
சிறுவயதில் ‘கழுமரம்’ குறித்த கதைகளைக் கேட்ட போதும், இலக்கியக் குறிப்புகளில் ‘கழுவேற்றம்’ குறித்துப் படித்தபோதும் பெரிதாய் அதைப்பற்றிச் சிந்திக்காத என் மனது எஸ்.இராமகிருஷ்ணனின் ‘கழுமரம்’ என்ற பதிவை அவரது வலைத்தளத்தின் வரலாற்றுப்பதிவில் படித்தவுடன் அறநெறிகளைப் போதிக்கும் அனைத்து மதங்களின் பின்னால் நின்ற மனித மனங்களுக்குள் இருந்த வக்கிரத்தை ஆய்வு செய்யத் தூண்டியது.உடனே அதில் குறிப்பிட்டிருந்த ஈரோடு காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் உள்ள ‘அய்யனாரப்பன் கோவிலில்’ உள்ள கழுமரத்தைச் சென்று பார்த்தேன். அதற்குப் பொட்டு வைத்து காத்தவராயன் என்று மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்தனர். (இதைக் காக்க வேண்டி இவ்வாறு செய்திருக்கலாம்). வாழும் சாட்சியாய் தமிழகத்தில் இருக்கும் கழுமரம் இது ஒன்றுதான். மிகக் கொடிய பாதகச் செயலைச் செய்தவர்களைக் “கழுவில் ஏற்றுதல்” என்னும் கொடிய வழக்கம் பண்டைய காலத்தில் பல இனங்களில் இருந்தது. கழு சாதாரணமாக மரத்தால் செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் அதனைக் ‘கழுமரம்’ என்று குறிப்பிட்டனர். இரும்புக் கழுவும் இருந்தது. ‘வெங்கழு’ என்று அதனைக் குறிப்பிட்டனர்.
கழுமரம் என்பது ஒரு கொலைக்கருவி. கூர்மையாகச் சீவப்பட்ட கழுமுனையில் நிறைய எண்ணெய் தடவி குற்றாவளியை பிடித்து நிர்வாணமாக்கி, அவன் கால்களை நெஞ்சோடு சேர்த்து மடக்கி குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையாலும், கழுவின் கூர்மையாலும், எண்ணெயின் வழுக்கலாலும் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக மேலே துளைத்துக் கொண்டு ஏறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேறி வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போடுட்டு மடிந்து போவான். இறந்த உடலை பறவைகள் கொத்தி உண்ணும். சாதாரணமாக இறந்தவர்களுக்கு சமயச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது. கழுவிலேற்றப்பட்ட உடல் நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும்.
களவு புரியும் போலித் துறவிகளைக் கழுவேற்றுவதை”கத்தித் திரிவர் கழுவடி நாய்போல் கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்”(திருமந்திரம் பாடல் எண் : 1655) என்கிறார் திருமூலர்.
