தொலைந்ததாக நம்பப்பட்ட கண்டங்கள்

மனிதர்கள் இயல்பாகவே தேடலில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். வரலாற்றின் பாதையில் உயர்ந்த கலாசாரமும், அதீத மேம்பாடும் கொண்டிருந்த மனித கலாசாரங்கள் அனைத்துமே தன்னுடைய எல்லைக்கு அப்பால் இருக்கும் உலகம் குறித்து ஆய்வதில் ஆர்வமுடன் இருந்தமையை காண முடியும். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கப்பல் ஏறி புதிய கண்டங்களை கண்டுபிடித்தமைக்கும் இந்த ஆர்வமே அடிகோலியது. இன்றும் இதன் பிரதிபலிப்பை விண்வெளி ஆய்வு மற்றும் ஆழ்கடல் ஆய்வுக்கான நம்முடைய ஆர்வத்தில் காணமுடியும். இருந்த போதிலும் இந்த ஆர்வம் சில தவறான அனுமானங்களுக்கும் நம்மை இட்டுச்சென்றுள்ளது. உதாரணமாக ஆஸ்திரேலியாவின் மத்தியில் ஒரு பெரும் கடல் இருந்ததாக ஆரம்பகால புவியியலாளர்கள் எண்ணினர். இது சிறியதொரு பிழையே, ஆனால் சிலசமயங்களில் இல்லாத ஒரு கண்டத்தையே இருந்ததாக முடிவுக்கு வந்த சந்தர்ப்பங்களும் நடந்துள்ளன. அவ்வாறு ஆர்வக்கோளாறின் மிகுதியாக நாமாகவே உண்டாக்கிக்கொண்ட சில கண்டங்கள் குறித்தான பார்வையே இந்த கட்டுரை. 

லெமூரியா கண்டம்

லெமூரியா கண்டம் மாதிரி வரைபடம்
படஉதவி : alienpolicy.com

முதன்முதலில் லெமூரியா கண்டம் பற்றிய கோட்பாடு வெளியானது 1864ம் ஆண்டில். புவித்தகடுகள் பற்றிய கருத்தாக்கங்கள் உண்டாவதற்கு முன்பு வரையில் பூமி மற்றும் புதை படிமங்கள் பற்றிய கண்டுபிடிப்புகள் பெரும் குழப்பத்தை உண்டுபண்ணிய வண்ணம் இருந்தன. இந்த சமயத்தில் விலங்கியலாளர் மற்றும் உயிர்-புவியியலாளரான பிலிப் ஸ்லேட்டர் (Philip Sclater) என்பவர் லெமூர் குரங்குகள் என்று கருதப்பட்ட விலங்கின் புதைபடிமங்களை ஆய்வு செய்துகொண்டிருந்த போது ஒரு விசித்திரமான விடயத்தை கண்டறிந்தார். லெமூர் விலங்குகளின் படிவங்கள் மடகாஸ்கர் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டது ஆனால் அவை இரண்டுக்கும் இடையே வேறெந்த இடத்திலும் அவ்விலங்கு கண்டறியப்படவில்லை. 

இந்த அவதானிப்பு புதியதொரு கேள்வியை உண்டுபண்ணியது. லெமூர் குரங்குகளால் மடகாஸ்கரில் இருந்து ஆப்பிரிக்க கண்டத்தை நீந்தி அடைய முடியவில்லை என்றால் எவ்வாறு அவை இந்தியாவை சென்றடைந்திருக்கக் முடியும்? அல்லது இந்தியாவில் இருந்து மடகாஸ்கரை அடைந்திருக்க முடியும்? இதனை தீர்க்கும் முகமாக ஸ்லேட்டர் பின்வரும் கருத்தை முன்வைத்தார்,

”மடகாஸ்கர் தீவில் கண்டறியப்பட்ட இந்த பாலூட்டி விலங்கின் முரண்பாடு மிக்க போக்குக்கு சிறந்த விளக்கமாக அமையக்கூடியது தற்கால அட்லாண்டிக் மற்றும் இந்து சமுத்திர பகுதிகளை உள்ளடக்கிய பெரியதொரு கண்டம் நிலவியது என கருதுவது மாத்திரமே”

புவியியலாளர் பிலிப் ஸ்லேட்டர்
படஉதவி : pbslearningmedia.org

இதில் அட்லாண்டிக் சமூத்திரம் ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. ஆனால் பிற்காலத்தில் இந்த நிலப்பரப்பு குறித்து மேலதிக விளக்கங்களை அவர் எழுதும் போது அவர் குறிப்பிட்டதாவது

