சாதி, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், மூடநம்பிக்கை என்று இந்திய சமூகத்தின் அத்தனை சாபக்கேடுகளும் சீரழித்த பிறகும் தனக்கான நீதியை தானே தேடிக்கொண்ட ஒரு பெண், பூலான் தேவி!
சிறு வயதில்
அதிகம் வளர்ச்சி பெறாத பிந்தங்கிய மாநிலங்களில் ஒன்று உத்தரபிரதேசம். அதில் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் ஒன்று கோர்கா பூர்வா. அப்பகுதியில் படகோட்டி பணி செய்பவர்களை மல்லா என அழைக்கின்றனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பான மல்லா வகுப்பில் 1963ம் ஆண்டு பிறந்தார் பூலான் தேவி. நான்கு சகோதரிகள், ஒரு சகோதரன் கொண்ட பூலான் அவரது பெற்றோர் தேவிதின் மற்றும் மூலாவிற்கு பிறந்த இரண்டாவது பெண் குழந்தை. திருமணத்தின் போது வரதட்சணை கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பெண் குழந்தைகளை அறவே வெறுத்தார் பூலான் தேவியின் தந்தை தேவிதின். பூலான் தேவி மீதும் அவரது சகோதரிகள் மீதும் வெறுப்பை மட்டுமே காட்டி வளர்த்தார். வீட்டு வேலைகளை செய்ய தவறினாலும், தாமதமாக செய்தாலும் அடி உதைகளை பரிசாக கொடுத்தார். அந்த பகுதியில் உள்ள மற்ற பெண் குழந்தைகளை போல் பூலான் தேவியும் பள்ளிக்கு செல்லவில்லை. பூலான் தேவியின் சிறுவயது காடுகளில் விறகு வெட்டுவதும், வீட்டு வேலை பார்ப்பதுமாக கழிந்தது. தந்தையை தவிர யாருக்கும் அஞ்சவில்லை பூலான். மேலும் சிறியவர் பெரியவர் என்று பாராமல் மதிப்பில்லாமல் பேசும் பெண் பூலான் தேவி என்ற பெயரும் அவருக்கு இருந்தது. இதனால் வீட்டை விட்டு அவரை சீக்கிரம் வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிட்டார் தேவிதின். அப்போது பூலான் தேவிக்கு 11 வயது, அவரை விட மூன்று மடங்கு வயதான பூத்திலால் என்பவருடன் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டார். குழந்தை திருமணங்கள் வாடிக்கையாக நடக்கும் அந்த கிராமத்தில் இது பெரிதாக பார்க்கபடவில்லை. இதனால் எந்த வித எதிர்ப்புமின்றி பூலான் தேவிக்கும் புத்திலாலுக்கு திருமணம் நடந்தது.
அம்மாவைப் பார்க்கச் சென்றபோது
பூலான் தேவியின் தந்தை எப்படி கடுமையாக நடந்துகொண்டாரோ அதே போல் தான் புத்திலாலும் பூலான் தேவியிடம் நடந்து கொண்டார். சிறுமி என்று கூட பார்காமல் அவருடன் உடலுறுவு கொண்டார் புத்திலால். காலை முதல் இரவு உறங்க செல்லும் வரை வீட்டு வேலை செய்ய வைத்தார், சொல்பேச்சு கேட்கவில்லை என்றால் 11 வயது சிறுமி என்று கூட பாராமல் அடி உதை. புத்திலாலின் கொடுமைகளை பொறுக்க முடியாமல் வீட்டை விட்டு தப்பிக்க திட்டமிட்டார் பூலான். அப்போது பூலான் தேவியின் அம்மா மூலாவிற்கு உடம்பு சரியில்லை என்ற தகவல் வருகிறது. இதை கேட்டதும் தாயை பார்க்க வேண்டும் என்று புத்திலாலிடம் கெஞ்சுகிறார் பூலான் தேவி. ஆனால் உன்னை அனுப்பி விட்டால் வீட்டு வேலை யார் பார்ப்பது எனக்கூறி பூலான் தேவியை வீட்டிலேயே அடைத்துவிடுகிறார் புத்திலால்.
