அழியும் அரிய வகை உயிரினங்கள்

ஒரு இனம் நம் கண் முன்னே அழியும் போது, நாம் யோசிக்க வேண்டியதெல்லாம், இத்தனை விஞ்ஞான வளர்ச்சியும், சாதனையும் மனிதனை ஒரு சராசரி மிருக நிலையில் இருந்து உயர்த்தி காண்பிக்கின்றதோ என்பது தான்… நம் வீட்டு முற்றத்தில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி எத்தனை நாட்கள் ஆனது என்ற யோசனை வரும் போது நாம் எங்கே, அந்த உணவுச்சங்கிலியின் கூற்றில் இருந்து விலகிவந்திருக்கின்றோம் என்பதை அறிந்து கொள்ள இயலும். அதிகமாக நம் பார்வைக்கு பழகிய மிருகங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகின்றது என்றால், அவை அழிவை நோக்கி பயணிக்கின்றன என்பது தான் உண்மை. நாம் அவற்றின் அழிவுப்பாதையை உருவாக்கி வைத்திருக்கின்றோம்.  இந்தியாவிலும் பல்வேறு மிருகங்கள் அதன் விளிம்பு நிலையில் இருக்கின்றன என்பதற்கு மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது. தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு விளிம்பு நிலை விலங்கு, அஸ்ஸாமின் மாநில விலங்கான ஒற்றைக் கொம்புள்ள காண்டாமிருகம் அதன் விளிம்பு நிலையில் இருக்கின்றது. இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளுக்கும் இதே நிலை தான். ஆனால், ஒரு இனத்தின் இறுதி விலங்கு என்பது கவலை அளிக்கும் ஒன்று. அப்படியாக நாம் இன்று இழந்தது, ஆப்பிரிக்க வடக்கு வெள்ளை காண்டாமிருகத்தின் கடைசி ஆணான சூடானைத் தான்.

தென்னாப்பிரிக்காவும் காண்டாமிருகங்களும்

சூடான் பற்றி விரிவாக செல்வதற்கு முன்பு, ஆப்பிரிக்காவினைப் பற்றி தெரிந்து கொள்வோம். இன்று உலகில் காணப்படும் பெரும்வாரியான உயிரினங்களுக்கு தாயகமாக இருக்கின்றது தென்னாப்பிரிக்கா. உலகில் வாழும் 29500 காண்டாமிருகங்களில் 70% ஆப்பிரிக்காவில் தான் இருக்கின்றது.

இங்கு மிருக வேட்டை என்பது சட்டத்திற்கு புறம்பாக கடந்த இருபது முப்பது வருடங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. குறிப்பாக காண்டாமிருகங்களை அதன் கொம்புகளுக்காக வேட்டையாடி வருகின்றார்கள். ஆசியாவில் வாழும் சீனர்கள் மற்றும் வியட்நாமிய மக்கள், காண்டாமிருகத்தின் கொம்பைக் கொண்டு உருவாக்கப்படும் மருந்து அனைத்துவிதமான நோய்களையும் குணப்படுத்துகின்றது என்று நம்புவதாலும், அதனை அதிக விலை கொடுத்து வாங்க அவர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்ற காரணத்தாலும் காண்டாமிருக வேட்டை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. ஆனால் உண்மை என்னவென்றால், நம் நகத்திலும், முடியிலும் இருக்கும் அதே கெரட்டின் மூலக்கூறுகள் தான் காண்டாமிருங்களின் கொம்புகளிலும் இருக்கின்றது.  காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை தொடர்ந்து, சுதாகரித்துக் கொண்ட தென்னாப்பிரிக்க அரசாங்கம், காண்டாமிருகங்களின் கொம்புகளை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தது. தங்கத்தை விட அதிக மதிப்புடைய பொருளாக கருதப்படும் காண்டாமிருகத்தின் கொம்புகளுக்கு கறுப்புச் சந்தைகளில் அதிக வரவேற்பினை அச்சட்டம் ஏற்படுத்திக் கொடுத்தது.  2006ல் மொத்த கொம்பின் விலையே சுமார் 700 டாலர்கள் தான். மூன்று முதல் நான்கு கிலோ கிராம்  வரை ஒரு கொம்பின் எடை இருக்கும். ஆனால் இன்று காண்டாமிருகங்களின் கொம்புகள் கிலோ ஒன்று சுமார் 75,000 டாலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதனால், வேட்டையாடுதல் மட்டும் நின்றுவிடவே இல்லை.

