.jpg?w=1200)
ஆடவருக்கு அரசியாக தன் பிள்ளைக்கு தாயாக ஞானத்தில் சிறந்த பெண்மணியாக பொறுமைக்கு பூமியை போல வாழ்ந்த வீர மங்கையின் வரலாற்று சரித்திரமே இது. உடல் உறுதி கொண்ட ஆண்களை விட மன உறுதி படைத்த பெண்ணாக வாழ்ந்து விட்டு சென்ற பெண் இவள். பாரதி கண்ட புதுமை பெண்ணுக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்தவள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற காலக்கட்டதிலேயே முடி சூடி செங்கோல் தவறாமல் ஆட்சி செய்த பெண் மிக தந்திரமாகவும் மிக நுட்பமான அரசியல் அறிவாலும் பகைவர்களை மிகத்திறமையுடன் முறியடித்த பெண் இவள். வீரத்தில் இவள் அழகு ஓவியம் காலச் சக்கரத்தில் இவள் உயிர் ஓவியம் சரித்திரத்தின் பக்கத்தில் நீங்கா இடம் பெற்ற ராணி மகராணி.
ராணி மங்கம்மாவின் குடும்ப வாழ்க்கை
மதுரையை ஆட்சி புரிந்த சொக்கநாத நாயக்கரிடம் தளபதியாக இருந்த தப்பகுள லிங்கம நாயக்கரின் புதல்வி தான் இந்த வீர செல்வி இராணி மங்கம்மாள். சொக்கநாத நாயக்கர் தஞ்சாவூரை ஆண்ட விஜயராகவ நாயக்கரின் மகளை திருமணம் செய்ய நினைத்தார். எனினும் அவர் எண்ணம் நிறைவேறவில்லை. எனவே சொக்கநாத நாயக்கர் மங்கம்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். எனினும் சொக்கநாதர் 1682 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அப்போது அவரது மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் மூன்று மாத குழந்தை. ராணி மங்கம்மாவின் காலத்தில் கணவன் இறந்தால் மனைவியும் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. ஆனால் ராணி மங்கம்மா தன் மகனின் நலுனுக்காக உடன் கட்டை ஏறாமல் ஆட்சி பொறுப்பை ஏற்றார்.
தனது மகனின் 15 வது வயதில் மகனுக்கு முடி சூட்டி வைத்தார் ராணி மங்கம்மாள். அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கருக்கு சின்னமுத்தம்மாள் என்பவரை மணம் புரிந்து வைத்தார். தனது தாயின் உதவியாலும் அறிவுரையாலும்சிறப்பாகவும் திறமையாகவு ஆட்சி செய்தார் அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர். தனது தந்தை இழந்த பகுதிகள் சிலதை போரின் மூலம் மீட்டார் அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர். ஏழாண்டு காலம் செங்கோல் தவறாது நல்வழியில் ஆட்சி செய்தார். இருப்பினும் 1688 ஆம் ஆண்டு பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு இப்புவியை விட்டு இன்னுயிர் பிரிந்தார். அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் இறந்த சிறிது நாளிலேயே அவரது மனைவி ஆண் மகனை பெற்றெடுத்தார். தனது கணவரின் பிரிவை தாங்காத முத்தம்மாள் குளிக்க பயன்படுத்தும் பன்னீர் கலந்த நீரை அளவுக்கு அதிகமாக குடித்து ஜன்னி வந்து இறந்தார். பின் அவரின் மகன் விஜயரங்க சொக்கநாதருக்கு பெயரளவில் மட்டும் முடி சூடப்பட்டது. அவரின் பாட்டியும் சொக்கநாத நாயக்கரின் மனைவியுமான மங்கம்மாள் அவரின் சார்ப்பில் காப்பாட்சியாளராக பதவி ஏற்றுக் கொண்டார். இராணி மங்கம்மாள் பேரில் 1706 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார்.

