தேமதுரத் தமிழோசை உலகமெலாம் கேட்கவேண்டும் என்று விரும்பினார் பாரதியார். அதற்குமுன்பே தமிழோசை தமிழகத்தைக் கடந்து இந்தியாவின் பிற மாநிலங்களில், உலக நாடுகளில் கேட்கத் தொடங்கியிருந்தது; அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவேண்டும் என்பதுதான் பாரதியாருடைய விருப்பம்.
இன்றைக்கு அந்தக் கனவு பெருமளவு நிறைவேறியிருக்கிறது. இந்தியாவில் அநேகமாக எல்லா மாநிலங்களிலும் தமிழர்கள் குடியேறிச் சிறந்துவிளங்குகிறார்கள், உலகில் பல நாடுகளில் தமிழ்க் குரல்களைக் கேட்க முடிகிறது. சில நாடுகளில் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இடம்பெற்றிருக்கிறது. பெப்ஸி, கூகுள் போன்ற புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப்பொறுப்புகளில் தமிழர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
இந்திய மொழிகளில் ஒன்றான தமிழ், இத்தனை உலக நாடுகளுக்குச் சென்றது எப்படி? அந்த வரலாற்றை பார்ப்போம்
இலங்கை
இந்தியாவுக்கு வெளியே பெரும் எண்ணிக்கையில் தமிழ் பேசுபவர்கள் அமைந்திருக்கும் நாடு இலங்கை. அந்நாட்டில் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவையாக அடையாளம் காணப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பிராமி சாசனங்களில் தமிழ்ப் பிராமி எழுத்தும் தமிழ்ப் பெயர்களும் காணப்படுகின்றன என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம். தமிழகத்தைப்போல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் பண்டுதொட்டு இலங்கையில் வாழ்ந்ததற்கான சான்றாக இவை அமைகின்றன என்கிறார் அவர்.
தென்னிந்தியாவில் வாழ்ந்த தமிழர்கள்தான் இலங்கைக்குச் சென்று குடியேறினார்கள் என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று நம்புகிறவர்களும் உண்டு, இந்த விஷயத்தில் ஆய்வாளர்களிடையே ஒத்த கருத்து இல்லை. இலங்கையில் தமிழர்களுடைய பழங்கால வரலாறு வெளியாகிவிடக்கூடாது என்பதற்காகவே சில பகுதிகளில் விரிவான ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை என்கிற குற்றச்சாட்டும் உண்டு.
பழங்கால வரலாறுபற்றிக் கேள்விகள் இருப்பினும், ஆங்கிலேயர் ஆட்சியின்போது தமிழ்நாட்டிலிருந்து பலர் தோட்டவேலைகளுக்காக இலங்கைக்குச் சென்று குடியேறியது நிச்சயமாகத் தெரிகிறது. இவர்களுடன் சேர்ந்து இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இதுவே பின்னர் சிங்களவர்களுடன் அவர்களுக்குப் பிரச்னைகள் ஏற்படுவதற்குக் காரணமானது. இன்றுவரை நீடிக்கும் பெரிய அரசியல் பிரச்னை இது.
கலாசார அடிப்படையில் இந்தியத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் பல ஒற்றுமைகளைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக முருகவழிபாடு, ஆடைகள், உணவுப் பழக்கவழக்கங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
மொழி என்று பார்க்கும்போது, இந்தியத் தமிழுக்கும் இலங்கைத் தமிழுக்கும் கணிசமான ஒற்றுமைகள் உள்ளன, கணிசமான வேற்றுமைகளும் உள்ளன, இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான சொற்களை இந்தியத் தமிழர்களால் புரிந்துகொள்ளஇயலும், அவர்கள் இருவரும் இயல்பாக உரையாடுவதும் சாத்தியம்தான்.
இலங்கைத் தமிழுக்கென்று தனிப்பட்ட இலக்கிய வரலாறும் உண்டு. பல தமிழ் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் இங்கு வெளியாகின்றன, இந்நாட்டின் தமிழ் வானொலி இந்தியாவிலும் புகழ்பெற்றது, ஆண்டுதோறும் ஏராளமான தமிழ் நூல்கள் வெளியிடப்படுகின்றன, இங்கிருந்து பல சிறந்த தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் உருவாக்கிச் சிறந்த மொழிச்சேவை புரிந்திருக்கிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க சிலர்: ஆறுமுகநாவலர், டொமினிக் ஜீவா, செங்கை ஆழியான், அ.முத்துலிங்கம்.
இன்றும், இந்திய தமிழர்களிடையே இலங்கைத் தமிழ் நூல்களை விரும்பி வாசிக்கும் பழக்கம் இருக்கிறது. அதேபோல் இலங்கையிலும் இந்தியத் தமிழ் நூல்கள் வாசிக்கப்படுகின்றன. அவ்விதத்தில் சொற்கள், மொழிநடையில் உள்ள மாறுபாட்டைக் கடந்து ஓர் இனிய இலக்கியப் பரிமாற்றம் நிகழ்ந்துவருகிறது.