Rhino with Photographers (Pic: conservationaction)

காண்டாமிருகங்களை வளர்க்கும் தனியார் பண்ணை அமைப்புகள்:

தென்னாப்பிரிக்காவில் வாழும் பெரும் செல்வந்தர்கள் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று பண்ணைகளில் வைத்து காண்டாமிருகங்களை வளர்க்கத் தொடங்கினார்கள். . தென்னாப்பிரிக்காவில் இருக்கும் க்ளெர்க்ஸ்டார்ப் பகுதியை சேர்ந்த ஜான் ஹூயூம் என்பவர் தான் உலகிலேயே அதிக அளவில் காண்டாமிருகங்களின் கொம்புகளை ஏற்றுமதி செய்யும் உற்பத்தியாளர் ஜான் ஹூயூம் அவர்கள் தன்னுடைய பண்ணையில் 1300 காண்டாமிருகங்களை முறையாக பராமரித்து வளர்த்து வருகின்றார். அனைத்து காண்டாமிருகங்களையும், ஆயுதமேந்திய பாதுகாப்பு காவலாளிகள் 24 மணி நேரமும் பாதுகாத்து வருவதால் வேட்டையாடுதல் என்பது சாத்தியமற்றதாகும். மேலும், அந்த பண்ணையில் காண்டாமிருகங்களுக்கு மருத்துவம் அளிக்க, மருத்துவக் குழுவும் இருக்கின்றது. ஒரு வேளை ஒரு பண்ணை முதலாளியால் காண்டாமிருகங்களை முறையாக பராமரிக்க இயலவில்லை என்றால், மற்ற முதலாளிகளிடம் விற்றுவிடுவார். வேட்டையாடுதல் என்ற அச்சுறுதலுக்கு பயந்தும் இவ்வுயிரினங்களை வளர்த்து வருபவர்களும் உண்டு.

யானைகளிடமிருந்து ஒரு முறை தந்தம் வெட்டி எடுக்கப்பட்டால் மீண்டும் தந்தங்கள் வளராது. ஆனால் காண்டாமிருகத்தின் கொம்புகள் வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த ஒரு காரணத்தால் தான் அவைகள் பண்ணைகளில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. ஜான் ஹூயூம் அவர்களின் பண்ணைகளில் இருக்கும் அனைத்து காண்டாமிருகங்களின் கொம்புகளும் 20 மாதங்களுக்கு ஒருமுறை வெட்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வைக்கப்படுகின்றது. மிக சமீபமாக, கொம்புகளின் விற்பனை மீதான தடை நீக்கப்பட்டதால் ஜான் ஹூயூம் தன் சேமிப்புக் கிடங்கில் இருக்கும் கொம்புகளுக்கு நல்ல விலை தேடிக் கொண்டிருக்கின்றார். கிட்டத்தட்ட தன்னுடைய கையில் 5டன் எடையுள்ள காண்டாமிருக கொம்புகளை வைத்திருக்கின்றார் ஹூயூம். இது அவருக்கு 45 மில்லியன் டாலரை அவருக்கு சம்பாதித்து தரலாம்.

Rhino (Pic: dogonews)

கொம்புகளின் இழப்புஇன அழிவு

இயற்கையாகவே எந்த ஒரு இனத்தினை நாம் அழகு என்று வர்ணிக்கின்றோமோ, அதே அழகினைக் கொண்டே அவ்வினம் தன் இனத்தின் எதிர்பாலினத்தை கவர்ந்து, இணை சேர்கின்றது. குரல், தோகை, கொம்பு, தந்தம் என அனைத்தும் தத்தம் இனத்தை விரிவுபடுத்த இருக்கின்றவையே. யானைகளில், தந்தம் இல்லாத யானைகளை மக்னா யானைகள் என்று அழைப்பார்கள். இந்த யானைகளுக்கு மதநீர் சுரக்கும் காலம் தொடங்கி குறிப்பிட்ட காலம் வரை, அதை பராமரிப்பது சிக்கலானது. காடுகளில் இது போல் வசிக்கும் யானைகளால் அதிக கலவரம் ஏற்படுவதைப் போலவே, காடுகளை ஒட்டி இருக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் இந்த யானைகளால் அதிக அட்டகாசங்கள் நிகழும். காரணம், பெண் யானைகள் பொதுவாக, தந்தம் இல்லாத யானைகளோடு இணை சேராது. ஒரு பெண் யானையை இணையாக அடைய, ஆண் யானைகளுக்குள் மோதல்கள் ஏற்படுவது சகஜம். தந்தம் இல்லாத யானையோடு ஆண் யானைகள் சண்டை போடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியே, காண்டாமிருகங்களுக்கும். இணை சேர்தல் மட்டுமன்றி, தன்னுடைய வசிப்பிடத்தின் எல்லையை உறுதி செய்வதற்கும் அதிக பலம் வாய்ந்த போட்டி மோதல்களும் ஏற்படும். கொம்புகள் என்பது அதனுடைய பலத்தினை உறுதி செய்யும் ஆயுதங்கள். இடங்களும், இணைகளும் மறுக்கப்படுதல் என்பது ஒரு இனத்தின் அழிவிற்கு மிக விரைவில் வழியினை உருவாக்கிவிடுகின்றது.

