ஒருவன் எல்லாவற்றுக்கும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தானாம்.
காலை எழுந்தவுடன், ‘இந்தநாள் எப்படியிருக்குமோ’ என்று கவலை. அந்தநாள் நல்லவிதமாகச் சென்றாலும், ‘மாலையில் ஏதேனும் நடந்துவிடுமோ’ என்று கவலை. பேருந்தைப் பிடிக்கச்சென்றால், ‘அது ஏற்கெனவே போயிருக்குமோ?’ என்று கவலை. ஒருவேளை பேருந்து வந்து ஏறிவிட்டால், ‘உட்கார இடம்கிடைக்குமா?’ என்று கவலை. உட்கார இடம்கிடைத்துவிட்டால், ‘பேருந்து போக்குவரத்தில் சிக்கிக்கொள்ளுமோ’ என்று கவலை, அட, அதுகூடப் பரவாயில்லை, ‘ஏதேனும் விபத்து நடந்துவிடுமோ’ என்றுகூடக் கவலைப்படுவான் அவன்.
இந்தக் கவலைகள் எவற்றுக்கும் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை, கவலைப்படுவது அவனுடைய இயல்பு, அவ்வளவுதான்.
அவனைத் திருத்த நினைத்தார் ஒரு நண்பர். ஒருநாள் அவனோடு அமர்ந்து நிதானமாக அறிவுரை சொன்னார், அவனுடைய கவலைகளையெல்லாம் ஒவ்வொன்றாகக் கேட்டு, அவற்றுக்கான விளக்கத்தை(அதாவது, மருந்தை)த் தந்தார், அவற்றையெண்ணி அவன் கவலைப்படவேண்டியதில்லை என்று தெளிவுபடுத்தினார்.
எடுத்துக்காட்டாக, ‘பேருந்து கிடைக்காதோ?’ என்கிற கவலைக்கு மருந்து, ‘ஒருவேளை பேருந்து கிடைக்காவிட்டால், ஆட்டோரிக்ஷாவில் பயணம்செய்யலாம்’ என்ற எண்ணம்தான்.
‘ஆட்டோரிக்ஷாவுக்குக் காசு இல்லையே’ என்று கவலைப்பட்டால்?
உடல் தெம்பாகத்தானே இருக்கிறது. மளமளவென்று நடந்துவிடவேண்டியதுதான்!
நடந்தால் வியர்க்குமே என்று கவலை வருகிறதே.
அலுவலகம் முழுக்கச் செயற்கைக்குளிர்தானே? உள்ளே நுழைந்த ஐந்தாவது நிமிடம் எல்லாம் சரியாகிவிடும்.
இப்படி அவனுடைய ஒவ்வொரு கவலைக்கும் அவரிடம் விளக்கம் இருந்தது. எப்பேர்ப்பட்ட கவலையையும் சமாளித்துவிடலாம் என்று அவர் அவனுக்குப் புரியவைத்தார்.
எல்லாவற்றையும் கேட்டபிறகும், அவனுடைய முகத்தில் தெளிவில்லை, இன்னும் குழப்பத்துடனே காணப்பட்டான்.
அவர் புன்னகையுடன் கேட்டார், ‘இப்ப உன் மனசுல எந்தக் கவலையும் இல்லைதானே? அப்புறமென்ன குழப்பம்?’
‘இப்ப எந்தக் கவலையும் இல்லைதான்’ என்றான் அவன், ‘ஆனா, அடுத்து என்ன கவலை வருமோன்னு கவலையா இருக்கு!’
அப்போதுதான் அவருக்குப் புரிந்தது, கவலையென்பது உண்மையில் ஒரு மனநிலை. கவலைப்படுவதற்கு எதுவுமே இல்லையென்றாலும், ஊரார் கவலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு கவலைப்படுவோம், அப்படி எந்தக்கவலையும் கிடைக்காவிட்டால், கவலைப்படுவதற்கு எதுவுமில்லையே என்றாவது கவலைப்படுவோம்.
இதில் வேடிக்கையான விஷயம், இப்படி வெறுமனே கவலைப்படுவதால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை. அந்த நேரத்தில் அந்தப் பிரச்னையைச் சரிசெய்ய ஏதேனும் செய்தாலாவது பயனுண்டு.
