Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

மழையெனப்படுவது யாதெனில்… 

என் நினைவில் இருக்கின்ற என் பாட்டனின் வீடானது மழைக் காலத்தில், வீட்டின் பின்னே ஓடும் மலை ஓடையின் சலசலப்பில் தான் விழித்துக் கொள்ளும். வீட்டின் முன்னே வேயப்பட்டிருக்கும் தென்னங்கூரையைத் தான் முதலில் மழை நனைக்கும். அடுக்களை என்று என ஒன்று இருந்தாலும், அந்த கூரையின் கீழே இருக்கும் ஒரு இரட்டை மண் அடுப்பில்  ஓர் தசம மக்களுக்கு உணவினை வடித்துக் கொண்டே இருந்த காலம் அது.

மழையின் கால்கள் கூரையில் நடக்கத் தொடங்கியிருந்தால், அடுப்பின் மீது இருப்புத் தட்டினை மூடிவிட்டு அடுக்களையில் தஞ்சம் புகுந்து கொண்டிருக்கும் அந்த சோத்துப் பானையும், காய வைக்க நினைத்து மறந்து போயிருந்த அகத்திக் கட்டைகளும், வேர்களும். அந்த அடுக்களையில் இல்லாத இரட்டை மண் அடுப்புகள் தான் எத்தனை அவதாரம் எடுக்கின்றன. ஆற்றுக்கு மிக அருகில் இருக்கும் களிமண்ணை அள்ளிக்கொண்டு வந்து, இதோ பார் என்னும் நிமிடத்திற்குள் உருவாக்கி, சாணியிட்டு மொழுகி, திருநீறு பூசி கடவுளை வேண்டிக் கொள்வார் என் அப்பத்தா. மழைப் பொழுது என்றால், புது அடுப்பு உருவாக்கத்திற்கான நாட்கள் நெருங்கிவிட்டதாகவே இருக்கும். சொதசொதக்கும் தென்னங்கூரையின் இற்றுப்போன மணத்துடன் வாசலை அடையும் மழையானது, வீட்டின் வலது பக்கத்தில் உயர்ந்திருக்கும் கோடைத்தாயின் நிலத்தில் விளையும் குளம்பியின் நிறத்தில் தான் இருக்கும்.

மழைக்காலம் என்றால் போதும், துணிதுவைக்க ஆற்றங்கரை நோக்கி இரும்பு வாளி நிறைய துணிகளை அமுக்கி, தலையில் வைத்துக் கொண்டு, வீட்டின் பொடிசு பட்டாளங்களை இழுத்துக் கொண்டு, விரையும் சாலையில் நடக்கத் தேவையில்லை. முழங்கால் தெரியும் வரை பள்ளிக்கூட சீருடைப் பாவடையை அள்ளி இடுப்பில் முடிந்து கொண்டு மழையோடு மழையாக ஓடையில் நின்று துணி துவைத்த அத்தை ஒருத்தி எனக்கு இருக்கின்றாள். அவள் தான் எங்கள் வீட்டில் பெரிய படிப்பாக செவிலியருக்கு படித்துவிட்டு சிங்கப்பூருக்கும், மலேசியாவிற்கும் சென்று வந்தாள். ஆனாலும் அவள் மனதிலும் ஒட்டியிருக்கும் அந்த மழைக் காலத்து பிசுபிசுப்பு.  அந்த மழைக் காலங்கள் ஆலாதியானது. அந்த மழை இரவுகள் இன்னும் நெருக்கமானது. சூடாக வடித்து, உப்பிட்டுத் தரப்படும் கஞ்சியும், வதக்கி தரப்படும் உப்புக் கருவாடும் கூட்டுக் குடும்பத்தின் வாசமாகிப் போனது.  எங்களின் மழைக்கால அதிகாலைகளும், அந்தி மாலைகளும் அதிக மணமிக்க தேநீரினால் குளிர் காய்ந்து கொண்டன.

ஒரு விவசாயின் வீட்டு அடுக்களைகள் தான் நிறத்தாலும், மணத்தாலும் அதிகம் நிரம்பியிருக்கின்றது. காலத்திற்கு ஏற்றவாறு எங்களின் கூட்டுக் குடும்பத்தில் பதின்ம நபர்களுக்கும்  உணவானது  செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். புது அரிசியினை உலக்கையில் இட்டு குத்தி, அந்த மாவுடன் முள் முருங்கையினை சேர்த்து செய்யப்படும் அடையினை வலது கையாலும், இடது கையாலும் மாற்றி பிடித்துக் கொண்டு சுடச் சுட சாப்பிட்ட அனுபவங்கள் தான், இன்றும் ஊர் பக்கம் சென்றால், முள்முருங்கை எங்கே என தேடச் சொல்லுகின்றது.

