நம்மில் பலருக்கு காந்தியை பற்றி நன்கு அறிமுகம் இருந்தாலும், ஜின்னா என்பவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று உலக நாடுகளுக்கிடையில் தனி ஒரு முஸ்லிம் நாடாகத் திகழ்கின்ற பாகிஸ்தான் என்ற ஒரு தேசம் உருவாகக் காரணமானவரே அவர் தான். பாகிஸ்தான் அமைவதற்குக் காரணமாக இருந்த இந்த முகமது அலி ஜின்னாவின் வாழ்க்கை, பல திருப்பங்கள் நிறைந்தது. அவர் 1876 டிசம்பர் 25_ந்தேதி கராச்சியில் பூஞ்சா மற்றும் மிதிபாய் தம்பதியருக்கு மகனாய் பிறந்தார். தந்தை ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் பெரும் பணக்காரராக விளங்கினார். கராச்சியிலும், பம்பாயிலும் கல்வி பயின்ற ஜின்னா, லண்டனுக்குச் சென்று சட்டம் பயில எண்ணினார். மகனை லண்டனுக்கு அனுப்ப தாயார் பயந்தார். அக்காலத்தில் லண்டன் செல்லும் இளைஞர்கள், வெள்ளைக்காரப் பெண்களை மணந்து கொண்டு ஊர் திரும்புவது வழக்கமாக இருந்தது. இதனால், ஜின்னா லண்டன் செல்வதென்றால் அதற்கு முன் அவருக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று தாயார் விரும்பினார். முதலில் இதற்கு ஜின்னா சம்மதிக்கவில்லை என்றாலும் பின்னர் சம்மதித்தார்.
லண்டன் புறப்படுவதற்கு முன் ஜின்னாவின் திருமணம் நடந்தது அப்போது அவர் தன் மனைவியின் முகத்தைக்கூட பார்க்கவில்லை. அக்கால சம்பிரதாயப்படி மணமகள் சார்பாக உறவினர் ஒருவர் திருமணச் சடங்குகளில் பங்கு கொண்டார். லண்டனுக்குச் சென்ற ஜின்னா சட்டம் பயின்று, “பார் அட் லா” பட்டம் பெற்றார். அவர் லண்டனில் இருக்கும்போது தாயாரும், மனைவியும் உடல் நலமின்றி மரணம் அடைந்தார்கள். 1896ல் இந்தியாவுக்கு திரும்பிய ஜின்னா பம்பாயில் வக்கீல் தொழில் தொடங்கினார். சிறந்த வக்கீல் என்று பிரபலமானதால் நல்ல வருமானம் வந்தது.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய சமூகம் இந்தியாவை அடக்கி ஆண்டுக்கொண்டிருந்த போது இந்தியத் துணைக்கண்டத்தின் மிக முக்கிய இஸ்லாமிய தலைவர்களில் முதன்மையானவர் தான் முஹமது அலி ஜின்னா. இத்தனைக்கும் அவர் முஸ்லிம்களின் புனிதக் கடமையான ஹஜ் யாத்திரையை கூட மேற்கொண்டது கிடையாது. இறக்கும் வரைக்கும் அவர் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்ததில்லை. மசூதிக்கு போவதை வழக்கமாக கொண்டதில்லை. குரானுக்கும் அவருக்கும் வெகு தூரம். ஜின்னாவின் குடும்பம் எல்லா மதத்தவர்களையும் உள்ளடக்கியது. 1906 ஆம் ஆண்டு ஜின்னா காங்கிரசில் சேர்ந்தார். காந்தியின் அரசியல் குருவான கோபாலகிருஷ்ண கோகலேதான் ஜின்னாவுக்கும் அரசியல் குரு. இந்திய சுதந்திரத்திற்கும், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் ஜின்னா பாடுபட்டார். தென்ஆப்பிரிக்காவில் இருந்து 1915 ல் இந்தியா திரும்பிய காந்தி, காங்கிரஸ் இயக்கத்தின் மாபெரும் தலைவரானார். ஆரம்பத்தில் காந்தியும், ஜின்னாவும் தோழமையுடன் பழகினாலும், நாளடைவில் காந்தியின் கொள்கைகள் ஜின்னாவுக்குப் பிடிக்கவில்லை. இதனால் 1920ம் ஆண்டு, அவர் காங்கிரசை விட்டு விலகினார்.
1921 முதல் 1935 வரை ஜின்னாவின் அரசியல் வாழ்க்கையில் சரிவு நிலை இருந்தது. 1930 முதல் ஐந்தாண்டுகள் லண்டனில் தங்கியிருந்துவிட்டு 1935ல் இந்தியா திரும்பினார். முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பதவி அவரைத் தேடி வந்தது. வெகுவிரைவில், முஸ்லிம் லீக்கின் இணையற்ற தலைவராக உயர்ந்தார். 1930-ஆண்டுகளுக்கு முன்புவரை ஒட்டுமொத்த இந்தியத் துணைக் கண்டத்தின் விடுதலையை எதிர்நோக்கித்தான் சுதந்திரப் போராட்டம் நடந்தது. மத நம்பிக்கையின் அடிப்படையில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தாலும், சகோதரப் பாசத்துடன் ஒற்றுமையாகவே வாழ்ந்துவந்தனர். ஆனால், 1857-ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக முதல் விடுதலைப் போர் தொடுக்கப்பட்ட பின்னர், பிரித்தாளும் சூழ்ச்சியை இந்தியாவில் பிரயோகித்தது ஆங்கில அரசு.