எடுத்துக்காட்டாக, ‘பேருந்து கிடைக்காதோ?’ என்பது எதார்த்தமான பிரச்னைதான், ஆனால், அதையெண்ணிக் கவலைப்படுவதால் எந்தப் பயனும் கிடையாது, இவர் கவலைப்படுகிறாரே என்பதற்காக அரசாங்கம் நான்கு பேருந்துகளைக் கூடுதலாக இயக்கப்போவதில்லை. அதற்குப்பதிலாக, அவர் வழக்கமான நேரத்தைவிடக் கால்மணிநேரம் முன்கூட்டியே கிளம்பினால் அந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம்.
ஆனால், பசியோடு இருக்கும்போது நம்மால் தெளிவாகச் சிந்திக்கமுடியாததைப்போல, கவலையால் குழம்பியிருக்கிற மனத்தால் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணமுடியாது. ‘பேருந்து கிடைக்காதோ?’ என்கிற கேள்வி மனத்தின் பெரும்பகுதியை மூடிவிட்டால், ‘பேருந்து கிடைப்பதற்கு என்ன செய்யலாம்?’ என்கிற ஆக்கப்பூர்வமான கேள்விக்கு இடமிருக்காது.
அதற்காகக் கவலைகளே கூடாது என்பதல்ல. அந்தக் கவலைகள்தான் நம்மைத் தீர்வைநோக்கிச் செலுத்துகின்றன. வெறும் கவலைகளைமட்டும் நிரப்பிவைத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான் முக்கியம்.
என்னசெய்யலாம்?
முதல்வேலையாக, வெறும்கவலைகளால் பயனில்லை என்பதை மனத்துக்குச் சொல்லித்தரவேண்டும். வெறும் சொற்களாக அல்ல, ஆதாரங்களுடன், தரவுகளுடன்.
ஒரு பத்திரிகைக்கட்டுரையானாலும் சரி, ஆய்வறிக்கையானாலும் சரி, அவற்றை எழுதுவோர் தாங்கள் சொல்லவரும் கருத்துகள் எந்த அளவு உண்மையானவை என்பதை நிரூபிப்பதற்காகப் பலவிதமான தரவுகளைத் தருவார்கள். எடுத்துக்காட்டாக, இதுபற்றி முன்பு நிகழ்த்தப்பட்ட ஒரு பரிசோதனையின் முடிவுகளைச் சொல்வார்கள், இத்துறைசார்ந்த அறிஞர்களின் கருத்துகளைச் சொல்வார்கள், புள்ளிவிவரங்களைச் சேர்ப்பார்கள், இதன்மூலம், அவர்கள் சொல்லவரும் கருத்து உண்மைதான் என்று வாசகன் நம்பத்தொடங்குவான்.
‘தினமும் இத்தனைலிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும்’ என்று சொன்னால், ‘ஏன் குடிக்கவேண்டும்?’ என்றுதான் கேள்வி வரும். அதற்குப்பதிலாக, தினமும் அந்த அளவு தண்ணீர் குடித்தவர்கள் அடைந்திருக்கிற நன்மைகளைப் புள்ளிவிவரங்களுடன் ஒரு மருத்துவர் சொன்னால், நம்பிக்கை வரும், அதைப் பின்பற்றுகிற எண்ணமும் வரும்.
அதுபோல, ‘வெறும்கவலையால் எந்தப் பயனும் இல்லை’ என்று நம் மனத்துக்குப் பழக்கப்படுத்தவேண்டும். அதற்கான புள்ளிவிவரத்தை நாமே தயாரிக்கலாம்.
சொல்லப்போனால், இதை நாம்தான் தயாரிக்கவேண்டும். கவலைகள் நமக்குள்மட்டுமே முளைக்கின்றவையில்லையா? அவற்றை வெளியே சொன்னாலன்றி இன்னொருவரால் நமக்கு உதவ இயலாது. நம் கவலைகளை நாமே அலசி ஆராய்ந்து ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டும். அதற்கு, ‘கவலைக் கணக்கெடுப்பு’ பயன்படும்.
அதென்ன ‘கவலைக் கணக்கெடுப்பு’?
