Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இரவு

“இரவுக்கு ஆயிரம் கண்கள்”

இரவுகள் இனிமையானவை, இரவுகளை ரசிக்க தெரிந்தவர்களுகள் இரவுகள் உறக்கத்திற்கு மட்டுமல்ல என்பதை அறிந்திருப்பார்கள்.  இரவுகள் நிம்மதியானவை, பகற்பொழுதின் பரபரப்பு இல்லாத அமைதியை தருபவை. இரவுகள் ஆனந்தமானவை, மனதிற்கு பரவசத்தையளிப்பவை.  இரவுகள் மகிழ்ச்சியானவை, கவலைகள் மறந்து கனவுகளுடன் கைகோர்க்கும் கணங்களுக்கானவை. “இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலிற்கு ஒன்றே ஒன்று” என்ற கண்ணதாசன் வரிகள் இரவுலாவிகளை (Nocturnal) மனதில் வைத்துத்தான் எழுதப்பட்டதாக இருக்கவேண்டும்.

“காலம்பற எழும்பி படிடா, அப்பத்தான் மூளைக்குள் நிற்கும்” என்று எல்லா அம்மாமாரும் தங்கள் பிள்ளைகளுக்கு ஓதும் மந்திரம் எனக்கும் ஒதப்பட்டது. ஐந்து மணிக்கு அடிக்கும் அலாரம் சத்தத்திற்கு எழும்பி, பேய் பிசாசுக்கு பயந்து செபம் சொல்லியபடியே ஓடிப்போய் கிணற்றடியில் முகம் கழுவி, அரை நித்திரையில் தேத்தண்ணி குடித்துவிட்டு, செல்வவடிவேலின் விஞ்ஞான விளக்கம் புத்தகத்தை திறக்க.. கொட்டாவி எட்டிப்பார்க்கும், படிப்பு மட்டும் ஏறாது.

நகுலேஸ்வரன் மாஸ்டர் காலையில் ஐந்து மணிக்கு வகுப்பு நடத்துவார். நடுங்கும் குளிரில், சைக்கிளுக்கு ஹெட்லைட் பூட்டி, பற்றிக்ஸ் சதாவோடு, சுவாமியார் வீதியிலிருந்த டெலோ காம்பில் நித்திரை கொள்ளும் சென்ரிக்கு “குட் மோர்னிங் அண்ணா” சொல்லி கடுப்பேத்தி, ஏச்சு வாங்கிய காலம் நினைவில் நிழலாடுகிறது.  பின்னர் மட்ஸ் ஒகஸ்ரின் மாஸ்டரின் காலை ஆறு மணி வகுப்பிற்கு, யாழ்ப்பாண வின்டருக்கு Beanie தொப்பி அணிந்து, சுண்டுக்குளிக்கு முன்னால் இருக்கும் CRPF பொம்பள பொலிஸ் காம்பின் வீதி தடைகளை இளங்கோவோடு சேர்ந்து அகற்றிவிட்டு  போனதும் இன்னும் நினைவில் நிற்கிறது.

1988ம் ஆண்டு இப்படித்தான் ஒரு நாள் காலம்பற ஐந்து மணிக்கு எழும்பி தவணைப் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்க, இந்தியன் ஆமி பிடித்துக் கொண்டு போய்  சந்தியில் இருக்க வைத்துவிட்டான். சுற்றிவளைப்பில் ஊர்ப்பெடியள் எல்லாம் சந்தியில் வந்துசேர, தலையாட்டியின் தரிசனம் பார்த்துவிட்டுத்தான் பள்ளிக்கூடம் போனோம்.  வீட்டில் லைட் போட்டிருக்கிறதை கண்டுவிட்டுதான் இந்தியன் ஆமி வந்தவன் என்று அம்மாக்கு காரணம் சொல்லி காலையில் எழும்பிப் படிக்கும் அரியண்டத்தை சில காலங்கள் தவிர்த்தேன்.

