
தமிழர்களே தமிழர்களே
நீங்கள் என்னை கடலில் தூக்கி எரிந்தாலும்
நான் கட்டுமரமாகதான் மிதப்பேன்
அதில் நீங்கள் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்
கவிழ்ந்துவிடமாட்டேன்.
இந்த வார்த்தைகளை உச்சரித்த அரசியல் தலைவர் என்று கூறுவதை விட, தமிழர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் விதத்தில் திட்டங்கள் வகுத்த அரசியல் தலைவர் எனலாம்.
இந்த வாக்கியத்தை படித்த உடன் உங்கள் மனதில் முரணான கருத்துக்கள் பல எழுந்து, விமர்சிக்க தோனும்…நிற்க. இங்கு ஏன் இப்படி குறிப்பிடப்படுகிறது என்பதும், இந்த கட்டுரை ஏன் இப்படி தொடங்கப்படுகிறது என்பதும் இந்த கட்டுரை முழுதாக படித்த பின் உங்களுக்கு புலப்படும் என்று நம்புகிறேன்.
தோற்றமும் கல்வியும்
மு. கருணாநிதி பிறந்தது தமிழ் நாட்டில் உள்ள திருக்குவளையில். சூன் 3, 1924 ஆம் ஆண்டு பிறந்த மு. கருணாநிதி பள்ளிக்கல்வியை தாண்டவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரது ஆற்றலும் ஆளுமையும் அவரைப் பற்றி படிக்கையில் தான் புலப்படுகின்றது. இவரைப்பற்றி படிக்கையில் எல்லா 14 வயதில் மாணவர் அமைப்பு ஏற்படுத்தியவர் மற்றும் சுயமாக பத்திரிக்கை நடத்தியவர் என்ற செய்திகளே நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றது.. இந்த ஆளுமையை என்ன சொல்லி பாராட்டுவது.
இவரது தமிழ் புலமைக்கு இங்குள்ள அனைத்து தமிழ் புலவர்களும் அடிமை. இதை மறுப்பதற்கு இல்லை. இப்படிப்பட்ட மொழித் தெளிவை இவர் பெற்றிருப்பதற்கு இவரது பள்ளிக்கூடமும், ஆசிரியர்களும் மட்டும் தான் காரணம் என்று முற்றுப்புள்ளி வைத்திடல் ஆகாது. ஏனெனில் இவருக்குள் இளம் வயதிலேயே இருந்த புத்தகங்கள் படிக்கும் பழக்கம் மட்டும்ல்ல, பள்ளிக்கல்வியை தாண்டவில்லை என்ற செய்தியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கலைப்பணி
இவர் முதலில் ஒரு கலை ஞானி. ஒரு எழுத்தாளராக, புலவராக, வசனகர்த்தாவாக மின்னியதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஐம்பெருங்காப்பியத்தில் கோவலன், கண்ணகி கதையை பாமர மக்களுக்கு காட்சி வடிவில் கொடுக்க நினைத்த திரைத்துறையினர், அதற்கு வசனம் எழுத தேடியது மு.கருணாநிதி என்ற இளைஞரைத் தான். இவரது பராசக்தி திரைப்படத்து வசனம் சமூக ஊடகம் இல்லாத காலம் தொட்டே ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. ஏனெனில், கடவுள் பெயரை காட்டி நடக்கும் அநியாயங்களை சுட்டிக்காட்டி அவர் எழுதிய வசனம் பெரும் அலையை எழுப்பியது மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவுக்கு சிவாஜி கணேசன் என்னும் கைதேர்ந்த நடிகனை முதல் படத்திலேயே தமிழ் மக்கள் மனதில் பதிய வைத்ததும் வரலாறு கூறும் கூற்று.
தமிழுக்கு தன்னை அர்பணித்த கலைஞர்
இவரது வசனத்தில் வெளிவந்த திரைப்படங்களில் எழில் தமிழ் கொஞ்சும். அது மட்டுமா, ஊனமுற்றோர் என்றிருந்த சொல் வழக்கை, மாற்றுத்திறனாளி என்று இவர் சுட்டிக்காட்டியபின் பலரை சிந்தித்து, தமிழ் மொழி வழக்கத்தில் இருந்த சில வார்த்தைகளை ஆராய்ச்சி செய்ய வைத்தது.
” விதவை” என்று எழுதினேன், எழுத்தில் கூட பொட்டு வைக்க முடியவில்லை… சமுதாயம் மட்டுமல்ல மொழி கூட உங்களை வஞ்சித்து விட்டது!
-இது ஆனந்த விகடனில் வந்தது!
