Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

யாளி – தமிழர் வரலாற்றின் அழிந்துப்போன ஆதி உயிரினமா? | #தமிழ்பாரம்பர்யமாதம்

கற்பனை. மனிதனின் கற்பனை சக்தியின் ஆற்றல் அளவுக்கு அதிகமானது. இன்று நம் கைகளில் தவழும் ஸ்மார்ட் மொபைல்களில் இருந்து கையெழுத்திடும் குமிழ்முனை பேனாக்கள் வரையில் அனைத்துமே ஏதோவொரு காலத்தில் மனிதனின் எட்ட முடியாத கற்பனையின் வடிவங்களாக இருந்தவையே. ஆனால் இன்று அவையனைத்தும் சாத்தியப்பட்டு விட்டன. இருப்பினும் மனிதனின் அனைத்து கற்பனைகளும் சாத்தியப்படக்கூடியவை அல்ல: நோயில்லாத வாழ்வு, மரணமற்ற அமரத்துவம் மற்றும் பாடப்பட்ட புராணக்கதைகள் போல. மனிதனின் எண்ணற்ற கற்பனையின் விளைவுகள் பலவும் இன்று விவாதப்பொருட்களாக மாறியுள்ளது. அதிலொன்று யாளி. 

சக்தியின் அடையாளம் 

சிங்கத்தின் கால்கள், குதிரையின் உடல், யானையின் துதிக்கை, கூரிய பற்கள், பாரிய தோற்றம். வலிமையின் அடையாளமாக விளங்கும் மூன்று மிருகங்களின் சேர்க்கையே யாளி. யாளியின் தோற்றத்துக்கு விளங்கும் ஒரே ஒரு சான்று கோயில் சிற்பங்களே. யாளியின் உருவ அமைப்பை கொண்டு அதனை மூன்று வகையாக வகைப்படுத்துவார்கள். 

  1. மகரயாளி என்பதை பெரும்பாலும் ஆட்டுத்தலையுடன் இருக்கும் யாளி என்று கருதப்படுகிறது. எனினும் மகரம் என்பது முதலையை குறிப்பதால் இது முதலையின் உடலைப்புடன் கூடிய ஒரு யாளியாக இருக்க வேண்டும். 
  2. சிம்மயாளி– சிங்கத்தின் தலையுடன் கூடிய யாளி. அதிகமான கோயில் சிற்பங்களில் இடம்பெறும் யாளி வகை. 
  3. கஜயாளி/யானை யாளி– யானையின் துதிக்கையுடன் விளங்கும் இந்த வகை யாளி அமைப்பு தென்னிந்திய கோவிலமைப்புகளில் மிகப்பிரசித்தி பெற்றது. 
  4. அஸ்வயாளி- குதிரை முகம் கொண்டது
  5. ஸ்வன யாளி/ஞமலி யாளி- நாய் முகம் கொண்ட யாளி
  6. மூஷிக யாளி- எலிமுகம் கொண்ட யாளி

யாளியின் வலிமையை அவற்றை சிற்பங்களில் முன்னிலைப்படுத்தும் விதத்திலேயே நம்மால் உணரக்கூடியதாக இருக்கும். சிம்மயாளியின் உருவங்கள் பெரும்பாலும் ஒரு சிங்கத்தை பின்னங்கால்களால் மிதித்தவாறு முன்னங்கால்களை உயர்த்தி பாயும் விதத்தில் நிற்கும். யாளியின் அளவோடு ஒப்பிடும்போது சிங்கம் ஒரு சிறு எலியை ஒத்தே காணப்படும். அவ்வாறே கஜயாளியின் சிற்பங்களிலும் அவற்றின் வலிமை சிறப்பாக வெளிக்காட்டப்படும். சிம்மயாளியை போலவே பின்னங்கால்களை தூக்கி நிற்பதோடு முன்னங்கால்களால் தன்னுடைய துதிக்கையை பிடித்த வண்ணம் நிற்கும். துதிக்கையின் அந்தத்தில் ஒரு யானையை தரையில் இருந்து பிரித்திழுக்கும் வகையில் செத்துக்கப்பகிட்டிருக்கும். யாளியுடன் ஒப்பிடும்போது யானையும் கூட மிகச்சிரியதே என்பது இதன் கருத்து. 

சுந்தரேசன் யாளி தூண், சங்கரநாராயணர் கோவில், சங்கரன் கோவில், திருநெல்வேலி

இன்றளவில் நம்முடைய உலகில் தரைவாழ் வேட்டைவிலங்குகளில் சக்திவாய்ந்தது சிங்கம், தாவர உண்ணிகளில் சக்திமிகுந்தது யானை. இவை இரண்டுமே யாளிகளின் இரைகளாக இருப்பதாக உருவகப்படுத்துவத்தில் இருந்து யாளிகளின் வலிமை முன்னிலைப்படுத்தப்படுகிறது. 

