
“என்னுடைய பாணில் எப்பொழுதும் அன்பு கலந்திருக்கும்.”
இலங்கைத் தமிழரான தர்ஷன் செல்வராஜா (37), பிரான்ஸ், பரிஸில் (Paris) நடைபெறுகின்ற Grand Prix de la Baguette de Tradition Francaise de la Ville De எனும் பாரம்பரிய பாண் தயாரிக்கும் போட்டியில், Baguette வகைப் பாணைத் தயாரித்து முதலிடத்தை வென்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பரிஸ் நகரத்தில் நடைபெறுகின்ற இப்போட்டியானது இவ்வாண்டும் 30வது தடவையாக மே மாதம் 10ஆம் திகதியன்று நடைபெற்றது. மே 13ஆம் திகதி அன்று, அவர் நடுவர்களால் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 4000 யூரோக்கள் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளதுடன் பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகைக்கு ஒரு ஆண்டிற்குக் குறித்த பாண்களை வழங்க ஒப்பந்தமும் செய்யப்படுள்ளது.
இம்முறை 175 பேர் போட்டியில் கலந்துகொண்டதுடன் 49 பேர் பிழையான அளவு, பிழையான நிறை அல்லது தவறான மாவைப் பயன்படுத்தியதற்காக உடனடியாக இப்போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் 55 – 70 cm நீளம், 250 – 300g நிறையுள்ள பாணை, ஒரு கிலோ மாவில் 18 கிராம் உப்பைக் கலந்து உருவாக்கவேண்டும். பாண்கள் அனைத்தும் 15 நடுவர்களால் கண்களைக் கட்டியவாறு சுவைக்கப்பட்டன. நடுவர்கள் வாசனை, பேக்கிங் நுட்பம் சுவை மற்றும் ஒட்டுமொத்தத் தோற்றம் ஆகியவற்றையும் சோதிக்கின்றனர். ஒரு நடுவர் 142ஆம் இலக்கத்தைக் கொண்ட பாண் தான் வெற்றியாளர் என்பதை முதல் சுவையிலேயே கண்டறிய முடிந்ததாகச் சொன்னார்.



பத்தாண்டுகளுக்கு முன் பிரான்சுக்குக் குடிபெயர்ந்த தர்ஷன் 2017 இல் தனது Au Levain des Pyrenees என்ற பேக்கரியைத் தொடங்கினார். இது நகர மையத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. சிறந்த பாணுக்கான இரகசியம் சிறந்த மாவிலும் நல்ல செயன்முறையிலும் அடங்கியிருப்பதாக தர்ஷன் கூறுகிறார். கடந்த ஐந்தாண்டு காலமாக வெற்றியை நோக்கி உழைத்து வருகின்ற அவர், “ஏற்கனவே 2018 இல் நாங்கள் மூன்றாவது இடத்தைப் பெற்றோம். அதற்குப் பிறகு, அடுத்த முறை நிச்சயம் வெற்றி பெறுவோம், இரண்டாவதாக அல்லது முதலாவதாக வருவோம் என்று நாங்கள் எப்போதும் நினைத்தோம்,” என்று CNNஉடனான நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு பாண் தொகுதியை வெளியே எடுப்பதன் மூலம், 1.35 யூரோக்களுக்கு விற்கப்படுகின்ற ஒவ்வொரு பாணும் சூடாகவும், புதியதாகவும் இருக்கும்” என்று அவர் சொன்னார். “நாங்கள் பாரம்பரிய பிரான்ஸ் பாண் (Baguette) வகையைத் தயாரிப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ள வந்தவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதால், இந்த வெற்றியின் போது நான் கண் கலங்கினேன்.” என்று தர்ஷன் செல்வராஜா AFPயுடனான நேர்காணலில் கூறியிருந்தார்.

