Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையில் மரணதண்டனை!

சுமார் 43  ஆண்டுகளுக்குப்பின்னர் கடந்த 2019ம் ஆண்டு நான் திபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி பல அடிப்படை உரிமை மனுக்கள்,  தாக்கல் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தான் மரணதண்டனையை நிறைவேற்றும்வகையில் கையொப்பமிடப்போவதில்லை என சட்டமா அதிபரினூடாக அறிவித்துள்ளமையானது இலங்கையில் மரணதண்டனை பற்றிய கண்ணோட்டம் என்ன  என்பது பற்றி சற்று ஆராயத்தூண்டியது.

மரணதண்டனைக்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்ட்ட போராட்டங்கள் : புகைப்பட உதவி -Asianews.it

புராதன காலம்தொட்டே இலங்கையில் வெவ்வேறுவகையிலான மரணதண்டனை முறைமைகள் இருந்தபோதிலும் புத்தரது போதனைகளினால் ஈர்க்கப்பட்ட பல இலங்கை  அரசர்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் மரணதண்டனையினை நிராகரித்துள்ளனர். அந்தவகையில், கி.பி முதலாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட அமந்த காமினி அபய,  மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட வொஹாரிக திஸ்ஸ,  நான்காம் நூற்றாண்டின் இலங்கை மன்னன் ஸ்ரீ சங்கபோதி மற்றும் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட பராக்கிரமபாகு போன்றோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். (ஆயினும் களனி திஸ்ஸ,  தாதுசேன,  காசியப்பன் போன்றோர் இந்த தண்டனைமுறையை இறுக்கமாக கைகொண்டவர்கள்.  1681-ம் ஆண்டு  குற்றவாளியொருவர்  யானையால் மிதித்துக் கொல்லப்படும் காட்சியை, இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட வரலாற்றுப்  பயணியான   ராபர்ட் நொக்ஸ் என்பவர் பதிவு செய்துள்ளார்.

பிரிட்டிஷ்  ஆட்சியின்போது, இலங்கை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 285-வது பிரிவின்படி, மரண தண்டனையும்  உள்ளடக்கியதாக இருந்தபோதிலும், கொடூரமான முறைகளில் மரணதண்டனை விதிக்கப்படுவது தடை செய்யப்பட்டு, அப்போதைய இலங்கை  ஆளுநரான பிரெடரிக் நோத்தினால் தூக்கிலிடும் முறை அமுல்படுத்தப்பட்டது.    பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களிலும், கோட்டைகளிலும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் 1871-ம் ஆண்டு கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறையிலும், அதனைத் தொடர்ந்து கண்டி போகம்பறை சிறையிலும் தூக்குமேடைகள் அமைக்கப்பட்டன.

யானையை கொண்டு மரண தண்டனையை நிறைவேற்றும் முறை  -புகைப்பட உதவி/ Google images 

சுதந்திரத்திற்குப்பின்னும் இலங்கைச் சட்டத்தின் பிரகாரம் தூக்குத்தண்டனை முறைமை அமுலில் இருந்தபோதிலும், 1956இல் பிரதமராக ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்கவினால் மரணதண்டனை இல்லாமலாக்கப்பட்டது. எனினும் அவரது படுகொலையினைத் தொடர்ந்து 1959ஆம் ஆண்டு மீண்டும் மரணதண்டனை அமுல்படுத்தப்பட்டது. எனினும் இத்தகைய தண்டனைகளுக்கெதிராக உலகம் பூராவும் வலுப்பெற்றிருந்த எதிர்ப்புக்கள் காரணமாக 1976ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி மரணதண்டனை தொடர்பான சட்டக்கோவையில் ஏற்படுத்திய திருத்தங்களின் பிரகாரம்,  வழக்கினை விசாரிக்கும் நீதிபதி, சட்டமா அதிபர், நீதியமைச்சர் ஆகியோரின் ஒப்புதலுடன் ஜனாதிபதியின் ஒப்புதலும் அவசியமாக்கப்பட்டது . 

