விசும்பின் துளி வீழின்…

                       “விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

                         பசும்புல் தலைகாண்ப தரிது”.

                                                                                         —-  (குறள் எண்:16)

பெரிய,பெரிய மசூதிகள், எல்லையற்று பரவியிருக்கும் கருவேலங்காடுகள், மனதோடு ஒட்டிக்கொள்ளும் கடல் காற்றின் உப்பு என்று நினைவுகளில் இருக்கின்றது வங்கக்கரை மாவட்டம். இராமநாதபுரத்தின் ரேகைகள் அனைத்தும் கடலும்,கடல் சார்ந்த நிலமும் என்று நெய்தலின் தொன்மைக்கு அழைத்துச் செல்லாமல் வறட்சியும், வறட்சியின் அழகியலும் என்று புதுவித நிலத்திணைக்குள் அழைத்துச்சென்றது. இரண்டு வருடத்தில் இது என்னுடைய மூன்றாவது பயணம். ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு இடம், புதுவித மக்கள், புதுவிதக் கதைகள் மற்றும் புத்தம் புதுவாசம். அந்த இரட்டை அடுக்கு ஓட்டுவீடுகள் நிறைந்திருக்கும் இஸ்லாமியத்தெருக்கள், நேரம் தவறாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் துவாக்களின் இலயங்கள், எப்போதும் உழைக்கக்காத்திருக்கும் திடம் கொண்ட மனிதர்கள், குடிநீரைவிலைக்கு கொடுத்துவாங்கிச் சென்று தங்கம் போல் பாதுகாக்கும் பாங்கான வாழ்க்கை முறைகள் – இன்னும் எண்ணற்ற அழகியலுடன் விடிந்தது இம்முறைப்பயணம்.

கார்காலம் எனப்படுவது எத்தனை உற்சாகத்தினைத் தரும் என்பதை மேற்குத் தொடர்ச்சிமலையின் ஏகபோக உரிமைகளை அனுபவித்தவர்கள்தான் அறிவார்கள் என்பதில் என்றும் ஐயமில்லை. அந்த வகையில் தேனியில் சென்ற காலமும் சரி, கோவையில் வாழும் காலமும் சரி  மழைக்காக, நீருக்காக ஏங்கிய நாட்களென எந்நாட்களும் இருந்ததில்லை. ஆனால் இராமநாதபுரத்தில் கழிந்த இரண்டு கார்காலப் பொழுதுகள் மிகப்பெரிய வித்யாசத்தை ஏற்படுத்தியது என்பது மட்டுமே உண்மை. இந்தியாவின் மிக வறட்சியான பகுதிகளில் ஒன்றான இராமநாதபுர மாவட்டத்தில் கோடை காலத்தில் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கலன்கள் ரூபாய் ஐம்பது வரை விற்கப்படும். மழைகாலத்தில் பெரிதும் வித்யாசப்படவில்லை ரூபாய் 35க்கு அந்த தண்ணீர் கலன்கள்  விற்கப்படும். கிராமத்திற்கு கிராமம் இவ்விலையில் வேறுபாடுகள் இருக்கலாம்.

மேலக் கொடுமலூர் பகுதியில் விற்கப்படும் குடிதண்ணீரின் விலையானது சிறுபோது பகுதியில் வேறுபடலாம். சிறுபோது பகுதியில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்தில் வேலைபார்க்கும் செவிலியர் ஷாலினியிடம் கேட்டபொழுது இரண்டு வருடங்களுக்கு முன்பு பெய்த மழைக்குப்பின் அந்தப்  பகுதியில் மழையின் வரத்து மிகவும் குறைந்து விட்டதாகக் கூறினார். மழைக்காலம் முடிந்த பின்பு ஒவ்வொரு ஊரணியாய் தண்ணீர் வற்றும். பெரிய ஊரணி கடைசியாய்தான் வற்றத் தொடங்கும். அதில் தண்ணீர் தேங்கியும் வெகுநாட்கள் ஆகிவிட்டது என்றும் கூறினார்.

கண்களுக்கு எட்டியதூரம் வரை கண்டதெல்லாம் கருவேலமரங்கள் மட்டுமே. முதுகுளத்தூரில் இருந்து கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் பயணித்தபோது, மழைக்காலத்தை எவ்வாறாய் இவர்கள் வரவேற்கிறார்கள் என்று தெரிந்தது. நான் இராமநாதபுரம் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நல்லமழைகொட்டியதாக சிறுபோதுவில் இருந்த குறுநில விவசாயி ஒருவர் கூறினார். இம்முறை நல்ல மழைபெய்யும் என்ற நம்பிக்கையின் பெயரில் JCB வாகனங்கள் கொண்டு கருவேல மரங்கள் அனைத்தையும் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அகற்றப்பட்ட கருவேல மரங்களை பெரியமண்மேடு அமைத்து அதில் வைத்து எரித்து கரிக்கட்டைகளாக மாற்றுகின்றார்கள். செங்கல் சூளைகளில் இந்த கரித்துண்டுகளை விற்றுவிடுகின்றார்கள்.

