Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பெற்றோர்கள் போற்றும் பகவான்

மாணவர்கள் தங்கள் பொழுதை பெற்றோருக்கு அடுத்தபடியாக பள்ளிகளில் ஆசிரியரிடம்  தான் கழிக்கின்றனர். எப்படி இந்த சமூகம் ஒரு தனி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி  நமது மனநிலையை மாற்றுகிறதோ, அதேபோல தான் ஆசிரியரின் நடத்தை, மாணவர் சமூகத்தில் ஒரு முக்கிய அங்கம். தனி மனித வளர்ச்சியில் ஆசிரியர்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஏனென்றால், நம் பள்ளி பருவத்தில் ஆசிரியர் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிவிடுவோம். இங்கு நாம் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். நாம் ஆரம்பகட்ட பள்ளி நிலையில் தான் அனைத்து அடிப்படையான துறைகள் சார்ந்த அறிவை பெறுகிறோம். அதனுடன் சேர்ந்து பொது அறிவு, ஒழுக்கம், பழக்க வழக்கம், வாய்ப்பிருப்பின் பகுத்தறிவு என்று வாழ்க்கையின் அடித்தளம் அமைக்கும் இடத்தில் பள்ளியும், ஆசிரியர்களும் இருக்கின்றார்கள். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், நமது வாழ்க்கைக்கான அடித்தளம் இங்கு தான் அமைக்கப்படுகின்றது. ஒரு மாணவனுக்கு மேலே குறிப்பிட்ட காலங்களில் சரியான வழிகாட்டுதல் கிடைக்கவில்லையெனில் அவன் வாழ்க்கை கடினமாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.

ஆசிரியர்களின் அணுகுமுறை

பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் மீது அக்கறை கொண்டு, கற்பிக்க வேண்டியதை கற்பிக்க வேண்டும். மாணவர்களுடன் நண்பனைப் போல உடனிருந்து கற்பிப்பது ஒரு விதம், தன் வீட்டிலுள்ள கோபத்தை மாணவர்களிடம் காட்டுவது மற்றொரு விதம், சமூகம், அந்தஸ்து பார்த்து மாணவர்களை பாகுபாட்டுடன் அணுகுகின்ற முறையிலும் சில ஆசிரியர்கள் நடந்துகொள்வதுண்டு. மேலும், பள்ளிகளில், பாலியல் தொந்தரவுகள் தொடர்பான செய்திகள் அதிகம் காண முடிகின்றது.

Suspicious Teachers (Pic: pixabay)

பகவானின் தாக்கம்

பகவான் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். இவரது அயராத முயற்சியால் இந்த பள்ளி ஆங்கிலத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. வறுமையின் வலி தெரிந்த பகவான், வேகமாக இயங்கும் போட்டி நிறைந்த உலகில் அரசுப் பள்ளிக் குழந்தைகள் சந்திக்கும் சவால்களை நன்கு அறிந்தவராக இருக்கிறார். மாணவர்களிடம் பாடத்தையும் தாண்டி அக்கறை காட்டியதால் பகவானை மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பிடித்து விட்டது.

இந்த சூழ்நிலையில் பகவான், திருத்தணியை அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணிஇடமாற்றம் செய்யப்பட்டதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த மாணவ, மாணவிகள் அவர் வேறு பள்ளிக்கு செல்லக் கூடாது என்று கதறி அழுதனர்.

