Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இன்றைய தலைமுறை குழந்தைகள் மறந்துபோன அன்றைய விளையாட்டுகள்

நமது வாழ்வில் திரும்பப்பெறவே முடியாத பல விஷயங்களில் முதன்மையானதென்றால் நம் குழந்தை பருவத்தினைச் சொல்லலாம். இன்று யாரவது நம்மிடம் மீண்டும் குழந்தை பருவத்திற்கு செல்லத்தயாரா என்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு புன்னகைத்துத் தலையாட்டுவோம், காரணம் அந்த அளவுக்கு சுட்டித்தனங்கள் கொட்டிக்கிடக்கும் கொண்டாட்டப்பருவமது. பட்டப்பகலில்,உச்சி வெளியில், மண் புழுதியை பூசிக்கொண்டு, குட்டை நீர் குடித்து, கொய்யாப்பழம் கடித்து, நொண்டியும் பல்லாங்குழியும் விளையாடிய காலமெல்லாம்  திரும்பப்பெற முடியாத நினைவுகள். குறிப்பாக தமிழர்கள் ஆரம்பகாலம் தொட்டே தங்கள் குழந்தைகளின் உடல், மூளை மற்றும் மனதிற்கு ஆரோக்கியம் தரும் பல விளையாட்டுகளை சொல்லிக்கொடுத்து வளர்த்ததில் வல்லவர்கள் என்று மார்தட்டி மெச்சிக்கொள்ளலாம்.

தொண்ணூறுகளில் தொழிநுட்பம் பிரபலமடையத் தொடங்கும் வரை தமிழரின் பல பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடப்பட்டுக்கொண்டே இருந்தன. காலப்போக்கில் தொழிநுட்பம் வளர வளர குழந்தைகளும் தங்களை ஆன்ட்ராய்ட் யுகத்திற்குள் நகர்த்திக்கொண்டார்கள். இதில் 80களிலும் 90 களின் தொடக்கத்திலும் பிறந்த குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள். அப்படி இன்றைய பப்ஜி குழந்தைகள் அறிந்திடாத  சில தமிழ் விளையாட்டுகளை இந்தப்பதிவு உங்களுக்கு கொஞ்சமேனும் நியாபகப்படுத்தும்.   

பல்லாங்குழி

பல்லாங்குழி விளையாடும் சிறுமிகள்
படஉதவி – indianexpress.com

மரத்தாலான பதினான்கு குழிகளைக் கொண்ட இரண்டு இணைப்பலகைகள் தான் இந்தப் பல்லாங்குழி. இது பரலாடும் குழி, பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்றும் பாண்டி விளையாட்டு என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் சீதைப் பாண்டி என்பது ஒருவர் மட்டுமே தனித்து ஆடும் பல்லாங்குழி விளையாட்டு ஆகும். சிலமயங்களில் பலகைக்கு பதிலாக சிறிய குழிகளை மண்ணில் தோண்டியும் விளையாடுவதுண்டு. இப்பல்லாங்குழியானது பெரும்பாலும் பெண்களுக்கான விளையாட்டு என்றே சொல்லப்படுகின்றது. புளியங்கொட்டைகள்,சோழிகள் அல்லது கற்களைக் கொண்டு இதனை விளையாடுகின்றனர். 

இந்த பதினான்கு குழிகளில் ஒவ்வொருவருக்கும் ஏழு குழிகள் வீதம் பிரித்துக் கொண்டு ஆட வேண்டும். குழிகள் ஒவ்வொன்றிலும் ஐந்து ஐந்து காய்கள் காணப்படும். முதலில் ஆடுபவர் ஏதாவதொரு குழியில் உள்ள காய்களை எடுத்துப் பிரித்து விளையாடத் தொடங்குவார். அவ்வாறு பிரித்து விளையாடி வரும்போது குழி வெறுமையாக இருந்தால் அந்தக் குழியைத் துடைத்து அடுத்த குழியிலுள்ள காய்களை எடுத்துக் கொள்வார். இதனைத் துடைத்து எடுத்தல் என்று கூறுவர். பின் அடுத்தவர் ஆடத் தொடங்குவார். அவரவர் பக்கத்தில் ஒரு குழியில் நான்கு இருந்தால் அதையும் ‘பசு’ எனச் சொல்லித் தனதாக்க வேண்டும்.

