Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இந்தியாவின் தலைசிறந்த பெண்ணியவாதிகளில் ஒருவரான சாவித்திரிபாய் பூலே

பெண்களுக்கு ஏற்ற வேலை என்று பல கிராமங்களிலும் வீடுகளிலும் சொல்லப்படும் ஆசிரியர் பணிக்குச் செல்கிறார் ஒரு பெண். சிறிது தூரத்தில், “இப்பெண் நம் மதத்திற்கே அவமானம் சேர்ப்பவள்” என்ற குரலோடு அவர் மீது கற்கள் மற்றும் சாணத்துடன் தக்காளியும் முட்டையும் எறியப்படுகின்றன. அதற்கு அப்பெண்ணின் பதில், “கல்வி கற்றுக் கொடுக்கும் உன்னதமான பணிக்குச் செல்லும்போது, நீங்கள் என்மீது வீசும் கற்களும் சாணமும், மலர்களாக என் பாதத்தில் விழுகின்றன. உங்களைக் கடவுள் ஆசீர்வதிப்பார்” என்பது மட்டுமே. பள்ளிக்குச் சென்று, மாற்று சேலையை உடுத்திக் கொண்டு பாடம் நடத்தியிருக்கிறார்.

அவ்வாசிரியரின் பெயர், சாவித்திரிபாய் பூலே. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். சாவித்திரிபாய் பூலே பற்றி ஆங்கில இணையதளம் ஒன்றில் (Oikos Worldviews Journal) வெளியான தோம் வூல்ஃப் மற்றும் சூசன்னாவின் ‘சாவித்திரிபாய் மற்றும் இந்தியாவின் கல்வி உரையாடல்’ என்ற கட்டுரையில், சாவித்திரி பாயைப் பற்றி இப்படி குறிப்பிடுகிறார்கள்: “நீங்கள் வாசிக்கத் தெரிந்த ஓர் இந்திய பெண்ணாக இருந்தால், நீங்கள் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் கல்வி கற்ற ஓர் இந்திய பெண்ணாக இருந்தால், நீங்கள் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் இதை ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டு இருக்கும் ஒரு பள்ளி மாணவியாக இருந்தால், நீங்கள் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு கல்வி கற்ற சர்வதேசப் பெண்ணாக இருந்தால், நீங்கள் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறீர்கள்.” இதைவிட பொருத்தமாக சாவித்திரிபாய் பூலே பற்றிய அறிமுகத்தைக் கொடுக்க முடியுமா எனத் தெரியவில்லை!

credit: studiodajipanchal.com

ஆரம்பம்

பூனே-க்கு அருகில் இருக்கும் நைகோன் (Naigaon) என்ற ஊரில், 1831ம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி அம்மா லக்ஷ்மிக்கும் அப்பா கண்டோஜே நிவேஷ் பட்டேல் (Khandoji Neveshe Patil) தம்பதிக்கு மூத்த மகளாக பிறக்கிறார் சாவித்திரிபாய்.  1840ஆம் ஆண்டில், 13 வயதான ஜோதிராவ் பூலேவை மணக்கிறார். சாவித்திரிபாயை கல்வி கற்க வைக்கிறார் ஜோதிராவ். முதலில் வீட்டிலேயே தானே பாடம் கற்பிக்கிறார், அதன் பிறகு தன் நண்பர்கள் உதவியுடன் கற்பிக்கிறார். ஆறு ஆண்டுகள் வீட்டுக் கல்விக்குப் பிறகு அகமது நகரிலும், பூனேவிலும் படித்து ஆசிரியராகிறார், சாவித்திரிபாய். இத்தம்பதியினர் இணைந்து 1848ஆம் ஆண்டில், பிடே வாடா என்ற இடத்தில் பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கினர். வெவ்வேறு சாதியைச் சேர்ந்த எட்டு பெண்களோடு தொடங்கிய இவர்களது பயணம். ஓராண்டில் ஏறத்தாழ 45 மாணவிகள் இப்பள்ளியில் கல்வி பெற்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக செயலாற்றியதும் சாவித்திரிபாய் அவர்கள்தான். இதன்மூலம் இந்தியாவின் முதல் பெண் தலைமை ஆசிரியர் என்ற பெருமையும் இவரையே சேரும். பிடே வாடாவில் இவர்களது பள்ளி, அரசின் எவ்வித கவனிப்பும் இன்றி தற்போது பாழடைந்து போயுள்ளது.