Rhinos (Pic: japantimes)

வெள்ளை காண்டாமிருகங்கள்

உலகிலேயே வெள்ளை காண்டாமிருங்களை கொண்டிக்கும் ஒரே கண்டமும் ஆப்பிரிக்கா தான். இதில் வடக்கு வெள்ளை காண்டாமிருங்கள் என்ற இனத்தினைப் போலவே, தெற்கு வெள்ளை காண்டாமிருகங்களும் இருக்கின்றன. இரண்டும் வெவ்வேறு இன காண்டாமிருகங்கள். தெற்கு வெள்ளை காண்டாமிருகங்கள் கொஞ்சம் அதிக அளவில் இருந்தாலும், அம்மிருகங்களும் அழிந்து வரும் மிருக பட்டியலில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் என்பது நம் கண் முன்னே அழிவினை சந்தித்துவிட்டது. வெள்ளை காண்டாமிருகங்களின் கொம்பானது சுமார் 3 அடி நீளம் வரை வளரக்கூடியது. இதற்காகவே இம்மிருகங்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வந்தன. 60களின் பிற்பாதியில் இம்மிருகங்களின் எண்ணிக்கை  2000மாகக் குறைந்து போனது. கொம்புகளின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, அடுத்து வந்த பதினைந்து வருடங்களில் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 15 ஆக குறைந்தது. அவ்வினத்தின் விளிம்பு நிலையை உணர்ந்த அரசாங்கம் அதனை முறையாக பராமரித்ததின் விளைவாக 1993ல் 30 காண்டாமிருகங்களாக அதன் எண்ணிக்கை உயர்ந்தது. இருப்பினும் இதற்கு இடைப்பட்ட 25 வருடங்களில் சூடானைத் தவிர ஆண் காண்டாமிருகங்களே இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது என்பது கசக்கும் உண்மை.

Rhino With Two Workers (Pic: vokrugsveta)

சூடானின் வாழ்க்கை

சூடான் கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி தன்னுடைய பயணத்தை முடித்துக் கொண்டு, தன் இனத்தின் அழிவினை உறுதி செய்துவிட்டுச் சென்றுவிட்டது. ஆனால், சூடான் மிகவும் சாதுவான, கேரட்டினை விரும்பி உண்டு வளர்ந்த உயிரினமாகும். உலகப் புகழ்பெற்ற டேட்டிங் ஆப் டின்டெரில் சூடானுக்கு ஒரு புரொபைல் இருந்திருக்கின்றது. 1975ல் சிப்பர்ஃபீல்ட் சர்க்கஸ் கம்பெனிக்காக  ஜாம்பி காடுகளில் இருந்து பிடித்துவரப்பட்ட 6 காண்டாமிருகங்களில் அதுவும் ஒன்று. தன்னுடைய இரண்டு வயதில் இருந்து சூடான் செக் குடியரசு மிருக காட்சி சாலையான துவர் க்ரலோவில் வைத்து பராமரிக்கப்பட்டது. அங்கு நஸிமா என்ற இணையுடன் சேர்ந்து சூடானிற்கு நபீர் என்ற மகனும், நஜீன் என்ற மகளும் பிறந்தது. இயற்கை சூழலில் வாழ்வதற்காக 2009 வரை அந்நாட்டின் பராமரிப்பில் இருந்த சூடானும், சூடானின் குட்டியுமான நஜீனும் மத்திய கென்யாவில் இருக்கும் ஒல் பெஜட்டா பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. நஜீன் – சுனி என்ற இணைக்கு ஃபட்டு என்ற பெண் குட்டியும் இருக்கின்றது. 2014ல் சுனி இறந்துவிட்டான்.  செக் குடியரசில் இருந்த நபீர் 2015ல் இறந்துவிட, இனத்தினை அழிவிலிருந்து பாதுகாக்கும் முழு பொறுப்பும் சூடானிடம் இருந்தது. நஜீன் மற்றும் ஃபட்டுவுடன் இணை சேர்ந்த பின்பும், புதிதாக எந்த ஒரு குட்டிகளும் பிறக்கவில்லை. சூடானின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து இருந்து வந்ததால், கென்ய அரசாங்கம் ஜூலை, 2011ல் நிரந்தரமாக நான்கு காவலாளிகளை சூடானின் பாதுகாப்பிற்காக நியமித்தது.