கொன்றாலும் பரவாயில்லை தாயை பார்த்துவிடவேண்டும் என்று கணவன் வீட்டை விட்டு தப்பித்துவிடுகிறார் பூலான் தேவி. தாயை பார்க்க வந்த மகளை பார்த்து அதிர்ச்சியடைந்தார் தேவிதின். பூலான் தேவியின் கணவன் அவரை ஒதுக்கி வைத்துவிடுவார் என அஞ்சினார் பூலானின் தந்தை. இதனால் கணவன் வீட்டுக்கு உடனே போய்விடு எனக் காட்டமாக கூறிவிடுகிறார். ஆனால் தேவிதின் அஞ்சியதை போலவே பூலான் தேவி தேவையில்லை என கூறிவிடுகிறார் புத்திலால். அப்போது தேவிதின் அண்ணன் வீட்டில் போய் கொஞ்ச நாட்கள் பூலான் தேவி தங்க வைக்கவும் என ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்.
அதன் படி தேவிதின்னின் அண்ணன் கருதயாள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கும் காலை முதல் இரவு வரை வேலை, இல்லையென்றால் பெரியப்பா கருதயாள் மற்றும் அவரது மகனிடம் இருந்து அடி உதை. எல்லாவற்றையும் பொருத்துக்கொண்டு வாழ்கிறார் பூலான் தேவி. எங்கு சென்றாலும் பெண் என்பதால் கொடுமைகளை அனுபவித்தார். இந்நிலையில் தன் தந்தைக்கு இருக்கும் நிலத்தை விட அவருடைய அண்ணன் கருதயாளிடம் பல மடங்கு நிலம் இருப்பதை உணர்கிறார் பூலான். இதை அவர்களிடம் கேட்க பூலான் தேவியின் கணவன் வீட்டுக்கு அவரை துரத்தி விடுகிறார் கருதயாள். அங்கு சென்ற போது இன்னொரு திருமணம் செய்து கொண்டு புது மனைவியுடன் புத்திலால் இருப்பது பூலான் தேவிக்கு தெரியவந்தது. இங்கே ஏன் வந்தாய் உனக்கு இங்கு இடமில்லை என அங்கிருந்து மீண்டும் புத்திலாலால் அடித்து துறத்தி விடப்படுகிறார். இறுதியாக பிறந்த விடே கதி எனத் திரும்பினார் பூலான் தேவி. படித்து, விளையாட வேண்டிய வயதில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி ஊர் ஊராக பந்தாடப்படப்பட்டு கொண்டிருந்தார் பூலான் தேவி.
கைலாஷுடன் மறுமணம்
சொந்த ஊர் திரும்பிய பூலான் தன் தந்தைக்கு உரிமையான நிலத்தை கொடுக்குமாறு அவரது பெரியப்பா கருதயாளிடம் கேட்கிறார். ஆனால் பத்திரங்கள் எல்லாம் கருதயாள் பெயரில் இருக்கவே அந்த பிரச்னை பூலானுக்கு எதிராக முடித்து வைக்கப்படுகிறது. நிலப்பிரச்சனையை மீண்டும் கிளறியதால் பூலானை பழி வாங்க வேண்டும் என நேரம் பார்த்து காத்திருந்தனர் கருதயாள் குடும்பத்தினர். இந்நிலையில் கைலாஷ் என்பவருடன் பூலானுக்கு நெருக்கம் ஏற்படுகிறது. கைலாஷ்க்கு ஏற்கனவே திருமணமாகியிருந்த போதிலும் பூலான் அவரை மணமுடிக்க விரும்புகிறார். இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்கின்றனர். அப்போது தான் கைலாஷின் நண்பர்களும் கொள்ளையர்களுமான பிக்ரம் மல்லா மற்றும் பாபு குஜ்ஜர் ஆகியோரை பூலானுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். சம்பல் பள்ளத்தாக்கை இருப்பிடமாக கொண்ட கொள்ளை கும்பல்கள் ஒன்றின் தலைவர் பாபு குஜ்ஜர்.
பூலானை முழுக்க முழுக்க விரும்பிய முதல் நபர் கைலாஷ், தன் வாழ்க்கை இனிமேல் கைலாஷுடன் தான், இனிமேல் மகிழ்ச்சி மட்டும் தான் நினைத்து கொண்டிருந்தார் பூலான் தேவி. ஆனால் பூலானின் கனவு சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. பூலானை பழி வாங்க காத்துகொண்டிருந்த பெரியப்பா கருதயாளின் குடும்பம் பொய் வழக்கு ஒன்றை பூலான் மீது போட்டனர். திருட்டு பட்டம் சூட்டி அவரை சிறைக்கு அனுப்பினர். அப்போது பூலானுக்கு பதினாறு வயது. சிறையில் போலீசாரின் பாலியல் சீண்டல் உள்ளாகிறார். பின்னர் அவர்களின் பூட்ஸ் கால்களுக்கு பந்தானார் பூலான். மரணம் தன்னை தழுவி கொள்ளாதா என்று, இறைவனை வேண்டுகிறார். ஆனால் கிடைத்தது அடியும் உதையும் தான்.