மிக எளிய விஷயம்தான். ஒரு தாளை எடுத்துக்கொள்ளுங்கள், அதன் நடுவே நெடுக்குத்தாக ஒரு கோடு கிழித்து இரண்டாகப் பிரித்துக்கொள்ளுங்கள். அந்தத்தாளையும் ஒரு பேனாவையும் சட்டைப்பையிலோ, கைப்பையிலோ வைத்துக்கொள்ளுங்கள்.
அதன்பிறகு, உங்களுக்கு ஏதேனும் ஒருவிஷயத்தைப்பற்றிக் கவலை வரும்போதெல்லாம், அந்தத்தாளை வெளியிலெடுங்கள், அந்தக்கவலையை எழுதிக்கொள்ளுங்கள். அதனருகே (கோட்டுக்கு வலப்புறம்) ஒரு புள்ளி வையுங்கள். இப்படி ஒவ்வொரு கவலையையும் எழுதி, புள்ளி வைத்துக்கொள்ளுங்கள்.
ஒருவேளை, ஏற்கெனவே வந்த கவலை மீண்டும் வந்தால், ஏற்கெனவே வைத்திருக்கும் புள்ளிக்கு அருகே இன்னொரு புள்ளி வைக்கலாம். அதாவது, ஒவ்வொருமுறை கவலைப்படும்போதும் ஒரு புள்ளி. ஒரே கவலை திரும்பத்திரும்ப வந்தால், அதனருகே இருக்கும் புள்ளிகள் அதிகரித்துக்கொண்டே செல்லும்.
சிறிதுநேரத்தில், உங்களுடைய கவலை நிஜமாகிவிடும், அல்லது பொய்யாகிவிடும். அப்போது, அந்தத்தாளை எடுத்து அதைக் குறித்துக்கொள்ளுங்கள்: நிஜமாகிப்போன கவலைகளுக்கு ஒரு ‘டிக்’ போடுங்கள், பொய்யாகிப்போன கவலைகளை அடித்துவிடுங்கள்.
எடுத்துக்காட்டாக, காலையிலிருந்து ‘பேருந்து கிடைக்காதோ’ என்று ஏழுமுறை கவலைப்பட்டிருக்கிறீர்கள். உண்மையில் பேருந்து கிடைக்காவிட்டால், அந்த ஏழு புள்ளிகளுக்கும் அருகே ஒரு டிக் போடுங்கள். பேருந்து கிடைத்துவிட்டால், அந்தக்கவலை பொய்யாகிவிட்டது, அதை அடித்துவிடுங்கள்.
இப்படி நாள்முழுக்க எழுதிய விஷயங்களை இரவில் எடுத்துப்பாருங்கள். அல்லது, வாரம்முழுக்க எழுதியவற்றை ஞாயிற்றுக்கிழமை வாசியுங்கள், அதில் எத்தனை டிக்? எத்தனை அடித்தல்கள்? உங்களுடைய கவலைகள் பெரும்பாலும் நிஜமாகின்றனவா? அல்லது, பொய்யாகின்றனவா? அந்தச் சதவிகிதத்தைக் கண்டறிந்து எழுதிவைத்துக்கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக: 80% கவலைகள் பொய்யாகின்றன என்று கணக்கிட்டு எழுதுங்கள்.
இங்கே 80% என்பது ஒரு குத்துமதிப்பான எண்தான். உங்களுக்கு அது 70%ஆக இருக்கலாம், 90%ஆகக்கூட இருக்கலாம்.
இதை நம்புவது சிரமம்தான். முயன்றுபார்த்தால்தான் தெரியும். பெரும்பாலான கவலைகள் அப்போதைக்குப் பெரிய பிரச்னைகளாகத் தோன்றும். ஆனால், சிறிதுநேரம்கழித்து (அல்லது, சிலநாள்கழித்து) அவை அற்பமாகிவிடும். இது கவலைப்பட்ட கணத்தில் நமக்குத் தெரியாது, பின்னர் கணக்கெடுத்தால்தான் தெரியும்.
