Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ராமர் பாலம் – புராணமா ? அறிவியலா ?

ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்துக்கு ஏதுவாக ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டம் நிறைவேறினால் ஒரு நாள் கடல் பயணமும், சுமார் நானூறு மைல்கள் பயண தூரமும் மிச்சமாகும் என்பதால் இந்த சேது கால்வாய் திட்டம் கடல்சார் போக்குவரத்தில் உள்ளவர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் திட்டம் எனலாம். இந்த திட்டம் தேவைப்படுவதற்கான முக்கியக் காரணம் மேற்கு இந்தியாவில் இருந்து சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப், ஹல்தியா, மற்றும் கொல்கத்தா வரும் கப்பல்கள் இலங்கைக் கடற்கரையைச் சுற்றி வரவேண்டி இருக்கிறது. இதில் உள்ள போக்குவரத்து சிரமங்கள் மட்டுமல்லாது இந்தியக் கடற்படை ராணுவமும், கடலோர காவல் படையினருக்கும் இதே வழித்தடத்தில் சுற்றி வந்து பாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்தியாவின் பிராந்திய கப்பல் போக்குவரத்தை அதிகப்படுத்தவும், மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தியை நமது வழித்தடத்தில் இணைத்தல் மூலம் கிழக்கிற்கும், மேற்கிற்கும் உள்ள பயண தூரத்தை குறைக்கவும் மிக அவசியமானது இந்த திட்டம்.

படம்: operation weekkend

இந்த சேதுகால்வாய் திட்டம் என்பது 150 ஆண்டுகள் முன் டெய்லர் என்கிற பிரிட்டிஷ் தளபதியால் 186௦ ஆம் ஆண்டு போடப்பட்டது. சேதுசமுத்திர திட்டத்திற்கான குழு ஒன்றை இந்திய அரசு 1955 ஆம் ஆண்டு அமைத்து இதற்கான ஐந்து சாத்தியமான வழித்தடங்கள் பற்றிய பேச்சு வார்த்தையை நீண்ட வருடங்களாக நடத்தி இருக்கிறது. 2001இல் அப்போதைய காங்கிரசு அரசு இந்தத் திட்டத்தை ஆராய்வதற்கான முனைப்பை மேற்கொண்டது. பின்னர் 20௦2 ஆம் ஆண்டு நாசா விண்வெளியில் இருந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டது. அந்த புகைப்பட ஆவணங்களை ஆதாரமாக கொண்டு ராமேஸ்வரத்திற்கும் மன்னார் வளைகுடாவிற்கும் இடையில் ராமர் காட்டிய பாலம் இன்னும் அழியாமல் கடலில் புதைந்துள்ளது என்றும் இந்தத் திட்டத்தின் ஆறாவது வழித்தடத்தில் கடலின் அடியில் ராமர் கட்டிய பாலம் உள்ளதால் இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் ஹிந்து மத ஆர்வலர்கள் போர்க்கொடி உயர்த்தினர். அந்த இடத்தைப் புராதன சின்னமாக அறிவிக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இதிகாசமான இராமாயணதிற்கான வரலாற்று சுவடுகள் சரிவர கிடைக்காத நிலையில் கதையின் நாயகன் பூமியில் வாழ்ந்ததற்கான வலுவான ஆதாரமாக இது கருதப்படுகிறது. இனி இந்த பாலம் பற்றிய சுவராஸ்யமான கதை பகுதிக்கு வருவோம்.

படம்: desinema

ராவணன் சீதையை கடத்தி இலங்கைக்கு கொண்டு செல்கிறான். சீதையை மீட்பதற்காக ராமர், லக்ஷ்மணனுடன், ஹனுமான், மற்றும் வானர குல தலைவனாகிய சுக்ரீவனின் மிகப்பெரிய வானர படையுடன் அந்த பிரமாண்டமான கடலைத் தாண்டி இலங்கை சென்றடைய வேண்டும். இலட்சக்கணக்கணக்கான வானரங்கள் என்பதால் இலங்கைக்கு கப்பல் ஏற்பாடுகள் செய்வதில் சிக்கல் இருந்துள்ளது. இதர விலங்குகளும் படையில் இடம் பெற்றதாக வால்மிகி ராமாயணம் கூறுகிறது. எனவே நமது தென்கோடி முனையில் ஒரு பாலம் அமைத்து இலங்கையின் வடமேற்கு கடற்கரைக்கு செல்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