வாதங்கள் 

அளவுக்கு மீறிய தோற்றமும்,சக்தியும் கொண்ட இவ்வுயிரினம் நவீன விஞ்ஞான பார்வை கொண்டவர்களுக்கும், பழைமையின் பால் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இடையிலான பேசு பொருளாக மாறியுள்ளது. சமூகவலைத்தளங்களில் இரு சாராரும் யாளி குறித்த காணொளிகளையும், பதிவுகளையும் மேற்கொண்ட வண்ணம் இருக்கிறார்கள். 

அழிந்துப்போன ஆதி உயிரினம். 

தமிழ் இனத்தின் தொன்மையானது அதன் பூர்வீகம் மற்றும் வேர் குறித்தான பலவாறான கருத்தாக்கங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. அவ்வாறான கருத்தாக்கங்களுள் சுவாரஸ்யமானது குமரிக்கண்டம். இன்றைய தமிழகம், மடகாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலியா என மூன்று கண்டங்களை இணைத்திருந்த பாரிய நிலப்பரப்பே இந்த குமரிநிலம். இதன் ஆதிக்குடிகளே தமிழர்கள். யாளியின் பிறப்பிடமும் இந்நிலமே என்பது ஒரு சாராரின் கருத்து. 

“வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள 
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி” 

(சிலப்பதிகாரம்)

கர்நாடகத்தின்  பெரும்பாலான பகுதிகளை ஆண்டுவந்த போசளப் பேரரசு அல்லது ஹோய்சாளப் பேரரசுக்குரிய  தலைநகரமாக விளங்கிய பேளூரில் சென்னகேசவர் கோயிலில் காணப்படும் யாளி சிற்பம்.

இவ்வாறாக தொல்தமிழ் நிலமானது கடல்கோளால் அழிந்த போது அதனுடன் இணைந்து யாளிகளும் அழிந்து போனதாக கருதுவோர் உள்ளனர். மேலும் சிலர் குமரி நிலம் அழிந்தும் தமிழ் மக்களுடன் இணைந்து யாளிகளும் தென்னிந்தியாவுக்கு வந்ததாகவும், புதிய நிலத்தையும் அதன்கால நிலையையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் அழிந்து போனதாகவும் கூறுவதுண்டு. சில சங்கப்பாடல்களும் யாளி மிருகம் பற்றி கூறுவதால், யாளி மிருகம் மனிதர்கள் எழுத்தறிவு பெற்று கவியெழுதும் காலத்தில் கூட வாழ்ந்துள்ளதாக ஒரு தரப்பினர்  கருதுவார்கள்.

அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்
பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்
துன் அருங் கானம்

(நற்றிணை)

(இந்தபாடலில் புலியால் தாக்கப்பட்டு இறந்து கிடக்கும் யானையின் உடலை யாளி தன்னுடைய நகங்களால் பற்றியே இழுத்துச்செல்லும் என்று கூறுகிறது. இது யாளியின் ஆற்றலின் அளவை எடுத்துரைக்கிறது)

வேறொரு தரப்பு யாளிகள் டைனோசர் காலத்தில் வாழ்ந்து அவற்றுடன் இணைந்தே அழிந்து போனதாகவும் கருதுகின்றனர். 

அறிவியலின் பார்வையில் யாளி.

கிடைக்கப்பெறும் ஆதாரங்களை ஆய்வு செய்து ஏற்றுக்கொள்ளத்தக்க முடிவுக்கு வருவதே விஞ்ஞானத்தின் அடிப்படை. அந்தவகையில் யாளி என்ற ஒரு மிருகம் உண்மையில் வாழ்ந்திருக்க முடியாது என்பது விஞ்ஞானவாதிகளின் கருத்து. 

இந்நாட்களில் பேசப்படும் குமரிக்கண்டம் என்ற நிலப்பரப்பு என்பது கற்பனையில் உருவானதே தவிர, உண்மையில் அத்தகைய நிலப்பரப்பு ஒன்று கடலுக்கடியில் இல்லை என்பது கிடைக்கப்பெற்ற புவியியல் ஆய்வறிக்கைகளின் படியான முடிவு. ஆகவே இல்லாத ஒரு கண்டத்தில் எவ்வாறு ஒரு உயிரினம் உருவாகி இருக்க முடியும் என்பது விஞ்ஞான தரப்பின் அடிப்படை கேள்வி. 

