“சேது அய்யா” தவறிட்டாருடா!. வெரசா கம்பெனில செல்லிட்டு வா, என்று கூறிவிட்டு அப்பா ஃபோன்-யை வைத்துவிட்டார். என் அம்மாவின் அப்பா அவர், வடிகட்டுன கஞ்சன்!. அம்மாச்சி எங்களுக்கு எது குடுத்தாலும் அவருக்கு தெரியாமதான் கொடுக்கும். வீட்டில் யாரையாவது திட்டிக் கொண்டேதான் இருப்பார். அவருக்காக இல்லைனாலும் அம்மாச்சிக்காக போய்தான் ஆகவேண்டும்.
இந்த “சாவு எல்லாம் சனி ஞாயிறுல வராதா” செவ்வாய்க்கிழமை போய் லீவு கேட்டா, அவன் ஏதோ அவுங்க குடும்பத்தை பத்தி தப்பா பேசுனமாதிரி பாப்பான். ஒரு வழியாய் லீவு வாங்கிட்டு பஸ் ஏறிட்டேன். 3 மணிநேர பயணம் அவர் மேல் இருந்த கோபத்தை இன்னும் அதிகமாக்கியது.
எங்க அம்மாதான் மூத்த பொண்ணு, அதுக்கு அப்புறம் லதா சித்தி, கண்ணன், சீனி. இரண்டு மாமா, மொத்தம் 4 பிள்ளைகள். எனக்கு வெவரம் தெரியிர வயசு வரைக்கும் எல்லாரும் ஒண்ணாதான் இருந்தோம் அய்யாவாள் வந்த சண்டைதான் குடும்பத்தை பிரித்தது, நாங்கள் டவனுக்கு வத்துட்டோம் லதா சித்தி தான் இப்பவரைக்கும் பாத்துகிச்சு. பஸ் சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் வந்தது, இங்கிருந்து “முத்துபட்டிக்கு” சேர் ஆட்டோதான்.
என்னா மாப்ல! போன வாரம் தான் “பெருச” வந்து கும்பமே பாத்துட்டு போனிங்க அப்பலாம் முடியாம நீங்க ஊருக்கு போனதுக்கு அப்பறம் முடியிது உங்களுக்கு தான் அலைச்சல் என்று சேர் ஆட்டோ ஒட்டும் சன்னாசி மாமா பேச ஆரம்பித்தார். “ஆமா மாமா நான் வரலனுதான் சொன்னேன் அம்மாதா கேக்கல”. ‘அப்படி சொல்லாதிங்க மாப்ல, ஊருலயே பெரிய சாவு, ஊரே அய்யா வீட்டிலதான் நிக்கிது. அய்யா பேச்ச கேக்க ஊரே நிக்கும் அப்படி பட்ட ஆள் போய்டாரு கல்யாண சாவு மாப்ல பாருங்க எப்படி எடுக்குறாங்கனு.”
ஒருநாள் அய்யா அம்மாச்சியுடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தார், இப்படி சண்டை போட்டிங்கன்னா அம்மாச்சியை எங்க வீட்டுக்கு கூட்டி போயிருவேன் பாத்துக்கோங்க!. நீ கல்யாணம் பண்ணி உன் பொண்டாட்டிய இங்க கொண்டாந்து விட்டுட்டு இந்த கெழவிய கூட்டிட்டு போ-ன்னு சிரித்தார் ஆனால் எனக்கு கோபம் மட்டும்தான் வந்தது, சிரிப்பு வரவில்லை.
ஆட்டோ ஊர் எல்லையில் நின்றது. மாப்ல இன்னும் ஒரு இரண்டு சிப்ட் மட்டும் ஓட்டிட்டு வரேன் இப்ப வீட்டுக்கு வந்தா திரும்ப போக முடியாது என்று சொல்லிவிட்டு இன்றும் காசு வாங்காமல் சென்றுவிட்டார். மைக் செட் வச்சு ஒப்பாரி வைக்கும் சத்தம் ஊர் எல்லை வரை கேட்டது. நடந்து போகும் வழியில் பிரசிடண்ட் பெரியப்பா வந்தார் என்னப்பா உங்க மாமன் சீனி குஜராத்ல இருந்து கெலம்பிட்டாரா இல்லையா? ஐஸ் பொட்டி சொல்லியாச்சா? இல்ல, பெரியப்பா இப்பத்தான் வந்தேன் இனிமே தான் போய் பாக்கனும். அதலாம் ஊர்காரங்க விட்ருவமா இருந்தாலும், “மூத்த பேரன் நீ எடுத்து செய்யனும்”. என்று சொல்லிவிட்டு அவர் குழி வெட்ட ஆள் சொல்ல போய் விட்டார்.