வால்மிகி ராமாயணம் இந்தப் பாலம் கட்டப்பட்ட விதத்தை அதன் நுணுக்கங்களுடன் அதன் யுத்த காண்டத்தில் கூறுகிறது. ராமர் சமுத்திர ராஜனைக் கடலைக் கடக்க உதவும்படி வேண்டுகிறார். சமுத்திர ராஜனும் ராமர் முன்தோன்றி பாலம் கட்ட அனுமதியளித்து “ராம்” என்று எழுதப்பட்ட கல் மட்டும் நீரில் மூழ்காது என்று வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் விஸ்வகர்மாவின் வாரிசான நளனை இந்தக் கட்டுமானத்திற்கு சமுத்திர ராஜன் பரிந்துரைக்கிறார். ராமரும் அதை ஏற்றுக்கொள்ள நளன் வானரங்களின் உதவியுடன் கட்டுமானத்தை ஆரம்பிக்கிறார்.

படம்: hindutva

இயற்கையாக கடலின் அடியில் அமைந்துள்ள தொடர்ச்சியான மணல்மேடுகள் உள்ள பகுதியில் மாமரம், அசோகமரம், ஆச்சா மரம், திலகா, கர்ணிக, மூங்கில் மற்றும் சில மரங்களைப் பயன்படுத்தி மரப்படுகை கொண்டு அஸ்திவாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் மேல் பல்வேறு அளவுகளில் கற்களைக் கொண்டு அடுக்கி அதன் மேல் சுண்ணாம்புக் கற்களை கொண்டு சமன் செய்துள்ளார்கள் என்கிறது வால்மிகி ராமாயணம். ஐந்து நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்த பாலத்தின் தூரம் பண்டைய அளவுகோளின் படி நூறு யோஜனைகள். இன்றைய அளவுகோலில் சுமார் முப்பத்தி ஐந்து கிலோமீட்டர் நீளமும், மூன்று கிலோமீட்டர் அகலமும் கொண்டது. இதன் வழியாக ராமர் பரிவாரங்களுடன் சென்று போரில் வென்று புஷ்பக விமானத்தில் சீதையுடன் திரும்பி வரும்பொழுது சீதைக்கு பாலத்தை காண்பித்து நளசேது பாலம் என்று குறிப்பிடுகிறார் என்கிறது வால்மிகி ராமாயணம்.

துளசி தாஸ் எழுதிய ராமச்சரிதத்தில் நிலன் மற்றும் நளனைப் பற்றி ஒரு குறிப்பு உண்டு. அவர்கள் இருவரும் ஒரு முனிவரிடம் பெற்ற சாபத்தின்படி அவர்கள் எந்தக் கல்லைத் தொட்டாலும் அதை நீரின் மேல் வைத்தால் அது மூழ்காது. அந்தச் சாபத்தை ராமர் பயன்படுத்தி பாலத்திற்கான வேலைகளை முடித்தார் என்கிறது அந்த இராமாயணம்.

சுனாமி வந்தபொழுது ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்தக் கற்கள் பரவலாக சிதறி மிதந்துள்ளன. ராமேஸ்வர கோவில் பதிவுகளின்படி கி.பி. 1480வரையில் இந்த பாலம் பயன்பாட்டில் இருந்துள்ளது. அப்பொழுது வந்த சூறாவளியில் இது சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் தட்பவெப்ப சூழ்நிலை, பருவகால மாற்றங்கள் மற்றும் இயற்கைச் சீற்றங்கள் காரணமாக இப்பொழுது கடல் மட்டம் 1௦ அடி வரை உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

விண்வெளி புகைப்படத்தை வைத்து அது பவளப்பாறைகள் வகையை சேர்ந்தது என்கிறார்கள் அறிவியலாளர்கள். இந்த வகை கற்கள் அந்த கடற்பகுதி முழுவதும் அதிகமாக காணப்பட்டிருக்கிறது. கோவிலின் உள்ள கிணற்றிலும் இது போல கற்கள் இருந்துள்ளது. எனவே அது இயற்கையாகவே தொடர்ச்சியாக அமைந்திருக்கும் மணல் மேட்டின் மேல் உள்ள பவளப்பாறைகளாக இருக்கலாம் என்று புவியியல் ஆய்வாளர்கள் கூறினாலும் தெளிவான விடை கிடைக்கவில்லை.

