல்ல முடியுமாயிருந்தது. ஆனால், இன்று இந்தப் பயணம் 6 மணித்தியாலங்களை எடுக்கின்றது. அத்தோடு, இன்று பொது மக்களுக்கு ஒலியின் வேகத்தை விட அதிகளவு வேகத்தில் பயணிக்கும் எந்தவொரு வழிமுறையும் இல்லை. சிலவேளை, இன்னும் சில காலத்துக்கு இது தொடரலாம்.

உலகின் அழகான, வேகமான பிராயணிகள் விமானமான கொன்கோட் விமானமானது, மனித வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகச் சிறந்த ஒரு தயாரிப்பு என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இந்த விமானத்தில் ஒரு முறையேனும் பயணித்த ஒருவரை, நிரந்தரமாக இந்த விமானத்துடனேயே அன்பால் கட்டிப்போடும் திறன், கொன்கோட்டுக்கு இருந்தது. முழுமையாகவே பொறியியல் சித்தாந்தங்களின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு சிறந்த சித்திரக் கலைஞனுக்கே வரைய முடியாதளவு அழகான வடிவத்தை, இந்த விமானம் கொண்டிருந்தது.

வேறொரு விமானத்திலிருந்து கழன்று வீழ்ந்திருந்த ஒரு பகுதியுடன் மோதியதால் பாதிப்புற்ற இந்த விமானம், ஒரு ஹோட்டல் மீது வீழ்ந்து, விமானத்திலிருந்த 100 பிரயாணிகளும், 9 பணியாளர்களும், விமானத்துக்கு வெளியே இருந்த 4 பேரும் மரணமடைந்தனர். (gettyimages.com)

இனி எப்போதும் காண முடியாத நினைவுச் சின்னம்

புதிய விடயங்களைக் கண்டறியும் ஆற்றலும், செய்ய முடியாது என்று நினைப்பவற்றை செய்து காட்டும் திறனும் கொண்ட மனித இனம் கொண்டிருந்த திறனை, உச்சளவில் வெளிப்படுத்திக் காட்டுகின்ற ஒரு தயாரிப்பான கொன்கோட் விமானத்தை, சந்திரப் பயணத்துக்கு துணையாக நின்றி செடர்ன் V ரொக்கட்டுடன் சமமாக வைத்துப் பார்க்க முடியும்.

அதிகளவு சத்தம், அதிகளவு எரிபொருள் பயன்பாடு, இயக்கிச் செல்வதிலுள்ள செலவுகள் போன்ற குறைகள் இருந்தபோதும், அனைத்து வகையிலும் பூரணமான ஒரு விடயத்தைப் பார்க்கிலும் சற்று குறைவான குறைகளைக் கொண்டிருக்கின்ற ஒரு பொருள் உண்மையில் அன்புக்குரியதாகும். நீங்கள் மோட்டார் சைக்கிள், ஸ்போர்ட்ஸ் கார்கள் அல்லது செல்லப் பிராணிகள் மீது உண்மையான அன்பை வெளிப்படுத்துவதாயின், இப்போது இங்கு கூறிய விடயத்தை நன்கு புரிந்திருப்பீர்கள். தனது வாகனம் அல்லது செல்லப் பிராணி எந்தளவு குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றபோதும், வேறு எந்தவொரு பூரணமான வியடத்தாலும், செல்லப் பிராணியாலும், அந்த அன்புணர்வைப் பெற முடியாது. கொன்கோட் விமானமும், இவ்வாறான ஒரு அன்பை உருவாக்க முடியுமான ஒரு விசேடமான தயாரிப்பாகும்.

புதிய விடயங்களைக் கண்டறியும் ஆற்றலும், செய்ய முடியாது என்று நினைப்பவற்றை செய்து காட்டும் திறனும் கொண்ட மனித இனம் கொண்டிருந்த திறனை, உச்சளவில் வெளிப்படுத்திக் காட்டுகின்ற ஒரு தயாரிப்பாக கொன்கோட் விமானம் திகழ்ந்தது (airlinereporter.com)

பல்வேறு காரணங்களால் சேவையிலிருந்து நீக்கப்படாலும், ஆன்மா உணர்கின்ற ஒரு தயாரிப்பான கொன்கோட் விமானம், அதன் அபிமானிகளின் உள்ளங்களில் என்றும் மறையாத ஒரு நினைவுச் சின்னமாக எஞ்சியிருப்பது, அது பரிபூரணமானதாக இல்லாமையினாலாகும். எரிபொருள் செலவு, ஒலி மாசடைவு, காலநிலை மாற்றம் போன்ற விடயங்கள் குறித்து சிந்திக்கின்ற இக்காலத்தில், இதுபோன்ற ஒரு விமானம் மீண்டும் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை போல்தான் தெரிகின்றது. கொன்கோட் விமானமானது, மனதால் நினைத்தும், வீடியோக்களிலும், புகைப்படங்களிலும் பார்த்தும் உணர முடியுமான, இறந்த காலத்திற்குச் சொந்தமான ஒரு நினைவாக, எம் அனைவரது உள்ளங்களிலும் நிலைத்து நிற்கும்.

ஆக்கம்: இந்திரஜித் கமகே

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்

Related Articles

Exit mobile version