“மரணத்தை மிக அருகில் இருந்து இன்றுதான் பார்க்கிறேன்! என் மீதும் இழவு வாடை அடிப்பது போல் ஒரு உணர்வு”. சட்டையை முகர்ந்து பார்த்தபடி வீட்டை அடைந்தேன். அந்தகாலத்து தூண் வைத்து கட்டிய வீடு, திண்ணையில் மட்டும் 20 பேர் உட்காரலாம்!. அது தவிர்த்து வீட்டிற்கு முன் பெரிய சாமியானா பந்தல் போட்டு இருந்தார்கள்.
மாடு கட்டிப்போடும் தொழுவத்தை ஒட்டி ஆறு பேர் வட்டமாக அமரந்து தீ மூட்டி பறையை வாட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் எழுந்து நாகராசு சித்தப்பாவிடம் “சரக்கு கிடைக்குமா சாமி” என்று கேட்டார், வாங்க ஆள் போயிருக்கு நீ வாட்டி முடிக்கும்போது பாட்டில் உன் கைல இருக்கும். பெரிய சாவு, வாசிப்பு பலமா இருக்கனும்! செத்த எங்க மாமன் எழுந்து வந்து ஆடனும் பாத்துக்கோ!! என்றவாறு, நுழைந்த என்னை பார்த்தார்.
ஏன்டா இவ்ளோ நேரம்? சிவகங்கை டிரைவர் கிட்ட என் பேர் சொன்னியா இல்லையா என்றார். அவரிடம் இருந்து வந்த பழ வாடை தலைவர் முழு போதை என்று காட்டியது.12 மணிக்குத்தான் கடையே திறக்குறான்க இவருக்கு எப்படி கிடைக்கிறது?….. வீட்டிற்குள் நுளைந்தேன் என்னை பார்த்ததும் அம்மா, சித்தி, அம்மாச்சி மூவரும் ஒரே குரலில் வீறிட்டு அழுதனர்.
அம்மாச்சி ஒப்புக்கு அழுவது நன்றாக தெரிந்து, காரணம் அய்யாவிடம் கடைசி 6 மாதமாக பேசுவதில்லை. சொத்து பிரித்த நேரம் ஐம்பது ஆயிரம் பணமும் 5 செண்ட் எடமும் அவர் வச்சுகிட்டு எல்லாத்தையும் பிரிச்சு குடுத்தார் எப்படியும் கடைசி காலத்துல அத நம்ம பேருக்கு குடுப்பாருனு இருத்துச்சு அம்மாச்சி, ஆனா அவர் மாடுமுட்டி படுத்த படுக்கையான அப்றம் கூட அத பத்தி பேசல. 4 மாசம் பீ, மூத்திரம் அள்ளி கொட்டுச்சு, அப்பயும் வாய தொறக்கல. அப்பறம் போஸ்ட் மேன் ‘மாரி’ தான் அய்யா அந்த நெலத்தையும் வித்து காசாக்கி யாருக்கோ கொடுத்துட்டாருனு சொல்லி குண்ட தூக்கி போட்டுச்சு. அதுக்கு அப்புறம் யாரும் சரியா கவனிக்காம இப்ப போய் சேந்துட்டாரு, அவர் இன்னொரு குடும்பம் வச்சுருக்காருனு அம்மாச்சி சொல்லி நாங்க தேடி திருஞ்சது தனி கதை!
