.jpg?w=1200)
தமிழ் சினிமாவை 1970-களிலிருந்து பின் தொடர்ந்து ரசித்து வந்தவர்கள் அனைவரும் இளையராஜாவின் மெட்டுகளை ரசிக்காமல் கடந்து சென்றிருக்க முடியாது. ஏனெனில் 80களில் ஒரு தமிழ் சினிமாவை விடாமல் ரசித்துக்கொண்டிருந்தவரின் முகப்புத்தக பதிவில் தற்போது நான் கண்ட மீம் ஒன்று. இளைய வயது இளையராஜா இரயில் தண்டவாளத்தில் ஒரு ரேடியோ பெட்டியை கையில் வைத்து அமர்ந்திருக்கிறார். அந்த புகைப்படத்தின் மீது எழுதியிருக்கும் வாசகம் இது தான் “ரேடியோவை கண்டுபிடித்தவர் ‘மார்க்கோனி’ நம்மை அதை கேட்க வைத்தவர் ‘இசைஞானி’ ”.
இன்றும் தமிழ் சினிமாவின் ரசிகர்களில் சமூக வலைத்தளங்களில் பல நூறு பதிவுகளை இன்று நிரப்பிக்கொண்டிருப்பவர்கள் தன் மனதிற்கு பிடித்த கலைஞர்களை உயர்த்தியும் அவருக்கு எதிராக இவர்களே வேறொரு கலைஞரை தாழ்த்தியும் பேசுபவர்களே இருக்கின்றனர். ஆனால், மனிதர்களின் மனதோடு பேசும் இயல்புடைய இசை போன்ற கலையில் இயங்கும் படைப்பாளிகளை இரசனை மிக்க எந்த ஒரு மனிதனும் தனக்கு பிடித்த படைப்பாளியோடு இன்னோரு படைப்பாளியை நேர் எதிரியாக பார்த்துவிடலாகாது.
அத்தகையை இசை சார்ந்த படைப்பாளி என்பதனாலோ அவர் அநேக இதயங்களை தனது மெட்டுக்களால் கொள்ளை கொண்டதாலோ இவரது படைப்புகளுக்காக அதிகம் விமர்சிக்கப்படாத படைப்பாளியாகின்றார்.
சுயவிவரம்
இவரது இயற்பெயர் ராசைய்யா. டேனியல் ராமசாமிக்கும், சின்னத்தாயிக்கும் 2.6.1943-ல் பிறந்தார். பாவலர் வரதராசன், டேனியல் பாஸ்கர் என்று இரண்டு மூத்த சகோதரர்களும், அமர் சிங் (கங்கை அமரன்) என்ற ஒரு இளைய சகோதரரும் இவருடன் பிறந்தவர்கள் ஆவர்.
பொதுவாக இந்தியாவில் இசையமைப்பாளராகவோ அல்லது இசை படைப்பாளிகளாகவோ உள்ளவர்கள் அனைவரும் கர்நாடக சங்கீதத்தையோ இந்துஸ்தானிய சங்கீதத்தையோ முறைப்படி பயின்றவர்களாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத மரபாக இருந்தது. இளையராஜா தனது முதல் திரைப்படமான அன்னக்கிளிக்கு இசையமைக்கும் வரை. ஏனெனில் அவர் தன்னிடமிருந்த ஆம்பிளிஃபயரை அடகு வைத்து சிறிது காலம் பயின்றதென்னவோ வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசையைத்தான். ஆனால் தான் அடகு வைத்த ஆம்பிளிஃபயரை மீட்கச் சென்றபோது அந்த இடத்தில் வேறு கடை இருந்ததனால் மிகவும் மனமுடைந்துவிட்டாராம்.