“இக்கண்டம் காலப்போக்கில் தீவுகளாக உடைந்து சென்றது. அவற்றில் சில ஆப்பிரிக்க கண்டத்துடன் இணைந்துள்ளது எஞ்சியவை ஆசியாவாக கருதப்படுகிறது. மேலும் மடகாஸ்கர் மற்றும் மஸ்கரின் தீவுகளில் இந்த பெருங்கண்டத்தின் தொன்மையான ஆதாரங்கள் நமக்கு கிடைக்கிறது. இதனால் நான் இந்த கண்டத்தை லெமூரியா கண்டம் என பெயரிடுகிறேன்” தான் முதலில் ஆய்வு செய்த லெமூர் குரங்குகளின் வழியாகவே இந்த கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை நினைவுகூறவே இந்த பெயரீடு. 

இந்து சமுத்திரத்தில் இருந்ததாக நம்பப்பட்ட கண்டங்கள் வரிசையில் இது முதன்மையானது அல்ல. கடலில் மூழ்கிய நிலப்பகுதிகளை கொண்டு உயிரினங்களுக்கு இடையே காணப்படும் ஒற்றுமைகள் மற்றும் காணாமல் போயுள்ள தொடர்புகள் என பல்வேறு அடிப்படையில் பல கருத்தாக்கங்கள் இக்காலகட்டத்தில் உருவாகி வந்தன. ஆனால் லெமூரியா தான் முதன்முதலில் பொருத்தமான பெயருடனும் பின்புலத்துடனும் உண்டாகிய கண்டம். எனவே இது நிலைத்துவிட்டது. லெமூரியா குறித்த கோட்பாடு விஞ்ஞான சமூகத்தில் குறிப்பிடத்தக்க அளவு வரவேற்பை பெறத்தொடங்கியது. தொடர்ந்து உலகம் முழுவதும் பலநாடுகளின் பத்திரிகைகள் மற்றும் விஞ்ஞான இதழ்களில் இது பற்றிய செய்திகள் பரவத்தொடங்கின. இதற்கெல்லாம் ஒரு படி மேலாக மனிதன் முதன்முதலில் தோன்றிய இடமே லெமூரியா என்றளவுக்கு கருத்துகள் உண்டாகத்தொடங்கின. இதனாலேயே ஆரம்பகால மனித தொல்பொருள் படிவங்கள் இன்றளவும் கிடைக்கப்படாது உள்ளன என்றும் கூறப்படுகிறது. 

குமரிக்கண்டத்தின் மாதிரி வரைபடம்
படஉதவி : alienpolicy.com

இந்த லெமூரியா கண்டமே தமிழ் சமுதாயத்தால் குமரிக்கண்டம் என அழைக்கப்படுகிறது. தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் கூறும் கடல் கொண்ட தென்னாடும், ஸ்லேட்டர் முன்வைத்த லெமூரியா கண்டமும் ஏறக்குறைய ஒன்று போலாகவே காணப்படுகிறது. இந்த இலக்கிய ஆதாரங்களை ஸ்லேட்டர் முன்வைத்த விஞ்ஞான கோட்பாட்டுடன் பொருத்தி குமரிக்கண்டமே உலகத்தின் கலாச்சார தொட்டில் என்ற கோட்பாட்டுக்கும் தமிழர்களே உலகின் மூத்த குடிகள் என்ற கருத்துக்கும்  பலர் வலுசேர்த்து வருகின்றனர். ஆனால் புவித்தகடுகள் குறித்து கண்டறியப்பட்ட பின்னர் இந்த லெமூரியா கருத்தாக்கம் காலாவதியாகி விட்டது. முன்பொரு காலத்தில் மடகாஸ்கர் மற்றும் இந்தியா ஆகியவை ஒன்றாக இருந்த நிலப்பரப்பு என்பது கண்டுபிடிக்கப்பட்டமை லெமூர் குரங்குகள் எவ்வாறு இந்தியாவிலும், மடகாஸ்கர் தீவிலும் மட்டும் காணப்படுகிறது என்பதை விளக்குகிறது. 

