ஒரு இனத்திற்கு அதன் பண்பாட்டு விழுமியங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களின் வரலாற்று பின்னணியும் அவசியம் ஆகின்றது. கற்கால மனிதன் உணவுத் தேவைக்காக வேட்டையாடித் திரிந்தான். ஆதலால் காடுகளுக்கும் ஆறுகளுக்கும் குளங்களுக்கும் மாறி மாறி பிரயாணம் செய்ய வேண்டிய தேவை அவனுக்கு இருந்தது. இத்தேவையினால் அவனுக்கான நிரந்தர வதிவிடத்தின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. குறுகிய நாட்களுக்குள் அவர்களின் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளவேண்டிய நிலைமை அடிக்கடி உருவானது.
கி மு 6000 ஆண்டு காலப்பகுதிகளில் பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதன் பயிர்செய்கையின் மூலம் அவனது உணவுத்தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளத் தொடங்கினான். பயிர்களுக்காக அவன் தனது இருப்பிடத்தை நிலையாக்கி கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பயிர்களின் அடிப்படை தேவையான நீருக்காக அவன் குளக்கரை ஆற்றங்கரை ஓடைகள் என்பவற்றுக்கு அருகில் குடியேற ஆரம்பித்தான். கால ஓட்டத்தில் மக்கள் தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. இடவசதிகள் கருதியும் நீர்த்தேவையை பூர்த்திசெய்வதற்காகவும் மக்கள் குழுமங்களாக பிரிய ஆரம்பித்தனர். இவ்வாறு பிரிந்துசென்ற மக்கள் மற்றுமொரு நீர்நிலையை அண்டியே தங்கள் குடியேற்றங்களை அமைத்தனர். காலப்போக்கில் ஒவ்வொரு குடியேற்றமும் அதன் இருப்பிடம், மற்றும் அம்சங்களைக்கொண்டு அடையாளப்படுத்தப்பட்டன. இந்த அடையாளப்படுத்தலில் இயற்கை அம்சங்களாக தாவரங்கள், மிருகங்கள், பறவைகள், நீர்நிலைகள், நில இயல்புகள் போன்றவை ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனை விட இதிகாச புராண இலக்கிய பெயர்களும் , தொழில் ரீதியான பெயர்களும் , அரசர் ,மேல்நிலை அதிகாரிகள்,தலைவர்கள் போன்றோரின் பெயர்களும் ஆதிக்கம் செலுத்துவதையும் காணலாம்.
இலங்கையின் வடக்கு வாயிலாக கருதப்படுகின்ற வவுனியாவின் இடப்பெயர்வுகளும் இதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். இந்தக் கட்டுரையின் பெரும்பாலான மூலங்கள் ஞா.ஜெகநாதன் என்பவரால் வவுனியா பிரதேச கலாசார விழா 2016 ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட இடப்பெயர் ஆய்வு என்ற ஆய்வில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இதைவிட வேறு சில புத்தகங்கள் மற்றும் கேள்வி அறிவு என்பவற்றின் மூலமும் தொகுக்கப்படுகின்றது.
வவுனியாவின் எந்தப் பக்கமும் கடலின் வாடை இல்லாததாலும் ஆங்கங்கே குன்றுகளும், பரந்து விரிந்த எண்ணற்ற செழிப்பான குளங்களும், காடுகளும் இருப்புகளும், ஊர்களும், ஓடைகளும், கட்டுகளும், கரைகளும், கற்களும், குழிகளும், சூரிகளும், சோலைகளும், தாழிகளும், தோட்டங்களும் பள்ளங்களும், பளைகளும், புராணங்களும், புரங்களும், மடுக்களும், மலைகளும், முறிப்புகளும், மோட்டைகளும், வத்தைகளும், வனப்பு சேர்ப்பதனால் வவுனியாவின் இடப்பெயர்களில் இவற்றின் ஆதிக்கமே பரவலாகி காணப்படும்.
இவற்றை விட வவுனியா பிரதேசங்களில் பரவிக்காணப்படுகின்ற தாவரங்களான அரசு, ஆத்தி , இத்தி , இலந்தை , இலுப்பை, இறம்பை , ஈஞ்சு , கரம்பை, கறிவேம்பு, கருங்காலி, கள்ளி, கான்ச்சூரை, காயா, கூமா, கூழா, சமிழ், சாளம்பை, செங்காராயத்தி, தம்பனை, தான்றி , தேக்கு, நறுவிலி, நெளு, நொச்சி, பம்பை, பனிச்சை, பயறி, பரசு, பாலை, பாவட்டை, பிரம்பு, புளி, பூசினி, பூவரசு, பொடுங்கண், மகிழ், மண்டு, மருது, மரக்காரை, மாறலுப்பை, முள்ளி, விண்ணானை, விளா , வேம்பு என்பனவும் உயிரினங்களான ஆமை, உக்கிளான், எருமை, பன்றி, மரை, மான், கொக்கு என்பனவும், மீன் இனமான குறவையும் தானியங்களான எள், நெல் என்பனவும் இடப்பெயரியலில் முக்கிய இடம் பெறுகின்றன.
