Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கைக்கு முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற Duncan White

ஒலிம்பிக் விளையாட்டின் வரலாற்றை நாம் பார்த்தோமேயானால் ஒலிம்பிக் விளையாட்டானது 2300 ஆண்டுகள் பாரம்பரியமிக்க ஒன்றாகும். இதன் தாயகம் புராதன கிரேக்கத்தின் ஒலிம்பியா என்ற பிரதேசத்திலேயே இவ்விளையாட்டுக்கள் ஆரம்பத்தில் விளையாடப்பட்டன. இவ்விளையாட்டின் ஆரம்பத்தில் பல்வேறு நோக்கங்கள் காணப்பட்டாலும், கலை, விளையாட்டின் மூலமாக கடவுளை வழிபடுவதற்கான ஒரு வாய்ப்பாகவே இதை பண்டைய கிரேக்கர்கள் கொண்டாடினர். என்றாலும் பிற்பட்ட காலங்களில் அப்பிரதேசத்தில் யுத்தங்கள் அதிகமாக இடம்பெற்றதால் 390ம் ஆண்டிற்கு பிறகு பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நிறுத்தப்பட்டன.

சுமார் 1500 ஆண்டுகள் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நிறுத்தப்பட்டதன்பின் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நவீன கால ஒலிம்பிக் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கு மிகமுக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் பிரெஞ்சு கல்வியலாளரான “Buron Pierre De Coubertin” என்பவர் ஆகும். 1894 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அவர் பாரிஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கோரிக்கையை முன்வைத்தபோது அதனை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. அதன்படி இரண்டு வருடங்கள் கழித்து ஒலிம்பிக்கின் தாயகமான கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் முதலாவது நவீன ஒலிம்பிக் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்களுக்கொருமுறை நடைபெறுகின்றது.

டங்கன் வைட் – (1918 -1998) -புகைப்படவிபரம் -www.trinitycollege.lk

ஒலிம்பிக்கின் அடையாளமாக பயன்படுத்தப்படும் ஐந்து வளையங்கள் ஒன்றாக கோர்க்கப்பட்ட சின்னத்தையும் அவரே அறிமுகம் செய்தார். அவ்வளையமானது ஐந்து கண்டங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகின்றது.Coubertinல் முன்வைக்கப்பட்ட தத்துவமான “ஒலிம்பிக் என்பது உயர்ந்த மனம் மற்றும் ஆன்மா, தேசிய ரீதியான மற்றும் கலாசார ரீதியான வேறுபாட்டை வெற்றிகொள்ளல், நட்பாக இருத்தல், ஒற்றுமை உணர்வு, நேர்மையாக விளையாடுதல்,என்பவற்றின் மூலம் உலக சமாதானத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பங்களிப்பு செய்தல்” என்பது இன்றுவரை எந்தவித மாற்றத்திற்கும் உட்படாமல் கடத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. இதன் காரணமாகவே நவீன ஒலிம்பிக்கின் தந்தையாக Coubertin அழைக்கப்படுகின்றார்.

எத்தனையோ உலக நாடுகள் இன்றுவரை ஒரு பதக்கத்தையேனும் பெற்றிராத நேரத்தில் நம் இலங்கை திருநாடானது அது சுதந்திரம் பெற்ற 1948 ஆம் ஆண்டு தான் பங்குபற்றிய முதல் தடவையிலேயே வெள்ளிப்பதக்கமொன்றை வென்று திரும்பியிருந்தது. அதற்கு காரணமாக இருந்தவர் “டங்கன் வைட்” என்ற வீரராகும். அவரது வரலாற்றையே இங்கு நாம் பார்க்க இருக்கின்றோம்.

மேஜர் தேசமான்ய டங்கன் வைட் இலங்கையின் விளையாட்டு வீரராகும். இவரே இலங்கைக்காக முதல் முதலாக ஒலிம்பிக் விளையாட்டில் பதக்கம் வென்று கொடுத்த தடகள விளையாட்டு வீரராகும். அவர் 1948ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இலண்டன் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டில் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் கலந்துகொண்டு இலங்கை சார்பாக வெள்ளி பதக்கம் ஒன்றை வென்று கொடுத்தார். இவரே தடகள விளையாட்டில் Norman Pritchardக்கு பிறகு தெற்காசியாவிலேயே பதக்கம் வென்ற இரண்டாவது வீரராகும்.டங்கன் வைட் 1918 மார்ச் முதலாம் திகதி அன்றைய காலனித்துவ இலங்கையில் களுத்துறை மாவட்டத்தில் பதுரலியவிற்கு அருகிலுள்ள Lathpandura என்ற குக்கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் John Bernard White மற்றும் Cecilia Hawk தம்பதியினருக்கு நான்கு ஆண் மகன்களில் இரண்டாவது புதல்வராக பிறந்தார்.

