“டேய் திலீபன் எழும்புடா, பள்ளிக்கூடத்திற்கு நேரமாச்சு” அம்மா வழமைபோல் தட்டி எழுப்பினா. கண்ணை கசக்கி, சோம்பல் முறித்து, கட்டிலால் இறங்கி, அறை மூலையில் இருக்கும் எனது cricket batல் வழமைபோல் கண்விழித்தேன்.
போனவருஷம் என்னுடைய பிறந்தநாளிற்கு அப்பா வாங்கித்தந்த bat. Astra Margarine பக்கெட்டோட வாற Roy Dias சிரித்துக் கொண்டிருக்கும் sticker ஒட்டி வைத்திருந்தேன். Roy Dias என்னுடைய favorite player, அவரை மாதிரி விளையாடி ஸ்ரீலங்கா கிரிக்கட் அணிக்கு விளையாட வேண்டும் என்பது எனது கனவு, நம்பிக்கை, இலட்சியம், வெறி.
நேற்று பின்னேரம் எங்கட இராமகிருஷ்ண லேனுக்குள் நடந்த மேட்சில் அந்த batஆல் அடித்த குட்டி சிக்ஸர் நினைவில் வர, பேட்டை தூக்கி முத்தமிட்டுவிட்டு, Roy Dias போல மிடுக்காக ஸ்ட்ரெய்ட் டிரைவை (straight drive) ப்ராக்டீஸ் பண்ணினேன், மேசையில் காலை 6.45 செய்தி ஒலிபரப்பிக்கொண்டிருந்த நஷனல் பானசோனிக் ரேடியோ அருந்தப்பு தப்பியது.
“டேய், வான் வரப் போகுது, ஏமாந்து கொண்டிராமல் வெளிக்கிடு” அம்மா கத்தினா. படுக்கை அறையால வெளில வந்து பாத்ரூமுக்கு போகும் வழியில், ஹோலிலிருந்த மெய்கண்டான் கலண்டரின் தாளை அப்பா கிழித்துக் கொண்டிருந்தார்.
ஜூலை 25, 1983
——————————————————
நிஸாம் அங்கிளின் ஸ்கூல் வானில் கொழும்பு இந்துக் கல்லூரி வாசலில் வந்திறங்க, சன நடமாட்டம் வழமையை விட வெகு குறைவாக இருந்தது. அன்று தவணை இறுதி சோதனையின் ஆரம்ப நாள். யாழ்ப்பாணத்தில் ஏதோ பிரச்சினையாம் அது கொழும்பிற்கும் பரவலாம் என்ற பயத்தில்தான் மாணவர் வரவு குறைவாக இருக்கிறது என்று ராஜரட்னம் மாஸ்டர் கலக்கம் நிறைந்த முகத்துடன் கதைத்துக் கொண்டிருந்தது கேட்டது.
வகுப்பிற்குப் வந்து அமர்ந்து சிறிது நேரத்தில், பதற்றத்துடன் ஓடிவந்த பத்மா டீச்சர் “வெள்ளவத்தை பக்கம் கலவரமாம், எண்ணெய்க்கடை எல்லாம் எரியுதாம், எல்லோரும் வீட்ட போங்கோடா” என்று உரக்க கத்தினார்.
வழமைபோல் பாடசாலைக்கு வெளியே வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த நிஸாம் அங்கிள், பதற்றத்துடன் என்னுடைய வகுப்புக்கு ஓடிவந்து என்னுடைய கையை இறுகப்பிடித்துக்கொண்டு, விடுவிடு என்று ஓடிப்போய் வாகனத்தின் பின்கதவை திறந்துவிட்டு விட்டு, என்னை ஏறச்சொன்னார்.
“மவன், இந்த ஸீட்டுக்கு கீல நீங்க இருங்க சரியா.. நான் வந்து சொல்ல மட்டும் ஒலுவ வெளில காட்ட வேணாம்.. சரியா மவன்” நிஸாம் அங்கிள் ஏன் அப்படி சொன்னார் என்று விளங்கும் வயதில்லை, ஆனால் அவரின் கண்களில் தெரிந்த கலக்கமும் குரலில் தொனித்த நடுக்கமும் என்னை பயத்தில் ஆழ்த்த, நான் ஸீட்டுக்கடியில் சரிந்தேன்.
பம்பலப்பிட்டி லோரன்ஸ் வீதியிலிருந்து காலி வீதியில் இடப்பக்கம் வாகனம் திரும்ப, யாரோ ஒரு பொம்பிள “ஐயோ என்னை ஒன்டும் செய்யாதீங்கோ” என்று கத்துவதும் அழுவதும் கேட்டது. நிஸாம் அங்கிள் வாகனத்தை சென்.பீட்டர்ஸ் கல்லூரி வாசலில் நிறுத்தி, எங்களுடைய வாகனத்தில் வரும் அந்த பாடசாலை மாணவர்களை ஏற்றினார்.
சென். பீட்டர்ஸில் படிக்கும் எனது நண்பன் பார்த்திபனும் என்னோடு பின் ஸீட்டுக்கடியில் இணைந்து கொண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டோம், சிரிக்கவில்லை, சிரிக்க முடியவில்லை.
