என்னுடைய சிறிய வயதுக்காலங்களில் நான் ரசித்த கதாநாயகர்களில் இவனும் ஒருவன். ஏன்? இப்பொழுது கூட நான் ரசித்துக்கொண்டுதான் இருக்கிறேன் இவனை…….!
நினைவு தெரிந்த காலத்தில் (90களில்) எங்கள் ஊரில் இருந்த ஒரேயொரு தொலைகாட்சி அலைவரிசை என்றால் அது ரூபவாஹினிதான். அதிலும், மாலையில் சிறுவர் நேரத்தில் முழுமையாக 30 நிமிடங்களை இவனுக்கு மட்டுமே நாள்தோறும் ஒதுக்கி இருப்பார்கள். அவ்வளவுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இந்த டின்டின் கார்டூன் தொடருக்கு இருக்கும். சடுதியாக, நேற்றைய நாளிலும் ரூபவாஹினி சேவையை தற்செயலாக பார்க்க நேரிட்டது. அதே நேரத்தில், இன்னமும் பழமை மாறாத இளமையுடன் டின்டின் ஓடிக்கொண்டுதான் இருக்கிறான்.
கதையின் நாயகன் டின்டின் எங்களில் ஒருவன் போலதான் அப்போது எல்லாம் எனக்கு தோன்றும். அந்த நீளமாக சுருண்ட முடி, கார்ட்டூன் கதாபாதிரங்களில் இருக்க கூடிய அந்த ஒற்றை புள்ளி கண் மற்றும் ஜப்பானிய மூக்கு எல்லாமே ஏனோ இந்த டின்டினுக்கு மட்டும்தான் சரியாக பொருத்தமாக இருந்தது. அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத உடை…. எப்போதும் தன் உடனேயே ஒரு நாய் என்று சாதாரண சிறுவனாகவே அவன் வலம் வருவது என்னையும் பலரையும் ஈர்ப்பதற்கு ஒரு மிக முக்கிய காரணம்…..!
உண்மையில் டின் டின் கதாபாத்திரம் ஒரு ஊடகவியலாளனாக கார்ட்டூன் தொடர்களில் வடிவமைக்கபட்டிருக்கும். அதுவும் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒரு ஊடகவியலாளன். ஆனால், அவனுக்கு கதையில் இதுதான் நாடு, இதுதான் வீடு என்று எல்லாம் வரையறை இல்லை. முக்கியமாக லாஜிக் எல்லாம் இல்லை. எங்கே தவறு நடந்தாலும், அதை தனியே தனது நாய் ஸ்நோவி (Snowy) மற்றும் அவரது கப்டன் நண்பர் ஹடோக் (Captain Haddock) என்பவர்களுடன் சேர்ந்து வீரதீர செயல் செய்வதன் மூலம் இறுதியில் கெட்டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் நேர்மையான ஊடகவியலாளனாக கதாபாத்திரம் வடிவமைக்கபட்டிருக்கும்
கதையில் எப்பொழுதுமே நகைச்சுவை இழையோடியிருந்தாலும், அந்த கப்டன் ஹடோக் காதாபாத்திரம் தனித்து நகைச்சுவையை கதையுடன் கொண்டுசெல்லவே உருவாக்கபட்டிருக்கும். அது போல, ஒவ்வரு அத்தியாயத்திலும் டின் டின் ஒவ்வரு மர்மங்களை தேடி கண்டுபிடிக்க போய் மாட்டி கொள்வார். அப்போது எல்லாம் ஏதோ ஒரு வகையில் உதவி செய்யவென்று அந்த கப்படன் வருவார். இறுதியில் அவரையும் சேர்த்து காப்பாற்றவேண்டிய சூழ்நிலையில் டின்டின் இருப்பார்.
அது போல டின்டினுக்கு உதவி செய்யவும் எங்களை குழப்பவும் என்று, ஒரு விரிவுரையாளர் கல்குலஸ் (Professor Calculus) மற்றும் இரட்டை புலனாய்வு அதிகாரிகள் தொம்சன் & தொம்சன் (Thomson & Thomson) கதாபாத்திரமும் கதையில் இருக்கும். கதையின் முக்கிய முடிச்சுக்களை அவிழ்ப்பதற்கும், சிலவேளைகளில் கதையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தி செல்லவும் இந்த கதாபாத்திரங்கள் உதவியாக இருக்கும்.