மேலும் தன்னுடைய பின்னங்கால்களில் அடிபட, இயற்கையாக இணை சேருதல் என்பது மிகவும் கடினமான ஒன்றாகிவிட்டது சூடானிற்கு. அதனுடைய விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. செயற்கை கருவுறுதல் மூலம், வெள்ளை காண்டாமிருங்களின்  இனத்தினை மீட்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். அதற்கான நிதி தோராயமாக 10 மில்லியன் டாலர்கள் தேவைப்படுகின்றது என்பதால் நிதி திரட்ட டின்டரில் சூடானின் ப்ரொபைல் தொடங்கப்பட்டது. ஆனால் அத்தனை திட்டுமிடுதல்களையும் மீறி சூடான் இறந்துவிட்டான் என்பது நமக்கு அபாயத்தினை உணர்த்துகின்றது. மார்ச் 30ல் சூடான் இறந்துவிட, இராஜ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டு, அவனின் இறுதி அஞ்சலியில் அவனிற்காக தேசிய கீதமும், கவிதையும் இயற்றப்பட்டது. அவன் இறந்த இடத்தில் கேரட்களை வைத்து அவனுக்கு மரியாதை செலுத்தினார்கள் கென்யவாசிகள்.

Last Living Rhino (Pic: youtube)

செயற்கை கருவுறுதல் காண்டாமிருகங்களுக்கு சாத்தியமா?

இதுவரை காண்டாமிருகங்களுக்கு செயற்கை கருவுறுதல் முறையில் சோதனை நிகழ்த்தப்படவில்லை. அது மிகவும் சவலான காரியமென ஒல் பெஜட்டாவின் தலைமை அதிகாரி திரு. ரிச்சர்ட் விஞ்ச் தெரிவித்துள்ளார். மேலும் மீதம் இருக்கும் இரண்டே இரண்டு பெண் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களிடமிருந்து கருமுட்டைகளை பிரித்தெடுப்பது சிக்கலான காரியம், அதனால், உயிரிழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்கின்றார். தெற்கு வெள்ளை காண்டாமிருகங்களுடனான கலப்பு இனத்திற்கு வழிவகை செய்வது ஒருவேளை நம்பிக்கை அளிக்கலாம். முற்றிலுமாக அழிந்துவிட்டது என்பதற்கு பதில் கலப்பின உயிர்கள் இருக்கின்றது என்பது ஒருவகையில் ஆறுதல் அளிக்கலாம். ஆனால், செயற்கை கருத்தரித்தல் என்பதை சாத்தியப்படுத்த குறைந்தது பத்தாண்டு காலமாவது தேவைப்படும் என்பது வருத்தமளிக்கின்றது.

Rhino With Armed Security (Pic: holidayme)

ஒரு இனத்தின் அழிவு என்பது காடுகளை அழித்தல் என்று இல்லாமல், தேவையற்ற மனித நம்பிக்கைகளின் விளைவாலும் நிகழ்கின்றது. சூடானின் மரணம் நம் அனைவருக்கும் ஒரு பாடம். மனிதர்கள் என்பவர்கள் ஆறாவது அறிவு கொண்ட விலங்குகளே அன்றி வேறொன்றும் இல்லை. மனித இனம் வாழ இன்னும் எதையெல்லாம் இழக்கப் போகின்றோம் என்பது கண் முன்னே வந்து செல்கின்றது. இங்கிலாந்து அரசு மிக விரைவில் யானை தந்தகங்களினால் ஆன பொருட்களை வாங்கவும் விற்கவும் தடை விதிக்க உள்ளது. இது போன்றே ஒவ்வொரு நாடும் தன் நாட்டின் விலங்கினங்கள, தாவரங்களை பாதுகாக்க உறுதி கொண்டால் அன்றி, இப்பூமியின் ஒவ்வொரு இனத்தினையும் நாம் இழக்க நேரிடும். இயற்கையை இழந்த பின்பு, சிலி நாட்டுத் தீவுகளில் எதோ ஒன்றில் மனிதனை மனிதன் அடித்து தின்று ஒன்றுமே இல்லாமல் போன நிலை நமக்கும் வரலாம்.

Web Title: Sudan Rhinos

Featured Image credit: dogonews

Related Articles

Exit mobile version