உள்நாட்டுப்போர் காரணமாக இப்போது பல இலங்கைத் தமிழர்கள் உலகம்முழுக்கப் பரவி வாழ்ந்துவருகிறார்கள், இவர்களுடைய அனுபவங்கள் முக்கியமான புலம்பெயர்ந்த தமிழர் இலக்கியங்களாகியுள்ளன.
மலேசியா
இந்தியாவுக்கு மிக அருகிலிருக்கும் இலங்கையைப்போலவே, சென்னையில் இருந்து விமானம் மூலம் சில மணி நேரத்தில் சென்றுவிடக்கூடிய மலேசியாவிலும் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்நாட்டில் வாழும் இந்தியர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்முடைய பழைய இலக்கியங்களிலேயே மலேசியா குறிப்பிடப்படுகிறது. காழகம், கடாரம் போன்ற சொற்களைப் பழந்தமிழ்ப் பாடல்களில் காண்கிறோம். இந்தப் பகுதிகளுடன் தமிழகத்துக்கு வணிகத்தொடர்பு இருந்திருக்கிறது.
இந்தியாவையும் இலங்கையும் ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் மலேசியாவில் தங்களுடைய தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்திய, இலங்கைத் தமிழர்களை அங்கே குடியேற்றினார்கள். இந்தத் தொழிலாளர்கள் புதிய சூழலுக்குப் பழகிக்கொண்டு கஷ்டப்பட்டு உழைத்தார்கள், இந்நாட்டின் வளர்ச்சியில் அவர்களுக்கு முக்கியப் பங்குண்டு.
இன்றைக்கு மலேசியாவில் குடியேறியிருக்கும் பெரும்பாலானோர் இப்படித் தோட்டவேலைக்கால இங்கு வந்தவர்களுடைய வம்சத்தினர்தான். அவர்களில் பலர் இப்போது தொழிற்சாலைகளுக்குச் செல்கிறார்கள், படித்து நல்ல பதவிகளில் இருக்கிறார்கள், கணிசமானோர் தோட்ட வேலையிலும் உள்ளார்கள்.
மலேசியாவில் வசிக்கும் தமிழ்க்குழந்தைகள் படிப்பதற்காக நாடெங்கும் தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. தமிழில் பத்திரிக்கைகள், நாளிதழ்கள் வெளியாகின்றன, தொலைக்காட்சி, வானொலிகள், நூல்கள் தமிழில் உண்டு, இந்நாட்டில் பிறந்த, குடியேறிய பல தமிழர்கள் சிறந்த இலக்கியங்களைப் படைத்துத் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளார்கள்.
இங்குள்ள தமிழர்களுடைய நலனை பாதுகாப்பதற்காக அரசியல் கட்சிகள் இருக்கின்றன, அவற்றின் பிரதிநிதிகள் ஆட்சி அதிகாரத்திலும் பொறுப்பேற்றுள்ளார், இதனால் இன்றைக்கும் வெளிநாட்டில் பணிபுரியவேண்டும் என்று நினைக்கிற இந்தியத் தமிழர்களுக்கு மலேசியா ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
சிங்கப்பூர்
மலேசியாவுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய தீவு நகரம் சிங்கப்பூர். அளவில் சிறியதாக இருந்தாலும் உலகப் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான சக்தியாகத் திகழ்கிறது சிங்கப்பூர். இங்கு தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கிறார்கள்.
ஆரம்பத்தில் சிங்கப்பூர் மீன்பிடிதொழிலுக்குப் புகழ்பெற்று விளங்கியது. பின்னர் தோட்டங்கள் அமைந்தன, அவற்றில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவைப்பட்டார்கள், வர்த்தகம் வளர்ந்தது, பல வணிக நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன, இவற்றாலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்தன, பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் இருந்து பல தமிழர்கள் இந்தப் பகுதியில் குடியேறினார்கள். தோட்டவேலை, வணிகம் போன்றவற்றுக்காக வந்தவர்களைத்தவிர, போர் செய்யவும், கைதிகளாகவும் பலர் வந்தார்கள்.
இப்படி பல காரணங்களுக்காகச் சிங்கப்பூருக்கு வந்த தமிழர்கள் கடினமாக உழைத்தார்கள், அதன்மூலம் தங்களுடைய குடும்பத்தையும் முன்னேற்றிக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்துக்கும் உதவினார்கள். இவர்களுடைய மக்கள்தொகையும் பங்களிப்பும் அதிகமாக இருப்பதை உணர்ந்த சிங்கப்பூர், தமிழர்களுக்குப் பெரும் மரியாதை கொடுத்தது.
