பாரதி எனும் பிராண்ட் – 3 பார்வைகள்

-பக்ஷிராஜன் பாரதி-

கருத்தாக்கம்: விஜயகாந்த் துரைசாமி.  பரீஸ், பிரான்ஸ்

இன்று பக்ஷிராஜன் யாரெனக் கேட்டால் அனேகருக்கு தெரிந்திருக்கும். ஆனால் நானறிந்த பக்ஷிராஜன் நூற்றாண்டிற்கு முன்பே உதயமானவன்.

காக்கை குருவி எங்கள் ஜாதி – என்று அன்றே பாடிவிட்டான். அவன் அலைந்து திரிந்து குருவிகளையும் குயில்களையும் காதலித்த காலத்தில் கையடக்க தொலைபேசியும் இல்லை. கழுத்து வலியும் இல்லை. எத்தனை ஆனந்தத்தை கொண்டாடியிருப்பான் அந்த முண்டாசுக்கவி.  சிட்டுக்குருவி சிறகடித்து வயல்காட்டில் பறந்துசெல்ல, கார்முகில் சூழ்ந்த பொழுதில் கொக்கும் நாரையும் மேலெழுந்த காட்சி கண்டு தான் மூர்ச்சையாகிப் போனதாயும் ஒரு பதிவுண்டு. அந்த இயற்கையை நம்மில் எத்தனை பேர் அனுபவித்தோம். அந்த பக்ஷிராஜன் சுப்ரமணிய பாரதி.

“விட்டு விடுதலையாகி நிற்பாயிந்த

சிட்டுக்குருவியைப் போலே

எட்டுத்திசையும் பறந்து திரிகுவை

ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை

மட்டும் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்

வானொளியென்னும் மதுவின் சுவையுண்டு

பெட்டையினோடு இன்பம் பேசிக் களிப்புற்று

பீடையில்லாத ஓர் கூடு கட்டிக்கொண்டு

முட்டைதரும் குஞ்சை காத்து மகிழ்வெய்தி

முந்த உணவு கொடுத்து அன்பு செய்திங்கு

முற்றத்திலேயும் கழனி வெளியிலும்

முன்கண்ட தானியம் தன்னை கொணர்ந்துண்டு

மற்றப் பொழுது கதைசொல்லி தூங்கிப் பின்

வைகறையாகுமுன் பாடி விழிப்புற்று…..

விட்டுவிடுதலை ஆகி நிற்பாய் இந்த சிட்டுக்குருவியைப் போலே…..!!!”

சூழலியலாளர் என்ற சொற்பதம் இப்போது நமக்கு பரிச்சயமானது. ஆனால் அந்தக் காலமே சூழலியல் எழுத்தாளன் எங்கள் கவிஞன். பறவைகளோடு வாழ்ந்தான். அவைகளின் அன்பை உணர்ந்தான். காதலித்தான். ரசித்தான். தன்னை மறந்தான். விடுதலை உணர்வினை உணர்ந்தான். இயற்கையோடு இயைந்தான். வரிகளில் வடித்தான். ஊடு கடத்தினான். ஊடகமானான்.

இன்று பாரதியின் ஆஃரா(aura) இருந்திருந்தால்

“சின்னஞ் சிறுகுருவி போலே-நீ

திரிந்து பறந்துவா பாப்பா!

வண்ணப் பறவைகளைக் கண்டு-நீ

மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்

கூட்டி விளையாடு பாப்பா!

எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு

இரக்கப் படவேணும் பாப்பா!”

என்று, தான் எழுதித் தூண்டிவிட்ட பாப்பாக்களில் ஓடி விளையாடுவோர் இங்கே இன்று எங்கே என்று தேடித் திரிந்திருப்பார். அவரின் ஆஃரா (aura) அலைபேசிகளையும், வரைப்பட்டிகைகளையும் கொத்திச்சென்றிருக்கும். காதல் போயின் சாதல் என்றவரின் ஆஃரா (aura) , காதல் இல்லா மோதல்கள் கண்டு இன்னும் சினம் கொண்டிருக்கும்.