என்னதான் டின்டின் ஒரு ஊடகவியலாளன் என்றாலும், அந்த கதாபாத்திரத்திடம் இருக்கும் ஒரு எளிமைத் தன்மை, எந்தவித அபார சக்திகளையும் தன்னகத்தே கொண்டிராது சராசரி மனிதன் ஒருவன் எப்படி பிரச்சனைகளை சமாளிப்பனோ? அப்படியே கதையும், அந்த கதாபாத்திரத்தின் செயல்களும் உருவாக்கப்பட்டிருப்பதும், பல இடங்களில் எங்களைப் போன்று சிறு பிள்ளையாக மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பதும், சில இடங்களில் எங்களைப் போலவே மிக பரிதாபகரமாக வாடிப்போய் உட்காருவதுமாக இந்த டின் டின் கதை செதுக்கப்பட்டிருப்பதால்தான், இது பலரையும் சென்றடையவும், பலருக்கு பிடித்தமான கதாபாதிரமுமாக மாறியிருக்கக் காரணம் என்று நினைக்கிறேன்.
உண்மையை சொல்லப் போனால், படங்களில் கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வரும் சூப்பர் ஸ்டார் ரஜனிக்காந்த் போல, கார்ட்டூன்களில் எளிமையாக தனக்கே உரித்தான பாணியில் மர்மமுடிச்சுக்களை அவிழ்த்துகொண்டே பொருத்தமான இடங்களில் ஹீரோயிசம் காட்டும் டின்டின் நிச்சயம் கார்டூன்களின் சூப்பர் ஸ்டார்தான்.
டின்டின் என்கிற கதாபாத்திரம் பெல்ஜியம் நாட்டவரால் படைக்கப்பட்டாலும், 1929ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு பத்திரிகையில் பிரெஞ்சு வடிவத்திலேயே முதன்முதலில் வெளியிடப்பட்டது. முற்றுமுழுதாக 24 கதைவடிவங்களைக் கொண்டதாக முதலில் பத்திரிகைகளில் வெளிவந்த கார்டூன் கதைகள், உலகமக்களின் கவனத்தைப் பெற சுமார் 30 வருடங்கள் காத்திருக்க நேர்ந்தது என்னமோ சோகம்தான். உலகம் முழுவதையும் உலகப்போர் மேகங்கள் சூழ்ந்திருந்ததால், டின்டின் கார்டூன்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட காலதாமதமாகியது. ஆனாலும், ஒளிபரப்பப்பட்ட பின்பு, அமேரிக்கா மற்றும் ஜரோப்பா முழுவதுமே டின்டின் ஒரு ஹீரோவாக வலம்வரத் தவறவில்லை.
இவ்வாறு எங்களை கார்ட்டூன் மூலமாக கவர்ந்த டின்டின் ஏனோ திரைப்படமாக வரும்போது மட்டும் அதிகமான மக்களை கவர்ந்திருக்கவில்லை. குறிப்பாக, 1972ம் ஆண்டு முழுமையான திரைப்படமாக டின்டின் வெளியிடப்பட்டாலும், அதற்க்கான போதிய வரவேற்பு கிடைக்காமையால், அதற்குப் பின் எந்த தயாரிப்பாளரும் சரி, இயக்குனரும் சரி டின்டின் கதைத்தொகுப்புக்களை படமாக்க முனைந்திருக்கவில்லை.
2009ம் ஆண்டில் ஹாலிவூட்டின் மாஜாயால இயக்குனரும் தயாரிப்பாளருமான Steven Spielberg கண்களில் டின்டின் கதைதொகுப்புக்களில் ஒன்றான “The Adventure of TinTin” தென்படுகிறது. டின்டின் கதைக்கு உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களை கவனத்தில் கொண்டு, டின்டின் கதையில் தன்னுடைய மாயாஜாயாலத்தையும் சேர்த்து மோர்சன் (Motion) முறையில் டின்டின் திரைப்படத்தை 2011ம் ஆண்டில் இயக்கி, தயாரித்து வெளியிட்டார். சுமார் 135 மில்லியன் செலவில் உருவாக்கபட்ட இந்த மோர்சன் முறையிலான திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 400 மில்லியன் வசூலை வாரிக் குவித்தது மட்டுல்லாது, டின்டின் கதைகளை முறையாக திரைப்படுத்தும்போது, அதனை மக்களும், டின்டின் ரசிகர்களும் வரவேற்பார்கள் என்பதை Steven Spielbergக்கும் ஏனையவர்களுக்கும் புரிய வைத்தது. விளைவு, Steven Spielberg 2018க்கு முன்னதாக டின்டின் கதைதொகுப்பிலிருந்து மற்றுமொரு கதையினை திரைப்படமாக்க தயாராகிவிட்டார். இந்த செய்தி நிச்சயம் டின்டின் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியேயாகும்.
டின்டின் கார்ட்டூன் ஹீரோவைப் போல, சிறுவயதை குதுகலிக்க செய்த பல்வேறு கார்டூன் ஹீரோக்கள் இன்னமும் எம்மனதில் ஹீரோக்களாக ஓர் ஓரத்தில் இருந்துகொண்டே இருப்பார்கள். அவர்களையும், அவர்களோடு சேர்த்து எம் சிறுவயது குறும்புகளையும் மீண்டுமொருமுறை மீட்டிபார்க்க இதுவொரு தருணமாக அமையட்டும்.