பள்ளிக்கு வந்து பணிவிடுப்பு கடிதம் வாங்கிய பகவானை, வெளியே செல்ல விடாமல் அவர்கள் அரங்கேற்றிய பாசப்போராட்டம், அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆசிரியரை கட்டி அணைத்தபடி மாணவ-மாணவிகள் கதறி அழுதனர். பகவானும் மாணவர்களை பிரிய மனமில்லாமல், கண்ணீர் வடித்தார். இதனையடுத்து மாணவர்கள் – ஆசிரியர் இடையேயான இந்த பாசப்போராட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இதனால் ஆசிரியர் பகவான் மேலும் இப்பள்ளியில் 10 நாட்கள் மட்டும் பணி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு தனி மரியாதை இருந்தது ஒருகாலம். ஆனால் தற்போது ஆசிரியர்-மாணவர் உறவு என்பது ஏதோ கடமைக்காகவே இருக்கிறது. ஆனால் இந்த காலத்திலும் மாணவர்கள் மனதில் இடம்பிடிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் ஆசிரியர் பகவான். அதுமட்டுமல்லாமல் மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். ஆசிரியர் பகவான் வேலை செய்து வந்தது கிராமத்தில் இயங்கும் அரசுப் பள்ளி. அவரது பூர்வீகமும் கிட்டத்தட்ட அந்த பள்ளி சார்ந்த பகுதியை ஒட்டியது தான். ஆதலால் மாணவர்களை எளிதில் அவரால் புரிந்து கொண்டு கையாள முடியும் என்று எடுத்துக் கொண்டாலும், இவர் செய்தது ஒரு சாதாரண செயல் அல்ல.

Friendly Bagavan (Pic: mathrubhumi

யார் இந்த பகவான்

25.07.1989ல் பிறந்த பகவான். தொடக்க கல்வியை ஊராட்சி தொடக்கப் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை பொதட்டூர்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியப் பட்டம் பெற்றார். ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு (பி.எட்) பொதட்டூர்பேட்டையில் இ.எஸ்.எஸ். கல்வியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதே ஆசிரியர் போட்டி தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 2014ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி வெளியகரம் அரசினர் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியை தொடங்கினார். பகவான் பணியில் சேர்ந்த பிறகு மாணவர்கள் ஆங்கில பாடம் மீது ஆர்வம் கொண்டனர். அதே நேரத்தில் பாடங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்காமல் மாணவர்களுக்கு பொது அறிவு, சமூக சேவை, போட்டி தேர்வுகள், வேலை வாய்ப்புக்கு தேவையான கல்வி ஆற்றல் முறைகளை கற்பித்து மாணவர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

திருத்தணி அருகில் உள்ள பொம்மராஜபேட்டை, பகவானின் சொந்த ஊர். தந்தை சந்தமந்தடி கோவிந்தராஜ், தாய் தெய்வானை, இவர் உடன் பிறந்தவர்கள் நான்குபேர். அண்ணன் ராஜேஷ் தான் இவரை படிக்க வைத்திருக்கிறார். இவரது நான்காம் வகுப்பு ஆசிரியர் உமாபதிதான் இவருடைய ரோல் மாடல். அவரால்தான் ஆசிரியராக வேண்டும் என்ற இலட்சியம் ஏற்பட்டிருக்கிறது. பின் 12 ஆம் வகுப்பு முடித்து ஆசிரியர் பயிற்சியையும் முடித்தார். சிறுவயதிலிருந்து இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு மூன்றாண்டுகள் ஆங்கில இலக்கியம் படித்தர். பிறகு, பிஎட் படித்து தன் விருப்பப்படி ஆங்கில ஆசிரியராக பணியாற்றி கொண்டிருக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது சரவணன், பிரபு, சாதனா, லதா, ஏஞ்சலின், சத்யபிரியா போன்ற பேராசிரியர்கள் இவருடைய ரோல் மாடல்களாக இருந்திருக்கிறார்கள். அதிலும் சரவணன் சாரின் கற்பித்தல் திறன் தான் இவரை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளதாக குறிப்பிடுகிறார்.

