Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையின் T20 உலக கிண்ண கனவு நிறைவேறுமா?

இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் இலங்கையின் கனவு இன்னுமே முற்றாக தகர்ந்து போய்விடவில்லை. அரையிறுதிக்கான வாய்ப்பு உயிர்ப்புடனே இருக்கின்றது என்பது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விடயமான அமைந்துள்ளது. எனினும் அடுத்தடுத்த போட்டிகளின் முடிவுகளே இலங்கையின் அரையிறுதிக்கான ஓட்டத்தை முடிவு செய்யப் போகின்றது.

நேற்று, T20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 குழு-01இல் நடைபெற்ற தொடரின் 32ஆவது போட்டியில், எதிர் ஆப்கானிஸ்தான் போட்டி இரு அணிகளுக்குமே  தீர்மானமிக்க போட்டியாக காணப்பட்டது.  வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. காரணம் இதில் தோல்வியை தழுவும் போது தொடரில் இருந்து வெளியேற்றப்படும் நிலை இரு அணிகளுக்குமே காணப்பட்டது.

இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு உயிர்ப்புடன்…

பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில்,  நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்ற  முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. குறிப்பாக இப்போட்டியானது மழை காரணமாக தடங்களைச் சந்திக்கக் கூடும் என எதிர்வு கூறப்பட்ட போதிலும் போட்டி நடைபெற்றிருந்தது. போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குர்பாஸ் 28 ஓட்டங்களையும், உஸ்மான் கானி 27 ஓட்டங்களையும் பெற்றனர். இந்த இலக்கானது இலக்கைக்கு சவாலான ஒன்றாகவே காணப்பட்டது. இலங்கை சார்பில் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும் லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதற்கு முன்னரான போட்டியில் வனிந்து பெரிதாக சோபிக்காவிட்டாலும் கூட இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டிருந்தார்.

புகைப்பட உதவி- the national news

145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி  இலங்கை அணி வென்றே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஷ்சங்க10 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சென்ற போதிலும் அடுத்து நிதானத்தை கடைபிடித்தது இலங்கை.    18.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்து, இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், முஜிப் உர் ரஹ்மான் மற்றும் ரஷித்கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பந்துவீச்சில், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வனிந்து ஹசரங்க தெரிவுசெய்யப்பட்டார். இப்போட்டியில் தோல்வியை தழுவிய ஆப்கானிஸ்தான் இந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறுகின்றது. அதே சமயம் இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு ஊசலாடும் உயிராக சற்றே உயிர்ப்புடன் காணப்படுகின்றது.

புகைப்பட உதவி – the national news

புள்ளிப்பட்டியை மாற்றி இலங்கையை பின் தள்ளிய இங்கிலாந்து

அதேபோன்று  டி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 குழு-01இல் நடைபெற்ற தொடரின் 33ஆவது போட்டியில், இங்கிலாந்து எதிர்  நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டன.  இதில் நியூஸிலாந்து வென்றால் முதலாவது அணியாக உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெறும். மறுமுனையில் இங்கிலாந்து வென்றால் குழு ஒன்றுக்கான கடைசிக் கட்டப் போட்டி முடிவுகளே அரை இறுதி அணிகளைத் தீர்மானிக்கும். அதேசமயம் இங்கிலாந்து தோல்வியைத் தழுவும் பட்சத்தில் உலகக் கிண்ணத்திலிருந்து முதல் சுற்றுடன் வெளியேறும் நிலைமையை சந்திக்கும்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஜோஸ் பட்லர் 73 ஓட்டங்களையும் அலெக்ஸ் ஹேல்ஸ் 52 ஓட்டங்களையும் விலாசி இங்கிலாந்தினை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். இங்கிலாந்தைப் பொறுத்தவரையிலும் இது முக்கியமான போட்டி என்பதால் ஆரம்பம் முதலே அதிரடியை காட்டியது.

நியூஸிலாந்துக் அணியின் பந்துவீச்சில், லொக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும் சவுத்தீ, சான்ட்னர் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். தொடர்ந்து 180 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்களில்,  20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ஓட்டங்களை மட்டுமே நியூஸிலாந்து அணியால் பெற முடிந்தது. இதனால், இங்கிலாந்து அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

நியூஸிலாந்து அணி சார்பில் க்ளேன் பிலிப்ஸ் 62 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 40 ஓட்டங்களையும் அதிகப்பட்ச ஓட்டங்களாக,  பெற்றுக்கொண்டனர். இங்கிலாந்து  பந்துவீச்சில், கிறிஸ் வோக்ஸ் மற்றும் சேம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மார்க் வுட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். 47 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜோஸ் பட்லர் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

புகைப்பட உதவி – www.bbc.com

இலங்கை ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தது. இது இலங்கை ரசிகர்களுக்கு வலுவான நம்பிக்கையை தக்கவைப்பதாக அமைந்திருந்தது. என்ற போதிலும் அதன் பின்னர் நியூஸிலாந்து எதிர் இங்கிலாந்து மோதிய போட்டியில் இங்கிலாந்தின் வெற்றி புள்ளிப்பட்டியலில் இடப்பெயர்வுகளை ஏற்படுத்தி விட்டது.  இந்தப் போட்டி முடிவுடன் குழு 1இல் நியூஸிலாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா 5 புள்ளிகளைப் பெற்று நிகர ஓட்ட வேக அடிப்படையில் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் இடங்களை வகிக்கின்றன.  இலங்கை 4 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அடுத்து இங்கிலாந்து உடனான போட்டியில் இலங்கை வென்றே ஆகவேண்டும். அப்போட்டி எதிர்வரும் சனிக்கிழமை  சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

அயர்லாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான போட்டியும் அவுஸ்திரேலியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டியும் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும். இந்தப்போட்டிகளும் புள்ளிப்பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் போட்டிகளாகவே அமைந்து விடுகின்றது.

மேலதிகமாக… இந்திய அணியின் புதிய மாற்றம்

T20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர், இந்திய அணி நவம்பர் 18 முதல் நவம்பர் 30 வரை நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இத் தொடருக்காக இந்திய அணியில் மாற்றங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. அதன்படி ஒருநாள் அணிக்கானதலைவராக ஷிகர் தவானும், டி20 அணிக்கான தலைவராக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹர்திக் பாண்டியா/புகைப்பட உதவி – outlookindia.com

குறிப்பாக இத்தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோஹ்லி, தினேஷ் கார்திக், மொஹமட் சமி, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல் மற்றும் கே.எல். ராஹுல் ஆகியோர்,  அணித்தலைவர் ரோஹித் சர்மாவுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ அறிவிப்பின் படி டி20 அணியானது, ஹர்திக் பாண்டியா (தலைவர்), ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சம்சன், வொசிங்டன் சுந்தர், யுஷ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல், மொஹமட் சிராஜ், புவ்னேஷ்வர் குமார், அர்ஷ்டீப் சிங், உம்ரான் மலிக் என்ற புதிய மாற்றத்தை சந்தித்துள்ளது.

அதேபோன்று குறித்த தொடரின் ஒருநாள் அணியாக, சிகர் தவான் (தலைவர்), ரிஷப் பண்ட், சுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சம்சன், வொஷிங்டன் சுந்தர், சர்துல் தாகூர், ஷபாஷ் அஹ்மட், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், அர்ஷ்டீப் சிங், தீபக் சஹார், குல்தீப் சென், உம்ரான் மலிக் என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

Related Articles