அப்படியொரு ஆஃரா ( aura ) ஒருவேளை சாத்தியமானால்

அதை எதிர்க்க எந்திரனாகிய சிட்டி தேவையில்லை. இயந்திரமாய் மாறிய நாம் மனிதனாய் மாறுவதே போதும்.

-பாரதியின் கண்ணம்மாவும், இன்றுள்ள நானும்!-

கருத்தாக்கம்: கிருத்திகன் நடராஜா. வவுனியா, இலங்கை

பாரதி, உண்மையில் யாரை நினைத்து இந்த கண்ணம்மா என்ற பாத்திரத்தினைக் கொண்டுவந்தார் என்ற குழப்பம் இன்னும் எனக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. சரியான விடையும் கிடைக்கவில்லை.

ஆனால் பாரதியார் பாடல்களில் என்னை அதிகம் ஆட்கொண்டது “பாயுமொளி நீயெனக்கு”எனும் பாடல் தான்.

தோயுமது நீயெனக்கு

தும்பியடி நானுக்கு”

இந்த வரிகளில் தான் பாரதி ஏதோ விந்தையை வைத்துள்ளார் போலும்.

“காதலடி நீயெனக்கு

காந்தமடி நானுனக்கு

வேதமடி நீயெனக்கு

வித்தையடி நானுக்கு”

நிச்சயம் இந்த வரிகள் மனைவிக்கோ அல்லதூ காதலிக்கோ அர்ப்பணிக்கப்படவில்லை என்று மட்டும் புரிகிறது.

ஆக, யாரிந்த கண்ணம்மா என்ற தேடல் வாழ்க்கை முழுவதும் இருக்கப் போகிறது என்று நினைத்த காலங்கள் எல்லாம் எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது.

அப்படி நினைந்திருக்கையில் கண்ணம்மாவின் வரவு நிச்சயம் மகிழ்வினை மாத்திரந் தான் கொடுக்கும். யாரையுமே அனுமதிக்காத எமது வட்டத்திற்குள்  இலகுவாக கேள்வியே கேட்காமல் நுழைந்து விடுவாள் இந்த கண்ணம்மா. விரும்பியோ விரும்பாமலோ அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். காலப்போக்கில் அது விருப்பத்திற்குரியதாக மாறி, காலம் முழுவதும் அந்த அன்பு இருக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டினைத் தோற்றியே விடும் வகையிலான திறமையைக் கொண்டவள் தான் இந்த கண்ணம்மா.   

கண்ணம்மா மேலான அன்பு அளப்பரியது. அந்த அன்பினை நிச்சயம் வேறு யாரிடத்திலும் காட்டவும் முடியாது. பெறவும் முடியாது. பொஸசீவ்நெஸின் உச்சத்தினை கண்ணம்மா ஒருங்கே வாய்க்கப் பெற்றவளாக இருப்பாள். தனக்கு மட்டுமே உரியவனாகவே பாவனை செய்வாள். ஒட்டுமொத்த சண்டைகளும் அவனுடன் தான் உச்சமாக இருக்கும். இருந்தும் அந்த சண்டைகள் குறுகியதாகத் தான் இருக்கும். உடனேயே சமாதானமும் அடைந்துவிடுவாள்.

ஆனால் இந்தக் கண்ணம்மாக்கள் தொடர்ச்சியாக, எம்வாழ்க்கையில் நிலையாக பயணிப்பதில்லை அல்லது பயணிப்பதற்கான சந்தர்ப்பங்களை இல்லாமலே ஆக்கிவிடுவர். தாமே விட்டு விலகக் கூடிய மனவலிமையைப் பெற்றவர்கள். அது எப்படி கண்ணம்மாவுக்கு மட்டும் இந்த மனவலிமை உள்ளது என்று என்னிடமே கேட்டுக்கொள்வேன். இற்றை வரை அதற்கான பதில் கிடைக்கவுமில்லை.