நன்செய் மற்றும் புன்செய் நிலங்களில் நடைபெறும் விவசாயமுறைகளும் பெரியமாற்றங்களைக் கொண்டிருக்கின்றது. நன்செய் நிலங்களில் கிணறு மற்றும் ஆற்றுப்பாசனத்தை நம்பி நெல் நடவுசெய்வார்கள். நெல் நாற்றுநடும் நாளை குலவை ஒலியுடன், பொங்கலிட்டு கொண்டாடும் வழக்கமானது தேனியில் இன்று வரை நடைமுறையில் இருக்கின்றது. நெல்லினை ஒருகுறிப்பிட்ட பகுதியில் பாத்தியெடுத்து முளைக்கவைத்து, முளைத்தவுடன் வயலில் நடவு செய்வார்கள். இராமநாதபுரத்தில் உழவுசெய்யும் போதே , நெல்லைத்தூவி உழுது விடுகின்றார்கள். மழை பெய்யத் தொடங்கி அந்த ஈரத்தைப் பற்றி நெற்பயிர்கள் வளரத்தொடங்கும். ஒருவருடத்தில்  அங்கு பெய்யும் மழையின் அளவினைப் பொருத்துதான் நெல்லின் வளர்ச்சியும், அறுவடையும், விவசாயத்தில் ஆதாயமும் அந்த விவசாயியினால் காணமுடியும். பொதுவாக அனைத்து பகுதியிலும் நெல் விளைவிப்பதில்லை.பருத்தி, மற்றும் மிளகாயினை அதிகம் பயிரிடுகின்றார்கள் வறட்சியினைத் தாங்கும் தன்மை, அது வளர்வதற்கான தண்ணீரின் தேவை இரண்டையும் பொருத்துதான் இங்கு விவசாயம் சாத்தியப்படுகின்றது. பனைமரம் என்பதுதான் அவ்வூரில் நான் கண்ட பசுமை என்ற வார்த்தைக்கான அர்த்தம். மேலக் கொடுமலூர் போன்ற பகுதிகளில் கால்நடை வளர்ப்பு அதிகமாக இருக்கின்றது. பெண்கள், பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றார்கள்.

இராமநாதபுரம் என்றாலே வறட்சி என்றுசொல்லிவிடவும் முடியாது. காரணம் வங்கக்கடல். கடற்கரை மாவட்டமாக இருப்பதால் இங்கு இருக்கும் பறவைகளின் எண்ணிக்கை  மற்றும் வகைகள் மிக அதிகம். தமிழகத்தில் வேறெங்கும் காணக் கிடைக்காத நிறைய பறவைகளை இங்கு காணலாம். பல்லுயிர்களுக்கான வாழ்விடம் என்று கூறிவிடும் அளவிற்கு இல்லாமல், தன் நிலத்தின் தன்மையை ஏற்றுக்கொள்ளப் பழகியிருக்கும் உயிரினங்களின் தாய்மடியாக இருக்கின்றது இராமநாதபுரம் மாவட்டம். ஏனைய தமிழகப்  பகுதிகள் போல் இங்கும் இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றார்கள். செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் கந்தூரி திருவிழாவானது இம்மாவட்டத்தில் அதிகம் பிரசித்தி பெற்றது. அவ்விழாவில் இனப்  பாகுபாடின்றி அனைவருக்கும் உணவளிக்கும் பழக்கம் இருக்கின்றது.

 

மழையெனப்படுவது அவ்வூர்விவசாயத்தை மட்டும் வளப்படுத்தும் என்றால் அதுபொய். அவ்வூர் மக்கள்  செய்யும் தொழிலினைப் பொறுத்து அவர்களுக்கான வருவாய் இருக்கின்றது. அவர்கள் ஈட்டும் வருவாயினைப் பொருத்து அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்கின்றது. அதில் கல்வி, ஆரோக்கியமான உணவு, தனிமனித வருவாய், மருத்துவத்  தேவைகள் எனஅனைத்தும் பூர்த்தி செய்யப்படுவதால் மழை என்பது வாழ்வாதாரம். வாழ்வியலை மாற்றும் காரணி என்றும் கூறலாம். ஆறுகளின் எண்ணிக்கை, குளங்களின் கொள்ளளவு, எத்தனை ஏக்கர் நிலப்பரப்பு என்று எண்களால் இக்கட்டுரையை நிரப்புவதில் உடன்பாடு இல்லாததால், அங்கிருக்கும் மக்களின் நிலை, அவர்கள் செய்யும் தொழில், அவர்களின் அன்றாட வாழ்வினை பதிவு செய்கின்றேன்.

 

 

 

Related Articles

Exit mobile version