பிரிட்டிஷார் இந்தப் பகுதிகளிலிருந்து வெளியேறியபோது, சிங்கப்பூர் மலேசியாவுடன் தொடர்ந்து இயங்கியது. பின்னர் மலேசியாவிடமிருந்து சுதந்தரம் பெற்றது. இந்தக் காலகட்டங்கள் அனைத்திலும் சிங்கப்பூர் வளர்ச்சிக்குத் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளார்கள்.
இன்றைய சிங்கப்பூரில் தமிழ் ஓர் அலுவல் மொழி. இங்கு வாழும் தமிழர்கள் பள்ளிகளில், கடைகளில், வணிகநிறுவனங்களில், போக்குவரத்து நிலையங்களில் என எங்கும் தமிழைப் பயன்படுத்தலாம். தமிழ்ப் பத்திரிகைகள், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் போன்றவையும் நிறைய உண்டு. தமிழ் இலக்கியத்துக்கும் இங்கு நல்ல முக்கியத்துவம் தரப்படுகிறது, அரசாங்கம் பல போட்டிகள், விருதுகளை அறிவித்து நல்ல எழுத்துகளை ஊக்குவிப்பதால், பல சிறந்த தமிழ் நூல்கள் இங்கிருந்து வெளியாகியுள்ளன.
மத்தியக்கிழக்கு நாடுகள்
எண்ணெய் வளத்துக்காகப் புகழ்பெற்ற மத்தியக்கிழக்கு நாடுகளில் ஏராளமான தமிழர்கள் வசிக்கிறார்கள். இப்பகுதியில் மலையாளம் பேசுவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பினும், தமிழர்களுடைய மக்கள்தொகையும் கணிசமானது.
இந்தப் பகுதிகளில் எண்ணெய்க்கிணறுகள் மிகுதியாக இருப்பது கண்டறியப்பட்டபோது திடீரென்று ஏராளமான பணியாளர்களுக்கான தேவை ஏற்பட்டது. அதைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியாவிலிருந்து பல மொழி பேசுகிறவர்கள் இங்கே வந்து சேர்ந்தார்கள். அவ்வகையில் இங்கு தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் என்று இன்னும் பலர் இங்கு வருகிறார்கள்; உழைப்புக்கான தேவை மிகுதியாக உள்ளதால் இப்பகுதி அரசுகளும் இதனை ஊக்குவிக்கின்றன.
இன்றைக்குத் துபாய், சவுதி அரேபியா, மஸ்கட் போன்ற பல மத்தியக்கிழக்கு நாடுகளில் தமிழர்கள் கணிசமான அளவில் வசிக்கிறார்கள். தமிழ்ப் பள்ளிகள், வானொலிகள், பத்திரிகைகள் போன்றவையும் இயங்கிவருகின்றன.
மற்ற நாடுகள்
இந்தியாவில் கோடிக்கணக்கிலும் இலங்கை மலேசியாவில் லட்சக்கணக்கிலும் வசிக்கிற தமிழர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளிலும் கணிசமான எண்ணிக்கையில் வசித்துவருகிறார்கள். உடலுழைப்பை நம்பும் தொழிலாளர்கள் தொடங்கி மூளை உழைப்பை வழங்கும் நிபுணர்கள்வரை பலவிதங்களில் அந்தந்த நாடுகளின் வளர்ச்சிக்குப் பங்களித்துவருகிறார்கள்.
இந்தத் தமிழர்களில் பலர், தாங்கள் வசிக்கும் ஊர்களில் தமிழ்ச்சங்கங்களை அமைத்துத் தங்களுடைய அடுத்த தலைமுறையினருக்கும் தமிழை, தமிழ்க் கலாசாரத்தைக் கொண்டுசேர்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன் செயலாற்றிவருகிறார்கள். இதன்மூலம் அந்தந்த நாடுகளில் ஒரு சிறு தமிழகத்தை அமைக்க முனைகிறார்கள்.
இன்னொரு பக்கம், தமிழர்கள் உலகமெங்கும் சென்றாலும் தங்களுடைய மொழியைத் தொடர்ந்து பேசுவதில் அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இன்றைய உலகத்தில் முன்னேறுவதற்கு ஆங்கிலம்போன்ற மொழிகள் முதன்மையாகத் தேவைப்பட்டாலும்,நம்முடைய மொழியை, கலாசாரத்தை முன்னெடுத்துச்செல்லும் பொறுப்பு தங்களுக்குண்டு என்பதை உலகத் தமிழர்கள் நினைவில் கொள்ளவேண்டும், தாங்கள் ஒரு நீண்ட மரபின் தொடர்ச்சி என்பதை உணர்ந்து அந்தக் கடமையை நிறைவேற்றவேண்டும்.
Web Title: Tamilians Around The World
Featured Image Credit: spirittourism