படம்: indiainruralonline

சமைத்து முடித்துவிட்டு பண்டங்களும், பாத்திரங்களும் அடுக்களையில் சேரும் போது, கனன்று கொண்டிருக்கும் தீ கங்குகளில் பலாக் கொட்டையினை வாட்டி வீட்டில் இருக்கும் வாண்டுகளுக்கு பங்கு பிரித்து கொடுப்பார் என் அப்பா. அது பலா விதைகளாக மட்டுமென இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நாள், நிலக்கடலையாக இருக்கலாம், மறு நாள் வெற்றிலைக் கிழங்காக இருக்கலாம். புட்டிற்கும் கொழுக்கட்டைக்கும் ஏங்கிய நாட்கள் என எதுவும் இல்லை. ஆட்டாங்கல்லும், அம்மிக்கல்லும், உரலும்-உலக்கையும் என அனைத்தும் என் அப்பாத்தாவின் தாய் வீட்டு சீதனம். அந்த சீதனத்தில் தான் பசியாறிக் கொண்டிருந்தோம் மூன்றாம் தலைமுறையாக.

அந்த மஞ்சாளாறு நீர் பிடிப்பில் நீந்தித் திரிந்த கெண்டைகளும், கெழுத்திகளும், கட்லாக்களும் உயிருடன் தான் மிதிவண்டிகள் வழியாக எங்கள் வாசல் வந்து சேர்ந்தன.  அப்பத்தாள் மீன் சமைக்க மாட்டாள். என் அப்பாவும், சித்தப்பாவும், சின்ன அத்தையும் மீனை சமைப்பதில் பெறும் தேர்ச்சி பெற்றவர்கள்.

சாம்பல் அள்ளி மீனின் செதில்களில் தேய்ப்பதில் தொடங்கி, மீன் கறியில் அரைத்த மசாலா சேர்க்கும் வரை பக்கத்திலே இருப்பேன். உயிரியல் பாடத்தில் பெரும் புள்ளி அத்தையானவள். இது குடல், இது தலை, இது செதில், இது இன்னபிறவென அருவருப்பில்லாமல் பாடம் நடத்துவாள். தாளித்து, மசாலா அரைத்து, புளித் தண்ணீர் ஊற்றி, முதல் கொதியல் வந்த பின்பு மீன் துண்டங்களை அதில் நீந்த விடுகையில் தட்டுடன் சாப்பிட வரிசையாக அமர்ந்திருப்போம். தட்டில் ஆவி பறக்க வெள்ளைச் சோறு காத்துக்கிடப்பது போல், எங்களின் ஆவிகளும் முள்ளற்ற மீன் துண்டங்களுக்காக காத்திருந்தது.

பதினான்கு  வருடங்களுக்கு முன்பான வாழ்வினை நான் மேலே விவரித்து இருக்கின்றேன். நீருக்கும் விவசாயத்திற்குமான தொடர்பில் தான் விவசாயக் குடும்பங்களில் நிம்மதி என்ற வார்த்தையும் மனநிறைவு என்ற சொல்லும் முற்று பெறுகின்றது. அந்த நீர் நிலைகள் இன்றில்லை. நீர் நிலைகளில் நீர் இல்லாமல் இருந்தது. இருந்த நீரினை மிச்சப்படுத்த லட்சக் கணக்கில் தெர்மாக்கோல் சீட்டுகள் வாங்கிப்  போடப்பட்டன.

ஊரறியும் வகையில் நெல்லை விளைவித்து உலகிற்குப் படைத்த டெல்டா மாவட்டங்களில் கஞ்சிக் களையங்கள் வைக்கப்பட்டது என்பதும் வரலாறு தான். சில பத்தாண்டுகளுக்கு முன் வந்த பெரும் பஞ்சத்தில் மரவள்ளிக் கிழங்கு மாவினை களியாகக்  கிண்டிச்  சாப்பிட்ட முன்னாள் விவசாயிகளும் இன்று எதாவது ஒரு பெருநகரத்தில், ஏதோ ஒன்றாக தன்னை மாற்றிக் கொண்டு இயந்திரங்களுக்கு நடுவில் வேலை செய்து கொண்டு தான் இருக்கின்றான். மாறும் பருவ நிலை முதல் வாழும் வாழ்வியல் சூழல் வரை இன்றைய விவசாயிகளுக்கு பெரும் எதிரிகளாகவும் சவால்களாகவும் இருக்கின்றன.

படம்: hiveminer

இந்த வருடம் பருவ மழை பொய்த்துப் போனதால், தினமும் ஒரு முறையாவது மன உளைச்சலில் விவசாயி தற்கொலை, விவசாயி மாரடைப்பால் உயிரழப்பு என்ற செய்திகளைப்  பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அதே செய்தி ஊடகங்கள் வழியாக, நிவாரண நிதி கேட்டு அரை நிர்வாணமாக விவசாயிகள் போராட்டம், மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் எதிரில் எலிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம் என்ற செய்திகளும் தொடர்ந்து வந்த வண்ணமே இருக்கின்றது. நதி நீர் இணைப்பு, நதி நீர் பகிர்வு என்ற திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் கிடந்தவாறே இருக்கின்றன. அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்ற உண்ணாவிரதம் இருக்கின்றார்கள் விவசாயிகள் என்ற செய்திகளையும் பார்க்கின்றோம். அந்த அத்திக்கடவு திட்டம் ஆழ் கிணற்றில் அறுபதாண்டு காலங்களாக வெறுமனே இருப்பதையும் காண்கின்றோம்.