அடுத்ததாக இந்திய நிலத்தில், மக்களின் கண்களுக்கு புலப்படும் வகையில் வாழ்ந்த இத்தனை பெரிய விலங்கின் புதைப்படிமம் ஒன்றேனும் இன்றுவரையில் கிடைக்கவில்லை என்பதை கொண்டும் யாளி ஒரு கற்பனை மிருகம் என்று கருதுகின்றனர். டைனோசர் காலத்தில் யாளிகள் வாழ்ந்திருக்கக்கூடும் என முன்வைக்கப்படும் வாதமும் பெரிதாக எடுபடவில்லை. காரணம், டைனோசர்கள் ஊர்வன இனத்தை சார்ந்தவை ஆனால் யாளியின் உருவ அமைப்பு பாலூட்டி விலங்கினை ஒத்தது. டைனோசர் ஆதிக்க காலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பின்னரே பாலூட்டி ஆதிக்ககாலம் உருவாகி உள்ளமையால் யாளி ஒரு டைனோசர் என்ற வாதமும் நீடிக்க வாய்ப்பில்லை. 

அச்சத்தின் வெளிப்பாடு மரியாதை

யாளி போலவே உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மொழிக்குழுக்களும், இனங்களும் தங்களுக்கென ஒரு அதிசக்தி பெற்ற உயிரினத்தை கொண்டுள்ளன. சீனத்தில் நீண்ட பாம்புடல் டிராகன், ஐரோப்பிய பல்லிவகை டிராகன், கிரேக்கத்தின் பலதலை டிராகன் ஐட்ரா, நெருப்பில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ், கடலை ஆளும் க்ரேக்கன், எகிப்தின் ஸ்ஃபின்க்ஸ், மேற்கு ஆசியாவின் சென்டோர்ஸ், மாயன் இனத்தின் சிறகுடைய பாம்பு, சிங்கமும் கழுகும் சேர்ந்த க்ரிஃபின், ஓநாய் மனிதன், செல்வத்தால் சபிக்கப்பட்ட லெப்ரகான், பனிசூழ்ந்த மலைகளிலும், துருவங்களிலும் வாழும் யெட்டி, ஒற்றைக்கொம்பு கொண்ட யூனிகோர்ன் மற்றும் சிறகுடைய குதிரை பெகாசஸ் என உலகமெங்கும் சர்ச்சைக்குரிய, இயற்கைக்கு புறம்பான தோற்றமும் ஆற்றலும் கொண்ட உயிரினங்கள் பற்றிய கதைகள் பலகாலமாக பேசப்பட்டு வருகின்றன. 

இவ்வாறான உயிரினங்கள் என்றுமே இரு வகையில் மாத்திரமே அனுகப்படும். ஒன்று மரியாதைக்குரிய வணக்கப்பொருள். மற்றொன்று அச்சமூட்டும் கொல்லுயிர். இந்த இரண்டு அணுகுமுறைக்கும் அடிப்படை ஒன்றே. அச்சம். எவையெல்லாம் தனித்தனியே அச்சத்தை உண்டு பண்ணுகிறதோ, எவையெல்லாம் இணைந்தால் மனிதனின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுமோ அவையெல்லாம் இத்தகைய கற்பனை மிருகங்கள் உருவாக காரணமாகிறது.

மனிதனின் அச்சத்தின் விளைவை கண்டறிய அடிப்படை விஞ்ஞான ஆய்வொன்று நடத்தப்பட்டது. ஆனால் மனிதர்களை கொண்டு அல்ல, நம்முடைய மிக நெருங்கிய சொந்தங்களான குரங்குகளை கொண்டு. டேவிட் E ஜோன்ஸ் எனும் மானுடவியல் அறிஞர், ஆப்ரிக்காவின் தென்பகுதியில் வாழும் வெர்வெட் குரங்குகளில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் ஒரு விடயத்தை கண்டறிந்தார். வெர்வெட் குரங்குகள் பருந்து, பாம்பு மற்றும் சிங்கம் அகிய மூன்று விலங்குகளை அதிகமாக அஞ்சுவதை கவனித்த டேவிட் இந்த மூன்று விலங்குகளின் அம்சத்தையும் ஒன்றாக இணைத்தார். அதன் இறுதிவடிவம் ஏறக்குறைய சீன டிராகன் போல இருந்தது. உலகம் முழுவதும் உருவாகி இருக்கும் இத்தகைய புராண விலங்குகள் மனிதனின் வெவ்வேறுபட்ட அச்சத்தின் இறுதி விளைவாக உருவானதே என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். 

