“கிளியோபாட்ரா – VII”
எகிப்தில் கிளியோபாட்ரா – VII வாழ்ந்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் இருக்கும். ஆனால் அவள் குறித்த புதிர்கள் உலகில் இன்றுவரை ஓயவே இல்லை. அவளது பிறப்பு, இருப்பு, இறப்பு, அந்த பேரழகு, காதல், திருமணம், வாரிசுகள், என அவள் வாழ்வியல் முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையுடையதாக காணப்படுகிறது. முதலில் கிளியோபாட்ரா என்பது தொலமி குடும்பத்து பெண்களின் பொதுப்பெயர். அதில் உலகம்போற்றும் அழகியான நமது கிளியோபாட்ரா தொலமி குடும்பத்தில் ஏழாவது கிளியோபாட்ராவாக பிறந்தாள்.கி.பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த சரித்திர ஆசிரியரான புளுடார்ச் என்பர் பின்வருமாறு சொல்வார், “அவள் மிகப்பெரிய பேரழகியாக இருந்தாள்”.உலகப்புகழ்பெற்ற கவிஞன் ஷேக்ஸ்பியர் அவளை “அழகுகளின் தேவதை” எனப்புகழ்கின்றார்.ஜேர்மனியின் சரித்திர ஆசிரியர் கிறிஸ்டோபர் ஸ்கேஃபர்(Christopher schaefer) “கிளியோபாட்றா வாழ்நாள் முழுதும் தனது உடல் அழகை பேணிப்பாதுகாத்தவள் “ என்கின்றார்.
இவ்வாறு உலக வரலாறுகளில் கொண்டாடப்பட்ட கிளியோப்பட்ரா கி.மு. 69 ஆம் ஆண்டில் பண்டைய தொன்மையான இராச்சியமான எகிப்தின் இறுதி இராணியாக தொலமி வம்சத்தில் பிறக்கின்றார். கிரேக்க தொலமி அரசபரம்பரையில் ஆறு கிளியோபெட்ராக்கள் பிறந்தார்கள் என்கின்றார்கள். அதில் ஏழாவதாக உலகபுகழ்பெற்ற ‘கறுப்பழகி கிளியோபட்ரா பிறந்தாள்.
கி.மு. 80ஆம் நூற்றாண்டில் எகிப்தின் பேரரசராக பதவி ஏற்கும் தொலமி 7ஆம் கிளியோபாட்ராவின் தந்தை நிர்வாகத்திறமை அற்றவராகவும், சுயநலமானவராகவும்,எகிப்திய மக்கள் மத்தியில் அபிமானம் அற்றவராகவும் வரலாறு அவரை வர்ணிக்கின்றது. அப்படிபட்ட மன்னருக்கு மகளாகவே ஏழாம் கிளியோபட்ரா பிறக்கின்றாள்.
12ஆம் தொலமியின் ஆட்சிக்காலத்தில் ரோம் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக திகழ்ந்தது.
அந்தக்காலப்பகுதியில் ரோமானியப்படைகள், ஐரோப்பிய நாடு முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது. அதன் அடுத்தக்கட்ட திட்டம் ஆப்பிரிக்கா கண்டத்தை தவிர்த்து மத்திய தரைக்கடலின் கரையில் அமைந்த ராஜ்சியங்கள் முழுவதிலும் ரோமான்ய சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டு செயற்பட்டு கொண்டிருந்தது. அவையனைத்தையும் ரோமானிய பேரரசு கைப்பற்றியிருந்தது. அதில் பனிரெண்டாம் தொலமிக்கு என்று எகிப்தும், மத்திய தரைக்கடலில் சில தீவுகளும் சொந்தமாக இருந்தன. ரோமின் அடுத்த நகர்வாக எகிப்தை வெல்வதன் மூலம் ஆபிரிக்க கண்டத்தையும் தனது கைகளுக்குள் வைத்துக் கொள்ளலாம் என நினைத்தது. எகிப்துக்கு அச்சுறுத்தலான சூழல் உருவானபோது பனிரெண்டாம் தொலமி மிகவும் சுயநலமாக நடந்து கொண்டார். மக்களைப்பற்றியும், தனது குடும்பம் பற்றியும், எகிப்தின் எதிர்காலம் பற்றியும் சிந்திக்காது, தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக நாட்டை விட்டு கி.மு. 58ஆம் ஆண்டளவில் ரோமுக்கு தப்பித்து ஓடுகிறார்.