 

படம்: indiatoday

இந்தியாவின் முதுகெலும்பு கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து கொண்டே வந்து முறிந்துவிடுமோ என்ற பயம் உள்ளூற உருவாகி வருகின்றது. இந்த புதுவுலகில் நடைபோடும் இந்தியாவும் விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த தொழில்களையுமே அதிகம் செய்கின்றது. ஆனாலும் விவசாயிகளிற்கான திட்டங்கள் அனைத்தும் வங்கிக் கடன் திட்டங்களோடு நின்று விடுகின்றது.

நதி நீர் இணைப்பும், நதி நீர் பங்கீடும் தீர்வுகளே தராத காரணிகளாக இருக்கும் பட்சத்தில் ஏன் அந்த காரணிகளை கையில் வைத்துக் கொண்டு  ஒவ்வொரு முறையும் அண்டை மாநிலங்களின் உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு முறையும் அணை கட்டுகின்றோம் என்னும் போது வயிற்றில் நெருப்பினை கட்டிக்கொண்டு போராட கிளம்ப வேண்டும்.  நம் சொந்த மண்ணில் அறுவடை செய்து உணவுண்ண  வழி செய்யாத வர்கள்தான்  மீத்தேனையும் , ஹைட்ரோ கார்பனையும், மண்ணை சல்லடையிட்டு எடுத்துச் செல்ல உதவுகின்றார்கள் . நீர் ஆதாரங்களாகப்  பல ஆண்டுகள் விளங்கிய ஆறுகளில் இருந்து தண்ணீரைப் பெற நமக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆனாலும் அண்டை நாட்டு குளிர்பான உற்பத்தியாளர்களுக்கு குறைந்த விலையில் தண்ணீரை விற்க அனுமதி அளிக்கப்படுகிறது.

காவேரி-கர்நாடகா, முல்லை, சிறுவாணி – கேரளா, கிருஷ்ணா – ஆந்திரா என பெரும் நீராதரங்களுக்காக நாம் அண்டை மாநிலங்களையே அதிகம் நம்பியிருக்கின்றோம். ஆனாலும் 1969ல் தொடங்கப்பட்ட பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை செயல்முறைப்படுத்த முயன்ற போது  “அதனால் கேரள மக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிப்படைவார்கள்” என்ற வாதத்தினை முன்வைத்து திட்டத்தை எதிர்த்தது கேரளா அரசு. அன்றைய தமிழக அரசு அம்மக்களின் சாதகம், பாதகம் பார்த்து திட்டத்தைக்  கைவிட்டது. 1958ல் இருந்து நெய்யாறு அணையின் இடப்பக்க கால்வாய் வழியே விளவங்கோட்டிற்கு தண்ணீர் வந்ததாக செய்தியே இல்லை. நாஞ்சில் நாடு எனப்படும் கன்னியாகுமரி  திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெற்களஞ்சியமாக விளங்கியது. ஆனால்  தமிழகத்தோடு இணைந்த பின்னர் கன்னியாகுமரியின்  வேளாண்மை வரலாறு வேறு விதமாக எழுதப்பட்டது.

வைகை என்னும் நதியானது துடைத்து வைக்கப்பட்டார் போல் இருக்கின்றது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாக சீரான இடைவெளிகளில் மதுரை சென்றுவந்த போதும் வைகையில் ஒரு துளி நீரையும் காணவில்லை. நதி பெரும் பிரவாகத்துடன் நகரத்தில் வலம் வந்து சென்ற காலங்களிலும், மலக்குழாய்களை நீரோடும் பகுதியில் பதுக்கினார்கள். ஆலைக் கழிவுகள், சாக்கடைகள் அனைத்தும் நதியில் கலக்கப்பட்டது.

தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் முற்போக்கு எண்ணமும் , தொலைநோக்குப் பார்வையும்  கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஆற்று நீர் வீணாகக்  கடலில் கலப்பதை விரும்பவில்லை. அந்நீரை முற்றிலும் சேர்த்துவைக்க ஆற்றின் அருகே ஏராளமான குளங்களையும், கண்மாய்களையும் வெட்டினார்கள். வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் குளங்கள் மற்றும் கண்மாய்களில் நீரை நிரைத்தார்கள். மழைப் பொய்த்துப் போகும் காலங்களில் ஏரி, கண்மாய், மற்றும் குளங்களில் இருந்த நீரினை வேளாண்மைக்காக பயன்படுத்தினார்கள். அவர்களின் அன்றைய கட்டுமான திறனும் தொலை நோக்குப் பார்வையும் இன்றைய காலகட்டத்தில் சாத்தியப்படுமா என்ற கேள்வியுடன் கட்டுரையினை முடிக்கின்றேன்.

Related Articles