தம் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என தீர்மானித்த வைட்டின் பெற்றோர் கண்டிக்கு குடும்பத்தோடு இடம்பெயர்ந்தனர். டங்கன் வைட்டும் அவரது இரண்டு சகோதரர்களும் திரித்துவக் கல்லூரியில் கற்றபோது அவர்களுடைய ஒரு சகோதரர் Kingswoodல் கல்விகற்றார். டங்கன் வைட் கல்லூரியில் கற்கும் காலத்தில் விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் ஆரம்பத்தில் கல்லூரியில் றக்பி மற்றும் குத்துச்சண்டை விளையாட்டிலேயே அதிகம் ஈடுபட்டார். என்றாலும் அவரது உடல்வாகை அவதானித்த அவரது பயிற்றுவிப்பாளர்கள் அவரை தடகள விளையாட்டில் ஈடுபடும்படி கூறினர். அதுவே எதிர்காலத்தில் அவருக்கு மட்டுமின்றி இலங்கை நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதற்கு காரணமாக அமைந்த தருணம் என்று கூறலாம். அவரை அவரது பயிற்றுவிப்பாளர்கள் 110 மீட்டர் 220 மீட்டர் தடைதாண்டல் மற்றும் நீளம் பாய்தலில் ஈடுபடும்படி வேண்டினர்.

1948ம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக்கில்  தடகள போட்டியில்  பங்குபற்றிய டங்கன் வைட் – புகைப்படவிபரம்  -www.Sundayobserver.lk

டங்கன் வைட் தன்னுடைய 16வது வயதில் தன் கல்லூரி சார்பான தடகள அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டதோடு தன் 18வது வயதில் அந்த அணிக்கு தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.அதே வருடம் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் டங்கன் வைட் 220 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் பாடசாலை மட்ட மற்றும் தேசியமட்ட சாதனையோடு வெற்றி பெற்றார். மேலும் அதே விளையாட்டில் 110 மீட்டர் தடை தாண்டல் மற்றும் நீளம் பாய்தலில் சாம்பியன் ஆனார். அதுமட்டுமின்றி “ஜெபர்சன் கிண்ணத்தை” வென்ற தன் பாடசாலை அஞ்சலோட்ட அணியிலும் ஒரு உறுப்பினராக இருந்தார்.

இவை எல்லாவற்றையும் விட அதிக விசேடமான விடயம் யாதெனில் அந்த விளையாட்டு போட்டியில் முதன் முறையாக திரித்துவக் கல்லூரி முழு மொத்த சாம்பியன் ஆகி “டார்பெட் கிண்ணத்தை”ஒரு வென்றமையாகும்.அந்த விளையாட்டுப் போட்டியில் திறமை காட்டியதற்கான அங்கீகாரமாக டங்கன் வைட் அவரது கல்லூரியால் “தடகள விளையாட்டில் திரித்துவ கல்லூரியின் சிங்கம்”என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். என்றாலும் பிற்காலத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக அவரிடமிருந்து அவ்விருது மீளப்பெறப்பட்டது. அவர் 1937ஆம் ஆண்டு திரித்துவக்கல்லூரியில் இருந்து விலகினார்.

1938ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுகளில் (அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜிய விளையாட்டு போட்டிகள்) 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் பங்குபற்றிய போதிலும் அவருக்கு தொடயில் ஏற்பட்ட உபாதை காரணமாக எதிர்பார்த்தளவு திறமையை அவரால் வெளிப்படுத்த முடியவில்லை.

இதில் ஆச்சரியப்படத்தக்க விடயம் யாதெனில் அன்றைய விளையாட்டு போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய விளையாட்டு வீரர்களில் இவர் மாத்திரமே பாடசாலை செல்லும் வயது குறைந்த போட்டியாளராக இருந்தமையாகும். என்றாலும் இவர் தேசிய பாடசாலைகள் விளையாட்டு, தேசிய விளையாட்டு மற்றும் இந்திய-இலங்கை விளையாட்டுக்களில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டார். மேலும் 1945 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய- இலங்கை விளையாட்டு போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்ற தெரிவுசெய்யப்பட்டதோடு அதில் அவர் 4×100 தடை தாண்டல் அஞ்சலோட்டப் போட்டியில் பங்குபற்றினார்.

