.jpg?w=1200)
இலங்கையின் வடமேற்கில் அமைந்துள்ள சரித்திர பெயர் கொண்ட மாவட்டம் தான் மன்னார். இது போர்த்துக்கேயப் படையெடுப்புக்கு முன்னர் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் கடல் வழி வாணிபத்திற்கு மன்னார் துறைமுகம் பயன்படுத்தப்பட்டமையும் இவ் மாவட்டத்தின் முக்கியத்துவத்தையும் சிறைப்பையும் பறைசாற்றுவதாக உள்ளது.
ஆரம்ப காலம் தொட்டு முதன்மை பெற்று விளங்கும் மன்னார் ஆலயங்கள், கோட்டைகள், பாலங்கள், சரணாலயங்கள் உள்ளிட்ட பல தளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சுற்றுலாவிற்கு ஏற்ற மையமாகவும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும் இது இருந்து வருகின்றது.
மன்னார் திருக்கேதீஸ்வரம் கோயில்

திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இவ் ஆலயத்தின் தீர்த்தம் பாலாவி என அமைக்கப்படுவதுடன் இதில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
மன்னார் பெருக்க மரம்


படஉதவி : Mannar Sri-LankHolidays
மன்னார் பள்ளி வீதியில் உள்ள மிகப் பழமையான மரம் இதுவாகும். இவ் மரத்திற்கு அருகில் உள்ள தேவாலயம் இதனைப் பராமாரித்து வருகின்றது. 7.5 மீட்டர் உயரமும் 19.5 மீட்டர் சுற்றளவும் கொண்ட இம்மரம் அரேபிய வணிகர்களால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு நட்டுவைக்கப்பட்டது என நம்பப்படுகின்றது.
அளவில் மிகப்பெரியதாக காணப்படும் இம்மரமானது 800 ஆண்டுகள் பழமையானதும் தனக்கென வரலாற்றையும் கொண்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
மன்னார் மடு மாதா தேவாலயம்

படஉதவி : tripadvisor

படஉதவி : americamagazine
படஉதவி : traveleatdrinklikealocal.blogspot
இது மடு எனும் இடத்தில் அமைந்துள்ள 400 வருட பழமைவாய்ந்த கத்தோலிக்க தேவாலயமாகும். தமிழ், சிங்கள கத்தோலிக்கர்களது பிரதான வழிபாட்டிடமாகும். இலங்கை தமிழ் மற்றும் சிங்கள கத்தோலிக்கரின் புனித வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது. ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெறும் இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இன,மத பேதமின்றி கலந்து கொள்வது சிவாலயத்தின் சிறப்பாகும்.
மன்னார்க் கோட்டை

படஉதவி : themiracleisland.com
இம்மன்னார்க் கோட்டையானது போர்த்துக்கேயர் மன்னார்த் தீவைக் கைப்பற்றிய போது தமது பாதுகாப்பிற்காக அமைத்த ஒன்றாகும். இது மன்னார் தீவின் தென் கிழக்கு முனையை அண்டி தலை சிலத்தைப் பார்த்தபடி அமைந்துள்ளது. சதுர வடிவில் அமைந்துள்ள இக்கோட்டை அதன் நான்கு மூலைகளிலும் நான்கு கொத்தளங்களைக் கொண்டுள்ளது. கல் வெட்டுக்கள் உள்ளிட்ட பல அம்சங்களை இது கொண்டுள்ளது இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
அல்லிராணிக் கோட்டை
மன்னாரின் அரிப்பு எனும் வரண்ட தரிசு நிலப்பகுதியில் அமைந்துள்ளதே இதுவாகும். இது அரிப்புக் கோட்டை எனவும் அழைக்கப்படுகின்றது. வரண்ட தரிசு நிலப்பகுதியில் அமைந்துள்ள இக் கோட்டை முதன் முதலில் போத்துக்கீசரால் கட்டப்பட்டது. 1658ல் இதனைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் இதைத் திருத்தி அமைத்துள்ளனர். இந்த கோட்டைக்கு அண்மையில் காணப்படுகின்ற வௌிச்சவீடு, அரிப்பு கிராமத்தின் வரலாற்று பொருளாதாரத்தின் தன்மைக்கு சான்றுபகர்வதுடன், இந்த முகத்துவார பகுதி ஆரம்பக் காலங்களில் துறைமுகமாக இருந்திருக்கலாம் என வரலாற்றாய்வாய்ளர்கள் கூறுகின்றனர்.
விஐயனும் அவனுடைய 700 தோழர்களும் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட் போது அவர்கள் இலங்கைத் தீவில் கரையொதுங்கிய பொழுது அதில் உபதிஸ்ஸ என்பவன் மன்னாரில் கரையொதுங்கி திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சென்று வழிபட்டான் என புனித நூலான மகாவம்சம் குறிப்பிடுகின்றது. ஆகவே விஜயனுக்கு முற்பட்ட காலப்பகுதில் இருந்து நீண்டதொரு தமிழ் வரலாற்றினை கொண்ட மன்னார் மாவட்டம் வரலாற்றில் எப்போதும் பேசப்பட ஊர் என்றால் அது மிகையாகாது.