இத்தாக்கங்களால் வவுனியாவில் ஊர் பெயர்களில் ஆழ்ந்த அர்த்தங்களும் அழகியலும் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இது வவுனியா மக்களின் தமிழ் புலமையையும் ஆழ்ந்த பாண்டித்தியத்தையும் புலப்படுத்தி நிற்கிறன. இனி சில ஊர்களின் பெயர்களினூடு கவனம் செலுத்தலாம்.
பறங்கி என்பது பூசணியை குறிக்கும் பெயராகும். பூசணி பயிர் செய்கைக்கு அருகில் ஆறு இருந்தமையால் அக்குடியிருப்பு பறங்கியாறு என அழைக்கப்படுகின்றது. பறங்கியாறு புத்துக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் நீர் பாய்ந்தோடும் இயற்கை கால்வாய்களை ஓடை என்று அழைப்பார்கள். மருத மரங்களின் சோலையினூடக அது பாய்ந்து ஓடுகின்றமையால் அவ்விடம் மருதோடை எனப்படுகிறது. இது மருதங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. கண்டி என்பது குளத்தை குறிக்கும். உட்பகுதியை வெட்டி ஆழமாக்கி உருவாக்கப்பட்ட குளம் வெட்டுக்கண்டி என பெயர்பெற்றுக் கொண்டது. தற்போது இந்தக்குளம் நெளுக்குளத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.இது நெளுக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது.
இதைவிட மரங்களை பகுதியாக கொண்ட குளங்களில் முடியும் பெயர்களை கொண்ட கிராமங்களும் காணப்படுகின்றன. கோழிய குளம் என்பது கோலிக்குளம் என்பதன் திரிபாகும் .கோலி என்பது இலந்தை மரத்தை குறிக்கும். நீர்நிலை நெடுகில் இந்த மரம் அதிகமாக காணப்பட்டபடியால் கோலியகுளம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கின்றது. இது மருதங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. சோபாலிகை என்பது பற்றைக்காட்டை குறிக்கும். பற்றைக்காடுகள் நிறைந்த புளியங்குளம் சோபாலிகை புளியங்குளம் என்றிருந்தது. நாளடைவில் சோபால புளியங்குளம் என மருவியது. வவுனியாவுக்கு வியாபாரநோக்கில் வந்த வணிகப்பெண் ஒருத்தி வாங்கியதால் புளியங்குளம் அவள் மரபான பட்டாணியை கொண்டு பட்டாணிச்சியூர் புலங்குளம் என்று பெயர் பெற்றது. புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடமாகவும் அவை தரித்து நின்று செல்லும் இடமாகவும் இருந்த புளியங்குளம் புலிதரித்த புளியங்குளம் ஆனது. இப்பெயர் மருவி நாளடைவில் புலிதறித்த புளியங்குளம் ஆனது.
இராசேந்திரம் என்ற ஒரு உடையாரால் திருத்தி அமைக்கப்பட்டகுளம் இராசேந்திரகுளம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது . நாகர் இலுப்பைக்குளம் என்ற இடம் ஞாபகப்பெயர் என்று கருதப்படுகின்றது சிலோனுக்கு வந்த நாகா இனத்தவர்கள் நாகநாட்டை ஆக்கிரமித்து வன்னி இராச்சியங்களை நிறுவும்வகையில் ஈழத்தின் நாக நாட்டை ஆண்டுவந்த நாகர் இனத்தவர்களின் ஞாபகார்த்தமாக நிலைத்து நிற்கும் பெயர் நாகர் இலுப்பைக்குளம் ஆகும். இது கந்தபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. வைரவர் கோவில் இருந்த புளியங்குளம் வைரவர்புளியங்குளம் ஆனது.
தாயம் என்பது தந்தை வழி உறவை சுட்டிக்காட்டுகிறது. தந்தை வழியாக கடத்தப்பட்டு வந்த குலஉரிமையை உடைய குளம் தாயக்குளம் என்றும் அக்குளத்தைச்சுற்றி அதிகமாக எய்பன்றிகள் வாழ்ந்து வந்ததால் எய் பண்டி தாயங்குளம் எனவும் அவ்வூர் பெயர்பெற்றது.
குளக்கட்டுக்களை அலை தாக்காமல் இருப்பதற்கு உட்புற குளக்கட்டில் கற்களை அடுக்கி வைப்பர். இதன் பொருட்டு அந்த குளம் அலைக்கல்லு போட்டக்குளம் ஆனது. நாப்பண் என்பது நடு என்னும் பொருள் கொண்ட சொல்லாடல் ஆகும். சுற்றிவர பலகுளங்கள் இருக்கும் போது நடுவில் அணைக்கப்பட்டபடியால் நாப்பண் குளம் என பெயர்பெற்றது. நாளடைவில் இது நாம்பன் குளம் என மருவி காணப்படுகின்றது. குளமானது தாழி வடிவில் ஆழமான அமைப்பை கொண்டபடியால் தாழிக்குளம் என அழைக்கப்பட்டது பின்னர் தலிக்குளமாக மருவிப்போனது. யானைகளின் தந்தம் மிக விலைமதிப்பானது. யானைத்தந்தங்களை இறந்த யானைகளில் இருந்து எடுத்து ஊருக்கு கொண்டு செல்ல பயந்து ஒளித்துவைத்து சென்ற கிராமம் கொம்பு வைத்த குளம் என அழைக்கப்பட்டது.
