சிவகங்கை மண்ணின் வீரப் பெருமைகளையும் அரசி வேலு நாச்சியாரின், தன் நாட்டை மீட்க வேண்டுமென்ற வேட்கை மற்றும் அவருக்கு துணையிருந்தவர்களைப் பற்றிய முந்தைய கட்டுரையை வாசித்துவிட்டு வந்தால், இந்த கட்டுரை மேலும் விறுவிறுப்பாக இருக்கும்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான வீர முழக்கத்தை முதலில் உரைத்தவர் வீரர் புலித்தேவன் அவரை தொடர்ந்து, திப்பு சுல்தான், அவர்களுக்கு அடுத்தபடியாக அதே துணிச்சல் கொண்டவர்கள் மருதுபாண்டியர்கள் தான்.
ஆங்கிலேயரின் அதிநவீன ஆயுதத்திற்கு முன்னால் வேல்கம்பு, வீச்சரிவாள், மட்டுமே ஆயுதமாக வைத்திருக்கும் ஒருவனுக்கு ஆங்கிலேயரை “போருக்கு வா” என்று கேட்க தைரியம் வேண்டும். அந்த தைரியம் திப்பு சுல்தானுக்கு அடுத்தபடியாக மருபாண்டியர்களுக்கு மட்டும் தான் இருந்தது.
மருதுபாண்டியர் என்றால் வேலு நாச்சியாருக்கு துணையாக இருந்த படைத்தளபதிகளான மருது சகோதரர்களையே சாரும். இன்றும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள திருப்பத்தூரின் பேருந்து நிலையத்திற்கு எதிரில் அடையாளமாக மருதுபாண்டியரை தூக்கிலிடப்பட்ட இடம் என்று தனியாக சட்டம் கட்டிய ஒரு இடம் இருக்கும். அங்கு நமது காட்சிக்கு தெரிவது ஒரு கம்பமும், மருது பாண்டியரை தூக்கிலிடப்பட்ட இடம் என்ற கல்வெட்டு மட்டும் தான்.
அங்கு தான் மருது சகோதரர்கள் இருவரும் தூக்கிலிடப்பட்டனர். அதனை மையமாகக் கொண்டு தான் சிவகங்கை நகரத்தின் நகராட்சியே நகரத்தை வடிவமைத்துள்ளது.
பெரிய மருதுவின் மரண வாக்குமூலம்
“என்னுடைய வாரிசுகளைக் கம்பெனியார்களாவது எனக்கு விரோதிகளாவது யாதோர் இம்சையும் செய்யாமல் இருக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். முருகன் துணையாகவும் ஆகாசவாணி பூமாதேவி சாட்சியாகவும் நான் என் கழுத்தில் கயிறு போட்டுக் கொள்கிறேன். மேலே சொன்னபடி நீங்கள் கத்தியைப்போட்டுச் சத்தியம் செய்து கொடுத்ததை நான் நேரில் பார்த்துக்கொண்டேன்.”
இப்படிக்கு ஒப்பம் பெரிய மருது சேர்வை
மருது சகோதரர்களை அடக்கம் செய்ததும் நாம் இதுவரை கேட்டிராத முறையில் தான் நடைபெற்றது. அதாவது, மருதிருவரின் இறுதி ஆசைக்கிணங்க தூக்கிலிடப்பட்டு இறந்த இருவரின் தலைகளை காளையார் கோயிலிலும், இருவரின் முண்டத்தை (உடல்களை) திருப்பத்தூரிலும் தனித் தனியாக அடக்கம் செய்திருக்கின்றனர்.
காளையார் கோயிலிலிருந்து 68 கி.மீ தொலைவில் நரிக்குடி என்னும் கிராமத்தில் உள்ள சத்திர வளாகத்தில் மருதிருவருக்கான சிலையெடுத்து மக்கள் இன்றும் வழிபட்டு வருகின்றனர். அந்த ஊர் மக்களின் பார்வையில் இவர்கள் கடவுளாகத் தெரிந்தாலும் உண்மையில் அவர்கள் தமிழ் மண்ணின் மூத்த சுதந்திர போராட்ட வீரர்களில் இருவர் என்பதையும் நாம் மறவாது இருக்க வேண்டும்.