1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலக மகா யுத்த காலப்பகுதியில் இலங்கையின் காலாட்படையில் இணைந்த டங்கன் வைட் 1947ஆம் ஆண்டு வரை அதில் சேவையாற்றினார். பின்னர் அதிலிருந்து விலகி இலங்கை தொண்டர் படையில் இணைந்து சேவையாற்றி மேஜர் தரத்திற்கு உயர்ந்தார்.1948 ஆம் ஆண்டு பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்ற இலங்கையானது அதே ஆண்டு பிரிட்டிஷிலேஇடம்பெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் பங்குபற்றியது. அவ்ஒலிம்பிக்கே இலங்கை தனியொரு நாடாக பங்குபற்றிய முதல் ஒலிம்பிக் என்பதோடு ஒலிம்பிக்கில் ஒரு போட்டியாளராக தெரிவுசெய்யப்பட்ட டங்கன் வைட் ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் இலங்கையின் தேசிய கொடியையும் சுமந்து சென்றார்.

1948ம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை வீரர்கள் குழு -புகைப்படவிபரம் –  www.trinitycollege.lk

ஒலிம்பிக் ஆரம்ப விழா முடிந்து இரண்டு நாட்கள் சென்றபின் 1948 ஜூலை 31 ஆம் திகதி இடம்பெற்ற 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய டங்கன் வைட் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றதோடு இலங்கை பங்குபற்றிய முதல் ஒலிம்பிக்கிலேயே இலங்கைக்கு பதக்கம் பெறவும் காரணமாக அமைந்தார்.

இதில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய முக்கியமான விடயம் யாதெனில் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்காவை சேர்ந்த Roy Cochran ஒலிம்பிக் போட்டிகளுக்காக தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் கடுமையாக பயிற்சி செய்து பங்குபற்றிய நிலையில், டங்கன் வைட் வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே பயிற்சிகளை மேற்கொண்டு ஒலிம்பிக்கில் பங்குபற்றி வெள்ளிப்பதக்கம் வென்றமையாகும். அத்தோடு டங்கன் வைட் தனது போட்டி தூரத்தை Cochranஐ விட 0.7 செங்கற்கள் குறைவாக 51.8 செக்கன்களில் பூர்த்தி செய்ததோடு அன்றைய சமயத்தில் இருவரதும் நேர எண்ணிக்கை ஒலிம்பிக் சாதனையாகவும் கருதப்பட்டது.

அந்த ஒலிம்பிக்கில் டங்கன் வைட் திடீரென 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் போட்டியிலிருந்து விலகும் முடிவை எடுத்தார். இந்த முடிவானது அன்றைய சமயத்தில் இலங்கை விளையாட்டு அதிகாரிகளுக்கு மத்தியில் டங்கன் வைட்டோடு ஒரு கசப்புணர்வை ஏற்படுத்தியது என்றே கூறலாம். என்றாலும் 200 மீட்டர் ஆடவர் ஓட்டப் போட்டியில் டங்கன் வைட் பங்குபற்றிய போதிலும் அவரால் முதல் சுற்றை கூட தாண்ட முடியாமல் போனது துரதிருஷ்டவசமானதாகும்.

டங்கன் வைட் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதை வானொலியில் செவிமடுத்த இலங்கையர்கள் ஆனந்த பெருமிதத்தின் உச்சிக்கே சென்றனர். இலங்கை ஊடகங்கள் யாவும் வைட்டின் வெற்றியை பெருமையோடு பிரசுரித்தன.டங்கன் வைட் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாடு திரும்பிய பின் அவரது கல்லூரியான திரித்துவக் கல்லூரியில் பாராட்டு விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டு அவ்விழாவில் அவருக்கு முன்பு அவரிடமிருந்து கல்லூரி பறிக்கப்பட்ட “சிங்கம்” என்ற விருது மீண்டும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இதுபற்றி அவ்விழாவில் பேசிய டங்கன் வைட் கூறும்போது “தனக்கு ஒலிம்பிக் பதக்கம் வென்றது பெருமைக்குரியதாக இருந்தாலும் தனக்கு கல்லூரியால் வழங்கப்பட்ட சிங்கம் என்ற விருதே தனக்கு அதைவிடவும் பெருமைக்குரியதாக உள்ளதாக தெரிவித்தார்.