மெட்டுகளின் உணர்வு
இவரது ஆரம்பகால இசை யாவும் தமிழ் நாட்டுப்புற பாடல்களின் சாயலுடனோ அல்லது குறிஞ்சி நிலத்திற்குரிய வாழ்க்கைமுறையை மனதில் கொள்ளும் தோரணையில் தான் பெரும்பாலும் அமையப்பெற்றது என்றும் கூறலாம். இவர் பெரும்பாலும் ஒரு பாடலை இசையமைக்க எடுத்துக்கொள்ளும் நேரம் வெகு சில மணி நேரங்கள் தான். ஏன் கரகாட்டக்காரன் திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் இசையமைத்து பதிவு செய்ய எடுத்துக்கொண்ட நேரம் 3 நாட்கள் தான். இதைப்போன்றே குறைந்த நேரத்தில் இவர் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து கொடுத்ததற்கு உறுதுணையாக இருந்த இசை கலைஞர்களையும், பாடலாசிரியர்களையும், திறம் வாய்ந்த பாடகர்களையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஒருமுறை எஸ்.பி.பாலசுப்புரமணியமும், பி. சுசிலாவும் அமெரிக்காவிற்கு சென்று ஒரு மாதம் அங்கேயே கச்சேரி செய்ய வேண்டிய கட்டாயம். ஒரு மாத காலம் இவர்கள் இருவரும் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 2 மணிக்குள் ஒரே நாளில் 22 பாடல்கள் பதிவுக்கு இருவரும் பாடிக்கொடுத்தனர்.
இவருக்குள் இருக்கும் இசை குறிப்புகளை உடனிருக்கும் இசைக்கலைஞர்களே வாசித்துப் பார்த்து மெய்சிலிர்த்து போன நிகழ்வுகள் அதிகம் நிகழ்ந்துள்ளது. மணிரத்னத்தின் இயக்கத்தில் ரஜினி மற்றும் மம்முட்டி கதாநாயகர்களாக நடித்த தளபதி திரைப்படத்தில் வரும் “சுந்தரி கண்ணால் ஒரு சேதி” என்று கவிஞர் வாலி எழுதிய படலை பம்பாயில் உள்ள எஸ்.டி.பர்மன் அவர்களது ரிக்கார்டிங் அரங்கில் பதிவு செய்ய தயாராகிக்கொண்டிருந்தார். இசை குறிப்புகள் அனைத்து வாத்தியம் வாசிப்பவர்களுக்கும் அனுப்பப்பட்டது, அன்று எஸ்.டி.பர்மன் அவர்களது ரிக்கார்டிங் அரங்கில் இருக்கும் இசை கருவிகள் வாசிப்பவர்கள் யாருக்கும் தமிழ் தெரியாது, இளையராஜாவிற்கு இந்தி தெரியாது. ஆதலால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளக்கூட முடியாது. ஆனால் இசைக்கோர்ப்புக்கான இசை குறிப்புகளை அனுப்பிவிட்டனர். அனைவரும் தனித் தனியாக பயிற்சி எடுத்துவிட்டனர். ஒன்றாக அனைவரும் முதன் முதலில் வாசித்தனர், பாடல் பதிவும் தொடங்கிவிட்டது. முதல் வயலின் தொகுப்பு வாசித்தவுடன், பாடல் பதிவாகிக்கொண்டிருப்பதை அறிந்தும் அனைத்து இசைக் கலைஞர்களும் ஒன்றாக எழுந்து நின்று கரவொலி எழுப்பியுள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்தி திரையிசையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த எஸ் டி பர்மனோடு பணியாற்றும் இசைக்கலைஞர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியமிடம், இளையராஜாவை பம்பாய்க்கு வந்து இசை பதிவு செய்ய வேண்டாம் என்று கூறிவிடுங்கள். ஏனெனில் அவர் இசையமைத்தால், அந்த குறிப்புகளை வாசிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கின்றது என்றாராம்.

தன்னம்பிக்கை மற்றும் தர்மசங்கடம்
இத்தகைய ஆற்றல் மிகுந்த இளையராஜா இசையை தொடக்கத்தில் பயின்றது, அவரது அண்ணன் பாவலரோடு கட்சி கூட்டங்களில் சென்று வருகின்ற காலங்களில் தான். அவரது அண்ணன் பாவலர் வரதராசன் நாட்டுப்புற கச்சேரிகளை பாட, உடனிருந்து, வரதராசன் கூறுகின்ற சுருதியில் சொல்லிக்கொடுத்த இசை குறிப்புகளை வாசித்து வந்தவர். அது தான் அவர்களுக்கு கிடைத்த முதல் இசைப்பாடம். இப்படி நூற்றுக்கணக்கான கட்சி மேடைகளில் பாடிய மெட்டுகளையே பாடிப் பாடி, இசை மீது அதீத ஆர்வம் வந்து, அண்ணன் வரதராசனுக்கு தெரியாமல் தன் தாய் சின்னத்தாயிடம் சென்னைக்கு சென்று இசையை மென்மேலும் கற்றுக்கொண்டு பாடி, மின்னுகிறோம் என்று கூற, தன் தாய் வீட்டிலிருந்த ரேடியோ பெட்டியை விற்று கிடைத்த வெறும் 400 ரூபாயை கொடுத்தார். அதனை கொண்டு இரயில் ஏறி வந்தவர்கள் தான் இளையராஜாவும், கங்கை அமரனும்.