மூ கண்டம்

மூ கண்டத்தின் மாதிரி வரைபடம்
படஉதவி : blogspot.com

இதன் கருத்தாக்கம் உண்டானது 1926ம் ஆண்டு. லெமூரியா கண்டம் போன்றே இதுவும் ஒரு ஆய்வுக்கான முடிவாக உண்டானதே. இந்த முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது மாயன் நாகரீகம், ஆராய்ச்சியாளர் ஆகஸ்டஸ் லே ப்லேஙோன் (Augustus Le Plongeon). யூகேடோனில் இருந்த பழங்கால மாயன் கட்டிடங்களை ஆய்வு செய்துகொண்டிருந்த இவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். சில சித்திர எழுத்துக்களை மொழிபெயர்ப்பு செய்தபோது மாயன் சமூகம் கிரேக்க மற்றும் எகிப்திய நாகரிகங்களை காட்டிலும் பழமையானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆகஸ்டஸ் தன்னுடைய சக ஊழியர் ஒருவரின் தவறான மொழிபெயர்ப்பை அடிப்படையாக கொண்டு ஆய்வொன்றை மேற்கொண்டார். அதன் விளைவாக பேரழிவால் மூழ்கிப்போன பெரிய நிலப்பரப்பு ஒன்றை தான் கண்டுபிடித்து விட்டதாக முடிவுக்கு வந்தார். “மூ” என்று இந்த நிலத்துக்கான பெயர் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. மேலும் மனித இனம் இந்த கண்டத்தில் தோற்றம் பெற்றுதுடன் இந்த கண்டம் மூழ்கதொடங்கியதும் மெல்ல மெல்ல அங்கிருந்து அனைவரும் வெளியேறியதாகவும் நம்பப்பட்டது. 

மாயன் சமூகம் ஓவியம்
படஉதவி : wikipedia.org

லே ப்லேஙோன், மூ கண்டத்தின் வரைபடத்தை அட்லாண்டிக் சமுத்திரத்தின் மத்தியில் இருக்குமாறு வடிவமைத்தார். ஆனால் இந்த கோட்பாடு பிரபல்யம் அடைந்தது பிரித்தானிய எழுத்தாளரான ஜேம்ஸ் சர்ச்வார்ட் என்பவரால். இந்தியாவில் இருக்கும் இரு கல்வெட்டுகள் மூ கண்டத்தை பற்றிய முழுவரலாற்றையும் கொண்டுள்ளதாக இவர் கூறினார் . மேலும் இவரது மூ கண்ட வரைபடம் தென்னமெரிக்காவுக்கு கிழக்கு பக்கமாக பசுபிக் சமுத்திரத்தில் வரையப்பட்டது. இது ஏறத்தாழ தற்கால நியூ கினியா தீவைபோன்ற வடிவத்தை கொண்டிருந்தது. ஆனால் அனைத்து நாகரிகங்களும் இந்த கண்டத்தில் இருந்தே உண்டானது என்ற கருத்தில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. மேலும் அது பொதுவாக அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளபட்டது. இதற்கான பிரதான காரணம் இனவாதம். 

அமெரிக்க பழங்குடிகள் தங்களை காட்டிலும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நேர்த்தியான கட்டிடக்கலையையும், வளர்ச்சியடைந்த சமுதாயமும் கொண்டிருந்தனர் என்பது ஐரோப்பியர்களுக்கு எரிச்சலை ஊட்டியது. எனவே மூ கண்டம் மனித இனத்தின் உற்பதிப்புள்ளி என்ற கருத்தாக்கத்தை உருவாக்குவதன் மூலம் அமெரிக்க பழங்குடி மக்களும் ஐரோப்பியர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்ற கருத்தாக்கத்தை வலுப்படுத்த விரும்பினார்கள். இருந்த போதிலும் இந்த கருத்தாக்கம் எவ்வாறு மனிதர்கள் முதன்முதலில் அமெரிக்க கண்டதுக்குள் நுழைந்தார்கள் என்பதையும் மாயன் நாகரிகம் எவ்வாறு மிகவும் நேர்த்தியும், சிறப்பும் மிக்க கட்டிடங்களை உண்டாக்க கூடியதாக இருந்தது என்பதையும் இந்த மூ கண்டம் விளக்கியதால் இது பலகாலமாக உண்மையான கண்டம் என்றே கருதப்பட்டு வந்தது. மேலும் அதிகப்படியான எழுதாக்கங்களும் இது குறித்து உண்டானது. எவ்வாறாயினும் காலங்கள் செல்ல செல்ல விஞ்ஞான வளர்ச்சியின் உதவியுடன் கடல் படுகைகளில் செய்த ஆராய்ச்சி மூ கண்டம் ஒரு கற்பனை என்பதை உறுதி செய்துள்ளது. 