அவர் எப்பொழுதும் உட்காரும் மர நாற்காலியில் கிடத்தப்பட்டிருந்தார் , வாயில் வெற்றிலை பாக்கு வைத்து நாடி கட்டப்பட்டிருந்தார். கடமைக்கு என்று சாமி கும்பிட்டு முற்றம் தாண்டி, “அடுப்படிக்கு முன் இருக்கும் ஜன்னல் அருகே நின்றேன்.” 35 – 40 வயது மதிப்புமிக்க மூன்று பெண்கள் கரகாட்டம் ஆடுவதற்கான உடையை மாற்றிக்கொண்டு இருந்தனர். அந்த சிறிய உடையில் அவர்களின் பெரிய உடம்பு பிதுங்கி வழந்தது! பின்புறம் இன்னும் மோசம். ஆட தயாரானார்கள், சேது அய்யா அவர்களின் பின் புறத்தை பார்பது போன்ற பிரம்மை எனக்கு!.
“அய்யா படி கணக்கா கெடுக்காமா மடி நிறைய கொடுத்த மகராசன் “
மூன்று பேரில் கனத்த பெண் பாட ஆரம்பித்தாள், அவர்களின் கன்ன ரோஸ் பவுடர் அவர்களின் நிறத்துக்கு எடுக்கவில்லை. ஆனால் அங்க இருந்த ஆம்பளை அத்தனை பேர் கண்களும் அவர்களின் அங்க அசைவுகளின் மேல் தான் இருந்தது. அந்த ரோஸ் பவுடர் மேல் இல்லை.
“மண்ணுலக அளந்த ராசா இப்ப விண்ணுலகம் அளக்க போனீரோ”
பாடல் தொடர்ந்தது . அவர்களின் ஆட்டம் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டது , நடுவில் தப்படிக்கும் நபரும் சேர்ந்து கொண்டு ஆடினார்.
“மாமா நீங்க போன பாதை பூ பூக்கும், நின்ன மரம் காய் காய்க்கும்”.
மூன்றாவது பெண் ஆரம்பித்தாள்,
சீனி மாமா குஜராத்தில் இருந்து குடும்பமாய் வந்து இறங்கினார். அங்கு ஹோட்டல் வைத்து நடத்துகிறார் , மீண்டும் வீடு அழத் தொடங்கியது.
படுக்கையில கெடந்த ஒடம்பு தாங்காதுபா!, சீக்கிரம் ஆகுற வேலைய பாருங்க என்றார் ஊர் பெரியவர். மாசானம் ஊரில் முடி திருத்தும் சோனை வந்து அய்யாவுக்கு சவரம் செய்தார். டேய் பிளேட் மாத்துனியாடா! என்று எப்பவும் கனைக்கும் அய்யாவின் குரல் அன்று எழவில்லை. குழுப்பாட்ட அய்யாவின் உடல் வெளியே கொண்டுவரப்பட்டு கட்டிலில் கிடத்தப்பட்டது. பேரன், பேத்தி, மகன் என்று எல்லோரும் எண்ணெய் வைத்து குழுப்பாட்டி மீண்டும் உட்கார வைக்கப்பட்டார். வாய்க்கரிசி போட எல்லாரையும் அழைத்தனர் எனக்கு மனம் இல்லாமல் நின்றேன் அம்மாச்சியும் அம்மாவும் முறைக்க வாய்க்கரிசி போட்டேன்.
பெண்கள் எல்லாம் தெரு முனைவரை நீர்மாலை கொண்டுவந்து உடைத்தனர். இருந்த அத்தனை ஆண்களும் இடுகாடு நோக்கி நடந்தோம். பூவால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கு, வாண வேடிக்கை, கரகாட்டம், தாரை தப்பட்டை என சேது அய்யாவும் எங்களுடன் வந்தார். அய்யாவை புதைத்துவிட்டு பெரிய வேட்டி விரித்து இடுகாட்டிலேயே இரண்டு மாமாவும் ஊர் பெரியவர்களும் அமர்ந்தார்கள். பாடை கட்டியவர்கள் முதல், குழி தோண்டியவர்கள் வரை அத்தனைபேர்களுக்கும் ஊர் பஞ்சாயத்து முடிவு செய்த பணம் தான் தர வேண்டும் என்றார்கள், ஏன் என்றால் இருப்பவர்கள் அதிகமாய் கொடுத்து பழகி விட்டால் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என பதில் சொன்னார்கள். ஒரு இழவு நல்லபடியாய் முடிவடைய எத்தனை பேர் தேவைப்படுகிறார்கள் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன்.
