உலகின் முதல் விமானம், முதல் டிவி, செல்போன் இப்படி முதன்முறை அப்படிங்கறது ரொம்ப விசேசமானது. அதே மாதரி உலகின் முதல் பேரரசன் யார் ? எந்த நாட்டுக்காரர்.
ஏதோ டி.என்.பி.எஸ்.சி. கேள்வின்னு நினைக்க வேண்டாம். உலகத்தின் மிக பழமையான வரலாற்று விசயம். வரலாறு போராடிக்குமே. இல்ல இது ரொம்ப சுவாரஸ்யமான, வியப்பூட்டக் கூடிய வரலாறு.
உலகத்தின் முதல் நாகரிகம், முதல் அரசன், முதல் பேரரசன், உலகின் முதல் சட்டங்கள் இப்படி பல ஆச்சரியமான தகவல் இருக்கு.
இன்னைக்கு உலகத்துல ரொம்பக் கொடூரமான இடம் , பாவப்பட்ட மனுசங்க வாழ்கிற இடம் பாரசீக வளைகுடா பகுதி. எப்ப எங்க குண்டு வைப்பாங்களோ, தாக்குதல் நடத்துவாங்களோ அப்படின்னு பயப்பட வைக்கிற ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைமை இடமாக இருக்கிற சிரியா, ஈராக் உள்ளடக்கியது. பாரசீக வளைகுடா பகுதி. தினம், தினம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்துகிற போர் காரணமா 50 ,000க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிற இடம். பிழைக்க வழி இல்லாமல் கடல்வழியா தப்பிப்போகும் போது பலியான லட்சக்கணக்கான மக்கள். இப்படி ரொம்பக் கொடூரமான இடத்தில்தான் முதல் நாகரிகம் தொடங்கியது என்று சொன்னால் நம்ப முடியாதுதான். ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் உறுதியாக இங்குதான் என்கிறார்கள்.
முதல் ஊரின் பெயரே ஊர்….!!!!
துருக்கி துவங்கி சிரியா, ஈராக் வழியாக ஓடும் யூப்ரோடீஸ், டைக்ரிஸ் என்ற உலகின் மிகப் பிரம்மாண்டமான நதிகள் பாரசீக வளைகுடா பகுதியில் இணைகின்றன. இந்த இரண்டு நதிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் நதிகளின் கரையில் முதல் நாகரிகம் தோன்றியது. இங்குதான் மெஸபடோமியா என்ற நாகரிகம் பாபிலோனியாவில் தோன்றியது.
2 லட்சம் வருடங்களுக்கு முன்தோன்றி மனிதர்கள் நடையாய் நடந்து அலுத்துப் போனார்கள். ஆடு, மாடுகளை மேய்க்கக் கற்றுக்கொண்ட பிறகு விவசாயம் செய்ய நல்லதோர் இடங்களைத் தேடி அழைந்தார்கள். அப்போது யூப்ரோடீஸ், டைக்ரிஸ் நதிகளின் வளமையான வண்டல்மண் பிரதேசத்தில் நிரந்தரமாகத் தங்கித் தங்கிச் சிறு, சிறு குடியிருப்புகளை உருவாக்கினார்கள். (இங்கு மட்டுமல்ல உலகின் எல்லா இடத்திலும் இப்படித்தான் ஊர்கள் , நகரங்கள் உருவாகின . வைகை நதிகரையை ஆதாரமாகக் கொண்டு பாண்டியர்கள் நகரங்களை உருவாக்கினார்கள்) அப்படி அவர்கள் உருவாக்கிய முதல் ஊரின் பெயரே “ஊர் ” என்று அழைக்கப்பட்டது. நாம் தமிழில் என்ன அர்த்தத்தில் சொல்கிறோமோ அதே அர்த்தத்தில் பாரசீக வளைகுடாவில்… ஆச்சர்யம்தான்.