1949ம் ஆண்டு திரித்துவக் கல்லூரி டங்கன் வைட் கிண்ணத்தை அறிமுகம் செய்ததோடு அக்கிண்ணத்தை வென்ற முதல் வெற்றியாளராக, இலங்கை வரலாற்றில் மிகவும் மதிப்புக்குரிய அரசியல்வாதியாக அறியப்பட்டிருந்த மறைந்த லக்ஷ்மன் கதிர்காமர் இருந்தார்.

இலங்கை அரசாங்கம் டங்கன் வைட்டுக்கு “Loughborough” பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி பற்றி கற்பதற்கான புலமைப்பரிசிலை வழங்கி கௌரவித்தது. அவர் அப்பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் தலைவராக செயற்பட்டதோடு அங்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றி கேடயங்களையும் வென்றார். மேலும் அவர் பிரிட்டிஷ் விளையாட்டு கழகத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதோடு “ஆசியாவின் மிகச் சிறந்த தடகள விளையாட்டு வீரர்” என்ற விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

1950ம் ஆண்டு நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய டங்கன் வைட் 440 மீட்டர் தடைதாண்டும் போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கம் வென்றது மட்டுமின்றி 0.3 செக்கனில் உலக சாதனையையும் தவறவிட்டிருந்தார். அத்தோடு இலங்கை சுதந்திரம் பெற்றபிறகு இலங்கை சார்பாக ஏதாவது ஒரு விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற முதல்வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

மேலும் அந்த விளையாட்டு தொடரில்4×400 அஞ்சலோட்ட போட்டியிலும் பங்குபற்றினார். இப்போட்டியின் சிறப்பம்சம் யாதெனில் இலங்கை சார்பாக இறுதியாக ஓடிய டங்கன் வைட்டின் கையில் கோல் வழங்கப்பட்டபோது அவர் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார். என்றாலும் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காத டங்கன் வைட் பலரையும் தாண்டி ஓடி வந்து நான்காம் இடத்தை பெற்றார். அவரது ஓட்டத்தை பார்த்து பரவசமடைந்த அந்த அரங்கத்திலிருந்த அனைவரும் எழுந்து நின்று கரகோஷமிட்டு வாழ்த்தினர். அதுமட்டுமின்றி நீங்கள் ஏன் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை? என அதிகாரிகள் அவரை பார்த்து வினவினர். அந்தளவு தூரம் அவரது ஓட்டம் சிறப்பானதாக அமைந்திருந்தது.

1950 ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்துவிட்டு இலங்கை திரும்பிய டங்கன் வைட் மஹரகமவிலுள்ள ஆசிரியர் கல்லூரியில் உடற்கல்வி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1958ஆம் ஆண்டு கல்வித்திணைக்களம் அவரை இலங்கை பாடசாலைகள் குழுவின் பயிற்றுவிப்பாளராக நியமித்தது. மேலும் 1963ஆம் ஆண்டு நைஜீரியா பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக இணைந்ததோடு பின்பு இங்கிலாந்தில் குடியேறிய அவர் நைஜீரியாவிற்கான விளையாட்டு  ஆலோசகராகவும் செயல்பட்டார்.

டங்கன் வைட் Angela Siebel என்ற பெண்ணை திருமணம் செய்ததோடு அத்தம்பதியினருக்கு 6 குழந்தைகள் கிடைத்தனர். டங்கன் வைட் அவுஸ்திரேலியாவிற்கு குடும்பத்தோடு இடம்பெயர நினைத்திருந்தவேளை 1998-ஆம் ஆண்டு மரணித்தார். அவரது மனைவி தொடர்ந்தும் இங்கிலாந்திலேயே வசித்தார்.

டங்கன் வைட் மறைந்த சமயம் லக்ஷ்மன் கதிர்காமர் தனது இரங்கல் செய்தியில் கூறும்போது “டங்கன் வைட்டின் விளையாட்டு வாழ்க்கையானது ரோஜாக்களால் போர்த்தப்பட்ட படுக்கையாக இருக்கவில்லை. மாறாக அவர் ஒரு கட்டத்தில் தனக்கான சரியான காலணியை வாங்குவதற்கு கூட முடியாத நிலையிலேயே இருந்தார். என்றாலும் அவரது பலமான மன உறுதியே அவரை இந்தளவு தூரம் கொண்டு வந்தது என கூறலாம்” என தெரிவித்திருந்தார்.