ஒரு சில வரலாற்றாளர்கள் ராமாயணத்தில் வானரங்கள் இரண்டு புறமும் கயிறு மற்றும் மூங்கில் போன்றவற்றை பிடித்துக்கொள்ள அதன் இடையில் கற்கள் வரிசையாக அடுக்கப்பட்டன என்று கதையில் கூறியபடி பாலம் ஒரு அமைப்புடன் உள்ளது. இது மனிதர்கள் கட்டியதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளதாக கூறுகிறார்கள். அதன் அஸ்திவார மரங்கள் மக்கி மண்ணோடு மண்ணாக ஆகி இருக்கலாம். இப்போது சுண்ணாம்பு கற்கள் மட்டும் எஞ்சியுள்ளது என்கிறார்கள்.

சில கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கூற்றுப்படி சுவர்க்கத்தில் இருந்து ஆதாம் என்கிற முதல் மனிதன் இலங்கையில் உள்ள மலையில் கால் பதித்து பின்னர் இந்த கடலை தாண்டி இந்தியா வந்ததாக ஒரு நம்பிக்கை. பிற்காலத்தில் வணிகத்திற்காக இலங்கை வந்த ஐரோப்பியர்கள் அவர்களின் குறிப்புகளில் இந்த பாலத்தை ஆதாம் பாலம் என்றே குறிப்பிட்டிருந்தனர்.

மற்றொரு ஆய்வில் அது எரிமலை வெப்பத்தில் இருந்து உருவான கற்கள் என்றும் கூறப்படுகிறது. ஒரு ஐஸ்துண்டு எப்படி ஒரு குடுவையில் போட்டவுடன் தண்ணிரில் மிதப்பதுபோல் இவ்வகை வெப்பத்தில் உண்டான கற்கள் கடல் காற்றின் குளிரால் இறுகி அது காற்றடைத்த பந்து போல் காணப்படுகிறதாம். ஆனால் ரமேஷ்வர சுற்று வட்டாரத்தில் எரிமலைகள் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும் அந்த கற்களின் எடை அவர்கள் சொல்லும் படிகக் கல்லின் எடைக்கும் வேறுபாடு உள்ளதாக தெரிகிறது.

ஹிந்து மத கொள்கைளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஆளும் கட்சியான மத்திய அரசிற்கு இந்த திட்டம் முரணானது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடர்ந்த சுப்பிரமணிய சாமிதான் இந்த வழக்கையும் தொடுத்துள்ளார். சேது கால்வாய் திட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில் ராமர் பாலத்திற்கு எந்த வித சேதமும் ஏற்படாமல்  இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று ஆளும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கடலியல் ஆய்வாளர்கள் அந்தப் பகுதியில் அலை விசை  (tidal current) இயற்கையாகவே அதிகமாக இருப்பதாகவும், தொடர்ந்து தூர்வாரினாலும் பெரிய கப்பல்கள் அதன் வழியாக வந்து செல்வது சிரமமானது என்றும் கூறுகின்றனர். மேலும் அவ்வாறு தொடர்ந்து தூர்வார்வதன் மூலம் அந்தப் பகுதியின் மீன்வளமும், பவளப் பாறைகள் நிறைந்துள்ள இயற்கை வளமும் அடியோடு அழியும் அபாயம் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

படம்: nephicode

எனவே மத நம்பிக்கைகளில் தீவிரமாக இருந்தாலும், நாட்டு நலனுக்காகவும், நமக்கு மற்றும் வருங்கால சந்ததியினருக்காகவும்  நாற்பது சதவீகித பணிகளை சென்ற மத்திய அரசே முடித்துவிட்ட வேளையில், பல வருடங்களாக பல்வேறு சட்டச் சிக்கல்களோடும், நம்பிக்கைகளோடும் போராடி வரும் இந்தத்  திட்டம் வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவு செய்வதற்கான ஆய்வை மேற்கொண்டு இதற்குத் தேவையான நல்லதொரு தீர்வை எடுப்பது  அனைவருக்கும் நலம். கடைசியாக ஒரு சந்தேகம் – ராமேஸ்வரம் என்பது ஒரு தீவு பகுதி. நாம் அமைத்த பாலத்தினால் மட்டுமே தரைவழி போக்குவரத்து கிடைத்திருக்கிறது என்றால், ராமர் எப்படி பரிவாரங்களுடன் இராமேஸ்வரம் சென்றிருப்பார் ?????????????

Related Articles