யானை, சிங்கம், குதிரை, முதலை என மனிதனை காட்டிலும் சக்திவாய்ந்த, மனிதனுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய உயிரினங்கள் ஒன்றாக இணைந்தால் என்ன நடக்கும் என்ற எண்ணத்தின் இறுதி விளைவே யாளி. அச்சத்தின் அடையாளமே மரியாதையாக உயர்ந்து கோவிலில் தெய்வங்களை காக்கும் காவல் விலங்கு என்ற வகையில் யாளிகளை உயர்த்தியுள்ளது. 

சிற்பக்கலையில் யாளி

ஆரம்பகால கோயில் அமைப்புகள் செங்கற்களால் ஆனதாக இருந்தது. 7ம் நூற்றாண்டில் பாறைகளை குடைந்து செய்யப்படும் குடைவரை கோயில் முறை உருவானது. 10ம் நூற்றாண்டு முதலே கற்றளி எனப்படும் கருங்கல்லாலான கோயில்கள் கட்டும் முறை அதிகரித்தது. கருங்கல் கோவில் அமைப்புகளின் ஆரம்பமே தென்னிந்திய சிற்பக்கலையில் புதிய பரிணாம வளர்ச்சி உண்டாக காரணமாக இருந்தது. ஆரம்பகால கற்றளிகளிலோ, குடைவரை கோயில்களிலோ யாளி குறித்தான விடயங்கள் கிடைக்கப்பெறவில்லை. பாரம்பரிய சிற்ப சாஸ்திர நூல்களிலும் இதற்கான குறிப்புகள் இல்லை. 

மதுரைக் கோவிலின் ஆயிரம் கால் மண்டபம்.

நாயக்கர் ஆட்சியை தொடர்ந்தே தென்னகத்தின் கோயில்களில் யாளி சிற்பத்துக்கான முக்கியத்துவம் அதிகரித்தது. மதுரையில் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள யாளி சிற்பங்கள் மிகப்பிரசித்தி பெற்றவை. தமிழகம் முழுவதிலும் உள்ள பல முன்னணி ஆலயங்களில் இன்று காணப்படும் யாளியுடன் கூடிய தூண்கள் பெரும்பாலும் 16ம் நூற்றாண்டு அளவில் அல்லது அதற்கு பின்னர் உருவானவையாகவே இருக்கும். தமிழகத்தை தாண்டி கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உருவான கோயில்களில் கூட யாளியின் சிற்பங்கள் அதிகளவு கிடைத்துள்ளன. முக்கியமாக பழைய விஜயநகர பேரரசின் தலைநகரான ஹம்பியில் உள்ள கோவில் சிதைவுகளில் பிரம்மிக்கவைக்கும் வகையிலான யாளி சிற்பங்கள் உள்ளன. பெரும்பாலும் சிம்மயாளி அல்லது கஜயாளியே பயன்படுத்தப்பட்டாலும் மீனாட்சி அம்மன் கோவிலில் நாய் யாளியும், விஜயநகரத்தின் கிருஷ்ணன் கோவிலில் எலி யாளியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

ஹம்பி கோவில் தோற்றம். பட உதவி: tamilhindu.com

இந்தியா மட்டுமில்லாது இலங்கையின் சிற்பக்கலையிலும் கூட யாளியின் தாக்கம் உள்ளது. 10ம் நூற்றாண்டில் இருந்தே இலங்கையின் வடக்கு பகுதியில் உருவாகி வலுப்பெற்று வந்த சோழ அரசின் தாக்கத்தால் இலங்கையில் தொடர்ச்சியாக பல தமிழ் குடியேற்றங்கள் உருவானது. 13ம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரையில் இலங்கை பல்வேறு சிறு அரசுகளாக பிரிந்து இருந்தமையால் வெவ்வேறு சிற்பக்கலை அமைப்புகளும் உண்டாகியது. தமிழ்த்தாக்கத்தின் விளைவால் விகாரை முதலியவற்றின் வாயிலின் இரு புறமும் யாளிகள் வடிக்கப்பட்டன. தென்னிந்திய சிற்பத்தில் போல இல்லாமல், இலங்கையின் யாளி சிற்பம் நான்கு கால்களையும் நிலத்தில் பதித்தவாறும் தலையை பின்பக்கமாக திருப்பிய படியும் இருப்பது இலங்கைக்கு உரிய தனித்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. 

கற்பனையோ, நிதர்சனமோ யாளி என்பது சிற்பக்கலை என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒரு கணம் பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய சிறப்பு மிகுந்த ஒரு அம்சமாகும். 

Related Articles