டெர்ரா ஆஸ்திரேலிஸ்

வரலாற்றிலேயே அதிகளவு ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அதிக காலம் நிலைத்திருந்ததுமான ஒரு கற்பனை நிலப்பரப்பு இதுவே. நெடுங்காலத்துக்கு முன்னராக அரிஸ்டோட்டில் தன்னுடைய குறிப்பில் 

“நாம் வாழும் வடக்கு துருவத்தை சுற்றி நிலப்பரப்பு இருப்பது போலவே தெற்கு துருவத்தை அண்மித்தும் பாரியதொரு நிலப்பரப்பு இருக்க வேண்டும்” 

எனக்கூறினார். அவரை தொடர்ந்து வந்த பிரசித்திபெற்ற புவியியலாளரான தொலமி இந்த கருத்தாக்கத்தை மேலும் விரிவுபடுத்தினார். இவரது கருத்தின் படி புவி தன்னுடைய சமநிலையை பேணும் வகையில் வடக்கு அரைக்கோலத்தில் இருப்பதற்கு சரிசமமாக தெற்கு அரைக்கோலத்திலும் நிலப்பரப்பு இருத்தல் வேண்டும். அதாவது குறுக்கு வெட்டுபரப்பில் (பூமத்திய ரேகை வழியே) பூமியானது சமச்சீரானது என கூறினார் தொலமி. அதன் பெயரே டெர்ரா ஆஸ்திரேலிஸ் அதாவது தெற்கு நிலப்பரப்பு. 

ஆனால் யதார்த்தத்தில் அத்தகைய நிலப்பரப்பு ஒன்று இல்லை என்பது பலகாலம் கழித்தே கண்டறியப்பட்டது. மேலும் இந்த நிலரப்பை தேடிச்சென்ற கப்பலோட்டிகள் பெரும்பாலும் முடிவில்லாத சமுத்திரத்தை மட்டுமே கண்டனர். இருப்பினும் பல நூற்றாண்டுகளாக இந்த தெற்கு நிலப்பரப்பை தங்கள் உலக வரைப்படங்களில் சேர்த்துக்கொள்வதை பலரும் வழக்கமாக கொண்டிருந்தனர். 1820 இல் அண்டார்டிகா கண்டுபிடிக்கபட்டதன் பின்பே இந்நிலை மாற்றம் அடைந்தது. அதன் பின்னரே உலகம் தொலமியின் எண்ணப்படி சமச்சீரானது அல்ல என்பது உறுதியானது. இருப்பினும் இந்த டெர்ரா ஆஸ்திரேலிஸ் என்ற மாபெரும் கற்பனை நிலப்பரப்பின் ஞாபகமாகவே ஆஸ்திரேலியா கண்டதுக்கு பெயரிடப்பட்டது. 

அட்லாண்டிஸ்

தொலைந்து போன கண்டங்கள் என்ற பேச்சை எடுத்தாலே அனைவரின் நினைவிலும் வரும் பெயர் அட்லாண்டிஸ். தமிழ் சமூகத்திற்கு குமரிக்கண்டம் போல, ஐரோப்பிய சமுதாயத்துக்கு அட்லாண்டிஸ் ஒரு கனவு. இன்றை வரைக்கும் பல சர்ச்சைக்குரிய விவாதங்களுக்கு உள்ளாகும் தலைப்பாக விளங்குகிறது இந்த நிலப்பரப்பு. அட்லாண்டிஸ் முதன்முதலில் குறிப்பிடப்பட்டது பிளாட்டோவின் படைப்பான “டிமேயஸ் & க்ரிடியஸ்” என்ற காவியத்தில் ஆகும். அவரது படைப்பில் ஏதென்ஸ் நகரத்தை எதிர்த்த அனைவரையும் அட்லாண்டியர்கள் என்றே குறிப்பிட்டார். ஆனால் பிளாட்டோ அதோடு நின்றுவிடாது அட்லாண்டிஸ் என்ற இடத்தையும் வரையறுத்தார். 

அட்லாண்டிஸ் கண்டத்தின் கற்பனை வரைபடம் 
படஉதவி : test.artstation.com

“கிரேக்கர்களாகிய நீங்கள் ஹேர்க்கியுலிஸின் தூண்கள் என அழைக்கும் இடத்தின் வாயில் புறத்தில் அட்லாண்டிஸ் இருந்தது. அது லிபியா மற்றும் ஆசியாவை இணைத்தாற் போல மிகவும் விஸ்தீரனமாக இருந்தது” 

என கூறினார் பிளாட்டோ. இது மத்தியதரைக்கடலை தாண்டியுள்ள அனைத்து கடல் பரப்பையும் குறித்தது (தற்கால அட்லாண்டிக் சமுத்திரத்தை). ஒரு தீவு என்பதை காட்டிலும் ஒரு பூரணமான கண்டமாக அட்லாண்டிஸ் ஐ குறிப்பிட்டார் பிளாட்டோ. 

