தமிழ்திரு நாடுதன்னை பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா – நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா – என்றான் பார்போற்றும் பாரதி.
இந்திய சுதந்திர வரலாற்றில் வாழ்வாங்கு வையத்துள் வாழ்ந்த தமிழர் தம் பங்களிப்பு தலையாயதும் தவிர்க்க முடியாததுமாக உள்ளது. இந்திய விடுதலைக்காக தங்கள் இன்னுயிர் ஈந்த தியாகிகளை இங்கே நாம் நினைவு கூர்வோம்.
ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மைசூர் புலி திப்பு சுல்தானின் போராட்டத்தை விடுதலைப்போரும் துவக்கம் என்றே கூறலாம். 1857இல் ஜான்சி ராணியின் போராட்டத்திற்கு போராட்டத்திற்கு முன்னரே 1824இல் கிட்டூர் ராணி சென்னம்மாள் ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடினார். அவருக்கும் கால் நூற்றாண்டுக்கும் முன்னதாகவே திருவிதாங்கூரைச் சேர்ந்த வேலுத்தம்பி, கொச்சியைச் சேர்ந்த பாலியத்தச்சன், மலபாரைச் சேர்ந்த பழசி ராஜா ஆகியோரின் போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. வேலுத்தம்பியின் போராட்டம் 1806ஆம் ஆண்டில் நடந்தது.
அதற்கும் முன்னதாக, 1792இல் துவங்கி ஒன்பதாண்டு காலம் நடைபெற்ற பாஞ்சாலங்குறிச்சிப் போர்தான் இந்திய விடுதலைப்போரின் முதல் நிகழ்ச்சியா இல்லை, நெற்கட்டான்செவ்வல் என்ற பகுதியை ஆண்டுவந்த பூலித்தேவனின் போராட்டம்தான் முதல் விடுதலைப் போராட்டமா என்று 1960களில் தமிழகத்தில் விவாதம் நடந்தது. சிற்றரசர்களின் போராட்டங்களை விடுதலைப் போராட்டமாக வகைப்படுத்த முடியாது என்று ஒருசாராரும், ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் எதுவுமே விடுதலைப் போராட்டத்தின் பங்குதான் என்று ஒருசாராரும் கருதுகின்றனர். ஆனால் வரி கேட்டு தொல்லைச் செய்த வெள்ளையர்களை எதிர்த்து தீரத்துடன் முதன் முதலாக புலியாகப் பாய்ந்தது பூலித்தேவன்தான் என்பது மறுக்க முடியாது. இந்திய சுதந்திர வரலாற்றில் இவரது போராட்ட காலம் சிறியது என்றாலும் வெள்ளை ஓநாய்களை விரட்டி முதன்முதலாக வாள் நீட்டியது பூலித்தேவன் மட்டுமே என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மை.
1755ல் நெல்லையின் நெற்கட்டும் சேவல் கோட்டையை முற்றுகையிட்டு வரி வசூல் செய்த கர்னல் ஹெரோனையும், அவனது படைகளையும் விரட்டியடித்து தென்னகத்தின் சுதந்திர தாகத்துக்கு வித்திட்ட முதல் மாவீரன் பூலித்தேவனே. 1767ல் கைது செய்யப்பட்ட பூலித்தேவன் சங்கர நயினார் கோவிலில் வழிபட வேண்டும் என பிரிட்டிஷாரிடம் கேட்டு பூலித்தேவன் கருவறைக்குள் சென்றார். போனவர் மீண்டும் திரும்பி வரவேயில்லை. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு வேறெந்த மாநிலங்களின் பங்கைக் காட்டிலும் அதிகமானதாகவே உள்ளது. வ.உ.சி. மற்றும் வீரப்பாண்டிய கட்டபொம்மன் ஆகியோரும் திரைப்படங்களின் மூலமே நம் அனைவரின் நினைவிலும் நிற்கின்றனர். இல்லையென்றால் இவர்களின் அடையாளமும் நமக்கு தெரியாமலே இருந்திருக்கும். சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஆங்கிலேய அரசு அனைத்து விதமான அடக்குமுறைகளையும் பயன்படுத்தியது. ஆயுதம் இன்றி அகிம்சை வழியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக்கூட கண்மூடித்தனமாகத் தாக்கியது. “தடிகள் கொடுத்திருப்பதன் நோக்கம் அடிப்பதற்காகத்தான், அச்சுறுத்துவதற்காக அல்ல. தலைமை அதிகாரியின் ஆணை இல்லாமலே தடியடி நடத்தும் சக்தியும் தைரியமும் காவலர்களுக்கு இருக்க வேண்டும்” என்பது ஆங்கிலேய அரசு காவல் துறையினருக்கு அளித்த அறிவுரை.
திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார் அறியாமை இருள் அகலவும், மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் நீங்கவும் பாடுபட்டார். 1924ல் கேரளத்தில் வைக்கம் மகா தேவர் கோவில் போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு சத்தியாகிரகம் நடத்தி வெற்றி பெற்றார். இதனால் வைக்கம் வீரர் என்றும் அழைக்கப்பட்டார் தந்தை பெரியார். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறை சென்றார். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் தீவிர உறுப்பினராக இருந்தார் என்பதையும், கதர்த்துணிகளை மூட்டையாகக் கட்டி தலையில் சுமந்துசென்று விற்றார் என்பதையும் பலர் அறிய மாட்டார்கள். வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா போன்ற போராளிகளின் பெயர்களை எத்தனைபேர் நம்மில் அறிந்து வைத்துள்ளோம்?
தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படும் வ.உ.சி, அவர்கள் புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால், அவரது ‘பாரிஸ்டர் பட்டம்’ பறிக்கப்பட்டது. அவரது துணிச்சலான தன்மையே அவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. அவர், நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும், தவறான ஆங்கிலேய அரசாங்கத்தைப் பற்றி இந்திய மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருந்தார். என்றும் நாம் போற்றப்பட வேண்டிய விடுதலை போராட்ட வீரர்களில் மிகவும் முக்கியமான நபர் வ.உ.சிதம்பரனார் அவர்கள்.
வ.உ.சிதம்பரனார், பாரதி, சுப்ரமணிய சிவா ஆகியோரை மும்மூர்த்திகள் என அழைத்தனர். தம்முடைய இளம்வயதிலேயே அரசியல் பிரவேசம் செய்தவர் சுப்ரமணிய சிவா. தேச விடுதலைப் போராட்டத்திற்கு தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டவர். காங்கிரசில் பிளவு ஏற்பட்ட போது, திலகரின் தீவிரவாதத்தை ஏற்றுக் கொண்டவர். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ஆங்கிலேயரின் அடக்கு முறைகளுக்கு ஆளானாலும் கடைசிவரை அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். இவரையை பின்தொடர்ந்த மாவீரன் வாஞ்சிநாதன் ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர். வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுக்களால் வாஞ்சியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமானார். வ.உ.சி.க்கு சிறை தண்டனை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியார் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டுக் கொண்டு வீரமரணம் எய்தினார் அந்த மாவீரன் வாஞ்சிநாதன்.
திருப்பூர் குமரன் இந்திய விடுதலைப் போராட்ட தியாகி. 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் தன் இன்னுயிர் துறந்தவர் திருப்பூர் குமரன். இதனால் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
வெள்ளையரின் கொடுமைகளை வெள்ளையரே கண்டிக்கும் அளவுக்கு அடக்குமுறைகள் நிகழ்ந்தன. அதையும் மீறித்தான் நமது முன்னோர்கள் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள், இரத்தம் சிந்தினார்கள், விடுதலை பெற்றார்கள். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியபோது அப்படையின் அனைத்து நிலைகளிலும் முன்னிலை வகித்தவர்கள் தமிழர்கள். நேதாஜியின் அழைப்பை ஏற்று படையில் சேர ஆயிரமாயிரம் தமிழர்கள் முன்வந்தார்கள். நாடகம் என்றாலே தொலைக்காட்சி நாடகம் அல்லது நகைச்சுவை நாடகம் என்றாகிப் போய்விட்ட இன்றைய நிலையில், நாடக மேடையை நாட்டு விடுதலைக்காகப் பயன்படுத்திய வரலாற்றை எத்தனைபேர் அறிவார்கள்?
நம்மில் அனைவருக்கும் தியாகி விஸ்வநாத தாஸ் தெரியுமா என்று தெரியவில்லை ஆனால் அவர் நாடக மேடையை நாட்டின் விடுதலைக்காக மிகச் சிறப்பாக பயன்படுத்தினார் என்பதே அனைவரும் அறிய வேண்டிய உண்மை. நாடக நடிகர்களிலேயே தலைசிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். இளம் வயதிலேயே நாட்டின் விடுதலைக்காகப் போராடும் தலைவர்களுடன் நட்பு கொண்டிருந்தார். இவரது உணர்ச்சி மிகுந்த தேசபக்தி நாடகத்தினால் அண்ணல் காந்தியடிகளே இவரை பாராட்டினார். 1919 இல் பஞ்சாப் படுகொலை நடந்தபோது “பஞ்சாப் படுகொலை பாரீர் கொடியது பரிதாபமிக்கது” என்று பாடி தேசப்பற்றை மக்களுக்கு ஊட்டியவர். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர். இவருக்கிருந்த தேசபக்தியைக் கண்டு ஆங்கிலேய அரசு அஞ்சியது. இவர் திருமங்கலம் வட்ட காங்கிரஸ் கமிட்டியிலும், மதுரை ஜில்லா போர்டிலும், காங்கிரஸின் உறுப்பினராக இருந்தவர். வேடம் தரிப்பதற்கான உடைகளையும், கதர்த் துணியிலேயே தயாரித்து அணிந்து நடத்தவர். இவரது “கொக்கு பறக்குதடி பாப்பா” என்ற பாடல் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
ஆயினும், விடுதலைப் போராட்டம் என்றாலே நம் அனைவரின் நினைவிலும் திலகர், காந்திஜி, தாதாபாய் நவ்ரோஜி, பகத்சிங், நேரு, சுபாஷ் போன்ற பெயர்கள்தான் வருகின்றது. ஆனால் விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கை விவரிக்கும் புத்தகங்கள் மிக அரிதாகவே உள்ளது. சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்கள் எழுதிய விடுதலைப் போரில் தமிழகம் என்ற முதன்மையான நூலும், ஸ்டாலின் குணசேகரன் எழுதிய விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற அண்மைக்கால நூலும் இல்லையென்றால், தமிழர்களுக்கே தமது வரலாறு குறித்து முழுமையாகத் தெரிய வந்திருக்குமா என்றால் சற்றே வியப்புக்குரிய ஒன்றே.
நம் இளைய சமுதாயமும் விடுதலை போராட்டத்தில் நம் தமிழர்கள் ஆங்கிலேயர்களிடம் பட்ட இன்னல்களையும் போராடி பெற்று தந்த சுதந்திரத்தையும் இந்த நன்னாளில் அறிந்து கொள்ளவே இந்த பதிவு. அனைவரும் அறிவோம் நம் வீரத் தமிழர்களின் விடுதலை போராட்டங்களை. என்றும் நம் மனதில் நீங்காத வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து விடுதலை வீரர்களுக்கும் வீரமங்கையருக்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம்.
Web Title: contribution of tamil in indian freedom fight movement
feature image credit: maanavan, countercurrents, tiruppur, rediff, navrangindia