அன்று அந்த இரண்டு இளைஞர்களுக்குள் இருந்த தன்னம்பிக்கை, இன்று வளரும் கலைஞர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இவர் முதன் முதலில் வேடிக்கை பார்க்கச் சென்ற ஜி.கே.வெங்கடேஷ் அவர்களின் இசை பதிவு நடைபெறும் அரங்கில், அவர் வாசித்து பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது வாசித்தவற்றை கேட்டு அதற்கான இசைக் குறிப்பை தானாக சிறு பிழையின்றி எழுதினார். அந்த இசை குறிப்பை வைத்து வாசித்தவர்கள் வாசித்ததிற்கும், ஜி.கே.வெங்கடேஷ் வடிவமைத்து வைத்திருந்த இசைக்கும் ஒரு இழை கூட மாற்றமில்லை.
இவரது சகோதரர் கங்கை அமரன் அவர்களும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் ஒரு தர்மசங்கடமான நிகழ்வுகள் என்னவென்றால் ஒரு சில இசைத்தட்டுகளில் கங்கை அமரன் இசையமைத்த பாடல்களுக்கு இசை என்ற இடத்தில் இளையராஜா என்று எழுதியிருப்பர்.

தனிச்சிறப்புகள்
இன்னொரு சுவாரஸ்யமான கதை 21 ஆம் நூற்றாண்டில் சென்னையில் நடந்த கதை. அமெரிக்க காபி நிறுவனம் இந்தியாவில் இருக்கும் தனது கிளைகளில் காபி பருக வருபவர்கள் கேட்டு மகிழ இளையராஜாவிடம், அவருடைய பாடல்களின் மாற்றுவடிவத்தை(unplugged version) ஒலிபரப்புவதற்காக ஒப்பந்தம் பேச முன் வந்தனர். சில கருத்து வேறுபாடுகளால் அது நடைபெறாமல் போய்விட்டது. இத்தனைக்கும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் முதன்மையான பிரதிநிதிகள் எவரும் இந்தியாவையோ, தமிழ் நாட்டையோ பூர்வீகமாக கொண்டவர்கள் இல்லை.
இளையராஜா சில நேரங்களில் ஒரே மெட்டினைக் கொண்டு ஆரோகணத்தில் ஒரு பாடலும், அவரோகணத்தில் ஒரு பாடலும் கொடுத்திருப்பார். இரண்டும் மக்கள் மனதை கவர்ந்த பாடல்களாகவே அமைந்த அதிசயத்தை என்னவென்று கூற. அதைப்போலவே தங்கமகன் என்னும் திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் ஆரோகணத்திலேயே இசையமைத்திருப்பார். பல உணர்வுகளையும் ஒரு வரையறைக்குள் தன்னை உட்படுத்திக்கொண்டு இரசிகர்கள் இரசிக்கும் வண்ணம் வழங்கியவர்.
இவர் செய்த பரிசோதனைகளில் ச ரி க என்ற மூன்றே சுவரங்களைக் கொண்டு மேடையிலேயே மெட்டமைத்து அரங்கேற்றிய நிகழ்வு, அவரது பல ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது. எப்படி பாப் மார்லே, எமினம், மைக்கேல் ஜாக்சன், பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்ற சர்வதேச அளவில் பிரபலமான இசைக்கலைஞர்கள் மேடையில் பாடும்போது அவர்களது ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் விதம் போலவே தென்னிந்தியாவின் பிராந்திய மொழிகளில் மட்டும் பிரதானமாக இசையமைத்தவரான இளையாராஜாவுக்கும் உள்ளது.