இறுதியாக  23.06.1976 அன்று J.M சந்திர தாச (வெலிக்கடை சிறை)   என்பவருக்கே மரணதண்டனை  நிறைவேற்றபட்டது என்பதுடன் ,  1978ஆம் ஆண்டிற்குப்பின் ஆட்சிக்கு வந்த இலங்கை ஜனாதிபதிகள்  எவரும் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான  தீர்ப்புக்களை செயற்படுத்தும்வகையில் கையெழுத்திட  மறுத்துவிட்டனர். எனினும், மரணதண்டனைக்கெதிரான பலத்த எதிர்ப்புக்கள் இருந்துவருகின்றபோதிலும் சட்டக்கோவையில் மரணதண்டனை இன்னுமே நீக்கப்படவில்லை என்பதால்,   இலங்கை சிறைகளில் தற்போது ஐநூற்றுக்கும்  மேற்பட்ட மரண தண்டனை  கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்  எனக்கூறப்படுகின்றது.

இலங்கையின் தூக்கிலிடும் வரலாற்றில்  மறு சிறா” என்றழைக்கப்படும் டி.ஜெ  சிறிபால என்பவரது மரணம் இன்றுவரையில் சர்ச்சைக்குள்ளானதொன்று. ஏனெனில் மிகவும் இளவயதினரான இந்த குற்றவாளி மூன்று முறை சிறையிலிருந்து தப்பித்தமையினால், மீண்டும் தப்பித்துவிடுவாரோ என்கிற அச்சத்தில் சிறைக்காவலர்களால் அதிகப்படியான மயக்க மருந்து கொடுக்கப்பட்டு ஆழ்ந்த மயக்கத்திலுள்ள நிலையில் கண்டி போகம்பர சிறைச்சாலையில் வைத்து  தூக்கில் இடப்பட்டமையானது மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது அப்போது. இன்றும் அவரது மனைவி தன்னுடைய கணவர் ஏற்கனவே கொல்லப்பட்டே  தூக்கிலிடப்பட்டதாக குற்றம் சுமத்தும் வீடியோக்களை கண்ணீர் விடும் புகைப்படங்களை இணையத்தில் காணக்கூடியதாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

“மறுசிறா” சர்ச்சைக்குறிய தூக்குதண்டணைக்கைதி : புகைப்பட உதவி/Daily FT

இலங்கையில் தூக்குத்தண்டனை முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர், குற்றவாளியை தூக்கிலிடும் நபரை அதாவது கறுப்புத்துணியினால் மூடப்பட்ட  மரணதண்டனை கைதியின் தலையை தூக்குக்கயிற்றில் நுழைத்து குறிப்பிட்ட தண்டனையை நிறைவேற்றுபவருக்கு  கொடுக்கப்பட்ட பெயர்தான் அலுகோசு.  உண்மையில் அலுகோசு என்பது,  சுமார்  15 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்குள் நுழைந்த  போர்த்துக்கீசரின்  போர்த்துக்கீச மொழிச் சொல்லேயாகும். போர்த்துக்கீசிய மொழியின்  Algoz (மரணசாசனத்தின் சரத்துக்களை நிறைவேற்றும் அதிகாரம் பெற்றவர்) என்ற சொல் காலப்போக்கில் Alugosu என மருவி அந்தச்சொல்லே சிங்களத்திலும் தமிழிலும் அலுகோசு என்றானது.

கண்டி போகம்பர சிறையில் அமைந்துள்ள தூக்குமேடை: புகைப்பட உதவி –Gulfnews.com

மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை முற்றாக ஒழித்து விட்டன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரணதண்டனை விதிக்கப்படுவது இல்லை. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான நாடுகள் மரண தண்டனையை ஒழித்திருந்தாலும், உலக மக்கள் தொகையில் 60% க்கும் அதிகமானோர் மரண தண்டனை தக்கவைத்துள்ள நாடுகளில் வாழ்கின்றனர்.

 அதாவது சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான் மற்றும் இலங்கை.மற்றைய நாடுகளைப்போலல்லாது மரண தண்டனையின் எண்ணிக்கையை ரகசியமாக வைத்திருக்கும் ஓர் நாடு சீனா   என்பதும் குறிப்பிடத்தக்கது . மேலும் மரண தண்டனை வழங்குவது நடப்பில் இருந்தாலும், பத்து வருடங்களாக யாருக்கும் மரண தண்டனை வழங்கப்படாமல் இருந்தால் அவை “மரண தண்டனை ஒழிப்பு நடைமுறையில் இருக்கும் நாடுகள்” என்று அழைக்கப்படும் எனவும் பொதுவாக கருதப்படுகின்றது . 

 

Related Articles