யோசித்துப்பாருங்கள், சிறுவயதில் ‘இன்னிக்குப் பள்ளிக்கூடத்துக்குத் தாமதமாப் போறோமே, வாத்தியார் அடிப்பாரோ?’ என்பது பெருங்கவலையாக இருந்திருக்கும். இப்போது அதை யோசித்தால் சிரிப்புதான் வருகிறதில்லையா? ஒருவேளை உண்மையிலேயே ஆசிரியர் அடித்திருந்தாலும்கூட, அதற்குநாம் அவ்வளவு கவலைப்பட்டிருக்கவேண்டியதில்லை என்பது இப்போதுதான் புரிகிறது. பெரும்பார்வையில் சிறுகவலைகள் அர்த்தமற்றதாகிவிடுகின்றன, அவற்றால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை என்பது விளங்குகிறது.
சரி, கவலையால் பெரிய பயனில்லை என்பது புரிகிறது. அடுத்து?
இதே ‘கவலைக் கணக்கெடுப்’பைக் கொஞ்சம் மாற்றியமைக்கலாம். அதன்மூலம் தீர்வுகளை நோக்கி நகரலாம்.
முன்பு கவலைகளை எழுதியபின் அருகே ஒரு புள்ளி வைத்தீர்கள் அல்லவா? இப்போது, அந்தப் புள்ளியை வைத்தவுடன், அரைநிமிடம் அந்தக்கவலைக்கான தீர்வைப்பற்றி யோசியுங்கள். வெறும் அரைநிமிடம் போதும், அதற்குள் தீர்வு கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் பிரச்னையில்லை, தாளைப் பையில் வைத்துவிடுங்கள்.
அதன்பிறகு, ஒவ்வொருமுறை அந்தக்கவலை மீண்டும் எழுகிறபோதும், இன்னொரு புள்ளியை வைத்துவிட்டு, மீண்டும் அரைநிமிடம் தீர்வைப்பற்றி யோசியுங்கள். இப்படி ஒவ்வொரு புள்ளியாக வைக்கவைக்க, அப்பிரச்னையின் தீர்வைப்பற்றி நீங்கள் அதிகம் யோசிப்பீர்கள், தீர்வுகள் கிடைக்கத்தொடங்கும், அவற்றுள் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து அமுல்படுத்துவீர்கள், அக்கவலையைப் பொய்யாக்கிப் பட்டியலிலிருந்து நீக்குவீர்கள்.
அதாவது, முன்பு நீங்கள் வெறுமனே கவலைப்பட்டுக்கொண்டிருந்தீர்கள். அதை டிக் செய்வதும் அடிப்பதும் உங்களிடம் இல்லை. அது தானாக நிகழும், அதை நீங்கள் வெறுமனே பதிவுசெய்துகொண்டிருந்தீர்கள்.
ஆனால் இப்போது, அக்கவலைகளை நீக்குவதுபற்றி நீங்கள் சிந்திக்கிறீர்கள். கவலைப்படும் கணங்களைத் தீர்வைத்தேடும் கணங்களாக மாற்றிக்கொள்கிறீர்கள்.
முன்புபோலவே, இப்போதும் தினசரி (அல்லது, வாராவாரம்) கவலைப்பட்டியலைக் கவனித்துக் கணக்கெடுங்கள். அதில் எத்தனை கவலைகள் டிக் ஆகின்றன, எத்தனை கவலைகள் அடிக்கப்பட்டு நீங்குகின்றன, அந்தச் சதவிகிதம் முன்பைவிட மேம்பட்டுள்ளதா, இல்லையா?
தீர்வைப்பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க, உங்களுடைய கவலைகளின் எண்ணிக்கையும் குறையும், கவலைப்படுகிற தருணங்களும் குறையும். குழப்பமிருக்கிற மனத்தில் தீர்வுக்கான சாத்தியம் இருக்காது, அந்தக் குழப்பத்தைக் குறைப்பதன்மூலம் தீர்வைநோக்கி நம்பிக்கையோடு நகர்கிறோம்.
இந்தப்பயிற்சி கிடைத்தபின், கவலைகளைத் தாளில் எழுதிவைக்கவேண்டியதில்லை. மனத்தில் எழுதிக்கொள்ளலாம். அப்போது, ஒவ்வொரு கவலையையும் நீங்கள் வெறுமனே பதிவுசெய்யமாட்டீர்கள், அதைத் தீர்ப்பதற்கான வழியோடு சேர்த்துச் சிந்திப்பீர்கள்.