ஜாமீனில் வந்த பின்
சிறையில் இருந்த பூலானை பார்க்க அவரது தந்தை தேவிதின் வருகிறார். தன் மகள் இன்னும் சில நாட்கள் சிறையில் இருந்தால் பிணமாக தான் திரும்புவார் என உணர்ந்த அவர், தன் முதலாளிகளிடம் அவரை ஜாமீனில் எடுக்க கெஞ்சினார். தாகூர் சமூகத்தை சேர்ந்த முதலாளிகள் பூலானை ஜாமீனில் எடுக்கின்றனர். பின்னர் தாகூர்களுக்கு நன்றி சொல்ல பூலான் தேவி சென்ற போது அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். கைலாஷை தவிர பூலான் தேவி சந்தித்த ஆண்கள் அனைவரும் அவரை துன்புறுத்த மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். அங்கிருந்து தப்பித்து கைலாஷிடம் செல்கிறார். பூலான் சிறைக்கு சென்ற காரணத்தை சுட்டிக்காட்டி அவரை ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம் என கூறுகின்றனர் கிராம மக்கள். என்ன செய்வதென்று தெரியாத கைலாஷ் தன் கொள்ளைக்கார நண்பரான பாபு குஜ்ஜருடன் பூலானை அனுப்பி வைக்கிறார். யாரை நம்பி வந்தோமோ அவனே தன்னை கொள்ளைகார கூட்டத்துடன் அனுப்பி வைக்கிறானே என மனம் நொந்து போனார் பூலான். ஏற்கனவே பூலான் மீது ஆசைகொண்டிருந்த பாபு குஜ்ஜார், இது தான் தருணம் என பூலானை தன் வசமாக்கி கொள்ள திட்டமிடுக்கிறார். இது கைலாஷ், பாபு குஜ்ஜாரின் நண்பரும் கொள்ளையருமான பிக்ரம் மல்லாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இருப்பினும் தலைவரான பாபு குஜ்ஜாரை எதிர்த்து கேள்வி எழுப்ப முடியாததால் கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறார். ஒரு கட்டத்தில் பாபுவின் கொடூரங்கள் தாங்க முடியாமல் மீண்டும் தப்பித்து ஓடுகிறார். ஆண்களின் கொடூரங்களில் இருந்து தப்பித்து தப்பித்து வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருந்தார் பூலான்.
எங்கு சென்றால் பாதுகாப்பு இல்லை… வேறு வழியில்லாமல் பிறந்த விட்டுக்கு திரும்பினார். ஆனால் கொள்ளையன் பாபு குஜ்ஜர் அவரை விடவில்லை. வீடுதேடி வந்து தன்னுடன் வா இல்லையேன்றால் உன் குடும்பத்தாரை உன் கண் முன்னே சுட்டுகொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார். குடும்பத்தினரின் உயிரை காப்பாற்ற வேறு வழியில்லாமல் பாபு குஜ்ஜருடன் சென்றார் பூலான். தன்னை மதிக்காது தப்பித்து வந்த பெண் பூலான் என்பதை ஏற்று கொள்ள மனமில்லாத பாபு குஜ்ஜர் அவரை வழி நெடுக அடித்து உதைத்து கொண்டு வருகிறார். அப்போது அதை பார்த்து பொருத்து கொள்ள முடியாத பிக்ரம் மல்லா தன் துப்பாக்கியால் பாபுவை சுட்டுக்கொல்கிறார். ஒரே ஒரு தோட்டாவை வைத்து கொள்ளை கும்பல்லையும் பூலான் தேவியையும் தனதாக்கி கொண்டார் பிக்ரம் மல்லா… அடுத்த கட்டத்தை அறிய பாகம் இரண்டு கட்டுரையை வாசிக்கவும்.
Web Title: Biography of Phoolan Devi, Tamil Article
Featured Image Credit: fusia