
‘மாறுதல் என்பது சொல் அல்ல செயல்’ என்ற கூற்றை முன்னிலைப்படுத்தும் ‘கலைத்தாய் அறக்கட்டளை’ ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு சிலம்பப் பயிற்சி கொடுக்கும் இடமாகத் தொடங்கப்பட்டு இன்று தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலைகள் மற்றும் நாட்டுப்புறக் கலைகள் பலவற்றையும் தங்கள் பகுதி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்த்து வருகின்றனர். இங்கே சிலம்பாட்டம், குத்து வரிசை,மல்யுத்தம், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கோலாட்டம், பெரிய கம்பாட்டம், சாட்டைக் குச்சியாட்டம் என அனைத்தும் கற்றுத் தருகிறார்கள். மேலும் கிராமியப் பாடல்கள் பாடவும் கற்றுத் தருவதோடு இயற்கை வேளாண்மை, சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். இங்கு பயின்ற மாணவர் பொன்லோகேஷ் மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் சிறந்த விளையாட்டு வீரருக்கான ஐந்து தங்கப் பதக்கத்தையும்,இரண்டு வெள்ளிப் பதக்கத்தினையும், தனித்திறமையாளர் பட்டத்தினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டு மே மாதம் மாணவர்கள் சசிகுமார் மற்றும் சுரேஷ்குமார் இருவரும் ஜெர்மனி பிராங்க்ஃபர்ட் தமிழ்ச்சங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்று ஒருமாத காலம் பயிற்சி கொடுத்து வந்துள்ளார்கள்.

கலைத்தாய் அறக்கட்டளை குழுவின் பயிற்சித் தளம்.

சிலம்பத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களில் சில.

கைப்பாடம் அல்லது சிலத்து அல்லது நிழற்சண்டை. இதன் மூலம் கராத்தே மற்றும் குங் ஃபூ போன்ற கலைகளுக்கு முன்னோடி சிலம்பம் எனலாம்.

சில்த்தா கம்பு அடிவரிசை. அதாவது சிறிய கம்புகளை வைத்துச் சண்டையிடும் முறை.

கோர்வை சண்டை. இருவர் கைகளிலும் பெரிய மூங்கில் கம்புகள் வைத்துச் சண்டையிடும் முறை.

உறுமி மற்றும் சுருள்வாள். இந்தக் கருவியைப் பழங்காலத்தில் போர்முனையில் அதிகம் பயன்படுத்தியுள்ளனர். ஏனென்றால் இதன் மூலம் காயம் ஏற்பட்டால் எளிதில் ஆறாது.

இது நட்சத்திரப் பந்து முறை. போர்க்காலங்களில் பெரிய கூட்டத்தை எதிர்கொள்ள இது பயன்படுத்தப்பட்டது.

இது கோபுடா அல்லது கட்டாரி கத்தி. அனைத்து அரசர்களும் தங்களது இறுதி ஆயுதமாகப் பயன்படுத்தும் கருவி.

மான்கொம்பு சண்டை முறை. இதுவும் போர்முனையில் பயன்படுத்தப்பட்டது. இதன் தனிச் சிறப்பு கத்தியைக் கொண்டு தாக்கினாலும் இந்த ஆயுதம் உடையாது.

பட்டாக் கத்தி. இதுவும் போர்முனையில் பயன்படுத்தப்பட்டது.

இது இரட்டைக் கத்தி அடிமுறை.

கோடாரி மற்றும் கேடயம். இது தற்காத்துக்கொண்டே தாக்குவதற்குப் பயன்படுவது.

கரண முறை. இவைகள் நமது சிலம்பத்தில் உள்ள ஒரு பகுதியே. இதைத்தான் ஜிம்னாஸ்டிக் என்று தனியாகப் பயில்விக்கின்றனர் வெளிநாட்டினர்.

நட்சத்திர சுற்று முறை.

இதுதான் படை வீச்சு. அதாவது சிலம்பம் விளையாடத் தெரிந்த ஒருவர் தன்னைச் சுற்றி எத்தனை எதிரிகள் இருந்தாலும் அவர்களைச் சிலம்பம் கொண்டு தடுத்துத் தாக்கும் முறை. சிலம்பத்தில் நான்கு, எட்டு, பன்னிரண்டு வீடு கட்டி அடிக்கும் முறை உள்ளது. ஆனால் கொங்கு மண்டலத்தில் மட்டும்தான் பதினாறு வீடு கட்டி அடிக்கும் முறை உள்ளது, அதுதான் இந்தப் படை வீச்சு.