கதைகளின் பிரகாரம் அட்லாண்டியர்கள் ஏதென்ஸ் நகரத்தை முற்றுகை இட்டனர். ஆனால் இறுதியில் போரில் தோற்றனர், மேலும் கடவுள்களின் கோபத்துக்கும் ஆளாயினர். இதன் விளைவாக கடவுள்கள் அட்லாண்டிஸ் நிலப்பரப்பை கடலில் மூழ்கச்செய்தனர். ஏதென்ஸ் நகரத்தின் பெருமைப்படுத்துவதற்காக அட்லாண்டிஸ் என்ற கற்பனை நிலப்பரப்பை ஏதென்ஸ்க்கு நிகரான ஒரு நகரமாக விவரிக்காமல் ஒரு பெரிய கண்டமாக உருவாக்கினார் பிளாட்டோ. இதன் மூலம் ஒரு கண்டத்தையே தோற்கடித்த பெருமையை ஏதென்ஸ் நகரத்துக்கு தேடித்தந்தார் அவர். தன்னுடைய சொந்தக்கருத்தை வலுவூட்டும் வகையிலேயே பிளாட்டோ இந்த கண்டத்தை உருவாக்கினார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. இருப்பினும் பிளாட்டோ எதனை அடிப்படையாகக்கொண்டு இவ்வாறான கண்டத்தை உருவாக்க முன்வந்தார் என்பது தெளிவில்லாமல் உள்ளது. 

அட்லாண்டிஸின் கற்பனை வரைபடம்
படஉதவி : imgur.com

எது எவ்வாறாயினும் எழுத்தாளர்களுக்கு ஏதென்ஸ் நகரத்தை எதிர்த்த அட்லாண்டிஸ் என்ற தொலைந்துபோன ஒறு நாகரீகம்  மிகவும் சுவாரஸ்யமான தலைப்பாக அமைந்தது. இதில் குறிப்பிடத்தக்கவர் ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த இக்னடியஸ் டோனெலி. இவர் எழுதிய “அட்லாண்டிஸ்: மிகப்பழமையான உலகம்” என்ற நூல் மற்ற நூல்கள் போல அட்லாண்டிஸை ஒரு கற்பனை நிலப்பரப்பாக கொள்ளாது உண்மையில் அட்லாண்டிஸ் இருந்திருக்க கூடிய ஆதாரங்களை ஒன்று திரட்டியதாக இருந்தது. அவருடைய ஆக்கத்தின் படி அட்லாண்டிஸ் கண்டம் மிகவும் வளர்ச்சியடைந்த அதிநவீன நாகரிகம் எனவும், அங்கிருந்தே பிற நாகரிகங்கள் உண்டானது என்றும் கூறினார். தன்னுடைய வாதத்தில் அவர் மூ கண்டம் பற்றி முதன்முதலில் கூறிய லே ப்லேஙோனையும் குறிப்பிட்டு இருந்தார். இந்த படைப்பு பலரது கவனத்தையும், நம்பிக்கையையும் ஈர்த்தது. மேலும் பல துணை எழுத்தாளர்கள் டோனேலியின் இந்த படைப்பில் தங்கள் சொந்த கருத்துக்களையும், நம்பிக்கைகளையும் உட்புகுதிக்கொண்டனர். இதில் பெரும்பாலானவை இனவாதம் மிகுந்தைவைகளாக இருந்தன. டோனெலி தன்னுடைய சொந்த படைப்பிலேயே அட்லாண்டிஸ் கண்டம் சிவப்பு தலைமுடியும், நீலநிற கண்களும் கொண்ட ஆரிய இனத்தின் பூர்வீகம் என குறிப்பிட்டு இருந்தார். இது அவருடைய நேரடி பூர்வீகமான அயர்லாந்தில் மட்டுமே காணப்படும் குறிப்பிட்ட மக்கள் இனத்தின் அடையாளங்கள். இந்நாள் வரை பலரும் அட்லாண்டிக் கண்டம் இருந்ததற்கு சாத்தியக்கூறுகளையும் பிளாட்டோ எதன் அடிப்படையில் இவ்வாறான ஒரு கற்பனை நாகரிகத்தை உண்டாக்கினார் என்பதையும் தேடி வருகின்றனர். 

Related Articles

Exit mobile version