எகிப்தை இதுவரை நிர்வகித்த 12 ஆம் தொலமி உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பித்து ஓடியதன் பின்னர் அடுத்து நாட்டை யார் ஆட்சி செய்வது என்ற போட்டியில் தொலமி வம்சமே அடித்துக்கொள்கின்றது. அந்தக் காலத்தில் எகிப்தில் மிகவும் விசித்திரமான சட்டங்கள் நடைமுறையில் இருந்தன. தந்தைக்குப் பின் நாட்டை மகன் ஆட்சி செய்வது மரபாக இருந்தது. ஆனால் அந்த நேரம் தொலமியின் மகன்மார் இருவருமே சிறுவர்களாக இருந்தார்கள். அத்தோடு முன்பு குறிப்பிட்டது போல எகிப்தில் விசித்திரமான சட்டங்கள் நடைமுறையில் இருந்தன. அதாவது எகிப்தியர்களின் தாய் கடவுளான ஐரிஸ் தனது சொந்த சகோதரன் ஆஸிரிசை திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்கு எகிப்தியர்களின் இன்னொரு கடவுளான ஹோரஸ் பிறந்தார். அதிலிருந்து எகிப்தின் தொலமி பரம்பரையில் சகோதரன் சகோதரியை திருமணம் முடிப்பது வழக்கத்தில் இருந்து. திருமணம் முடித்தால் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் பதவி ஏற்க முடியும் என்ற சட்டம் எகிப்தியரிடம் இருந்தது. அதன்படி தொலமி குடும்பத்தில் பிறந்த தொலமிகளும், கிளியோபெட்ராக்களும் திருமணம் முடித்துக் கொண்டார்கள்.
தந்தை 12ஆம் தொலமியின் ஆட்சியதிகாரத்தை பிடிக்க அவரது மகள் பெரியனைஸ் வயதில் மூத்தவளாக இருந்த சகோதரி 6ஆம் கிளியோபாட்ராவை கொலை செய்கிறாள். பின்பு உறவுமுறை சகோதரனை திருமணம் செய்துகொண்டு ஆட்சிக்கு ஏறுகிறாள். பின்னர் அவர்களுக்குள் முரண்பாடு வர சகோதரனை விரட்டி விட்டு இன்னொரு சகோதரனை 2ஆம் திருமணம் செய்துகொள்கிறாள். இப்படி எகிப்தின் ஆட்சிமாற்றம், குளறுபடிகள் நடக்கும்போது எமது 7ஆம் கிளியோபாட்ராவின் வயது பதினொன்று மாத்திரமே.
இப்படி ஆட்சி மாற்றங்களையும், கலகங்களையும் பார்த்தவாறு, பதவிகளுக்காக கொலை செய்கிற உறவுகளின் மத்தியில் இருந்துதான் இளவரசி 7ஆம் கிளியோபாட்ரா வளர்கிறாள். அவளுடைய தந்தை 12ஆம் தொலமியின் பரம்பரை கிரேக்கத்தை மூலாதாரமாகக் கொண்டது. தொலமிகள் அனைவரும் தமது தமது உத்தியோகப்பூர்வ திருமணத்தை பெரும்பாலும் தமது ரத்த உறவுகளில் செய்துகொண்டார்கள் என்கின்றபோது முதலில் உலகம் போற்றுகிற பேரழகி 7ஆம் கிளியோபாட்ரா கறுப்பழகி அல்ல என்பது தெளிவாகிறது.
கிளியோபாட்ரா எகிப்திய கடவுள் ஐரிஸ் போல வரலாறு முழுவதும் வலம் வந்தாள் என்று சொல்லப்படுகிறது. கிளியோபாட்ராவின் தந்தையை வரலாறு ஒரு சுயநலவாதியாக சித்தரித்தாலும், அவர் தனது மகள்களை நன்றாக வளர்த்திருந்தார். அவர்கள் யாவரும் நிர்வாகத்துறையில் ஈடுப்பாடு உள்ளவர்களாகவும், எல்லாவகை கலைகளிலும் சிறந்தவர்களாகவும் காணப்பட்டனர். அவர்களுக்கு சிறந்த கல்வியை தந்தை தொலமி வழங்கியிருந்தார். அலெக்ஸ்சாண்ரியாவில் உள்ள நூலகத்திற்கு செல்வதை 7ஆம் கிளியோபாட்ராவும் அவளது சகோதரியும் வழக்கமாக கொண்டிருந்தனர்.