O/L இற்கு சீரியஸாக படிக்க தொடங்கின காலம் முதல், இரவில் படித்தால் தான் மண்டையில் நிற்கிறது என்பது புலப்பட தொடங்கியது. உயர்தர பரீட்சை நெருங்கும் காலங்களில் அதிகாலையில் கோழி கூவ மட்டும் படித்துவிட்டு, படுக்கப் போகும் நாட்களில், இரவுலாவியாக மாறிக்கொண்டிருந்தேன். காலம்பற முழுக்க நித்திரை கொண்டு எழும்பி, பின்னேரம் வெள்ளவத்தை தமிழ் சங்கத்திற்கு புத்துணர்ச்சியுடன் டியூஷனிற்கு போன காலத்தை இன்று நினைத்தாலும் இனிக்கும்.

இரவு அமைதியானது என்ற பொதுவான அபிப்பிராயத்தை இரவுலாவிகள் மறுப்பார்கள். இரவின் சத்தங்கள் இனிமையானவை என்று சண்டைக்கு வருவார்கள். பகலின் இரைச்சல், இரவில் இல்லாமல் போக, இரவில் இயற்கையின் ஒலிகள் துல்லியமாக கேட்கும். மரங்களின் அசைவும், இலைகளின் சலசலப்பும், மழை மண்ணை முத்தமிடும் சத்தமும் இரவில் கேட்கும் போது அலாதியாக இருக்கும். இரவில் நிலவு மேகங்களை கடந்து உலாவரும் ஓசையையும் இரவுலாவிகள்  கேட்டு ரசித்திருப்பார்கள். பெளர்ணமி  நாட்களில் நட்சத்திரங்களின் சம்பாஷணைகளையும் கேட்டதாக கடும்போக்கு இரவுலாவிகள் கதையளப்பார்கள்.

ஜெயமோகனின் “இரவு” நாவல் இரவை மையமாக வைத்து பின்னப்பட்டது. நாவலில் இரவை ஒரு யானைக்கு ஒப்பிடுவார் ஜெமோ. “இரவு ஒரு யானை, சாமரக்காதுகள் அசைய, கொம்புகள் ஊசலாட, பொதிகள் போல் காலடி எடுத்து வைத்து, மெல்ல நடந்து வரும் யானை” என்று ஜெமோ மயக்ககுவார். பிறிதோரிடத்தில் “பகல் மறையும் போதுதான் அழகு பிறக்கிறது” என்று ஜெமோ இரவின் துதி பாடுவார்.

சனிக்கிழமை 23 ஜூலை 1983, நள்ளிரவு,  யாழ்ப்பாணம் வரலாற்றில் முதல்முறையாக குண்டு சத்தத்தால் அதிர்ந்தது. அதற்கு பின் வந்த காலங்களில் இரவில் குண்டு சத்தங்கள் கேட்டால் “பொடியள் கோட்டைக்குள்  ஆமிக்கு விளையாட்டு காட்டுறாங்கள்” என்று சனத்திற்கு தெரியும். இரவில் பரா வெளிச்சத்தை அடித்துவிட்டு ஹெலிகள் பறந்து கண்டபாட்டிற்கு சுட, ஆமி கண்மண் தெரியாமல் ஷெல்லடிக்க, பொம்மரும் எட்டிப்பார்க்க, சனம் பங்கருக்குள் அடைக்கலம் தேடும்.

யாழ்ப்பாணத்தில் கரண்ட் வாறது தடைபட, இரவில் ஊரே அடங்கி விடும். இரவு எனும் கறுப்பு போர்வையை போர்த்தியபடி ஏழு மணிக்கெல்லாம் யாழ்ப்பாணம் உறக்கத்தை அணைக்க தொடங்கிவிடும். ஊரெல்லாம் இரவிற்கு அடிபணிய, மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைத்து விட்டு யாழ்ப்பாணத்தின் மண்டைக்காய்கள் படிக்கத் தொடங்குவார்கள். குப்பி விளக்கில் படித்தும் உயர்தர சோதனையில் சாதனை புரிந்த மாணவர்களை நினைத்து யாழ்ப்பாண மண்ணோடு இணைந்து இரவும் பெருமை கொள்ளும்.

தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்று வள்ளலார் சொன்னது கூட இரவை மனதில் வைத்துத்தான் என்று ஜெயமோகன் “இரவு” நாவலில் தர்க்கிக்கிறார். “தனித்திருன்னா சாதாரணமா மத்தவங்கள மாதிரி இருக்காதேன்னு அர்த்தம். பசித்திருன்னா உடலாலேயும் மனசாலேயும் பசியோட இருன்னு அர்த்தம்.  எதுக்கு விழித்திருன்னு சொன்னார்? விழிப்புன்னா என்ன? அகவிழிப்பைச் சொல்லலை. அது தியானம் மூலம் வரக்கூடியது. அகவிழிப்பு வர்ரதுக்கான வழியை… அவர் சொல்ற விழிப்புங்கிறது தூங்காம இருக்கிறதைத்தான்” என்கிறார் ஜெமோ.

ஒஸ்ரேலிய தமிழர்களிற்கு வெள்ளிக்கிழமை இரவு என்றால் இன்பத்தமிழ் வானொலியின் ஆனந்த இரவுதான் ஞாபகம் வரும். பாலசிங்கம் பிரபாகரன் தொகுத்து வழங்கும் Talkback நிகழ்ச்சி ஆனந்த இரவு. சுவாரசியமாகவும் சூடாகவும் அரங்கேறும் ஆனந்த இரவு,  அரசியல் சமூகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் பற்றிய மக்கள் அரங்கமாக விடிய விடிய தொடரும். பாலா பிரபா அரசியல்வாதிகளையும் சமூக தலைவர்களையும் கேள்விகளால் துளைத்தெடுக்க, அழைப்பெடுக்கும் சனம் அவரோடு சண்டைக்கு போகும். போராட்ட காலத்தில் மக்களை ஒருங்கிணைத்த பெருமை இன்பத்தமிழ் வானொலியையே சாரும்.

காதலிற்கும் காமத்திற்கும் இரவுதான் பிடிக்கும்.  இரவின் இனிமையில் காதலில் லயிக்கும் கணங்கள் வர்ணணைகளிற்கு அப்பாற்பட்டவை. காதலியோடு கரம்கோர்த்துக்கொண்டு நிலவையும் மேகங்களையும் நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தால் சொர்க்கத்தை மண்ணுலகில் உணரலாம். காதலியில்லா இரவுகள் நரகமாகத் தான் தோன்றும்.

சகலகலாவல்லவனில் சிலுக்கோடு கமல் ஆட்டம் போட்ட “நேத்து ராத்திரி.. யம்மா” பாட்டுத்தான் மிகப் பிரபலமான இரவுப்பாட்டு. “நேத்து ராத்திரியை” விட மைக்கல் மதன காமராஐனில் ரூபிணியோடு கமல் போட்ட “சிவராத்திரி” இரவுப் பாட்டு ஆட்டத்தில் கிளுகிளுப்பு அதிகமாக இருக்கும். ஆட்டத்தில் இருக்கும் கிளுகிளுப்பை பாடல் வரிகள் இன்னும் சூடேற்றும்.

சிவராத்திரி

தூக்கம் ஏது… ஹோ

முதல் ராத்திரி

தொடங்கும்போது…ஹோ

பனி ராத்திரி ஓ…

பட்டு பாய் விரி

சுப ராத்திரி ஓ…

புது மாதிரி விடிய விடிய

சிவராத்திரி தூக்கம் ஏது… ஹோ

காதலிற்கும் காமத்திற்கும் கற்பதற்கும் களிகூறுவதற்கும் களமமைத்திடும் இரவுகளை கொண்டாடுவோம். இரவுகளை ரசிக்கும் , இரவுலாவிகளோடு களிகூறுவோம்.

இரவுகள்..

இனிமை

நிம்மதி

ஆனந்தம்

மகிழ்ச்சி

 

படங்கள் : Pixabay.com

Related Articles