முன் ஸீட்டிலும் பின் ஸீட்டுகளிலும் சிங்கள பெடியங்கள் ஏறிக் கொண்டார்கள். பின் ஸீட்டில் அமர்ந்திருந்த அவங்களின் கால்களிற்கடியில் நாங்கள் ஒளிந்திருந்தோம். நிஸாம் அங்கிள் அவங்களுக்கு ஏதோ சொல்லியிருக்க வேண்டும், அவங்கள் எல்லோரும் ஒருவித இறுக்கத்துடன் வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்.
வாகனம் மீண்டும் நகரத் தொடங்க, படாரென்று ஒரு சத்தம் கேட்டது. சளாரென்று கண்ணாடி நொறுக்கும் சத்தமும் கேட்டது.
“அம்மட்ட சிரி.. அற காரெக்கட்ட கினி தியலா.. அதுல மினிஸு இன்னவா வகே (அந்த காரை எரித்து விட்டார்கள், காருக்குள் ஆக்கள் இருக்கினம் போல இருக்கு) வாகனத்திலிருந்த சிங்கள பெடியனொருவன் பதறியது கேட்டது.
“ஈயே ரா அபே ஹமுதா ரணவருண் தஹதுன்தெனெக் கொட்டி மரா தம்மாளு” (நேற்றிரவு எங்கள் ராணுவ வீரர்கள் பதின்மூன்று பேரை புலி கொன்றுவிட்டதாம்) இன்னொரு சிங்கள மாணவன் சொல்வதும் கேட்டது.
“புலி அடித்து ஆமியை கொன்றதற்கு இவங்கள் ஏன் ஆக்களை அடிக்கிறாங்கள், காரோடு கொளுத்துறாங்கள், எண்ணெய் கடையை எரிக்கிறாங்கள்” எனக்குள் நானே கேட்டுக்கொண்டேன், அவங்கள் கதைத்த புலி, எங்கட தமிழ் புலிப்படை என்றறியாத காலமது.
மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த வாகனம் நிறுத்தப்படுகிறது. நிஸாம் அங்கிளின் குரல் கேட்கிறது “அதுலே சிங்கள லமய் வித்தராய் இன்னே (உள்ளே சிங்கள பிள்ளைகள் மாத்திரம் தான் இருக்கினம்). வெளியே யாரோ அழும் சத்தமும் கண்ணாடிகள் நொறுங்கும் சத்தமும் கேட்கிறது.
“அபிட பொறு கியன்ட எப்பா ஹரித (எங்களுக்கு பொய் சொல்ல வேண்டாம்) யாரோ ஒருத்தன் நிஸாம் அங்கிளை வெருட்டுவது கேட்குது.
“மங் பொறு கிய்வ நஹா மஹாத்தையா” (நான் பொய் சொல்லவில்லை ஐயா) நிஸாம் அங்கிளின் பணிவான பதில் அவனை சாந்தப்படுத்தியிருக்க வேண்டும், வாகனம் மீண்டும் நகருகிறது. வாகனம் இராமகிருஷ்ண லேனிலிருந்த எங்கள் வீட்டிற்கு முன் நிறுத்தப்பட, நானிறங்கி வீட்டிற்குள் போனேன்.
வேலையிலிருந்து திரும்பிய அப்பா, பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய அக்காமார், அம்மா எல்லோரும் பதற்றத்தோடு இருக்க, டெலிபோன் அடிக்கிறது. அப்பா தான் டெலிபோனை எடுக்கிறார். “ஹலோ”…மறுமுனையில் யாரோ பதற்றத்துடன் கதைப்பது புரிகிறது. “ஐயோ அப்படியா” என்று சொல்லிவிட்டு அப்பா போனை படாரென்று வைத்துவிட்டு கத்துகிறார் “ராமகிருஷ்ண ரோட்டை அடிக்க சிங்களவங்கள் வாறான்களாம், வெள்ளவத்தை பொலிஸிலிருக்கும் என்னுடைய ஃபெரன்ட் ரிஸ்வான் தான் கதைத்தவர், எங்களை அவரின்ட வீட்ட உடனடியாக போகச் சொன்னார்” அப்பா சொல்லி முடிக்க முதல் நாங்கள் படிகளில் இறங்கி ஓடினோம்.
“அம்மா, என்ட பேட்டை (Bat) எடுத்துக்கொண்டு வாறன்” லேனில் இறங்கி காலடி வைத்துவிட்டு, திரும்பி போக வெளிக்கிட்டேன். பளார், அம்மா கன்னத்தில் விட்ட அறையில் அழுதுகொண்டே ராமகிருஷ்ண ரோட்டை நோக்கி ஒடினேன். ராமகிருஷ்ண லேன் முடக்கில் இடப்பக்கம் திரும்பி, ராமகிருஷ்ண மடத்திற்கருகில் இருக்கும் ரிஸ்வான் அங்கிளின் வீட்டை நோக்கி ஓட திரும்ப, அந்த சத்தம் என் காதில் கேட்டது
“அடோ பற தெமலா”
திரும்பிப் பார்க்க, ராமகிருஷ்ண வீதி முகப்பில் இருக்கும் பெற்றோல் நிலையத்தடியிலிருந்து சிவப்புக் கலர் பெனியனும் நீல கலர் சாரமும் அணிந்த ஒருத்தன், பெரிய வாளோடு எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான்.
“ஜயோ என்ர Cricket Bat”