பாபிலோனிய நாகரிகமும் முதல் அரசனும்…
முதல் ஊர் ஜனத்தொகை அதிகபட்சமா 500 பேர் இருப்பாங்க. அன்றைக்கு உலகின் ஒட்டுமொத்த ஜனத்தொகையே 1 கோடிபேர். முதல் நகரம் தோன்றிய போது 5 கோடி உலக ஜனத்தொகை (தமிழகத்தின் ஜனத்தொகை இப்போ 6 கோடியை நெருக்கி விட்டது). கி.மு. 2000ல் 9 கோடிபேர். இயேசுநாதர் பிறந்தபோது 30 கோடி பேர் உலகம் முழுவதும் வாழ்ந்தார்கள். இன்றைக்கு 600 கோடி அதற்கு மேலும் இருக்கலாம்.
பாபிலோனியாவில் ஊர்கள் சற்று பெரியதாகி நகரங்களாக மாறின. விவசாயம் செழிக்கத் தொடங்கியதும் மக்கள் தொகை பெருகத் தொடங்கி 50,000 பேர் கொண்ட நகரங்கள் அதிகமாயின. நகரத்திற்கு ஓரு தலைவன் உருவானான். நாட்டாமை, ஜமீன்தார், பஞ்சாயத்து தலைவர்கள் மாதிரியான தலைவர்கள். இவர்களுக்கு எல்லாம் தலைவனாக முதல் அரசனாக ஸார்கான் ஆட்சி செய்தான். கிட்டத்தட்ட 55 (கி.மு. 2334 முதல் கி.மு. 2279 வரை) ஆண்டுகள். இதே போல மேலும் பல நகரங்கள். அரசர்கள் உருவாகத் தொடங்கினார்கள்.
கிராமங்கள் நகரமாக உருவாகத் தொடங்கியபோது நாகரிகமும் வளரத் தொடங்கியது. (அதென்ன நாகரிக வளர்ச்சி – லேண்ட்லைன் போன் – செல்போனா மாறியது நாகரிக வளர்ச்சி தானே) பாபிலோனியர்கள் உலகிற்கு பல புதிய கண்டுபிடிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
பெரிய பாலம் கட்டும்போது ஒருபுறத்தில் துவங்கி மறுபுறத்தில் முடிய வேண்டும். இடைபட்ட பகுதியில் பாலம் வளைந்து செல்ல வேண்டும். இதற்கு வளைந்த கட்டிடங்கள் கட்டும் தொழில்நுட்பம் வேண்டும். இன்றைக்கு இது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இதை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் பாபிலோனியர்கள். சக்கரம் கண்டிபிடித்தார்கள். போர் புறியக் கூர்மையான ஈட்டிகள். போர் வீரர்களுக்கு யூனிபாம்கள். பல படிகளைக் கடந்து கடவுளை தரிசிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கோயில் கட்டிடக் கலையை உருவாக்கினார்கள். இப்படி இன்னும் பல… சொல்லிக்கொண்டே போகலாம்.
முதல் பேரரசனும்…சட்டங்களும்:
அரசர்களிலிருந்து பேரரசன் தோன்றுவது இயற்கையான நிகழ்வுதான். பாரசீக வளைகுடா பகுதியில் உருவாகி வந்த அரசர்களிலிருந்து பாபிலோனியாவில் பிறந்த (கி.மு 1792- 1750) ஹமுராபி பேரரசனாக மாறினான். கி.மு.1792 ல் ஹமுராபி அவர் தந்தை, சின்-முபாளியட்டிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றி பாபிலோன் நகரின் முதல் அமோரிட் வம்ச அரசரானார். பக்கத்து நாடுகள் அவர்களுக்குள் ஒருவரை அடித்து கொண்டார்கள். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர் ஒன்றன் பின் ஒன்றாக நாடுகளை கைபற்றி கி.மு.1763 ல் மோசப்டோபிய சமவெளி முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். ஜொலிக்கும் கனவுகளும், கற்பனை திறனும் ,கண்டிப்பும் கொண்ட தலைவனாக பேரரசனாக ஹமுராபி திகழ்ந்தார். நாடுகளைப் பற்றியதால் மட்டுமல்ல அவர் உருவாக்கிய சட்டங்களே ஹமுராபியை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னும் அவரை நினைக்க வைக்கிறது.