இரவும் வந்து விட்டது வீடு தன்னை புதுப்பித்துக்கொள்ள ஆம்பித்துவிட்டது. அம்மாச்சி தட்டில் இட்டிலியுன் வந்து சாப்பிட கொடுத்தார், நான் வேண்டாம் என மறுக்க!, சும்மா வீம்பு பண்ணாம சாப்பிடுடா!. அந்த மனுசனே மண்ணுக்குல்ல போய்டாரு இவன் மறக்குறானா பாரு என்றார். ஆம் அன்று பள்ளி முடிந்து பையுடன் நேராக அம்மாச்சி வீட்டுக்கு போனால் யாரையும் காணவில்லை. நல்ல பசி, அடுப்படியில் கறி குழம்பு இருந்தது சோத்தைப் போட்டு, கறி அள்ளி வச்சி முதல் வாய் வைக்கும் முன் அய்யா வந்தார்! என்னடா ஆள் இல்லாத வீட்டுல களவாணி மாதிரி சோத்த திருடி திங்கிற? என்றார். எப்பவும் கிண்டல் செய்தால் இருக்கும் அந்த சிரிப்பும் இல்லை. அவர் முன்னே கையை கழுவி பின் என் புத்தக பையையும் உதறிய பின் அங்கு வெகு நாட்களாக செல்லவில்லை. அம்மாவின் கட்டாயத்தால் வீட்டிற்கு சென்றேன் ஆனால் இது வரை சாப்பிடவில்லை! .
வீட்டில் இருப்பவர்கள் மொத்த செலவு எல்லாவற்றையும் எப்படி பிரிப்பது என்பது பற்றி பேச ஆரம்பித்து, அய்யா யாரிடமோ கொடுத்த அந்த பணத்தை பற்றி பேச்சு வந்தது. அம்மாச்சி அய்யாவை வசைபாட ஆராம்பித்தார். அப்பொழுதுதான் அம்மாச்சியின் அக்கா அவரிடம் பேச ஆரம்பித்தார். அவுகள அப்படி பேசாத, அவர் நல்ல நடை உடையில இருந்த நேரத்துல என்ன பாக்க ஊருக்கு வந்தாக! உங்க தங்கச்சிக்கு முன்னாடியே கல்யாணம் ஆகி ஒரு கொழந்தையும் இருந்துருக்கு புருசன் எங்கயோ ஓடி போனதால அந்த கொழந்தைய தூரத்துல யாருக்கோ தத்து கொடுத்துட்டு என்னைய கட்டிகிச்சி!. இது நீங்க யாரும் என்கிட்ட சொல்லல அதுக்கு ஆயிரம் காரணம் இருக்காலாம், ஆனா அவ சொல்லி இருக்கனும். 4 புள்ளை பெத்தும் என்ன நம்பல அவ. சாகபோற நேரத்துலயும் அவ நம்பலன்னுதான் வலிக்குது மதினி. இதுல ஒரு இலட்ச ரூபாய் பணம் இருக்கு, இத அந்த பிள்ளைக்கு கொடுங்க அவளுக்கு புள்ளனா அது எனக்கும் புள்ளதான்! அந்த புள்ள எங்க இருக்குனு தெரியாதுனு சொல்லுவிங்க அதான் அதோட விலாசமும் இதுல வச்சிருக்கேன். இது எதுவும் யாருக்கும் தெரிய கூடாதுனு சத்தியம் வாங்கிட்டாரு. ஆனா அவர நீங்க ஏசுறது பொருக்காம சொல்லிட்டேன்னு முடித்தார்.
அய்யோ என் சாமி!!! அடித்தொண்டையில் இருந்து கத்த ஆரம்பித்தது அம்மாச்சி. இட்டிலியை பிசைந்து முழுங்க அய்யாவின் உருவம் ஆலமரமாய் நெஞ்சில் இறங்கியது எனக்கு…