credit: http://velivada.com

தாழ்த்தப்பட்ட குழந்தைகள், குறிப்பாக பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதை இழுக்காக நினைத்த சமூகத்தில், கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பெரும் பணியைச் செய்தார்கள் பூலே தம்பதியினர். இதனால் ஆத்திரம் அடைந்த சமூகத்தின் மேல்தட்டு மக்கள், தொடர்ந்து வசைபாடினர். ஒரு கட்டத்தில், சொந்த குடும்பமே இவர்களை ஒதுக்கி வைத்தது. 1849ஆம் ஆண்டில், வீட்டை விட்டு இருவரும் வெளியேற்றப்பட்டனர். கொண்ட கொள்கையில் இருந்து விலகாது, வீட்டை விட்டு வந்த பிறகும், சமுதாயத்திற்கான இவர்கள் சேவை தொடர்ந்தது. உஸ்மான் ஷேக் வாடாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பள்ளியைத் தொடங்கினர். இப்பள்ளியில், வேலைக்குச் செல்பவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் கற்றனர். இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியர், ஃபாத்திமா ஷேக் உடன் இணைந்து இப்பள்ளியை நடத்தினார் சாவித்திரிபாய்.

சேவைகள்

சாவித்திரியின் மாணவியான முக்தா சால்வ் என்ற பெண் எழுதிய Grief of the Mangs and Mahars என்பதுதான் முதன்முதலாக எழுதப்பட்ட தலித் பெண்ணிலக்கியமாகக் கருதப்படுகிறது. இன்னொரு மாணவி, விருது வழங்கும் நிகழ்வொன்றில், தனக்கு வழங்கப்படும் பரிசுக்குப் பதிலாக தன் பள்ளிக்கு ஒரு நூலகம் அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்தார். இப்படியான மாணவிகளை உருவாக்கியவர், சாவித்திரிபாய். ஒரு ஆசிரியர் என்பவர் உண்மையைச் சொல்ல பயம் கொள்ளாதவராக, அறச் சிந்தனை கொண்டவராக, உண்மையைத் தேடுபவராக, அந்த உண்மையை என்ன பிரச்சனை நேர்ந்தாலும் முன்வைக்கத் தயாரானவராக இருத்தல் வேண்டும், என்பதுதான் சாவித்திரிபாயின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது. மேலும், கல்வி என்பது எழுதப்படிக்கக் கற்றுக் கொடுப்பது அல்ல, மாறாக மனதின் மற்றும் சிந்தனையின் வளர்ச்சிதான் கல்வி என்றும் இவர் நம்பினார்.

இவரது பள்ளி 1851ஆம் ஆண்டில் 150 மாணவிகளைக் கொண்ட மூன்று பள்ளிகளாகப் பரிணமித்தது. மாணவிகள் எக்காரணத்தைக் கொண்டும் கல்வியை இடைநிறுத்தம் செய்யக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்; குழந்தைகள் கல்வி கற்க பெற்றோரின் சம்மதமே அவசியமான தேவையாக இருந்தது. அதனால் பெற்றோருடன் தொடர்ந்து பேசி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்; மதிய உணவை பள்ளியில் வழங்கினார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு பெண் கல்வி கற்கத் தேவையான அனைத்தையும் சாவித்திரிபாய் தானே முன்வந்து செய்தார்.