ராணி மங்கம்மாவின் ஆட்சி திறமையும் மற்றும் சமுதாய பணிகளும்
ஒரு பெண் நாட்டை ஆள்வதை முதலில் மக்கள் விரும்பவில்லை. ஆனால் காலப்போக்கில் மக்கள் இவரின் ஆட்சி திறமையும் போர் யுக்தியையும் கண்டு வியந்து இவரை தலைவராக ஏற்றுக் கொண்டனர். இவரின் நிர்வாக திறமையும் சிறப்பாகவே இருந்தது. இவர் ஆட்சி செய்த நாட்டை மிக அழகான முறையிலேயே நிர்வாகித்தர். பல சாலைகள் கோயில்கள் பாசன நீர் தேக்கங்கள் என்று மக்களுக்கு பயன்படும் அனைத்தையும் அமைத்துக் கொடுத்தார். இவர் கோயில் கட்டுவது மட்டுமின்றி சாலை மற்றும் நகரம் அமைத்தல், குடிநீர் தொட்டி அமைத்தல், கம்மாய் ஏரி குளம் அமைத்தல் போன்றவற்றையும் நிறைவேற்றி உள்ளார். ராணி மங்கம்மாள் இந்து மதத்தை சேர்ந்தவராக இருந்த போதிலும் பிற மதங்களையும் மதித்தார். இவரது ஆட்சி காலத்தில் கிருஸ்தவர்கள் தங்கள் படைப்புகளை சுதந்திரமாக வெளிபடுத்த முடிந்தது. நல்ல பல திட்டங்களை செய்து மதுரையை சிறந்த முறையில் ஆட்சி செய்த பெண்மணி இவர். இவரின் ஆட்சி காலத்தில் பொருமளவு போர்கள் நடைபெறவில்லை. மேலும் இவர் மற்ற அருகாமை அரசிடம் நட்புறவையே விரும்பினார். எனினும் தஞ்சை மராத்தியர்களாலும் முகலாயர்கள் மற்றும் திருவாங்கூர் அரசாலும் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மதுரை நாயக்க அரசுக்கு கீழ் இருந்த திருவிதாங்கூர் சிற்றரசு இருந்தது. திருவிதாங்கூர் மன்னர் இரவி வர்மா மதுரை அரசுக்கு திரைப்பொருள்களைச் செலுத்தவில்லை. கல்குளம் பகுதியில் இருந்த நாயக்கர் படையையும் தாக்கி திருவிதாங்கூர் மன்னர் அழித்தார். இதனால் ராணி மங்கம்மாள் தன் இராஜதந்திர யுக்தியால் தளவாய் நரசப்பையா என்பவரின் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் படையை விழ்த்தியது. பின் இராணி மங்கம்மாவுக்கு செலுத்த வேண்டிய திறைப்பொருளாக பொன், பீரங்கி முதலிய பொருள்களையும் பெற்றுத் திரும்பியது.
ராணி மங்கம்மாவும் கிளியோபட்டரோவை போல் தான் சில சர்ச்சைக்குரிய கருத்துகளில் இருந்த போதிலும் அழகானவராகவும் சிறந்த ஆட்சியாளராகவும் பிரபலமானவராக இருந்தார். மதுரை பகுதியின் வீட்டு பெயர் தான் ராணி மங்கம்மாள் பெயர். திருச்சி மற்றும் மதுரை மக்களுக்காக பல தர்மசாலைக்களும் அரண்மனைகளும் கட்டினார். ராணி மங்கம்மாவின் அரண்மனை மதுரை காந்தி அருங்காட்சியகம் என்று தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் ராணி மங்கம்மாள் பிராமணர்களுக்கும் நிறைய நன்கொடை அளித்துள்ளார். வறண்ட மாவட்டங்களான மதுரை இராமநாதபுரம் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கும் ஏரி குளம் கம்மாய் என்று அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு விவசாய செய்ய வழிவகை செய்தார். மங்கம்மாள் சத்திரம் என்று பல சத்திரங்கள் அமைத்துக் கொடுத்து வழிப்போக்கர்களுக்கும் பாதசாரிகளுக்கும் உண்ண உணவு மற்றும் தாங்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்தார். இன்று கூட அவற்றை தெற்கு சீமையில் காண முடியும். திருடர்களை கூட திருத்தி திருட்டு தொழில் விடுத்து மறு வாழ்வு அமைய வழி செய்தவர் ராணி மங்கம்மாள். அன்றே மக்கள் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் கல்வி நிலையம் அமைத்துள்ளார். தன் மக்களுக்காக பல சாதனைகளை செய்து உள்ளார். உண்மையில் சமுதாய பணிகளை செய்வதில் இவர் மகாராணியே. இவரை போல் யாரும் இதற்கு முன் இருந்தவர்கள் சமுதாய பணிகளை செய்தது இல்லை.
