ஆரோக்கியம். கால ஓட்டத்தில் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய அடைய அவனது வாழ்க்கை முறையும் அவன் முகங்கொடுக்கும் ஆரோக்கியம்சார்ந்த சவால்களும் மாறிக்கொண்டே வருகின்றது. விரும்பியோ விரும்பாமலோ எமது ஆரோக்கியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் பல்வேறுபட்ட நடைமுறைகளையும் பழக்கவழக்கங்களையும் புறக்கணிக்க இயலாத சூழ்நிலையில் மனிதசமுதாயம் அகப்பட்டுச் சிக்கித் தவிக்கிறது.
ஒரு மனிதனின் ஆரோக்கியம் அவனது சுய நலன்களை மட்டும் உள்ளடக்கியதல்ல. இலங்கை போன்றதொரு நாட்டில் ஒரு தனிமனிதனது ஆரோக்கியம் அவனது சுயத்தைத் தாண்டி அவனைச் சூழ உள்ள ஓர் பெரும் குடும்பத்தின் சுக துக்கங்களையும் பாரியளவில் பாதிக்கும் வலிமை கொண்டது. இன்றைக்கு சாதாரணமாக ஓர் வைத்தியசாலையில் நோயாளர் பார்வைநேரத்தில் அங்கு வந்து குவியும் உறவினர்களின் படலமே அதற்கு தெளிவான சான்று. உறவு என்கின்ற ஒரு ஆழமான பிணைப்புக்கும் இவ்வாரோக்கியம் என்கின்ற நிலைக்கும் பிரிக்கமுடியாத ஓர் பெரும் பிணைப்பு இருப்பதை, ஆரோக்கியம் குன்றிப்போகும் வேளையிலேயே அதிகம் உணர முடிகிறது.
மருத்துவ உலகம் இமாலய வளர்ச்சி கண்டுள்ள இக்காலகட்டத்தில், புதிய புதிய நோய்களின் அறிமுகமும் அதற்கான மருத்துவ வழிமுறைகளும் வீட்டிலுள்ள ஐந்து வயதுக் குழந்தைமுதல் அறுபது தாண்டிய பாட்டிவரை அனைவரும் அறிந்ததாகவே உள்ளது. மருத்துவ வளர்ச்சியோடு சேர்ந்து நோய்களும் அதிகரித்துவிட்டதாய் மட்டும் இதற்கு அர்த்தம் கற்பிக்க இயலாது. மருத்துவ வளர்ச்சி அற்ற காலகட்டத்தில் இவ்வாறான பல நோய்களின் விளைவுகளறியாது காய்ச்சல், சிறு நோய்களென மரணங்கள் சம்பவித்தவண்ணமே இருந்திருக்கின்றன. அன்று மக்கள் மருத்துவ வசதிகளின்றி நோய்வந்த மாத்திரத்திலேயே மரணத்தைத் தழுவியிருந்தாலும் இன்று மருத்துவ வசதியோடு எஞ்சிய காலங்களை நோயாளிகளாகக் கழிக்கின்றனர் என்றால் மிகையில்லை. இருந்தும் கால ஓட்டத்தில் நோய்களின் தன்மையும் தோற்றமும் அதிகரித்தவண்ணமே இருக்கின்றதென்னும் உண்மையையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது.
தொண்ணூறு தாண்டிய வயதுடைய பாட்டிமார் இறக்கும்வரை தமக்கெனத் தனிக் குடிசை, தனது சமையல் தனது வீடென்று தாமாக இயங்கி கடைசி நொடிவரை தடியினுதவியோடு நடந்து கண்ணாடிகூட பாவிக்காமல் வாழ்ந்து மடிந்ததை எம்மில் அநேகர் கண்டிருக்கிறோம். இன்று அவாறான மூதாட்டிகளைக் காண்பது மிக அரிது. அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அந்த பரம்பரை இன்று எங்கே போனது?
நாற்பது வயதில் நீரிழிவு, சர்க்கரை வியாதி, உயர் குருதி அழுத்தம் இவையனைத்தில் ஏதேனும் ஒன்று எமக்கு ஹாய் சொல்லி ஒட்டிக்கொள்கிறது. அதன்பிறகு ஆயுள் முடியும்வரை சாப்பாட்டில் ஆயிரத்தெட்டு பேணுதல், அதனோடு சேர்த்து சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் என மருத்துவக் குறிப்புகள், மாதாமாதம் கிளினிக் என்று வரிசையில் காத்திருப்பு இப்படியே அனேகரது வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது.