credit: newsbharati.com

சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலேவை  பொறுத்தவரை இந்த முயற்சியை தமது வாழ்வாக எண்ணி, அயராது தொடர்ந்தார்கள், தமக்கான உணவு கிடைக்காமல், பல வேளைகளில்  சாப்பிடக் கூட நேரமில்லாமல் உழைத்தனர். எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் இருவரும் பிரிய நினைத்தது கூட இல்லை. 1852ஆம் ஆண்டில், பிரிட்டன் அரசாங்கம், கல்விக்கு இவர்கள் ஆற்றும் சேவைக்காக, பூலே குடும்பத்தினரைக் கௌரவப் படுத்தியதோடு, “சிறந்த ஆசிரியர்” விருதை சாவித்திரிபாய்க்கு வழங்கியது.   பெண்ணியம் என்ற சொல்லே வழக்குக்கு வராத காலத்தில், இந்தியாவின் தலைசிறந்த பெண்ணியவாதிகளில் ஒருவராக இருந்தார் சாவித்திரிபாய் பூலே. மஹிளா சேவா மண்டல் என்ற அமைப்பை நிறுவி, பெண்களுக்குத் தங்கள் உரிமை பற்றியும், வாழ்வைப் பற்றியும், கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், அக்காலத்தில் கைம்பெண்களுக்கு தலைமுடியை அகற்றுவது வழக்கமாக இருந்தது. இது எவ்வளவு மோசமான வழக்கம் என்பதை எடுத்துரைத்து, பூனே மற்றும் மும்பையில் முடி வெட்டுபவர்களை இதற்கு எதிராக போராட வைத்தார்.

கணவரை இழந்த பெண்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண்களின் குழந்தைகளைப் பிறந்ததும் கொல்வது ஒரு வழக்கமாக இருந்து வந்தது. 1853ஆம் ஆண்டில்  சிசுக்கொலையைத் தடுப்பதற்காக சொந்த வீட்டில் பெண்களை வைத்துப் பாதுகாத்தார். இங்கு பெண்கள் பயமின்றி தங்கள் குழந்தைகளை பெற்றெடுக்கும் வசதி செய்து தரப்பட்டது. இது மட்டுமின்றி, வரதட்சணையற்ற திருமணங்களை வரவேற்க ‘சத்தியசோதக் சமாஜை’ ஆரம்பித்தனர்; இவர்கள் வீட்டிலுள்ள கிணற்றை தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திறந்து கொடுத்தனர். மேலும்,கைம்பெண்கள் மறுமணம், ஏமாற்றப்பட்ட பெண்களுக்கான உதவி என்று பல சமூக புரட்சிகளின் முன்னோடியாக திகழ்ந்தனர், பூலே தம்பதியினர்.

credit : newsbharati.com

ஆதிக்கச் சமூகத்தை எதிர்ப்பதற்கு சாவித்திரிபாயின் ஆயுதமாக விளங்கியவை: கல்வி, ஆணாதிக்க சமுதாயத்திற்கு எதிரான கேள்விகள் மற்றும் ஆங்கிலம். ஆம், ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பற்றிய கவிதை ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

“English Language, our English Mother
With verve and zeal sets us yonder.
Mother English is not of a Mughal
A Peshwa Brahman or the gullible.
Mother English imparts true wisdom
With love revives the oppressed one.
Mother English embraces the downtrodden
Caressing and bringing up those who are fallen.
Mother English breaks shackles of slavery
Replaces bestiality with the glory of humanity.”

ஆங்கில அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்த முதல் பெண் எழுத்தாளர்/கவிஞர் சாவித்திரிபாய்தான். 1854ஆம் ஆண்டில் தன்னுடைய “காவ்யபூலே” கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ஆதிக்கத்திற்கு எதிராக, ஒடுக்குமுறைக்கு எதிராக, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கவிதைகள், கட்டுரைகள் என எழுதி, எழுத்தைத் தன் முதன்மையான ஆயுதமாக முன்னிறுத்தினார்.