1948ம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வின் போது -புகைப்படவிபரம் www.Sundayobserver.lk

பல விருதுகளையும் வென்ற டங்கன் வைட்டை பெருமைப்படுத்தும் விதமாக 1988ஆம் ஆண்டு அவருக்காக வேண்டி தபால் முத்திரை வெளியிடப்பட்டது.1990 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி இலங்கையிலுள்ள திறமையான தடகள வீரர்களை இனம்கண்டு அவர்களை முறையாக பயிற்றுவித்து அவர்களை சாதனையாளர்களும் நோக்கோடு டங்கன் வைட்டின் 72வது வயதில் டங்கன் வைட் பவுண்டேஷன் ஆரம்பிக்கப்பட்டதோடு 1992 மார்ச் முதலாம் திகதி Sriyantha Dissanayskeற்கு முதல் டங்கன் வைட் விருதும் வழங்கப்பட்டது.

அத்தோடு 1991 ஆம் ஆண்டு டங்கன் வைட் பவுண்டேஷன் ஆரம்பிக்கப்பட்டதை கொண்டாடும் முகமாக மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவையால் வவுனியாவிலிருந்து கொழும்பு வரை சமாதானத்தை அடிப்படையாகக் கொண்ட அஞ்சலோட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்குபற்றிய வீரர்கள் குருணாகல் நகரை வந்தடைந்தபோது அவர்களுக்கு டங்கன் வைட்டின் முகம் பொறிக்கப்பட்ட டீ-ஷேர்ட்கள் வழங்கப்பட்டன. அப்போது அதில் ஒரு ஓட்ட வீரர் டீ-ஷேர்ட்டில் பொறிக்கப்பட்டிருந்த டங்கன் வைட்டின் முகத்தை பார்த்துவிட்டு “டங்கன் வைட் என்பவர் யார்?” என மற்றொரு ஓட்ட வீரனிடம் வினவினாராம்.

1996 ஆம் ஆண்டு மறைந்த லக்ஷ்மன் கதிர்காமரினால் டங்கன் வைட்டுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை அந்தஸ்து வழங்கப்பட்டதோடு 1998-ஆம் ஆண்டு டங்கன் வைட் வெள்ளிப்பதக்கம் வென்று சரியாக 50 வருட பூர்த்தியை முன்னிட்டு அப்போதைய வெளிவிவகார அமைச்சரான மறைந்த லக்ஷ்மன் கதிர்காமரினால் முன்மொழியப்பட்டு ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் “தேசமான்ய” விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும் 1999 ஆம் ஆண்டு டங்கன் வைட் என்ற வெள்ளிப்பதக்கம் திரித்துவக் கல்லூரியின் காப்பகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.அத்தோடு பாரம்பரிய சிறப்பு மிக்க கோல்பேஸ் விடுதியின் அப்போதைய தலைவரான மறைந்த Cyril Gardiner டங்கன் வைட்டை கௌரவப்படுத்தும் முகமாக தன்னுடைய விடுதியின் நுழைவாயிலில் டங்கன் வைட்டின் பெயர் தாங்கிய தகடை(Plaque) வைத்தார்.

கண்டி திரித்துவக் கல்லூரியின் காப்பகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட டங்கன் வைட்டின் வெள்ளிப் பதக்கம் -புகைப்படவிபரம் –  www.trinitycollege.lk

டங்கன் வைட் வெள்ளிப் பதக்கம் வென்றது சுசந்திகா ஜயசிங்க 2000-ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வெல்லும் வரை தெற்காசியாவிலேயே தடகள விளையாட்டில் தொடர்ச்சியாக 52 ஆண்டுகள் யாராலும் சமப்படுத்த முடியாததொரு சாதனையாகவே அமைந்திருந்தது.டங்கன் வைட் ஒலிம்பிக் பதக்கம் வென்று எழுபத்தி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்றுவரை அவரது புகழ் மங்காது தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு காரணம் அவரின் தோல்விகளை கண்டு துவண்டுவிடாத தன்மை என்றே கூறமுடியும்.

விளையாட்டில் தன்னுடைய எதிர்காலத்தை அமைக்க விரும்புபவர்களுக்கு டங்கன் வைட் ஒரு நடைமுறை உதாரணமாக விளங்குவதோடு, “ஒருவனுக்கு தன் இலக்குகளை அடைவதில் அளவுகடந்த அர்ப்பணிப்பும் உறுதியும் இருக்குமாயின் அவன் முன்னால் எத்தனை தடைகள் வந்தாலும் அவனால் அவன் நினைத்ததை அடைய முடியும்” என்றும் நிரூபித்திருக்கின்றார்.

Related Articles