இதற்கு கலைஞர், “விதவை என்பது வடச் சொல், தமிழில் ‘கைம்பெண்‘ என்று எழுதினால், ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாம்…தமிழ் வஞ்சிக்காது, வாழ வைக்கும் என்றார்.
மேலும் மூன்றாம் பாலினத்தவரை, இவர் ”திருநங்கை” என்று அழைக்கும் வரை கேலிக்கூத்தான பெயர் கொண்டு தான் அழைத்து வந்தோம். இது இந்த மூன்று பாதிக்கப்பட்ட சமூகத்திற்கும் மனமகிழ்வை தரும் மாற்றம் தானே. இது இவர்களுக்கு இவர் தந்த அடையாளம் தானே.
ஒன்றா? இரண்டா? இவர் எழுதிய புத்தகங்கள். தெய்வப்புலவரின் திருக்குறளுக்கும் இவர் உரை எழுதியுள்ளார். சங்கத்தமிழ், பொன்னர் சங்கர், ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம், நெஞ்சுக்கு நீதி, குறளோவியம் என்று இவர் எழுதிய புத்தகங்களின் வரிசை நீண்டு கொண்டே போகும்.
சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்புகளே மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும். கலைஞர் மு. கருணாநிதியின் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்புகளால் தான் அன்றைய மக்கள் இவரை அரசியலிலும் ஏற்றுக்கொண்டனர். ஏதோ அண்ணா தொடங்கிய ஒரு கட்சி, அமைப்பு அதனை முன்னெடுத்து நானும் நடத்துகிறேன் என்று எப்படியோ நடத்திவிடாமல், கட்சியின் ஒரு நிலையான தலைமையாக இருந்திருக்கிறார் அவர்.

வளர்ச்சி திட்டங்கள்
இவரது 80 வயதுகளிலும் தினமும் காலை 4:30 க்கு விழித்து, முதலில் வீட்டில் செய்தித்தாள்களை தான் தேடுவாராம். இவர் படைப்பாளிக்கும் கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்த ஒரு தலைவர். இவரே ஒரு படைப்பாளி என்பதால் இன்னொரு கலைஞனின் மனம் புரிந்து, கலை சார்ந்த துறைக்கான சட்ட திட்டங்களை அவர்கள் விரும்பும் வண்ணம் வகுத்தவர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக இவர் தான் மனிதர்களால் இழுக்கப்படும் கை ரிக்ஷாவை ஒழித்து தமிழகத்தில் அனைத்தையும் சைக்கிள் ரிக்ஷாவாக மாற்றினார். பிச்சைக்காரர்களே இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற பிச்சைக்காரர்கள் மறு வாழ்வு மையம் தொடங்கினார். காமராசர் காலத்தில் கூட பேருந்துகள் தனியார் மயமாக தான் இருந்திருந்தது. இந்தியாவிலேயே, கருணாநிதி தான் முதன் முதலில் பேருந்து போக்குவரத்தை அரசுடமையாக்கி, தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற ஒன்றை தொடங்கினார்.
இவர் முதல்வராக இருந்த காலத்தில் தான் தமிழ் நாட்டில் விலை வாசிகள் கூடியளவில் கட்டுக்குள் இருந்தது.

சிறந்த ஆளுமையாக
இவர் முதல்வராக இருந்த காலத்தில் இரு நெருக்கடியான தருணங்களை துணிச்சலாக சமாளித்துள்ளார். அது இந்தியாவில் எமர்ஜென்ஸி காலக்கட்டம். கலைஞர் தான் அப்போதைய தமிழகத்தின் முதல்வர். மத்திய அரசு, அனைத்து மாநிலங்களில் இருக்கும் அரசியல் தலைவரையும், கைது செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளிடம் வலியுறுத்தியது. அப்போது குஜரத் மாநிலத்தில் கூட அதற்கு முன்பு பிரதமராக இருந்த ஒருவரை மாநில அரசு கைது செய்த போதிலும். தமிழக முதல்வரான கருணாநிதிக்கு, கர்ம வீரர் காமராசரை கைது செய்ய உத்தரவு. “என் உயிரே போனாலும் , நான் காமராசரை கைது செய்ய மாட்டேன். இதனால் என் முதல்வர் பதவிக்கு பாதிப்பு வந்தாலும் அதை பெருமையாக தான் நினைப்பேன்”, என்று கூறி காமராசரை கைது செய்யாமல் துணிந்து நின்று அரசியல் செய்தார் என்றும் ஒரு செய்தி உண்டு.