தமிழகத்தில் மட்டுமின்றி, கிரேக்க, ரோமானிய நாகரீகங்களிலும் தொன்று தொட்டு இதுவே வழக்கமாக இருந்திருக்கிறது. இலத்தீனில்-க்ருக்ஸ், கிரேக்கில் ஸ்டவ்ரஸ் (மத்தேயு 27:40- பைபிள்) ‘வாதனையின் கழுமரம்’ என்ற சொற்றொடர், இயேசுவுக்குத் தண்டனை அளிக்கப்பட்ட பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிரேக்க இலக்கியங்களில், ஸ்டவ்ரஸ் என்ற வார்த்தை எந்தவொரு குறுக்குச் சட்டமும் இல்லாத செங்குத்தான ஒரு கம்பம் என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தினார்கள். இயேசுவை ஆணியால் அறைவதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவியைக் குறிப்பதற்கு அப்போஸ்தலர்களான பேதுருவும் பவுலும் ‘ஸீலோன்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்; இது, எவ்விதக் குறுக்குச் சட்டமும் இல்லாத ஒரே செங்குத்தான கம்பம் என்பதைக் காட்டுகிறது. (அப்போஸ்தலர் 5:30; 10:39; 13:29; கலாத்தியர் 3:13; 1 பேதுரு 2:24) லூயிஸ் மற்றும் ஷார்ட் என்பவர்களுடைய லத்தீன் அகராதி க்ருக்ஸ் என்ற வார்த்தைக்கு குற்றவாளிகள் அறையப்படுவதற்கோ தொங்கவிடப்படுவதற்கோ பயன்படுத்தப்படும் ஒரு மரத்தைக் குறிக்கிறது. சமணர் காலம்
சமண சமயம் விரிவுபடுத்தப்பட்ட காலம் சைவ சமயத்தவர்களுடன் பகை ஏற்பட நேரிட்டது அப்பொழுது அப்பர் சமணர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்“பாசிப் பல் மாசு மெய்யர் பலம் இலாச் சமணரோடுநேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன்”சமணர்கள் பாசி பிடித்த பற்களை உடையவர்கள், அழுக்குப் பிடித்தவர்கள், பலம் இல்லாதவர்கள் என்கிறார்.நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னன் தனது வெப்புநோய் தீர்த்த திருஞான சம்பந்தரின் சைவ சமயம் தழுவிட 8000 சமணர்களை கழுவேற்றியதாக பெரியபுராணம் கூறுகிறது.

ஜாக்ஸ் அராகொவினால் லிதொகிராபிக் முறையில் வரையப்பட்ட கொலைக்கருவி ஓவியம் (paradiseofthepacific.files.wordpress.com)
“மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கிதுன்னிய வாதில் ஒட்டி தோற்ற இச்சமணர் தாங்கள்முன்னமே பிள்ளையார் பால் அனுசி தம்முற்றச் செய்தார்கொல்நுனைக் கழுவில் ஏற்ற முறை செய்க என்றுகூற” என்றும்
சம்பந்தர் தனது மதுரைப் பாடல்களில் “வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்ஆதம் இல்லி அமணொடு தேரரைவாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?”
அதாவது, வேதத்தையும் வேள்வியையும் திட்டிக் கொண்டு திரியும் பயனற்றவர்களான சமணர்களையும் பௌத்தர்களையும் நான் வாதத்தில் வென்று அழிக்க விரும்புகிறேன் என்கிறார்.
தீர்வு
குற்றத்தை இழைத்தவர் என்ற சந்தேகத்தின் பெயரிலோ அல்லது குற்றத்திற்கான தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதற்காகவோ, “எவரொருவரும் சித்தரவதைக்கோ அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற, கீழ்த்தரமாக சிறுமைபடுத்தக்கூடிய நடவடிக்கைகளுக்கோ அல்லது தண்டனைகளுக்கோ உட்படுத்தப்படக் கூடாது” என்று மனித உரிமைகளைக் காக்க உலக நாடுகள் அனைத்தும் கையெழுத்திட்டுள்ள உலக மனித உரிமைப் பிரகடனம் (1948) 5ஆம் விதி கூறுகிறது. இது நடைமுறையில் இருந்தாலும், ஒவ்வொரு நாடும் தங்களின் வழமைப்படி தனித்தனியான சட்டங்கள் வைத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தண்டனை முறைகளை இன்றைக்கும் அச்சுப் பிசகாமல் அப்படியே நடைமுறைப்படுத்தி வருகின்றன.
சித்திரவதை செய்து கொல்லுதல் என்ற நிலைப்பாடு எக்காலத்திலும் மனிதநேயமாகாது என்னும் கொள்கை பலதரப்பட்ட மக்களாலும் பதிவுசெய்யப்பட்டு வந்தாலும், காலத்திற்குக் காலம் இழைக்கப்படுகின்ற குற்றங்களின் பாரதூரம் மற்றும் தாற்பரியம் போன்றவற்றை சீர்தூக்கிப்பார்கையில் தண்டனைகளின் தீவிரத்தன்மை அதிகரிக்கப்படவேண்டியதா என்ற கேள்வி எம்முள் எழுந்தவண்ணமே உள்ளது