உலகெங்கும் இருக்கும் தமிழர்களுக்கு தன் மண்ணோடு இருக்கும் ஒரு பிணைப்புணர்வை அளிப்பது இளையராஜாவின் இசையே என்று கூற முடியும். இங்கு கூறிய ஒன்றை தன் மெட்டு வழியே கூறியிருக்கிறது இவரது பாடலான “சொர்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா?”
இளையராஜாவின் தீவிர ரசிகர்கள் எவருக்கும் தெரியாத எந்த ஒரு அறியாத் தகவல்களையும் இதில் உள்ளடக்கவில்லை. அதை எப்படி செய்யமுடியும். திருவாசகத்திற்கே ஹங்கேரி இசைக்குழு மூலமாக சிம்ஃபனியில் மெட்டமைத்து தமிழ் இலக்கியத்தை உலகெங்கிலும் எடுத்துச் சென்றவர்.

உணர்விலிருந்து வந்த சில மெட்டுக்கள்
வெறும் மெட்டமைப்பது நமது பணி என்று தனது பணியை கூலிக்காக செய்வது மட்டும் இவரது நோக்கமாக இருந்துவிடாமல் தனது மெட்டுகளில் மூலமும் சத்தமே இல்லாமல் சில போராட்டங்களை நிகழ்த்தியிருக்கிறார் என்பதை வே. மதிமாறனின் பேட்டியை கேட்கையில் தான் நான் உணர்ந்தேன்.
பத்ரகாளி என்ற படத்தில் மடிசார் கட்டிய மாமி தன் கணவனை சமாதானப்படுத்த பாடும் பாடல். அந்த சூழ்நிலைக்கு அவர் மெட்டமைத்ததில் தாளத்தில் பிரதானமாக பயன்படுத்திய கருவி பறை, அதில் கிதாரையும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் எந்த பேதமுமின்றி அனைவரும் அந்த பாடலை ரசிப்பார்கள். இதில் சமத்துவமில்லையா என்ன? இதிலென்ன சமத்துவமிருக்கிறது? என்று கேட்க நினைப்பவர்கள், இன்று கிதார் வாசிப்பவரும், பறையிசை வாசிப்பவரும் ஒன்றாக இணைந்து மேலே குறிப்பிட்ட பாடலைத் தவிர்த்து வேறெந்த பாடலை இணைந்து மேடையேற்ற முடியும் என்று சிந்தித்து பாருங்கள்.
தன் வாழ்க்கையில் இருந்து தான் இசையமைக்கின்றோம் என்பதை உணர்ந்தவர் நீங்கள் கேட்டவை என்னும் திரைப்படத்தில் வரும் “பிள்ளை நிலா” என்றும் பாட்டில் துணி துவைக்கும் சத்தத்தைக் கூட தாளமாக்கியிருப்பார்.
இசையமைத்த ஒரு தனி ஆல்பத்திற்கு என்ன பெயர் சூட்டுவது என்று இவருக்கே தெரியாமல் தடுமாற, ஒரு குழப்பத்தில் “How to name it?” அவர் கூறியதையே தயாரிப்பாளர்கள் அந்த ஆல்பத்திற்கு பெயராகச் சூட்டி வெளியிட்டனர். இது இவருக்கே தெரியாத இவரது ஆற்றல் என்று கூறுவதா? அல்ல அந்த தயாரிப்பாளரின் சாமர்த்தியம் என்று கூறுவதா?

இங்கு மேற்கோளிட்ட சில குறிப்புகளின் மூலமாவே இவரது வாழ்க்கையிலிருந்து இவரது பல மெட்டுக்கள் எடுக்கப்பட்டது என்பது புலப்படும்.
“பாடப் பிறந்தது பாட்டுத்தான்..
எனது கூடப்பிறந்தது பாட்டுத்தான்..
வாழப்பிறந்தது பாட்டுத்தான்..
எனது வாழ்க்கை முழுவதும் பாட்டுத்தான்..”
உங்கள் மனதில் இப்போது ஒலிக்கும் ராஜாவின் மெட்டு எது?
Web Title: Tunes From Life Ilayaraja, Tamil Article
Featured Image Credit: jfwonline