ஆனால் ‘இறந்த’ காலத்தில் அவளை விட வேறு யாராலும் அந்தளவு சந்தோசமாக அவனை வைத்திருக்க முடியாது. அத்தனை பாசங்களும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவள். இருக்கும் காலத்தில்

கண்மூடித்தனமான காதல் என்பதற்கு மறுபெயர் தான் இந்தக் கண்ணம்மா பாத்திரம்

“போதமுற்ற போதினிலே

பொங்கிவருந் தீஞ்சுவையே

நாதவடிவானவளே

நல்லயுயிரே

கண்ணம்மா”

காதல் கொண்டவன் மேலான பாசத்தினை விட வேறு எதுவும் அவளுக்குப் பெரிதாக இருப்பதில்லை.

உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் எனும் நாமம் வைக்கப் பெற்றவர்கள், இந்தக் கண்ணம்மாக்களின் விருப்பத்திற்குரிய நபர்கள் தான்.

இந்தக் கண்ணம்மா மேலுள்ள காதல் தற்காலிகமானது என்பது கூட, விட்டுப் பிரிந்த பின்னர் தான் அறியக் கிடைக்கிறது.

நிரந்தரமானவள் என்று நினைத்துக் கொட்டும் பாசமும் இடையில் நின்று விட்டதே என்று நினைந்து புலம்பிய நாட்களும் உண்டு. ஆனால் கண்ணம்மாவிற்கு மாத்திரம் தெரியும் எவ்வளவு காலத்திற்கு பாசம் நீடிக்கும் என்று. பாரதியின் அனுபவமும் அப்படித் தான் போல. இல்லாவிடின் கற்பனையில் அப்படியானவளோடு வாழ்ந்திருக்க வேண்டும். இது மட்டுந் தான் நான் புரிந்து கொண்ட ஒரே உண்மை.

“கண்ணின் மணி போன்றவளே

கட்டியமுதே கண்ணம்மா”

இப்படியான அருமையான கண்ணம்மாவினை கற்பனையிலாவது படைத்ததற்காகவேயேனும் என்போன்றோருக்கு இந்தப் பாரதியைப் பிடித்தே தீரும்.

-பாரதியை ஒரு மோசமான பிராண்ட் ஆக்காமல் இருப்போம்!-

கருத்தாக்கம்: ஜெனி – சென்னை, இந்தியா

பாடப்புத்தகங்களில் இடம் பெற்று இருந்த முக்கிய தலைவர்களில் ஒருவராகத் தான் எனக்கு பாரதியார் அறிமுகம்.பாடப்புத்தங்கள் வழியே அறிமுகம் ஆகாதவர்களுக்கு இலக்கியம் வழியே அறிமுகம் ஆகியிருக்கலாம். பாரதியார் முன் வைத்த கோஷங்கள் எல்லாம் கிளர்ச்சியையும், மிரட்சியையும் உண்டாக்குவதாகவே இருந்திருக்கிறது என்பதால் பாரதி மீது ஒரு ஈர்ப்பும் இருந்தது. ஐந்து வயது குழந்தையையும் கூட பாரதி வேஷமிட்டு ‘அச்சமில்லை அச்சமில்லை’ சொல் என பரிந்துரைக்கும் பெற்றோர்கள் இருக்கும் ஊர் இல்லையா இது?

“அச்சமில்லை” மட்டுமல்லாமல்,”பயங்கொள்ளல் ஆகாது பாப்பா;அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா” என்றதுவும், ”வஞ்சனை பேய்கள் என்பார், இந்த குளத்தில் என்பார், அந்த மரத்தில் என்பார்” என்றதுவும், ‘வெந்து தணிந்தது காடு’ என்றதுவும், பாரதியை மாபெரும் புரட்சியாளரகவே மனதில் பதிய வைத்திருந்தது. மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் பகுத்தறிவின் படிநிலைகள் – யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பதை உணர்த்தும். பாரதியாரின் மீதுமே பல வகையான விமர்சனங்கள் இருக்கிறது.அதை இப்போது தவிர்த்து விட்டு, ’பாரதியார்’ எனும் பிராண்டை தவறாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகம் குறித்து கொஞ்சம் பேச வேண்டும்.