மருதிருவர்களுக்கு சிலை எழுப்பத்தோன்றிய மக்களுக்கு, விவசாயிகளின் நலன் கருதி மருதிருவர்கள் வெட்டிய பல குளங்களையும், ஊரணிகளையும் காக்க தவறியது, மக்களின் அலட்சியம் தான் என்று கூறுவதை விட வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வேலு நாச்சியாரோடு இணைந்து மன்னன் ஹைதர் அலி கொடுத்து உதவிய படைகளைக்கொண்டு சிவகங்கையை மீட்க போரிட்ட காலம் தொட்டு உண்மையிலேயே மக்கள் நலம் கருதி தான் சிவகங்கை நாட்டின் சட்டதிட்டங்களை ஏற்றியதோடு, நடைமுறைப்படுத்தினர். அது மட்டுமல்லாது ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய முதல் இரட்டை அரசர்கள் என்ற பெயரைப் பெற்றனர்.
அரசாட்சி
இவர்களின் ராஜ தந்திரத்தால் தான் சிவகங்கையின் அரசர்கள் ஆனார்கள் என்ற கருத்து ஒரு பக்கம் இருந்தாலும், அரசர்களாக இவர்கள் ஆற்றிய பணி என்று பார்க்கிறபோது, மொழி, கலை என்று அனைத்திற்கும் சிறப்பு செய்திருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.
குன்றக்குடியில் அரண்மனை ஒன்றை கட்டியுள்ளனர். மருது பாண்டியர் அவையில் புலவர் குழு ஒன்றை அமைத்து, தமிழ்ச்சங்கம் மூலம் தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகின்றது. மயூரி கோவை என்ற கவிதை நூல் அரங்கேற்றப்பட்டுள்ளது.
மருது சகோதரர்கள் கலைகளை வளர்த்ததாகவும், அதற்கு சான்றாக காளையார் கோயிலைச் சுற்றியுள்ள சிறு கோயில்களின் சிற்பக்கலையையும், திருக்கோயில் திருப்பணியையும் குறிப்பிடுகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு தேர் வழங்கியுள்ளார்கள். காளையார் கோயில் அருகே உள்ள சருகனியில் தேர் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
மருதிருவரை நெருங்கிய மரணம்
மருதிருவரின் மரணத்தருணம் தொடங்கியதே கர்னல் ஸ்டிரே காளையார் கோயில் ஊரை கைப்பற்றிய நாழிகையில் தான். சரியாக 1.10.1801 அன்று மும்முனைத் தாக்குதலில் காளையார் கோயில் விழுந்தது. அதாவது முற்றிலுமாக காளையார் கோயிலை ஆங்கிலேய ராணுவ கர்னல் ஸ்டிரே கைப்பற்றியதே மருதிருவரை குறிவைத்து தான். ஆனால் மருதுபாண்டியர் இருவரும் அவர் கையில் கிடைக்கவில்லை. அடுத்தக்கட்டமாக மருது பாண்டியர்களுக்கு வேண்டியவர், உறவினர்கள் என தேடித்தேடிக் கொலை செய்யப்பட்டனர். காளையார் கோயிலிலிருந்து வெளியேறிய மருதிருவர்கள் தனது படை வீரர்களோடு காடுகளில் மறைந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது. நிச்சயம் அவர்கள் இருவருக்கும் பயம் தொற்றிக்கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் ஏன் மறைந்து வாழ வேண்டிய நிலை.
கர்னல் ஸ்டிரேவின் படையும் மருது பாண்டியர்களை தேடும் பொருட்டே செயல்பட்டனர். மருது பாண்டியர்களை கண்டுபிடித்துக் கொடுத்தால் ஏராளமான பொற்காசுகளும், அரசாங்கத்தில் பல நல்ல பதவிகளும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தனர். மருது பாண்டியரின் படை வீரர்களில் சிலர் பரிசுக்கும், அரசாங்கப்பதவிக்கும் ஆசைப்பட்டு மருது பாண்டியரை ஆங்கிலேயருக்குக் காட்டிக்கொடுக்க முற்பட்டது சோகக்கதை தான்.