1940 ம் ஆண்டில், முஸ்லிம் லீக் மாநாடு லாகூரில் நடந்தது. திட்டமிட்டு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் கலாச்சார முரண்களையும் மோதல் களையும் தூண்டிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வகுப்பு வாதத்தால் இந்தியா நொறுங்கிப்போனது. இந்நிலையில், 1930 டிசம்பர் 29-ல் அலகாபாதில் கூடிய அனைத்திந்திய முஸ்லிம் லீக் மாநாட்டில் இஸ்லாமிய மக்களுக்குத் தனித் தேசம் வேண்டும் என முதன்முதலில் குரல்கொடுத் தார் கவிஞர் இக்பால். அன்று இஸ்லாமியர் அதிக எண்ணிக் கையில் வசித்த பஞ்சாப், ஆப்கானிஸ்தான், காஷ்மீர், சிந்து, பலுஜிஸ்தான், வங்காளம் ஆகிய பகுதிகள் உள்ளடக்கிய தேசம் பிரிக்கப்படுவதாக முடிவெடுத்தனர். ஆகவே, அவற்றின் ஆங்கிலப் பெயர்களில் உள்ள முதல் எழுத்துகளைச் சேர்த்துப் பிரிக்கப்படும் பகுதிக்கு பாகிஸ்தான் எனப் பெயர் வைத்தார் சவுத்ரி ரகமத் அலி. அதன் பிறகு, தனி பாகிஸ்தான் கோரிக்கையை 1940-ல் லாகூர் மாநாட்டில் வலியுறுத்தினார் முகமது அலி ஜின்னா. பாகிஸ்தான் பிரிவினையில் மறைந்திருக்கும் நுண்ணரசியல் ஆழமானது சூழ்ச்சிகள் நிறைந்தது. கொலை செய்தவனை விட, செய்ய தூண்டியவன்தான் அதிக தண்டனைக்குத் தகுதியானவன். ஆனால் நம் வரலாறு ஜின்னாவின் தலையில் மட்டும் ஒட்டுமொத்த பழியை இறக்கியது.
“என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்பட வேண்டும்” எனப் பிரிவினையை முற்றிலுமாக எதிர்த்தார் காந்தியடிகள். 1944-ல் காந்தியும் முகமது அலி ஜின்னாவும் 14 முறை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தன் கண்முன்னே அரங்கேறிய மதக் கலவரங்களால் மனமுடைந்து அன்றைய டெல்லி வைஸ்ராயாகப் பதவிவகித்த மவுண்ட் பேட்டனிடம் ‘இந்தியாவைப் பிரிக்கலாம்’ என காந்தியடிகள் ஒப்புதல் தெரிவித்தார். இதற்கிடையே ஜின்னாவுக்கு 41 வயதாகும்போது, டார் ஜிலிங் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் ரூட்டி என்ற 16 வயது அழகியைச் சந்தித்தார். ஜின்னாவின் நண்பரும், கோடீசு வரருமான தீன்ஷா என்ற வியாபாரியின் மகள்தான் ரூட்டி. இவர் பார்சி மதத்தைச் சேர்ந்தவர். வயது வித்தியாசம் அதிகமாக இருந்தும், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இது தீன்ஷாவுக்குத் தெரிந்தது. மிக ஆத்திரம் அடைந்த அவர், ஜின்னாவும், ரூட்டியும் சந்திக்கக்கூடாது என்று கோர்ட்டில் தடை வாங்கினார். ரூட்டி மிகவும் பொறுமையோடு இரண்டு வருடங்கள் காத்திருந்து 18 வயதானதும் கட்டிய புடவையுடன் வீட்டை விட்டு வெளியேறி ஜின்னாவை மணந்து கொண்டார்.
ஜின்னா மிகவும் ஒல்லியானவர். 6 அடி உயரமுள்ள அவர் 55 கிலோ எடையே இருந்தார். ஆயினும் எப்போதும் விலை உயர்ந்த சூட்டும், கோட்டும் அணிந்து கம்பீரமாகத் தோன்றுவார். 1947 தொடக்கத்தில் அவர் உடல் நிலையைக் குடும்ப டாக்டர் பரிசோதித்தார். ஜின்னாவுக்கு சயரோக நோய் வந்திருப்பதும், அவருடைய ஈரல்கள் பாதிக்கப்பட்டு இருப்பதும் எக்ஸ்ரே படத்திலிருந்து தெரிந்தது. இதை ஜின்னாவிடம் தெரிவித்த டாக்டர், “மதுப்பழக்கத்தையும், சிகரெட் பிடிப்பதையும் உடனே நிறுத்திவிடுங்கள். அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுங்கள். இல்லாவிட்டால் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் உங்கள் ஆயுள் முடிந்துவிடும்” என்று கூறினார். இதைக்கேட்டு, ஜின்னா கொஞ்சம்கூட கவலைப்பட வில்லை. “ஒரு சயரோக ஆஸ்பத்திரியில் நோயாளியாகக் கிடந்து சாவதைவிட, பாகிஸ்தான் கோரிக்கைக்காக போராடிச் சாவதேயை விரும்புகிறேன்” என்றார். சொன்னது போலவே, பாகிஸ்தான் பிரிவினைக்காகப் போராடி அதில் வெற்றியும் பெற்றார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவர் பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநர் ஆவார்.
1947 ஜூன் 3 அன்று இந்திய வானொலியில் இந்தியப் பிரிவினையை மவுண்ட் பேட்டன், ஜின்னா மற்றும் நேரு ஆகியோர் அறிவித்தனர். இறுதியாக 1947 ஆகஸ்ட் 14-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் இரு வேறு நாடுகளாக அறிவிக்கப்பட்டன. அன்றே பாகிஸ்தான் அரசியல் சுதந்திரம் பெற்ற நாடானது.
Web Title: Memories of muhammad ali jinnah
feature image credit: arsalniazi.deviantart , oneway2day, quora