1901ல் பாபிலோனிய பகுதியில் ஆய்வு செய்த ஜேக்கஸ் த மார்டின் என்பவர் 7 அடி நீளமுள்ள கல்வெட்டை கண்டுபிடித்தார். அதன் மேல்பகுயில் சட்டங்களை உருவாக்கும் ஹமுராபி சிலையும், கீழ்ப்பகுதியில் சட்டங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இப்போது பிரான்ஸில் உள்ள லூவர் மியூசியத்தில் இந்த கல்வெட்டு உள்ளது.
ஹமுராபி மறைந்து 1500 ஆண்டுகளுக்கு பிறகுதான் அலெக்சாண்டர், புத்தர், சிசர், இயேசு, அசோகர் சக்கரவர்த்தி பிறந்தார்கள்.
கண்ணுக்கு கண்… பல்லுக்கு பல்..
கொலை, கற்பழிப்பு போன்று கொடூரமான செய்திகளை செய்தியாக படிக்கும் போது… அவனையெல்லாம் நிக்கவைச்சு சுடனும், கண்ணைத் தோண்டிவிடனும், அறுத்து விட்டுறனும் இப்படி ஆத்திரத்தில் புலம்பியிருப்போம். இப்படி சாதாரண மக்களின் மனநிலையிலிருந்து ஆயிரக்கணக்கான சட்டங்களை ஹமுராபி உருவாக்கினார். அவற்றில் சில.
- ஒருவரை நாம் அடித்தால் கூட அபராதம் உண்டு.
- அடிக்கும்போது பல் உடைந்துபோனால், அடித்தவருக்கு பல் உடைக்கப்படும்.
- கடத்தல், கற்பழிப்பு, குழந்தையோடு உடலுறவு கொள்ளுதல், வழிப்பறிகொள்ளை, லஞ்சம் ,போர்களத்திலுருந்து தப்பி ஓடுதல், திருட்டு, இவற்றிக்கெல்லாம் ஓரே தண்டனை மரணம். (இந்தியாவுல பாதிபேரு செத்தானுங்க)
- பாபிலோனியர்கள் பீர் விரும்பி குடிப்பார்களாம்…பீர் தரமற்றதாகவோ, கலப்படம் செய்தோ இருந்தால் தூக்குதண்டனை. (குடிமகன்களுக்குதேவையான சட்டம்).
- ஆப்ரேசன் செய்து நோயாளி பாதிக்கப்பட்டாலோ, இறந்து போனாலோ டாக்டரின் கைவிரல்கள் வெட்டப்படும். (சூப்பர் சட்டம்). அந்த காலத்திலேயே கண் மருத்துவமனை பாபிலோனியாவில் இருந்ததாம்.
- தொழிலாளிக்கு எவ்வளவு சம்பளம், லீவு எத்தனை நாளைக்கு . ஆஸ்பத்திரியில் பணக்காரர்களுக்கு எவ்வளவு பீஸ், ஏழைகளுக்கு எவ்வளவு பீஸ் வாங்க வேண்டும் என்பது உட்பட சட்டம் எழுதினார் ஹமுராபி.
- இருப்பதிலேயே எனக்கு பிடித்தமான ஆச்சர்யமான சட்டம்… ஒருவீட்டில் கொள்ளை போகிறது. குறிப்பிட்ட நாளுக்குள் திருடர்களைப் போலீஸால் கண்டுபிடிக்க முடியாவிட்டால் போலீஸ்காரர் வேலை நீக்கம் செய்யப்படுவார். மேலும் எவ்வளவு திருடு போனதோ அந்த தொகையை அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கவேண்டும். உலகத்தின் பேரரசன் எப்படியெல்லாம் சட்டம் போட்டுருக்கார் பார்த்திங்களா? இன்னைக்கு இப்படி சட்டம் போட முடியுமா?