அத்துடன் கிளியோபாட்ரா தத்துவம், கணிதம், மருத்துவம், கலை, இலக்கியம், இசை சம்பந்தப்பட்ட பாடங்களை ஆர்வமாக படித்திருக்கிறாள். இளமையில் அவள் மொழிகளை கற்பதில் அதீத விருப்பம் கொண்டவளாக இருந்தாள். எகிப்தியன், அரமைக், எத்தியோப்பியன், கிரீக், ஹிப்ரூ, லத்தீன் உட்பட 6 மொழிகளை எழுதவும் படிக்கவும் அவள் கற்றுக்கொண்டாள்.சிறுவயதில் இருந்து ரோம் சாம்ராஜ்யத்தின் அத்துமீறல்களும் தந்தை பனிரெண்டாம் தொலமி குடும்பத்தையும், நாட்டையும் விட்டுவிட்டு ரோமில் தஞ்சம் புகுவதற்கு ஓடிப்போனதும், அதன் பின் அவளது சகோதரி அரசாட்சிக்காக கொலை செய்யப்பட்டதும், சகோதரி பெரியனைஸ் எகிப்தில் செய்த கலகங்கள், அதற்காக அவள் தந்தையால் கொலை செய்யப்பட்டது, பாவப்பட்ட எகிப்திய மக்களின் நிலை எல்லாமே அவளை நிறையவே பாதித்திருந்தது.இவையெல்லாம் சேர்ந்தே கிளியோபாட்ரா என்ற இளவரசி அகங்காரம் கொண்டவளாகவும், கோவம் கொண்டவளாகவும், வெறுப்பு, கர்வம், சுயநலம், பழிவாங்கும் உணர்வு கொண்டவளாக வளர காரணமாகியது என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
பலவகை சூழ்ச்சிகளை செய்து ரோமின் ஆதரவுடன் தொலமி கி. பி. 51இல் இரண்டாம் முறையாக எகிப்தின் அரசராகி இருந்தார். அவர் போராடி ஆட்சியை கைப்பற்ற முடிந்தளவு அவரது உடல் நலத்தை அவரால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இரண்டாம் முறை அரசராகி மூன்றாண்டுகளில் அவர் மரணம் தொலைவில் இல்லை என்பதை உணர ஆரம்பிக்கிறார். தொலமியின் குடும்பம் கட்டிகாப்பாற்றிய அலெக்ஸ்சாண்ரியாவை தொலமியின் எந்த வாரிசிடம் ஒப்படைப்பது என்று யோசித்தபோது, தொலமியின் குடும்பத்தில் இருந்த வயதுவந்த பெண் 7ம் கிளியோபாட்ரா மட்டுமே.
அப்போது அவளுக்கு பதினெட்டு வயது பூர்த்தியடைந்து இருந்தது. திருமணம் முடிக்காமல் ஒரு இளம் பெண் எகிப்தில் பதவி வகிப்பது அவர்கள் நாட்டில் நடைமுறையில் இல்லை. எனவே எகிப்தியர்கள் குடும்ப வழக்கத்தின்படி தொலமி வம்சத்தின் மூத்த மகனான 13ஆம் தொலமிக்கு பதினொரு வயதிருந்தது. மரணப்படுக்கையில் இருக்கும்போது தந்தை தொலமி அவரது மகன் 13ஆம் தொலமிக்கும் மகள் கிளியோபாட்ராவுக்கும் திருமணம் செய்துவைக்கின்றனர். அதன்பிறகு சிறிது நாட்களில் இறந்தும் போகின்றார்.
மாபெரும் எகிப்திய சாம்ராஜ்யத்தின் பேரரசி என்று ஆனபோதும் ஏழாம் கிளியோபாட்ராவால் நிம்மதியாக அரசாட்சி செய்யமுடியவில்லை. அதில் முதலாவது பிரச்சினையாக இருந்தது, எகிப்து அப்போது பூரண சுதந்திர குடியரசாக இருக்கவில்லை. ரோமுக்கு கட்டுப்பட்டே ஆட்சி செய்யவேண்டிய சூழ்நிலை இருந்தது. இரண்டாவது, தந்தை தொலமிக்கு ஆதரவாக இருந்த இராஜதந்திரி போதினெஸ் என்ற திருநங்கை, படைத்தளபதியாக இருந்த அகில்ஸ் ( Ahills) போன்றோர் வீரமும், தெளிவும், அழகும், இராஜதந்திரமும், கம்பீரமும் கொண்ட கிளியோபாட்ரா எகிப்திய அரசியாக தலையெடுப்பதை விரும்பவில்லை. அவர்கள் கிளியோபாட்ராவுக்கு எதிராக சதிவேலைகளை செய்யத்தொடங்கினர். சகோதரனும் கணவனுமாக இருந்த 13ஆம் தொலமியையும், கிளியோபாட்ராவையும் பிரிக்கின்ற வகையில் பலதையும் சொல்லி அவன் மனதில் கிளியோபாட்ரா பற்றிய தீய எண்ணங்களை வளர்த்தனர். அவை குடும்பத்தையும் நாட்டையும் ஒருமித்து நடத்தமுடியாதவாறு பிரச்சினைகளை ஏற்படுத்தியது. கணவரும் சகோதரனுமான 13ஆம் தொலமி கிளியோபாட்ராவை அரசாட்சியில் இருந்து அடித்து துரத்திவிட்டு தனியே ஆட்சி செய்வதற்கு தயாராகினான். கிளியோபாட்ராவுக்கு எதிரான சதிவேலைகளில் அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஈடுபடத்தொடங்கினார்கள். வரலாறு அவள் வாழ்வில் என்னவெல்லாம் நிகழ்த்த இருந்தது என்பதை இனிவரும் தொடர்களில் பார்ப்போம்.
தொடரும்……….