பல்லாங்குழிப் பலகை
படஉதவி – twugi.com

இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் ஆடி கொண்டு வரும்போது காய்கள் அனைத்தும் இருதரப்பிலும் ஆடுபவர்கள் வென்றடுத்தபின் முதல் சுற்று முடிகிறது. இவ்வாறு மூளைக்கு வேலை தரும் இந்த விளையாட்டானது கிட்டத்தட்ட 1200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் என சமீபத்தில் தமிழ்நாட்டில் கிடைக்கப்பெற்ற பல்லாங்குழிப் பலகையொன்றை ஆதாரமாக வைத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆரம்பகால திருமணங்களின் போது பெண் வீட்டு சீதனத்தில் இப்பல்லாங்குழி பகலையானது தவறாமல் இடம்பெறும் முதன்மைப் பொருளாகும். கூடவே பெண்கள் பூப்பெய்திய பொழுதுகளிலும், கற்பகாலங்களிலும் தங்கள் சோர்வை போக்கிக்கொள்ள பல்லாங்குழி துணையிருந்துள்ளது. அத்தகு பாரம்பரிய விளையாட்டானது இன்றளவு நடைமுறையில் கொஞ்சமேனும் இல்லையென்பது வருந்தத்தக்கதே. 

நொண்டி விளையாட்டு 

நொண்டி விளையாட்டும் குழந்தைகள்
படஉதவி – twitter.com

பல்லாங்குழியினைப் போல் நொண்டி விளையாட்டும் மிக பழமையானதே. நிலத்தில் சதுரங்கள் அல்லது வட்டம் வரைந்து விளையாடப்படும் உற்சாகமானதொரு விளையாட்டு. ஒற்றைக்காலில் தவ்வியப்படி விளையாடப்படும் நொண்டியானது, குழந்தைகளுக்கு சிறந்த உடற்பயிற்சி விளையாட்டாகும். இது குழந்தைகளின் உடலுக்கு ஒருவித புத்துணர்ச்சியை அளித்து, அவர்களின் சோம்பேறித்தனத்தை குறைக்க உதவுகிறது. மேலும் அவர்கள் சுறுசுறுப்புடன் இருப்பதற்கு கூட நொண்டி நல்லதொரு விளையாட்டு.  ஆரம்பகாலக் குழந்தைகள், நிலத்தில் வெறும் கால்களில் குதித்து விளையாடும் போது அவர்களின் கால்களுக்கு இரத்த ஓட்டம் சீராகப் பரவும். இவ்வாறான விளையாட்டுகளும் கூட அக்காலத்துக் குழந்தைகள் நோய் நொடி இன்று வாழத் துணைசெய்துள்ளது எனலாம்.

இன்று சில மருத்துவமனைகளில், நிலத்தில் சிறிய ஜல்லிக் கற்களைப் போட்டு வெறும் காலில் இரத்த அழுத்தம், சீனி போன்ற நோய்கள் உள்ள நோயாளர்களை அதன் மேல் நடக்கச் சொல்கின்றனர். இதனால் இரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவை குறைந்து உடலுக்கு உற்சாகமானதொரு உணர்வு கிடைக்கின்றது என நிரூபிக்கப்பட்டுள்ளதை இதில் குறிப்பிட்டாக வேண்டும். 

கிட்டிப் புள்ளு

கிட்டிப் புள்ளு விளையாடும் சிறுவர்கள்
படஉதவி – sportzcraazy.com

தமிழர்களின் விளையாட்டுகளில் மிகப்பிரபலமான ஒன்று தான் கிட்டிப் புள்ளு. நிறுபிக்கப்படவில்லை என்றாலும் கிட்டிப் புள்ளு தான் இன்றைய கிரிக்கெட் விளையாட்டிற்கு மூலம் என்று பலராலும் நம்பப்படுகின்றது. இன்றைய காலத்து சிறுவர்கள் கொஞ்சம் கூட அறிந்திடாத அன்றைய காலத்து சிறுவர்களின் அன்றாட விளையாட்டு இந்த கிட்டிப்புள்ளு. இது கிட்டிதக்கா, கில்லி தாண்டா, குச்சிக்கம்பு, சிங்காங்குச்சி, குச்சி அடித்தல், எனப் பலபெயர்களில் அழைக்கப்படுகிறது. கிரிக்கெட்டின் பிரதான விளையாட்டுக்கருவியான பெட் மற்றும் போல் போன்று கிட்டி புள்ளிலும் கிட்டிபுள், கிட்டிகோள் என இரு கருவிகள் காணப்பட்டது. அவை ஒன்றும் விலைகொடுத்து வாங்கப்பட்ட வேண்டிய கருவிகள் அல்ல, அவைகள் மரத்திலில் இருந்து வெட்டப்பட்ட வெறும் குச்சிக் கிளைகள் தான். இந்த குச்சிக் கிளைகளானது மூன்று விரல் தடிமனில் ஒன்றும், ஒரு விரல் தடிமனில் ஒன்றும் வெட்டி எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதாவது  கிட்டிபுள் குச்சி 20 சென்டிமீட்டர் நீளத்திலும்  கிட்டிகோள் குச்சி 50 சென்டிமீட்டர் நீளத்தில் வெட்டி எடுத்து விளையாடுவார்கள்.