கல்வி என்பது வயது பேதம் இன்றி அனைவரும் பெற வேண்டியது. வேலைக்குச் செல்லும் பலரால் பகலில் பள்ளிக்குச் செல்ல முடியாது என்பதால், 1855ஆம் ஆண்டில், இரவுப் பள்ளியைத் தொடங்கினார்கள். ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாக்க ஒரு காப்பகத்தை 1863ஆம் ஆண்டு அமைத்ததோடு, மக்களுக்கு முன்மாதிரியாக ஒரு குழந்தையத் தத்தெடுத்து வளர்த்தனர். 1876ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது, மகாராஷ்டிராவில் 52 இலவச உணவு விடுதிகளை அமைத்ததோடு, களத்தில் நின்று பணியாற்றினார் சாவித்திரிபாய். அத்தோடு நின்றுவிடாமல், மக்கள் நலனில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தமும் கொடுத்தார்.

மரணத்தின் அரவணைப்பு

1897ம் ஆண்டில் ஏற்பட்ட பிளேக் நோய்ப் பரவலின் போது, பொதுமக்களுக்கு உதவ, சாவித்திரிபாய் மற்றும் அவரது மகன் யஷ்வந்த் இணைந்து ஒரு மருத்துவமனையை அமைத்தனர். அங்கு சாவித்திரிபாய், பலருக்கு அவரே முன்வந்து உதவினார். அனைவரும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல பயந்து போய் இருந்தபோது சாவித்திரிபாயே நேரில் சென்று கொண்டுபோய் சேர்த்திருக்கிறார். அப்படி ஒரு குழந்தைக்கு உதவியதில் நோய்த்தொற்று ஏற்பட்டு மார்ச் 10ஆம் தேதி இறந்துபோனார் சாவித்திரிபாய்.

கல்விதான் விடுதலை

ஒரு சாதாரண பெண்ணாக இருந்த சாவித்திரிபாய், உலகறியும் பெண்ணாளுமையாக மாறியது கல்வியால்தான். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அவரிடம் இருந்து நாம் கற்க வேண்டும் என்றால், ‘கல்விதான் விடுதலை’ என்பதேயாகும். அக்கல்வி படித்து பட்டம் பெறுவதோடு நில்லாமல், வாழ்க்கையின் அநீதிகளுக்கு எதிரானதாக இருக்க வேண்டும். அவர் இறந்து ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு, 1998ஆம் ஆண்டில், சாவித்திரிபாய் பூலேவின் நினைவாக ஒரு தபால்தலையை இந்திய அரசாங்கம் வெளியிட்டது.

credit: Wikipedia

2015ஆம் ஆண்டில், பூனே பல்கலைக்கழகம், சாவித்திரிபாய் பூலே பல்கலைக்கழகமாகப் பெயர்மாற்றப்பட்டது. கடந்தாண்டு, சாவித்திரிபாய் பூலே என்ற கன்னடப்படம், இவரது வாழ்க்கையைக் கூறும் விதமாக 2018ல் வெளியானது. படம், புத்தகம் அல்லது கதைகளாகச் சொல்லியாவது இம்மாதிரியான ஆளுமைகளின் நினைவுகளை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்த வேண்டியது அவசியம்.

நாம் பெரிதாக போராடாமலே நம்மிடம் நமக்கு அனைத்தும் கிடைத்துவிடுவதால், அதன் அருமை நமக்குப் புரிவது சற்று சிரமம்தான். இன்று கல்வி நமக்குத் தடங்கல் இல்லாமல் கிடைக்கிறது என்றால், இரு நூற்றாண்டுகளாக பலரும் தொடர்ந்து போராடியதுதான் காரணம். மேற்சொன்னது போல, நாம் இன்று வாசிக்கிறோம், கற்கிறோம், சிந்திக்கிறோம் என்றால்,சாவித்திரிபாய் பூலே அதற்கு ஒரு முதன்மையான காரணம்.  இந்த பிறந்த தினத்தில் அவர் நினைவாக எங்கள் ரோர் தமிழ் சார்பில் எக்காலத்திற்கும் தீராத நன்றியை சாவித்திரிபாய்க்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்!

Related Articles