அன்று பேரன் பேத்திமாரின் நல்லது கெட்டது காண்பதற்கும் பூட்டன்மார் பூட்டிமார் உயிரோடு இருந்தனர். இன்று தான் பெற்ற பிள்ளையின் பிள்ளையைப் பார்க்கக்கூடப் கொடுத்துவைக்காத ஆயிரக்கணக்கான பெற்றோர்களை நாம் கண்கூடு காண்கின்றோம். இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று, கல்வி, பொருளாதாரம், பெயர், புகழ் என பல்வேறு தேவைகளுக்காய் திருமணம் என்ற ஓர் சடங்கு பல இளைஞர்களுக்கு முப்பதைத் தாண்டுகிறது. அதன்பின்னர் ஓர் பிள்ளையைப் பெற்று, அதற்கு இருபது வயதாகும்போது பெற்றோர்கள் ஐம்பதை எட்டிவிடுகின்றனர். மேற்சொன்ன நோய்களோடும், மருத்துவங்களோடுமே இன்னும் பத்து வருடங்கள் அவர்களது பிள்ளைகளின் திருமணங்களுகாய் காத்திருக்கவேண்டிய சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். ஒரு நூற்றாண்டு காலத்தில் குறைந்தது மூன்று தொடக்கம் நான்கு தலைமுறை இருந்த காலம் கடந்து, இன்று ஒரு நூற்றாண்டு காலத்தில் அதிகபட்சம் இரண்டே இரண்டு தலைமுறைகள் இரு வேறுபட்ட காலப்பகுதியில் தனித்து வாழவேண்டிய நிலையில் இருக்கிறது. அதன் பக்கவிளைவாக தாத்தா பாட்டிமார் இல்லாத குடும்ப கட்டமைப்புக்குள் நாம் புகுந்துகொண்டிருக்கிறோம். அது மற்றுமொரு பெருந்தலைப்பு.
இரண்டாவது எமது உணவுப் பழக்கவழக்கங்கள். இந்த உணவுகள் விஷமாக மாறப்போகும் அந்த ஒரு நொடியிலேயே நாம் பத்தியங்களையும், பகுமானங்களையும் கடைப்பிடிக்க விழைகிறோம். அந்த நிலையில் சாதமும் சருக்கரையாகிறது, தேங்காய் எண்ணெயும் தேவையற்ற கொழுப்பாகிறது. அதுவரை எந்தவிதமான அவதானமுமின்றி அளவுக்கு மிஞ்சி அமுதுண்ணும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளோம். கீரைகளும் மரக்கறிகளும் சேதனம் அசேதனம் என லேபல்களுடன் பகிரங்கமாகவே விற்கப்படுகின்றன. தெரிந்தே பூச்சிநாசினிகளை காசுகொடுத்து வாங்கி உண்கிறோம். கூடவே, புகைத்தல், மது இப்படி போதைப்பொருட்களுக்கும் அடிமையாகி எமது ஆயட்காலத்தை இன்னும் குறைத்துக்கொள்கிறோம்.
உணவுப்பழக்கங்களோடு மனிதனுக்கு இருக்கின்ற இன்னுமொரு பிரச்சினை, மன உளைச்சல். அளவுக்குமீறிய மனச் சுமை, அதிக சிந்தனை, ஓய்வின்மை, தூக்கமின்மை, மனக்குறைகளை மற்றவருடன் பகிர்ந்துகொள்ளாமை போன்ற மனோரீதியான அழுத்தங்களும்கூட இதற்கு தூண்டுகோலாக அமைகிறது.
கடந்த ஆண்டு சுகாதார அமைச்சின் தகவலின்படி 20% இலங்கை மக்கள் குறை போஷனையினாலும் 20%ஆன மக்கள் நீரிழிவாலும், மேலும் 20%மானவர்கள் உயர் குருதியளுத்தத்தினாலும் பாதிக்கப்படுகின்றனர்.
இருதய நோயினால் மாத்திரம் வருடந்தோறும் சுமார் 219,000 நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 20 பேர் இருதய நோயினால் உயிரிழக்கின்றனர். இவ்வாறு நோய்களின் தாக்கமும், அதனால் ஏற்படுகின்ற விளைவுகளும் இத்துணை தீவிரமாக இருக்கின்ற வேளையில் நாம் ஒவ்வொருவரும் சற்று நிதானமாக சிந்தித்து செயற்படவேண்டும். எமது குடும்பம், உறவுகள், சமுதாயம் என அனைவரது நலனுக்காகவும் நல்வாழ்வுக்காகவும் சிறந்த வாழ்க்கை முறையையும் ஒழுக்கங்களையும் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இப்பழக்கவழக்கங்களை அன்றாட வாழ்க்கைமுறையாக்கி அதனை எமது இளைய சமுதாயத்திற்கும் பழக்கப்படுத்தி ஆரோக்கியத்தை நிலைநாட்டி பயன்பெற திடசங்கர்ப்பம் பூணுவோம்.