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
காளையார்மங்களம் கிராமத்தின் காடுகளில் மறைந்திருக்கின்றார்கள் மருதுபாண்டியர்கள் என்ற செய்தி, ஒரு ஒற்றன் மூலம் தெரிய, பரங்கிப் படைகள் பாய்ந்தன. ஆங்கிலேயர்களின் பெரும்படைக்கும் எஞ்சி இருந்த மருது படைக்கும் வாழ்வா, சாவா என்ற உணர்வோடு கூடிய போர் நடந்தது. பல நாட்கள் நல்ல தூக்கம்,உணவு இல்லாததால் காடு மேடு என்று ஓடியும் ஒளிந்தும் திரிந்ததால் மருது பாண்டியர்களின் உடல்கள் களைத்துப் போயின. தொடையில் குண்டடிப்பட்ட நிலையில் பெரிய மருதுவை மேஜர் அகன்யூ கைது செய்தார். சின்னமருதுவை காட்டிக் கொடுத்ததும் அவரிடம் முன்பு வேலைக்காரனாக இருந்த கரடிக் கறுத்தான் என்பவன் தான். நான்கு நாட்களுக்குப் பிறகு இருவரையும் 24.10.1801 அன்று மேஜர் அகன்யூ திருப்பத்தூர் கோட்டையில் தற்பொழுது பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள இடத்தில் முச்சந்தியில் இருக்கும் புளியமரத்தில் தூக்கிலிட்டனர். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்த போது, ஆங்கிலேயர்களின் பெருமைக்குரிய வெற்றிகளில் ஒன்றாக இதை அவர்கள் கருதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக மருதுவின் வீரர்களையும் சேர்த்து 500 பேர் தூக்கிலிடப்பட்டார்கள். இறந்தவர்களின் உடலை தலை வேறு உடல் வேறாக பிரித்து உடலை திருப்பத்தூர் வீதிகளில் உலவ விட்டுள்ளார்கள். தலைகளை நகர வீதிகளில் வேல் கம்புகளில் செருகி பார்வைக்கு வைத்துள்ளார்கள். நடந்த நிகழ்வுகளால் திருப்பத்தூரில் மக்கள் வெளிவரவே பயமுற்று இருந்துள்ளனர்.
காப்டன் பிளாக்பர்ன் தலைமையில் சாகோட்டை, எலவன் கோட்டை வழியாக கிழக்குப் பகுதியில் இராமநாதபுரத்திலிருந்து வருகை தரும் கூலிப்படையுடன் 30.9.1801 அன்று ஆறு வழிகளிலும் எழுபத்து இரண்டு மக்கள் தலைவர்களையும் நாடு கடத்த உத்திரவிட்டனர். ஈராயிரம் மைல் தொலைவில் உள்ள பெங்கோலோன் என்ற தீவில் கைதிகளாக வைத்திருக்க முடிவு செய்தனர். அதற்கு பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவு என பெயரிட்டனர்.
ஆறு வார காலக் கப்பல் பயணத்தில் 11.12.1802 ஆம் தேதி தூத்துக்குடி கொண்டு போய் சேர்க்கப்பட்டன. இவர்கள் அனைவரும் எண்பது நாட்கள் கையில் விலங்கிடப்பட்டவர்களாக கப்பலுக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடந்ததால் கப்பலைவிட்டு வெளியே காலடி வைத்து இறங்கி வருவதே அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அவர்களது உடல்நிலை மோசமாகவும், தெம்பு இல்லாதவர்களாகவும் காணப்பட்டனர். அதனால் வரும் வழியிலேயே மூவர் இறந்துவிட்டனர்.
மாவீரன் வேங்கை பெரிய உடையத்தேவர் அதே கப்பலில் கொண்டு செல்லப்பட்டாலும், அங்கிருந்து சுமத்ரா தீவிலுள்ள பெங்கோலன் சிறைக்கு மாற்றப்பட்டு அங்குள்ள மால்பரோ கோட்டையில் தனிக் கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டார்.
மருது சகோதரர்களை தூக்கிலிட்டதற்கு ஆங்கிலேயர்கள் கூறும் முக்கிய காரணம், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்தது தான்.
மருது சகோதரர்கள் மரணித்த கதை கணத்தை இதயத்தோடு சில ஆங்கிலேயர்களே தனது டைரி குறிப்புகளில் தெரிவித்திருக்கின்றனர்.
கர்னல் ஜேம்ஸ் வேல்ஸ் தமது நினைவுகளில் ஓரிடத்தில் மருது சகோதரர்களின் வீழ்ச்சியைப் பற்றி கூறுகையில் சில மாதங்களுக்கு முன் இதே வழியாகச் சென்று வெள்ளை மருதுவின் விருந்தாளியாக இருந்துவிட்டு அதே பிரதேசத்தில் அவரது எதிரியாக மீண்டும் என்பதை நான் சிறிதளவுகூட அறியாததேயாகும் என்று தெரிவித்திருந்தார். மேலும் ஆங்கிலேயர்களை அனுசரித்து ஆட்சி செய்யாத காரணத்தினாலும் மருது பாண்டியர்கள் குறி வைக்கப்பட்டனர் என்று கூறியுள்ளார்.
Web Title: Hangdown Story Of Maruthu Pandiyar, Tamil Article
Featured Representative Image Credit: youtube