சூரி என்பது சிறிய நீர்நிலைகளை குறிக்கும், எருமை மாடுகளில் ஆண் மாட்டை கடா என்பார்கள். பழக்கிய எருமை மாடுகளை கொண்டு சென்று, காட்டு குழுவின் மாடுகளை, நீர்நிலைகளுக்கு அருகே காலில் சுருக்கு போட்டு பிடிப்பது வழக்கமாகும். இப்படியான வழக்கம் உடைய ஊர் கடாச்சூரி என பெயர்பெற்றது நாளடைவில் கிடாசூரி ஆனது. பாளை என்பது நீர்நிலை அருகே மக்கள் தங்கி வாழும் இடங்களை குறிப்பது. அவ்விடங்களுக்கு அருகே மருக்காரை என்ற மரம் செறிந்து காணப்பட்டபடியால் அவ்விடம் மருக்காரம்பாளை ஆனது. மடு என்பது ஒரு நீர் நிலையை குறிக்கும். மாரி காலங்களில் நீர் பாய்ந்து ஓடுவதால் அதை மறித்து குளங்கள் கட்டப்பட்டுள்ளன. குளங்கள் கட்டப்பட்ட பின்பும் அந்த பூமி மடு என்றே அழைக்கப்படுகின்றது. சேமம் என்றால் புதை பொருட்களையும் அரண்களையும் குறிக்கும். இதனால் சேமம் கொண்டபிரதேசங்களில் இருக்கின்ற மடு சேமமடு எனப்படுகின்றது.
காட்டு பிரதேசங்களின் நகரமயமாக்கலின் போது பெரிய மரங்களை வெட்டி எடுத்து விடுவார்கள். அதன் பின்பு சிறிய மரங்களே எஞ்சி இருக்கும். இப்படி சிறிய மரங்களினால் எஞ்சிய காடு குருமன் காடு என பெயர் பெற்றது நாளடைவில் குருமண்காடு ஆகியது. கரம்பை மரங்களால் செழிக்கப்பட்ட இடத்தை உடைய காட்டு பிரதேசம் கரப்பன் காடு ஆனது. இவை வைரவர்புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவை சார்ந்தவை.
பயிச்செய்கை நடைபெறும் இடங்களை தோட்டம் என அழைத்தார்கள், நீர்ப்பாசன விவசாயம் செய்யப்படும் இடங்களை பூ என பூரிப்புடன் அழைப்பர். அதை தாண்டி அதற்கு அருகில் தோட்டம் செய்யப்படும் இடம் பூந்தோட்டம் என அழைக்கப்படுகிறது. அதோடு வத்தை என்பதும் தோட்டத்தை குறிக்கும். அரச தேக்கம் தோட்டங்களில் குடியேறிய மக்கள் அவ்விடத்தை தேக்கத்தை என அழைத்தனர். மந்தை என்பது ஆடு மாடுகள் கூட்டமாக உள்ளதை குறிக்கும் பெயராகும். ஓ என்பது சென்று தங்குவதைக்குறிக்கும். மந்தைகள் சென்று தாங்குகின்ற இடமாக அமைவதால் ஓமந்தை என்ற ஊர் பெயர் பெறுகிறது.
இதில் பெயர்பெற்ற வவுனியா நிலையங்களையே சுட்டிக் காட்டியுள்ளேன். இதை விடவும் ஏனைய இடங்கள் அவற்றின் தனித்துவமான காரண ஊர் பெயர்களுடன் இன்றும் விளங்குவதை காணக்கூடியதாக அமைகின்றது. இப்படி செழுமையும் செழிப்பும் நிறைந்த ஊர்ப்பெயர்கள் குடியேற்றங்களால் அளிக்கப்படுவது மனவருத்தத்துக்குரியதொன்றாகும். மருவிப்போன பெயர்களைக்கூட ஆதாரப்படுத்தி விடலாம் ஆனால் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாக்கி அழிக்கப்பட்ட தமிழ்க்கிராமங்களின் அடையாளங்கள் ஆதாரப்படுத்த முடியாதன. நவீனமயமாக்கலின் போது ஊர்ப்பெயர்களும் நவீனமாக்கப்படுகின்றமை வரலாறுகளை மறைப்பதாக அமைந்து விடுகின்றது. அழகிய தமிழ்ப் பெயர்களை உடைய எமது வரலாற்றுச் சிறப்பைக்கூறும் ஊர்களின் காரணப்பெயர்களின் செழுமைமிக்க காரணமறிந்து அவற்றை நிலைபெறச் செய்வது தமிழர்களின் தலையாய கடமையன்றோ