மண் தரையில் ஒரு சிறியதொரு குழியைத் தோண்டி அதன் மேல் புள்ளு குச்சியை வைத்து, பின்னர் கிட்டி குச்சியை புள்ளுக்குச்சிக்கு அடியில் வைத்து தூக்கி அடிக்க வேண்டும். அடிக்கப்பட்ட புள்ளுக்குச்சியை குழுவில் உள்ள மற்றவர்கள் கைகளாலோ அல்லது ஏதேனுமொரு துணியாலோ பிடிக்கவேண்டும். புள்ளு குச்சியை பிடித்து விட்டால் விளையாடிய நபர் வெளியேறி அடுத்த நபர் ஆட்டத்தை தொடரலாம்.  இவ்விளையாட்டிற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களும் அவசியமாகும். அக்காலத்து சிறுவர்கள் வெறும் தரையில் வெளுத்து வாங்கிய விளையாட்டு இந்த கிட்டிப்புள்ளு என்றால் அது மிகையாகாது.   

ஆடு புலி ஆட்டம்

ஆடு புலி ஆடும் சிறுவர்கள்
படஉதவி – blogspot.com

ஆடு புலி ஆட்டம், தமிழர் விளையாட்டுகளில் மிகவும் நுட்பமானதொரு விளையாட்டாகும்.  ஆரம்ப காலங்களில் தமிழர்களின் பொழுதுபோக்காக விளையாடப்பட்டு, பின்னாட்களில் தெற்காசியா முழுவதும் பரவியதொரு விளையாட்டு. இன்று மனித மூளைக்கு வேலை தரும் முதன்மையான விளையாட்டாக கருதப்படும் ‘ச்செஸ்’ விளையாட்டுக்கெல்லாம், மூத்த மற்றும் மதிநுட்பம் நிறைந்த விளையாட்டு என ஆடு புலி ஆட்டம் பார்க்கப்படுகின்றது. இது அவ்வளவு எளிதில் அனைவராலும் வெற்றி பெறக்கூடிய விளையாட்டு அல்ல. இதனை விளையாடுவதற்கு கூர்மையானதொரு சிந்தனையும் பொறுமையும் மிக மிக அவசியம்.  

ஆடுபுலி ஆட்டத்தில் மொத்தம் 18 காய்கள் இருக்கும். அதில் மூன்று காய்கள் புலிகளாகவும், மீதமுள்ள 15 காய்களை ஆடுகளாகவும் கருத்தில்கொள்ளவேண்டும். இந்த இரண்டு காய்களையும் வித்தியாசப்படுத்தும் வகையில் காய்கள் இருக்கவேண்டியது அவசியமாகும். 15 ஆடுகள், 3 புலிகள் கொண்ட இந்த விளையாட்டில் புலிகள் ஆடுகளிடம் சிறைப்படுதல் அல்லது ஆடுகளை புலிகள் உண்ணுதல் என்பதே விளையாட்டின் பிரதானம். ஆடுகளை ஒவ்வொன்றாக உண்ணும் புலிகள், புலிகளை முற்றுகையிட்டு அசையவிடாமல் அடைக்கும் ஆடுகள் என்று விளையாட்டு தொடந்து போகும். நமது சிந்தனை திறனை வளர்க்கும் இவ்வகையான விளையாட்டுகள் இப்போதுள்ள ப்ளே ஸ்டோர்களில் கிடைப்பதில்லை.  

இது போன்ற தமிழர் விளையாட்டுகள் அழிந்துசெல்வது செல்வது வருத்தளித்தாலும், நினைவிலாவது அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெருமைகொள் நம் தமிழர் கலாசார விளையாட்டுகளைப் பற்றி நம் எதிர்கால சந்ததியினருக்கு குறைந்தபட்சம் சொல்லிக்கொடுத்தாவது வளர்த்தல் என்பதே தமிழுக்கு நாம் செலுத்தும் மரியாதை.  

Related Articles