பாரதியார் தான் எனக்கு பெரிய ஊக்கம் எனும் பலருக்கு, பாரதியார்  ஒரு அரசுக்கு எதிராக செயல்பட்டவர் என்பதுவும், காவல்துறையினரால் தேடப்பட்டவர் என்பதுவும் தெரிந்திருக்காது போல – பாடப்புத்தகத்தில் இருக்கும் ஒன்றிரண்டு கவிதைகளை படித்துவிட்டு பாரதியின் பெயரில் தங்களுடைய வணிகத்திற்கான பிரச்சாரத்தை மட்டும் வசதியாக செய்து கொள்கிறார்கள். அதுவும் ’நவயுக பாரதியாக’ பாவிக்கப்படும் இசை வாரிசோ மக்கள் கிளர்ச்சியின் வலிமையை கூட உணராதவர் என்பது பரிதாபத்திற்குரியது.

அரைவேக்காட்டுத்தனமான பிரச்சாரங்களுடன் பாரதியின் படத்தை தூக்கி நிற்பவர்களை எல்லாம் உதாசீனப்படுத்த நாம் கற்க வேண்டும் என்று நினைக்கிறேன். பாரதி,பகுத்தறிவின் எல்லை கிடையாது. ஆனால், பகுத்தறிவிற்கான பயணத்தில் நிச்சயமாக பாரதிக்கு ஒரு இடம் உண்டு. ஏனெனில், பாரதியை மிக எளிதாக குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க முடிகிறதே. அங்கிருந்து தானே மாற்றத்தை விதைக்க முடியும்?சாதி மறுப்பும், சக உயிருக்கான மரியாதையும், அனுதாபமும், அன்பும், காதலும் எல்லாம் பாரதியின் பாடல்கள் வழியே ஆழமாக பதியும்.

தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதிக்கு பைத்தியம் என்று பிறரால் வசை பாடப்பட்ட பாரதியை தானே இன்று நாம் மகாகவி என்று பாடுகிறோம். இந்த பூமியில் சாதாரணமாக இருப்பதென்பது “ வேடிக்கையானது” என்பதையும், பைத்தியமாக இருப்பது மட்டுமே வாழ்க்கைமுறையானது என்பதை எளிதாய் சொல்லிக் கொடுக்க பாரதி ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அதைத்தானே இன்று நாம் “ மை லைஃப் , மை ரூல்ஸ்” , “ வாண்டர் லஸ்ட்” என்றும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துக் கொண்டிருக்கிறோம். பாரதியை போலோரு பைத்திய மனநிலை வேண்டும் என்பதை தவிர நமக்கு பெரிய வேண்டுதல்கள் இருப்பதில்லை.

ஒரு மாறுதலுக்காக, நவயுக பாரதிக்களிடம் இருந்து தப்பிக்க, பாரதியை உண்மையாக படித்தாலே போதும் என்று நினைக்கிறேன். அவருடைய எழுத்துக்களில் இருக்கும் நேர்மையும், துணிச்சலும் இன்றைய அரைவேக்காட்டு பிரச்சாரங்களை எல்லாம் அடையாளம் காட்டிவிடும். பாரதியை , சமகால அரைவேக்காட்டுத்தன பிரச்சாரங்களின் பிம்பமாக மாற்றிவிடாமல் இருப்போம். போராட்ட மரபில் இருந்து வந்திருக்காவிட்டாலும், போராட்டத்தின் பங்காக தன்னை மாற்றிக் கொண்ட பாரதிக்கு நாம் செய்யும் குறைந்த பட்ச உதவியே அவரை ஒரு மோசமான வணிக பிம்பமாக மாற்றாமல் இருப்பது தான்.

Related Articles

Exit mobile version