இவருக்கு வயது 28 தான், அதாவது இன்றைய தலைமுறையில், எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் ஓய்ந்து சரியான பாதையை தேர்ந்தெடுக்கும் வயது. இன்னும் திருமணம் ஆகவில்லை. கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். ஆனந்தவிகடன் சொல்வனம் பகுதியில் இவருடைய கவிதை வெளிவந்துள்ளது. இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டதற்கு  இவர் தந்தை தான் காரணம். தந்தைக்கு நெசவுத் தொழில். பாரம்பரியமாக சித்த வைத்தியம் பார்க்கும் குடும்பம். இப்படி இருக்க வறுமையில் வாடினாலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி, தற்போது வறுமையில் வாடும் மாணவ, மாணவிகளை ஆசிரியர் பணி மூலம் வழிகாட்டியாக இருக்கிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பகவானின் குடும்பம் குடிசையில்தான் வசித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் அன்பை எப்படி பெற்றீர்கள் என்று கேட்டால் அவர் கூறுவது.

”என்னிடம்” படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் என் வீட்டுக்குழந்தை போல எண்ணுகிறேன். படிக்கவில்லை, வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால் அதற்கான காரணத்தை கேட்பேன். பின்னர் அதை எப்படி சரி செய்வது என்று யோசனை கூறி அந்த குழந்தைக்கு உதவுவேன். அவர்களின் ஊர் திருவிழா, குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள், அவர்களின் சோகமான தருணங்களில் நான் ஒரு அண்ணனாக இருந்திருக்கிறேன். இருப்பேன். என்னை நம்பி குழந்தைகள் அவர்களின் சந்தோஷங்களையும், பிரச்சனைகளையும் பகிர்ந்துகொள்வார்கள். அதுவே இந்த குழந்தைகளிடம் அபரிவிதமான அன்பை பெற்றுத் தந்துள்ளது. ஆனால் என் பணியிட மாறுதலை தள்ளிப்போடும் அளவுக்கு போராட்டம் நடத்துவார்கள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. பள்ளிக்கூடத்திற்கு வந்த குழந்தைகள் வீட்டில் என்ன சிக்கல்களை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரியாமல், வெறும் பாடம் மட்டும் நடத்தி, மதிப்பெண்ணிற்கு முக்கியத்துவம் தருவதில் அர்த்தம் இல்லை என்பது பகவானின் கருத்து. ”எனக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் என்னை வடிவமைத்தார்கள். வறுமை, குடும்ப பிரச்சனைகள் என சுமைகளை சுமந்துகொண்டு பள்ளிக்கு வந்தால், ஆசிரியர்களின் கனிவான வார்த்தைகளும்,கவனிப்பும் தான் எனக்கு ஆறுதலை தந்தன. என் மாணவர்களிடமும் அதேபோல நடந்து கொள்கிறேன்,” என்கிறார் பகவான்.

இதற்கேற்ப பணிபுரியும் பள்ளிக்குச் செல்லும் வழியில் அவரை வாழ்த்தி வைக்கப்பட்ட பேனர் நமக்கு   நெகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

இன்றைக்கும் பகவானை போலவும் சில ஆசிரியர்கள் இருப்பதால், இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மீது  சிறு நம்பிக்கை ஏற்படுகிறது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பற்றிய பிம்பத்தை மாற்றியுள்ளார். ஊடக வெளிச்சத்திற்கு வராத, பல ஆசிரியர்கள், பகவானை போல் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கைக்கான கல்வியை கற்பிக்க பள்ளிகளில் பல பகவான் தேவைப்படுகிறார்கள். வாழ்க்கைக்கான கல்வி தனி மனித ஒழுக்கத்தையும், தனி மனித சுதந்திரத்தையும் கற்றுக்கொடுக்கும்….இதனை கற்றுக்கொள்ளும் போது தான் நாம் வாழ்க்கையில் அறம் சார்ந்து இயங்க முடியும் …:”

Schooling (Pic: pixabay)

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

விளக்கம்:

இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

உங்கள் வாழ்க்கையில் உங்களை ஊக்குவித்து இன்றும் உங்கள் மனதில் நிற்கும் பகவானைப் போன்றதொரு ஆசிரியரை கமண்ட் பாக்ஸில் கௌரவிக்கலாம்.

Web Title: The Teacher Baghavan

Featured Image Credit: vikatan

Related Articles