அது போல, தந்தை பெரியார் மறைந்த போதும் அவர் தான் முதல்வர். பெரியாருக்கு அரசு மரியாதை ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினார். பெரியார் அரசாங்கத்து எந்த உயர்ந்த பதவியிலும் இல்லாததால் அவருக்கு அரசு மரியாதை அளிக்க சட்டத்தில் இடமில்லை. அதுமட்டுமல்லாமல், அதையும் மீறி அரசு மரியாதை வழங்கினால் மத்திய அரசு நெருக்கடி கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறிய போது.” மகாத்மா காந்தி மறைந்த போது அவர் எந்த அரசாங்க பதவியிலும் இல்லை. அவரக்கு அரசு மரியாதை கொடுத்தார்கள் ஏனெனில் அவர் தேசத் தந்தை. அதே போல தான் தந்தை பெரியார் தமிழ் நாட்டின் தந்தை. அவருக்கு வழக்கத்தை மீறி அரசு மரியாதை கொடுப்பதால் ஏற்படும், எந்த அரசியல் நெருக்கடியும் எனக்கு சுகமானதே. என் ஆட்சியே கலைந்தாலும் பரவாயில்லை. அதை நான் பெருமையாக தான் கருதுவேன்”. என்றார்.
1990 களில் மராட்டிய மாநிலத்தில் நமது நாட்டின் சட்டப்பிதா அண்ணல் அம்போத்கருக்கு எதிராக கலவரம் வெடித்த அதே நாட்களில் சென்னை சட்ட கல்லூரிக்கு, டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்று பெயர் வைத்து பலரது கவனத்தை ஈர்த்தார். இதெல்லாம் அரசியல் சூழ்ச்சி, என்று பார்த்தால், இவரைத்தவிர, அந்தந்த சந்தர்ப்பங்களில் வேறு யாருக்கு இத்தகைய துணிச்சல் இருந்திருக்கும்? என்று தான் கேட்க தோன்றுகிறது. ஏனெனில், காமராசர்,பெரியார் மற்றும் அம்பேத்கர், ஆகிய மூவரும் மக்களை மனதில் வைத்து, திட்டங்களும், சட்டங்களும் தீட்டி வாழ்ந்தவர்கள்.

மக்களை மனதில் வைத்த தலைவர்
இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை கொண்டு வந்த மனிதர் தான் இந்த கலைஞர் கருணாநிதி, இவர் கொண்டு வந்த அந்த திட்டம் தான் உருமாறி பல வடிவங்கள் பெற்று இன்று பலருக்கு இலவசமாக மருத்துவ உதவி அளித்துக்கொண்டிருக்கின்றது.
பெண்ணியம் பேசும் பல பெண் அரசியல் தலைவர்கள் கூட சிந்திக்காத சட்டமான பெண்களுக்கும், குடும்ப சொத்தில் பங்கு உண்டு என்ற திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முதலில் கொண்டு வந்து நடைமுறை படுத்தியவர். தென்னிந்தியாவில் தகவல் தொழிற்நுட்பத்திற்கு என்றே ஒரு தனி இடம் ஒதுக்கி டைடல் பார்க் கொண்டு வந்து பல பொறியாளர்களுக்கு வேலை கிடைக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர்.
தமிழகத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் பெரும்பான்மையான மருத்துவ கல்லூரி இவர் முடிவெடுத்து கொண்டு வந்தது தான்.
அது மட்டுமா, உலகத்தின் மூத்தகுடியின் தாய் மொழியான தமிழுக்கு, செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் கலைஞர் கருணாநிதி.

மேலே குறிப்பிடப்பட்ட எல்லா திட்டங்களுக்குள்ளும், மக்களின் நன்மை என்கின்ற ஒரு சிந்தினை அடங்கியுள்ளது. இல்லை என்று மறுப்பவரும், இதில் ஏதோ ஒரு திட்டத்தில் பலன் பெற்றிருப்பர். எனது இந்த வாக்கியம் உங்களுக்கு பொருந்தவில்லை என்றால், உங்களையும் தலை வணங்குகிறேன்.
இவரைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றை யார் முதலில் திரைப்படமாக எடுக்கப்போகின்றார் என்று கேட்பதற்கு முன்பு மணிரத்னத்தின் இருவர் திரைப்படம் தான் இவருக்கும், எம் ஜி ஆருக்குமான ஒரே வாழ்க்கை வரலாறு திரைப்படம். அதையும் தாண்டி ஒருவரால் இவரது வாழ்க்கையை அழகாக சொல்ல முடியுமென்றால் செய்யலாம்.
இந்த தமிழ் அறிஞரை அடக்கம் செய்ய இடம் செய்வதிலும் போராட்டம் தான். இறுதியில் மெரினாவில் அடக்கம் நடக்கிறது. அண்ணாவுடன் தம்பியும் உறங்கட்டும் அங்கு…
Web Title: Rip Kalaignar Karunanidhi, Tamil Article
Featured Image Credit: hwnews