தக்காணம் வரை தன் பேரரசை விரிவு செய்ய முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் எண்ணினார். இராணி மங்கம்மாள் முகலாயர் படை வலிமையை நன்கு அறிந்ததால் முகலாயரிடம் பணிந்து போக முடிவு செய்தார். போரை தவிர்க்க விலையுயர்ந்த பொருட்களை தளபதி சல்பீகார் அலிகானுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். மராத்தியர்களிடம் இழந்த பகுதிகளை மீண்டும் முகலாயர்களின் உதவியால் மீட்டார். முகலாயர்களின் உதவியால் உடையார்பாளையச் சிற்றரசர் கைப்பற்றிய மதுரை பகுதிகளையும் ராணி மங்கம்மா மீட்டார். முகலாய அரசு தன் ஆட்சியின் கீழ் தக்கணாத்தை கொண்டு வர நினைத்த அதே சமயம் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தன் ஆட்சியை விரிவு படுத்த எண்ணி மதுரையின் ஆட்சிக் கீழ் இருந்த சேலம் மற்றும் கோயம்புத்தூரை கைப்பற்றினான். திருச்சிராப்பள்ளி கோட்டையையும் 1695 ஆம் ஆண்டு முற்றுகையிட்டான். ஆனால் இராணி மங்கம்மாவின் படையால் அந்த முற்றுகை தவிடு பொடியாக்கப்பட்டது.

ராணி மங்கம்மாவின் சோகமான இறுதி காலம்
சோழர் காலத்தில் இருந்தே காவிரிக்கு போராட்டம் நடந்த வண்ணம் தான் உள்ளது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ராணி மங்கம்மாவும் தஞ்சை ஆண்ட மராட்டிய மன்னருக்கும் இடையில் காவிரியால் போர் ஏற்பட்டது. பெறும் படையுடன் காவிரியை காக்க இருவரும் சென்றனர். ஆனால் திடீரென்று ஏற்பட்ட பெரும் மழையால் அணை தானே உடைந்து போர் இல்லாமலே தடுப்பணை தகர்ந்ததாக கூறப்படுகிறது. முகலாய பேரரசு தமிழகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த சமயத்திலேயே கூட அரசியல் சாதுரியத்திலும் ஆட்சி திறனிலும் திறம்பட ஆண்ட வீரமங்கை இவர். அண்டை மாவட்டங்களுக்கு கூட சாலைகளையும் சத்திரங்களையும் அமைத்துக் கொடுத்தவர். இராணி மங்கம்மாவின் மிகப்பெரும் கடைசி தோல்வி இராமநாதபுரம் போரே. மதுரைக்கு எதிராக இருந்த இராமநாதபுரம் மன்னர் இரகுநாத சேதுபதிக்கும் இராணி மங்கம்மாவுக்கும் இடையே 17௦2 ல் போர் ஏற்பட்டது. மதுரையின் தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்த தளவாய் நரசப்பையா போரில் வீர மரணம் அடைந்ததும் போரின் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.

தமிழகத்தில் ஆட்சி செய்த பெண்கள் மிகச் சிலரே எனினும் சரித்திரத்தில் இடம் பெற்ற பெண் இவர் தான். 17 ஆம் நூற்றாண்டில் இவர் கட்டிய கட்டிடங்கள் இன்றும் பல இடங்களில் நிற்கின்றன. எனினும் மிகத் திறமையான இராணி மங்கம்மாள் தன் பேரன் விஜயரங்க சொக்கநாத நாயக்கருடன் நேரம் செலவிட முடியாமல் போனதால் தவறான வழிக்காட்டுதலின் பேரில் தன் பேரனே தன்னை எதிரியாக எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டார். தனது பேரனாலேயே சிறையில் இடப்பட்டு தன் இறுதி நாளை சிறையில் கழித்தார். 17௦6 ஆம் ஆண்டு திறம்பட ஆட்சி புரிந்த வீர மங்கை இந்த பூவுலகை விட்டு மறைந்தார்.
Web Title: Biography Of Rani Mangamma,Tamil Article
Featured Representative Image Credit: 4kepics